வடபுலத்தில் பகுத்தறிவாளர்களின் சங்கமம்! – வீ.குமரேசன்

மார்ச் 01-15

பகுத்தறிவாளர்  என ஒருவர் தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்ற பொழுது, மற்றவர்களுக்குப் பகுத்தறிவு இல்லையா? எனும் கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவது இயல்பு. கேள்வியில் நியாயம் இருப்பது போலவும் தோன்றும்.

உயிரினங்கள் பலவற்றிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக்காட்டுவது பகுத்தறிவு இயல்பே. மனிதஇனம் முழுமைக்கும் பகுத்தறிவு உரியது. பகுத்தறிவு இயல்பைப் பெற்றிருப்பது என்பது ஒரு நிலை; பெற்றுள்ள பகுத்தறிவைத் தக்க தருணங்களில் பயன்படுத்தி, வாழ்வின் நடைமுறையில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் செயல்படுவது என்பது மற்றொரு நிலை. இந்த மற்றொரு நிலையில் பயணப்படும் தன்மையால் அத்தகையோர் பகுத்தறிவாளர் எனும் அடையாளம் பெறுகின்றனர்.

மற்றவர்களும் பகுத்தறிவுக் கண்ணோட்டம் கொண்டு செயல்பட முடியும். அத்தகைய நிலைமைக்கு மக்களை ஆட்படுத்தும் கருத்துப் பரப்பலை தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர் கழகம் ஆற்றி வருகிறது. தந்தை பெரியாரால் நிறுவப்பட்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்டு செயல்பட்டுவரும் மனிதநேய அமைப்பே பகுத்தறிவாளர் கழகம் (The Rationalists’ Forum) ஆகும்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பகுத்தறிவாளர் அமைப்பினர் சேர்ந்து இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பு (Fedaration of Indian Rationalist Associations – FIRA) எனும் செயல்தளத்தினை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் 8ஆவது தேசிய மாநாடு மாராட்டிய மாநிலம் – நாகபுரியில் பிப்ரவரி 11,  12 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

கூட்டமைப்பினை நிறுவிய அமைப்பினர் என்ற நிலையில் அதில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டின் பகுத்தறிவாளர் கழகமும் பங்கேற்றது.

பறவைகள் பல விதம்; அது ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதைப் போல பகுத்தறிவாளர் அமைப்பினரும் பல விதம். காரணம், மனித வாழ்வு என்பது பரந்துபட்டது. அதில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தின் பயன்பாடு பல நிலைப்பட்டது. அந்தந்த மாநில சமூகச் சூழல், அமைப்பின் தன்மையைப் பொறுத்து பகுத்தறிவாளர் பணி அமைந்துள்ள நிலைகள் கண்கூடாகத் தெரிந்தன. வெறும் மூடநம்பிக்கைகளை எதிர்த்துவிட்டு, சமாதானம் அடைந்துவிடும் பகுத்தறிவாளர் அமைப்பு; மூடநம்பிக்கைகள் சமூகத்தில்  நிலைப்பதற்கு அடிப்படையான கடவுள், மதம், ஆகியவற்றை நேரடியாக மறுக்கின்ற அமைப்பினர் ஒரு வகை; கடவுள், மதத்தை ஏன் மறுக்க வேண்டும் என ஒரு அமைப்பினர்;

கடவுள் மறுப்பு எனும் நிலையினைத் தாண்டி கடவுள் எதிர்ப்பு – அதன் கருத்துப்பரவலைச் சுமந்து கொண்டு களப்பணியாற்றும் அமைப்பு என ஒரு சில; கடவுள் தன்மையால் ஏற்பட்டுவிட்ட சமூக ஏற்றத்தாழ்வினைப் போக்கிட களப்போராட்டம் கண்டு, மத உணர்வு, கடவுள் பற்றிய நம்பிக்கையின்றி மனிதராக வாழ முடியும். சமூகத்தில் சமத்துவ நிலை காணமுடியும். அறிவியல் அணுகுமுறையுடன் வாழ்வியல் நடைமுறையினை அமைத்திட முடியும் என பரந்துபட்ட பகுத்தறிவு நிலைக்கு ஆளாக்கிக் கொண்டுள்ள அமைப்பு – மக்கள் இயக்கமாக மலர்ந்து வரலாறு படைத்திட்ட பெரியாரின் இயக்கத்தின் ஓர் அங்கமான பகுத்தறிவாளர் கழகம் – என பல்வேறு அமைப்பினர் மாநாட்டில் பங்கேற்றனர்.

நாகபுரியில் உள்ள அகில பாரதிய அந்தஸிருத்த நிர்மூலன் சமிதி எனும் அமைப்பினர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாநாட்டின் தொடக்கமாக – ஒரு நூலில் பச்சை மிளகாய் சில: அடியில் ஒரு எலுமிச்சம் பழத்தினைக் கட்டித் தொடங்கவிடப்பட்டதை கத்திரிக்கோலால் வெட்டி மாநாட்டினைத் தொடங்கினர். விளக்கம் கேட்டபொழுது, நிகழ்ச்சியில் பச்சைமிளகாய், எலுமிச்சம் பழத்தைக் கட்டித் தொங்கவிடுதல் மூடநம்பிக்கையின் வெளிப்பாடு. அதனை வெட்டுதலை மூடநம்பிக்கை ஒழிப்பின் அடையாளமாகக் கருதுகிறோம் எனக் கூறினர்.

காவி உடை அணிந்துகொண்டு மனிதநேயத்தினை வலியுறுத்துவதாக ஒரு அமைப்பினர் பங்கேற்றனர். அறிவியல் பற்றி அறை விவாதம் மட்டுமே செய்திடும் ஒரு அமைப்பினரும் உண்டு. சீருடை அணிந்து ராணுவ மிடுக்கோடு பங்கேற்றது ஒரு அமைப்பு. பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் கலை வடிவத்தினைக் கையில் எடுத்துக்கொண்ட அமைப்பும் இருந்தது. சீக்கியர் போல தோற்றம் கொண்டாலும் குருத்வாராவிற்குச் செல்லாத பகுத்தறிவாளர் அமைப்பும் பங்கேற்றது. பகுத்தறிவுச் சிந்தனைவயப்பட்ட இளைஞர் பட்டாளம் ஏராளமாய் பங்கேற்றது மாநாட்டின் சிறப்பாகும். மதத்திலிருந்து அரசியலைப் பிரித்தெடுக்க வேண்டும்;

அதற்காக நாடாளுமன்றம் நோக்கிய நடைப்பயணம் நடத்திட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது ஒரு செயல்பாட்டுச் சிறப்பாகும். மாநாடு நடைபெற்ற நாகபுரியில்தான் 1956ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட வகுப்புத் தோழர்களுடன்  அண்ணல் அம்பேத்கர் புத்த மார்க்கத்தைத் தழுவிய தீக்ஷபூமியில் உள்ளது. இறக்கும் பொழுது இந்துவாக இறக்கமாட்டேன் எனும் உறுதிமொழியுடன் புத்த மார்க்கத்தைத் தழுவினார். மாபெரும் புரட்சியாளரான அண்ணல் அம்பேத்கரை ஒரு மதவாதத் தோற்றத்துடன் வெளிப்படுத்தியது தீக்ஷபூமி. பகுத்தறிவின் அடிப்படையில் தோன்றிய புத்த நெறி, மத முலாம் பூசப்பட்டு வலுவிழந்த நிலைப்பாடு வெளிப்பட்டது. மத உணர்வு புரட்சிகர நடவடிக்கைகளை  மழுங்கடிக்கும் நிலையினைத் திசை திருப்பும் நடைமுறையினை அங்கு காண முடிந்தது. இரண்டு நாள் மாநாட்டு நடவடிக்கைகள், தீக்ஷ பூமி சென்று வந்தது ஆகியவற்றிற்குப் பின் தமிழ்நாட்டுப் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டுப் பெருமைத் தன்மை முழுதும் விளங்கியது.  தொலைநோக்குச் சிந்தனையுடன், சமூக நீரோட்டப் போக்கில் கரைந்துவிடாமல், திசைமாறிவிடாமல், எடுத்துக்கொண்ட இலக்கினை நோக்கிய எழுச்சிப் பயணத்தை அமைப்பு ரீதியாக உருவாக்கிக் கொடுத்த தந்தை பெரியார், அதைத்தொடர்ந்து நடத்திச் செல்லுகின்ற, இயக்கத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி ஆகியோரைப்  பற்றிய தனித்துவப் பெருமைகள் மனதில் ஆளுமை பெற்றன.  தனிமனித பகுத்தறிவுச் சிந்தனையால், செயல்பாட்டால் சமூகத்தை ஓரளவிற்கு மேல் ஒழுங்குபடுத்திவிட இயலாது. அமைப்புடன் சேர்ந்த செயல்பாடே நீடித்திடும், நிலைத்துநிற்கும் சமூக மாற்றத்தினைக் கொண்டு வரும். உலகில் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத, முன் மாதிரி காட்ட இயலாத புரட்சி வரலாற்றைக் கொண்டுள்ள பெரியார் இயக்கத்தின் அங்கமான பகுத்தறிவாளர் கழகத்தில் பங்கேற்று பொதுநலப்பணியினை ஆற்றிட அனைவரும் முன்வரலாமே _- குறிப்பாக இளைய தலைமுறையினர்!

தொடர்புக்கு : பகுத்தறிவாளர் கழகம்     பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை-7.

மின்னஞ்சல்: rationalistforum@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *