புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் இரணியன் இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாக கொண்ட நாடகம்
காட்சி 16
அரண்மனையின் ஒரு பகுதி
உறுப்பினர்கள்:
இரணியன், வெற்றிவீரன், அமைச்சர்.
சூழ்நிலை: மூவரும் உரையாடல்.
இரணியன்: நம்பமாட்டேன்! நான் நம்பவே மாட்டேன். தளபதியாரே! ஒளி வந்ததை நீர் பார்த்தீர்?
வெற்றி: ஆம் அரசே!
இரணி: இல்லை! ஆரியர் சூழ்ச்சி! நம்பிக்கைக்குரிய தளபதி நீர்! நீரே எனக்குத் துரோகம் செய்கிறீரா?
வெற்றி: இல்லை அரசே! என்னை வீணாகச் சந்தேகிக்காதீர்கள். ஒளி தோன்றியது உண்மை. அதன் பிறகு நடந்தது என்பது எதுவும் எனக்குத் தெரியாது. அமைச்சரும் மருத்துவரும் வந்து எழுப்பிய பிறகுதான்…
இரணி: என்ன அமைச்சரே! ஒன்றும் புரியவில்லையே! தளபதி சொல்வதை ஏற்கவும் முடியவில்லை. ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை. ஆரியர் சூழ்ச்சியில் வல்லவர்கள். அவர்கள்தான் ஏதோ சதி செய்து தளபதியை மயக்கி இருக்கிறார்கள் – போகட்டும். பொறுத்துக் கவனிப்போம். அமைச்சரே! நாளை என் மகன் பிரகலாதன் பிரயாணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறானாம், ஒற்றர்கள் கூறுகிறார்கள்.
அமைச்: மகிழ்ச்சி மன்னா! இன்னும் ஒரு வாரத்துக்குள் இளவரசுப் பட்டம் சூட்டும் விழாவை நடத்தி விடலாமே.
இரணி: ஆம்! அதற்கான ஏற்பாட்டைக் கவனியுங்கள் அமைச்சரே! நமது சிற்றரசர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்தியை அறிவித்துவிடுங்கள்.
தளபதியாரே! உம்மை நான் இன்னும் நம்புகிறேன். ஆரியர்களிடம் விழிப்புடன் இருங்கள். போகலாம். (செல்கின்றனர்)
காட்சி 17 – வீதி உறுப்பினர்கள்: முரசறைவோன், மக்கள் இருவர்.
சூழ்நிலை: முரசறைவோன் முரசு அறைந்து செய்தியைச் சொல்கிறான்.
முரசு அறைவோன்: (முரசினை முழங்கி) ஓ! பெரியோர்களே! தாய்மார்களே! பொதுமக்களே! நான்காம் நாள் காலை நமது சக்கரவர்த்தி அவர்களின் திருமகன் பிரகலாதன் அவர்களுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட இருக்கிறது. நீங்கள் எல்லோரும் உற்றார், உறவினர், நண்பர்கள் சூழ வருகை தந்து விழாவினைக் கண்டுகளிக்க அழைக்கப்படுகிறீர். இது சக்கரவர்த்தி அவர்களின் கட்டளை. (டும்டும்)
1ஆவது ஆள்: ஆமாம்! பட்டம் சூட்டு விழாவாம். அவசியம் போய்த்தான் ஆகணுமாம்!
2ஆவது ஆள்: ஏன்யா! ஒரு மாதிரியா பேசறே?
1ஆவது ஆள்: பின்ன என்னாயா. ஆரியனைப் பகைச்சிக்கிட்டவன் திடீர்திடீர்னு சாவான். ரெண்டு வீரனுங்க தளபதி அய்யாவோட ஆரிய ஜனங்களைக் கொல்றதுக்குக் கொலைக்களத்துக்கு இட்டுக்கிட்டுப் போனாங்க. என்ன ஆச்சி!
2ஆவது ஆள்: என்ன ஆச்சி!
1ஆவது ஆள்: ஒரு ஜோதி தோனிச்சாம். நம்ம வீரங்க வெட்டுப்பட்டு அநியாயமா செத்துக் கிடக்கானுங்க. ஆரிய ஜனங்களையே காணோமாம்.
2ஆவது ஆள்: நம்ம தளபதி!
1ஆவது ஆள்: ஜோதி வந்தப்பவே மயங்கி விழுந்துட்டாராம். அவருக்கு ஒன்னுமே தெரியலையாம்.
2ஆவது ஆள்: இது எப்ப நடந்துச்சி?
1ஆவது ஆள்: நீ ஊர்லயே இல்லையா!
2ஆவது ஆள்: நான் வடக்க போனவன் இன்னிக்கு இப்பதான் வர்றேன். ஏன் தளபதிய மட்டும் கொல்லாம உட்டுடுச்சி அந்த ஜோதி!
1ஆவது ஆள்: (சுற்றுமுற்றும் பார்த்து) (தணிந்த குரலில்) நம்ம தளபதி அய்யா கொஞ்சம் சொஞ்சம் ஆரிய தர்மத்தை நம்பறாராம். அதனாலதான் அவரை ஒன்னும் பண்ணலே அந்த ஜோதின்னு ஊர்ல பேசிக்கிறாங்க.
2ஆவது ஆள்: அப்படியா?
1ஆவது ஆள்: நேத்து ராத்திரி நடந்த சமாச்சாரம் தெரியுமா உனக்கு?
2ஆவது ஆள்-: நேத்து ராத்திரியுமா? என்னா அது?
1ஆவது ஆள்: நேத்து ராத்திரி ரெண்டாம் ஜாமத்துல ஒரு பொம்பள அரண்மனைக்குள்ள பூந்து நம்ம அரசனைக் கொல்ல வந்ததாம். அது பொம்பள இல்லையாம். ஆரியங்க யாகம் செஞ்சி ஒரு பேயைப் பொம்பள உருவில அரசங்கிட்ட அனுப்பி இருக்காங்க. அரசனே! நீ ஆரிய தர்மத்தை ஏத்துக்கலைன்னா யாரோ நாராயணமூர்த்தியாம். அவன் வந்து உன்னைக் கொன்னுடுவான்னு எச்சரிக்கை பண்ண வந்ததா ஊரே குபாரா இருக்கு.
2ஆவது ஆள்: ஆமா! இருக்கும் இருக்கும். அரண்மனையில – அதுவும் அரசர் தூங்கற அந்தப்புரத்துல எவ்வளவோ கட்டுக் காவல் இருக்கும். அதை எல்லாம் மீறி ஒரு பொம்பள போவதுன்னா நடக்கிற சமாச்சாரமா?
1ஆவது ஆள்: அதானே! ஆரியங்க வானுலகத்துல வாழற தேவ வம்சம்ன்றாங்க. அவுங்களப் பகைச்சிக்கிட்டா நாம ஒழிஞ்சோம். அவ்வளவுதான்.
2ஆவது ஆள்: ஆமாயா! வடநாட்லகூட ஆரிய மக்களை எல்லோரும் வழிபடறாங்க. நம்ம இரணிய மன்னர் மட்டும் எதிர்க்கிறாரு. ஆமா, எனக்கு ஒரு சந்தேகம்.
1ஆவது ஆள்: என்னா சந்தேகம்?
2ஆவது ஆள்: இதுக்கு மின்ன நம்ம அரசர் எத்தனையோ ஆரியங்களைக் கொன்னு இருக்காரே! அப்ப ஏன் அந்த ஜோதி வரல்லே?
1ஆவது ஆள்: இதோ பார்! இதெல்லாம் வீண் கேள்வினு அவுங்க சொல்றாங்க. காரணமில்லாம காரியம் நடக்காதாம்.
2ஆவது ஆள்: அது என்னா அது. கொஞ்சம் புரியும்படிதான் சொல்லேன்.
1ஆவது ஆள்: இதோ இருக்கு ஒரு வீடு. இதை உண்டாக்கியவன் யாரு?
2ஆவது ஆள்: நாமதான் கட்டினோம்.
1ஆவது ஆள்: அதைப்போல இந்த உலகத்தையும் இந்த உலகத்துல இருக்கிற மரம் செடி கொடி மிருகங்கள், மக்கள் எல்லோரையும் உண்டாக்கினவன் ஒருத்தன் இருக்கிறான். அவன்தான் கடவுள்ன்றாங்க. அந்தக் கடவுள்தான் நம்ம நல்வழிப்படுத்த ஆரியங்களை அனுப்பி இருக்காராம். அவுங்க சொல்றபடிதான் அந்தக் கடவுளும் கேப்பாராம்.
2ஆவது ஆள்: இருக்கும் இருக்கும்! வா! நமக்கு ஏன் ஆரியர்கிட்ட பொல்லாப்பு? வா, வா. (போகின்றனர்)
காட்சி 18
அரசவை
உறுப்பினர்கள்: இரணியன், அமைச்சர், பிரகலாதன், தளபதி, வீரர்கள், அயல்நாட்டு மன்னர்கள் மற்றும் மக்கள் கூட்டம்.
இரணி: வணக்கம்! அயல்நாட்டு மன்னர்களே! என்னருமைச் சிற்றரசர்களே! ஆருயிர்க் குடிமக்களே! அறிவு சார்ந்த அமைச்சர்களே! ஆற்றல்மிகு தளபதியவர்களே! வீரத்தில் சிறந்த போர்வீரர்களே! அரசுப் பணியாளர்களே! மற்றுமுள்ள பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் என் மனமகிழ் வணக்கங்கள். உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகிறேன்.
இன்று என் அருமைத் திருக்குமாரன் பிரகலாதனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டும் இனிய பொன்னாள். இப்பெருவிழாவில் வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும், இருந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு மீண்டும் வேண்டுகிறேன். வணக்கம்.
அமைச்: இளவரசே! பிரகலாதா! இந்த அரியணைக்கு அருகில் வாருங்கள்.
(அரியணை வெறுமையாக இருக்கிறது. அருகில் கிரீடம், வாள் முதலியவை வைக்கப்பட்டுள்ளன. பிரகலாதன் எழுந்து அரியணைக்கருகில் வந்து நிற்கிறான்.)
அமைச்சர்: இரணிய குமாரா! தமிழர் முறைப்படியும், இவ்வரசு வழக்கப்படியும் பின்னாளில் உன் தந்தையார் ஒழுகிய நெறியிலே நின்று இந்நாட்டை ஆட்சி செய்வதாய் உறுதி கூறி இந்த ஆசனத்தில் அமர வேண்டும். பிறகு, நான் உமக்குத் திருமுடி சூட்டுவேன். நான் சொல்வதுபோல சொல்லுங்கள். இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன்
பிரக: சர்வலோக சரண்யனாகிய சிறீமந் நாராயணன் நாமம் வாழ்க!
(அனைவரும் திடுக்கிடுகின்றனர். சலசலப்பு சபையிலே)
இரணி: (சற்றுக் கோபத்துடன்) என்ன பிரகலாதா! என்ன சொன்னாய்?
அமைச்: வாய் தவறி ஏதோ நினைவில் சொல்லியிருக்கலாம் அரசே! இளவரசே, பரவாயில்லை. இப்போது சொல்லுங்கள். இரண்ய நாமத்தை வாழ்த்துகிறேன்
பிரக: நான் வாய் தவறிச் சொல்லவில்லை அமைச்சரே! சர்வ வல்லமையுள்ள சர்வலோகத்தையும் பரிபாலிக்கின்ற சிறீமந் நாராயணன் நாமம் வாழ்க!
இரணி: (கோபத்துடன்) அடக் கடா மூடா! என்ன ஆணவம் இருந்தால் என் முன்னே ஆரியக் கடவுளாம் நாராயணன் நாமத்தை வாழ்த்துவாய். தளபதியாரே, இவனை இழுத்துக் செல்லுங்கள். இவன் தாய் லீலாவதியின் கையாலேயே நஞ்சைக் கொடுத்து நாசமாக்குங்கள். சபை கலையலாம்.
(தொடரும்)