திராவிடர் சங்கம் தோன்றிய நூற்றாண்டு (1912-2012)

மார்ச் 01-15

– கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்

டாக்டர் சி.நடேசனார் அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி 18, 1937.

இந்த மாமனிதருக்கு பார்ப்பனர் அல்லாதார் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. நன்றி உணர்வென்னும் உணர்வின் கண்ணீர்த் துளிகளால் மாலை சூட்டி நம் மரியாதை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

 

திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று நெஞ்சில் ஈரமின்றி, வரலாற்று அறிவுமின்றி நுனிப்புல் மேயும் சிலர் நம்மினத்திற்குக் கிடைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

நன்றி விசுவாசம் காட்டுவதும் நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்றார் தமிழினப் பாதுகாவலராம் தந்தை பெரியார். இந்தக் கண்ணோட்டத்தில் இந்த நன்றி கெட்ட மனிதர்களையும் புறந்தள்ளி நாம் நடந்து வந்த பாட்டையை ஒரு கணம் எண்ணுவோம்.

1912இல் – இன்றைக்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர் அல்லாதாருக்கென ஓர் அமைப்பு வேண்டும் என்று நினைத்ததே கூட சாதாரணமானதல்ல.

அப்படி நினைத்த பெருமகனார்களில் டாக்டர் சி.நடேசனார் முதன்மையான மனிதர். சென்னை பெரிய தெருவில் உள்ள அவரது இடமே அதற்கான பிரசவ அறையாகும்.

சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) உருவாக்கப்பட்டது. அதுவே பின்னர் 1913இல் திராவிடர் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

பிற்காலத்தில் 1916 நவம்பர் 20இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகிய நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டதற்கான உந்து சக்தி டாக்டர் சி.நடேசனார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிட சங்கமேயாகும்.

அதனால்தான் நீதிக்கட்சி என்பதை திராவிடர் சங்கத்தை நிறுவிய நடேசனாரின் குழந்தை என்றார் கே.எம்.பாலசுப்பிரமணியம்.

காங்கிரஸ்காரர்களாக இருந்து தங்களுக்குள் மாறுபட்டு நின்ற வெள்ளுடை வேந்தர் தியாகராயரையும், டாக்டர் டி.எம். நாயரையும் இணைக்கும் பாலமாக இருந்தவரும் டாக்டர் சி.நடேசனாரே!

அந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமானால்  பெருநகரங்களாகிய சென்னை, திருச்சியைத் தேடித்தான் செல்ல வேண்டும். ஆனால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகளும் பார்ப்பனர்களுக்கானது. அங்கே பார்ப்பனர் அல்லாதார் தங்குவதற்கு அனுமதி கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்து வரலாம்.

இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் தங்கிப் படிப்பதற்கென்றே ஒரு விடுதியை ஏற்படுத்தினார் (1916) டாக்டர் நடேசனார். இந்த ஆக்கபூர்வமான  – ஆதார சுருதியான செயலைச் செய்த இந்த ஒன்றுக்காக மட்டுமே அந்தப் பெருமகனுக்கு நம் நெஞ்சத்தில் நிரந்தர இடத்தை அளிக்க வேண்டும்!

அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் துணை வேந்தராக விளங்கிய டி.எம்.நாராயணசாமி பிள்ளை, பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார்.

இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக வந்த ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பாரிஸ்டர் ரங்கராமானுஜ (முதலியார்) போன்றவர்கள் கூட இந்த இல்லத்தில் தங்கிப் படித்தனர் என்கிறார் திராவிடப் பெருந்தகை தியாகராயர் என்ற நூலில் மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெற்று வெளி யேறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தியதும் திராவிடர் சங்கமே.

டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள் எல்லாம் உரையாற்றி உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்பொழுது ஒரு முறை டாக்டர் நாயர் “Awake, Arise or Be Forever Fallen”  என்று கூறியிருந்தார்.

பார்ப்பனர்கள் அல்லாத பட்டதாரிகளே, விழியுங்கள்! எழுங்கள்! இன்றேல் நீவிர் வீழ்ச்சி அடைவீர்! என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு. உளவியல் ரீதியான தூண்டுதலையும் எழுச்சியையும் ஊட்டி நின்றார்.

1912 இல் பார்ப்பனர் அல்லாதாருக்கான ஓர் அமைப்பைத் தொடங்கிய கால கட்டத்தில் நம் நாட்டின் நிலை என்ன?

டெபுட்டி கலெக்டர்கள் 55% , சப் ஜட்ஜ்கள் 83%, மாவட்ட முன்சீப்புகள் 72% பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்ற நிலையை நினைத்துப் பாருங்கள்.

1901 ஆம் ஆண்டில் கல்வியின் நிலை என்ன?

பார்ப்பனர்கள் (தமிழ்நாடு)    73.6%

தெலுங்குப் பார்ப்பனர்கள் 67.3%

நாயர்கள்    39.5%

செட்டியார்    32%

இந்தியக் கிறிஸ்தவர்    16.2%

நாடார்    15.4%

பலிஜா நாயுடு, கவரை    14.3%

வேளாளர்    6.9%

கம்மா    4.8%

காப்பி, ரெட்டி    3.8%

வௌமா    3.5%

(Census of India, Madras 1921 XIII Part I, 128-129)

இந்தப் புள்ளி விவரங்களை அறிந்தால்தான் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதாரின் வளர்ச்சிக்கு எந்த இயக்கம் அடிப்படை? எந்தத் தலைவர்கள் காரணம்? என்பதை ஒழுங்காக அறிய முடியும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறி பார்ப்பனர்களுக்குச் சேவை செய்யத் துடிக்கும் பேர்வழிகளின் அடையாளத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை பற்றிய

ஒரு புள்ளிவிவரம் இதோ:

திறந்த போட்டி 460 இடங்கள்

பிற்படுத்தப்பட்டவர்கள் 300 பேர்

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 72 பேர்

தாழ்த்தப்பட்டவர்கள் 18 பேர்

முசுலிம்கள் 16 பேர்

முற்படுத்தப்பட்டோர் 54 பேர்

200-க்கு, 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் 8 பேர். இதில் பிற்படுத்தப்பட்டவர் 7 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ஒருவர்.

இன்றைக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 1,45,450 (89 விழுக்காடு) என்று துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே!   (20.-11.-2010). இந்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு வளர்த்தது திராவிடர் இயக்கம்தானே!  மறுக்க முடியுமா?

பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக இருந்த உத்தியோக மண்டலத்துக்கு முடிவு கட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கொண்டு வரப்படக் காரணமாக இருந்தவரும் டாக்டர் சி.நடேசனாரே!

பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும்  என்ற தீர்மானத்தை அன்றைய சென்னை மாநில சட்டசபையில் கொண்டு வந்து சபையையே அதிர வைத்த சமூக நீதியின் சண்டமாருதம் நடேசனாரே!

பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதும் நீதிக் கட்சி ஆட்சியிலேயேதான்! மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சதி வலையைக் கிழித்தெறிந்ததும் நீதிக் கட்சியே!

தேவதாசி முறை ஒழிப்பு, இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்டம் இவற்றைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியே!

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை (1920-23) சாதனைகள் பற்றி தனி அரசாணையே வெளியிடப்பட்டதே! (ஆணை எண் 116).

பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன

துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன ஜாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குறவர்களை எல்லா வகையிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை மாவட்டத்திலுள்ள வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25- நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.

ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற ஜாதியினரிடமிருந்து பாதுகாப்பு – அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங்களை ஒதுக்குகிற போது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.

அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.

மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.

நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

பி அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.

தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.

ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காகப் பொது மக்களின் உதவியையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.

குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.

ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலையில் நிலங்களை அளித்தல்.

தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.

மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.

மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டு தோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.

அரசு ஆணைகளின் தொகுப்பு:

1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10.05.1921

2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப்பெறல் – ஆதிதிராவிடர் என அழைக்கப்பெறல். அரசாணை எண். 817 நாள் 25.3.1922
3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20.5.1922.

4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21.6.1923.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11.2.1924; (ஆ) 1825 நாள்: 24.9.1924.

6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27.01.1925.
7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 20.5.1922. (ஆ) 1880 நாள் 15.9.1928

8. வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.226 நாள் 27.2.1929

9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18.10.1929.

எடுத்துச் சொன்னால் ஏடு தாங்காது.

இந்தி திணிப்பு முறியடிப்பு, தமிழ்மொழியின் மறுமலர்ச்சி (பெயர்கள் சூட்டுவது உட்பட) செம்மொழி, சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், 69 சதவிகித இடஒதுக்கீடு என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா என்பதை நேர்மையுடன், அறிவு நாணயத்துடன் சிந்தித்துப் பார்க்கட்டும்!
தந்தை பெரியாரின் இரங்கல்

திராவிட இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமான் சி. நடேசனார் தமது 62ஆவது வயதில் மறைவுற்றார். அப்பொழுது தந்தை பெரியார் எழுதினார் குடிஅரசில் (21.2.1937).

டாக்டர் நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் வருந்திடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி, அவருக்கு நன்றி விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலும் இருக்க மாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது, வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்.

சூதற்றவனும் – வஞ்சகமற்றவனும் உலகப் போட்டியில் ஒரு நாளும் வெற்றி பெற மாட்டான் என்கிற தீர்க்க தரிசன ஆப்தவாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள், தனது தொண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனைத் தம் சொந்தத்திற்கு அடையாமல் போனதில் நமக்குச் சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கென வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார்.
கொள்கை வீரர் – தன்னலமற்ற பெருந்தகை நடேசனார் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நிலை ஏற்படக் கூடாது என்பது நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கொண்டு விடாமல் ஆயிரம் நடேசனார் காணுவோமாக! நாம் ஒவ்வொருவரும் நடேசனாக நாடுவோமாக! என்று எழுதினார் தந்தை பெரியார்.

திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறையாக இருந்த டாக்டர் நடேசனாருக்கு தலைநகரில் ஒரு சிலை இல்லை. திராவிடர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு காணும் இவ்வாண்டிலாவது அவரது சிலையை – அவர் வாழ்ந்து வந்த சென்னை திருவல்லிக்கேணி வட்டாரத்தில் நிறுவிட வேண்டும் – அது நமது கடமை.  அதே போல தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப் பெற்ற டாக்டர் டி.எம். நாயர், முதல் வகுப்புரிமை ஆணையைக் கொண்டு வந்து செயல்படுத்திய சிற்பி எஸ். முத்தையா முதலியார் ஆகியோர்களின் சிலைகள்  தலைநகரில் நிறுவப்பட வேண்டும். இவ்வாண்டில் நீதிக்கட்சி – திராவிடர் இயக்கத் தொடர்பான முக்கிய நூல்களும் வெளியிடப்படும். இதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.  திராவிடர் சங்க நூற்றாண்டு விழாவையும் நாடு தழுவிய அளவில் கொண்டு சென்று – திராவிடர் இயக்கத்தையும், திராவிடர் என்ற இனப்பெயரையும் சிறுமைப்படுத்தும் சக்திகளை முறியடிப்போம்!

நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்!

நீதிக் கட்சியின் பவள விழாவினை 1991இல் சேலத்தில் சிறப்பாக நடத்திய திராவிடர் கழகம் இதனையும் உரிய வழியில் கொண்டாடும்.

வாழ்க நடேசனார்! வளர்க திராவிட இயக்க இலட்சியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *