நாங்கள் பார்ப்பனத் துவேஷிகள் என்று கூறப்படுகிறதே அது உண்மையானால் சங்கராங்சசாரியார் பார்ப்பனர் என்பதற்காக அவரை வெறுத்து, தம்பிரான் தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, சர் சி.பி. பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, சர். ஷண்முகம் தமிழர் என்பதற்காக அவரிடம் சல்லாபம் செய்து, ஆச்சாரியார் பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, அவினாசி தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, பி.ஸ்ரீ. பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, டி.கே.சி. தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து, கபிலர் பார்ப்பனர் என்பதற்காக அவரைக் கண்டித்து, கம்பர் தமிழர் என்பதற்காக அவரை ஆதரித்து வரும் அர்த்தமற்ற போக்கைக் கொண்டிருப்பாமே! பார்ப்பனரிடம் துவேஷம் இருப்பது மட்டும்தான் எங்கள் வேலை என்றால், ஈரோடு அல்லவே கழகத்தின் தலைமை பீடம் இருக்க வேண்டிய இடம். திருநெல்வேலியிலல்லவா இருக்கும். சுயமரியாதைப் படையா திரட்டுவது அதற்கு!
சைவ மெய்யன்பர்களின் திருக் கூட்டமல்லவா திரண்டிருக்க வேண்டும். பார்ப்பனரிடம் துவேஷம் கொண்டவர்கள் என்று கூறுவது பொருளற்ற குற்றச்சாட்டு. மடிசஞ்சியும், மணி உருட்டியும், பஞ்சாங்கமும் பழமைப் பித்தும், ஜாதி அகம்பாவமும் எங்கு இருந்தாலும் எங்களுக்குப் பிடிக்காதே!
பார்ப்பனரிடம் இவை இருந்தால் எந்த அளவுக்கு கோபம் வருகிறதோ அதைவிட வேண்டுமானால் சற்று அதிகமான அளவு கோபம் வருகிறது இந்தக் குணங்கள் தமிழரிடம் இருக்கக் கண்டால். பார்ப்பனரிடம் ஏதோ பாகப் பிரிவினை தகறாரா, பலன் எதிர்பார்த்து ஏதேனும் ஏமாற்றமா? இல்லையே! அவர்களை விரோதிப்பதை மட்டும் ஒரு வேலையாக ஒரு கட்சி கொள்ளுமா, இவ்வளவு வருஷ காலமாக _ எவ்வளவோ இன்னல்களைத் தாங்கிக் கொண்டு இன்பங்களை இழந்து நமது குறிக்கோளை அடைய நாம் மேற்கொண்டுள்ள இலட்சியப் பயணத்திலே பார்ப்பனியம் குறுக்கிட்டுக் கெடுப்பதால் அதை அகற்ற முயல்கிறோம். பாதையிலே படுகுழி இருந்தால் அதை அடைக்க முற்பட மாட்டோமா, அதைப்போல.
– அறிஞர் அண்ணா, (‘திராவிட நாடு’, 18.4.1943)