பெரியார் பேசுகிறார்! கார்த்திகை தீபம்

2022 நவம்பர் 1-15 2022 பெரியார் பேசுகிறார்

சித்திரபுத்திரன்

தீபாவளிப் பண்டிகையின் ஆர்ப்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை; சரியாக 15 நாள்களுக்குள்ளாகவே மற்றொரு சனியன் தொடர்ந்து வந்துவிட்டது.
இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது நாட்டுச் செல்வத்திற்குச் சனியன் பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம் தெய்விகம் என்று சொல்லப்படுவதாகவும், மதத்தின் முக்கியப் பகுதி என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகின்றது. இப்பொழுது வரும் சனியனாகிய பண்டிகை கார்த்திகைத் தீபம் என்பதுதான்.
இந்தக் கார்த்திகைத் தீபப் பண்டிகையை ஒரு பெரிய தெய்விகம் பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுவதும் கொண்டாடப்-பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீர சைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாக, கார்த்திகை நட்சத்திரத் தினத்தைச் சுப்பிரமணியன் என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே பக்தர்கள் என்பவர்கள் விரதங்களும், பூசைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளை விட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திரும்பும்போது, அங்கிருந்து வாந்தி பேதியைக் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீசுவரன்கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள் சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் ஆகும்போது, பெரிய கார்த்திகை என்று பெயர் பெற்ற கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா?
இதில் எவ்வளவு பொருள் வீணாக்கப்-படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
தீபாவளிக்காக வரவழைத்து விற்பனை-யாகாமல் கடைகளில் தேங்கிக் கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவு வந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.

வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10,000, 100,000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய், எண்ணெய்ச் செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் சொக்கப்பனை கட்டி நெருப்பு வைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்கு ஆகும் செலவு எவ்வளவு!
கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப் பணச் செலவு எவ்வளவு! அங்குக் கூம்புக்கு (சொக்கப்பனை) செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு!
இவ்வாறு பலவகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகளாவாவது பயனுண்டா என்று ஆலோசித்துப் பாருங்கள்! இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்கு உண்டாகும் மூடநம்பிக்கையையும், அதனால் உண்டாகும் மூடப் பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

கார்த்திகையைப் பற்றி வழங்கும் புராணக் கதைகள் இரண்டு. அவைகளில்
ஒன்று:
ஒரு சமயம் அக்னிதேவன் (நெருப்பு) என்னும் கடவுள் சப்தரிஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதையறிந்த அவன் மனைவி சுவாகாதேவி என்பவள், அந்த ரிஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால், அவர்களால் தன் கணவன் சபிக்கப்-படுவான் என்று எண்ணினாளாம்.
அதனால் அவள் வசிஷ்டரின் மனைவியாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டு விட்டு, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவம் கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்ற பெயராம். இவைகள்தான் கார்த்திகை நட்சத்திரமாகக் காணப்படுவதாகும்.
இந்த நட்சத்திரப் பெண்கள்தான் சுப்பிரமணியன் என்னுஞ்சாமி, குழந்தையாக இருக்கும் போது, அதையெடுத்து வளர்த்தார்களாம், என்பது ஒரு கதை. இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள்.

பிறர் மனைவிமேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று. மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பினாலும் அதை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவை மட்டும் அல்லாமல், இயற்கைக் பொருள்களின் மேல் எல்லாம் தெய்விகம் என்னும் மூடநம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று.
ஆகவே, இவற்றை ஆராயும்போது, இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்.
இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:
ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்ற கடவுளும் தாம் தாமே ஆதிமூலக் கடவுளர் என்று கூறிக் கொண்டதால், இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகிப் பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடிச் சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லையாம்.

ஆகையால், அப்பொழுது பரமசிவன் என்னும் கடவுள் அவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஜோதி உருவத்தோடு வானத்திற்குப் பூமிக்குமாக நின்றாராம். சண்டைக்காரக் கடவுள்கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது ஜோதி உருவாக நின்ற பரமசிவக்கடவுள், ஏ, பிரம்ம விஷ்ணுக்களே! இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர் என்று ஒரு அனாமதேய (அசரீரி) வார்த்தை சொன்னாராம்.
உடனே, விஷ்ணு பன்றி உருவங்கொண்டு அடியைக் காண பூமியைத் துளைத்துக் கொண்டு வெகு தூரம் சென்றும் காண முடியாமல் திரும்பி வந்துவிட்டாராம். பிரம்மன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப் பறந்து மேலே செல்லும் போது, வழியில் ஒரு தாழம்பூ வந்து கொண்டிருந்ததாம்.

அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க, அது, நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லிற்றாம்.
உடனே பிரம்மன், நான் சிவனுடைய முடியைப் பார்த்துவிட்டதாக அவனிடத்தில் எனக்காகச் சாட்சி சொல்லுகிறாயா? என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து, முடியைக் கண்டு வந்ததாகப் பிரம்மன் கூற, தாழம்பூ அதை ஆமோதித்ததாம்.
அதுகண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற்காக, பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக்கடவது என்றும், தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபம் கொடுத்தாராம்.

பிறகு பிரம்மாவும், விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரமசிவனே பெரியவர் என்றும் எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு ஜோதி உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம்.
பரமசிவனும் அதற்குச் சம்மதித்து, ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையன்று, நான் இந்த உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன் என்று சொன்னாராம். இதுதான் திருவண்ணாமலை புராணமாகிய அருணாச்சலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் சைவப் பெரியோர்கள் என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டி, சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை.
இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல. இவ்வாறு, மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை முதற் காரணமாக இருப்பதை அறியலாம்.

இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! கடவுள்களுக்கிடையே சண்டை வந்தது ஒரு விந்தை! இது போலவே, ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும், வேடிக்கைக்கும் இடமாக இக் கதையில் அநேக செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு, இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கார்த்திகைப் பண்டிகையினால் நமது மக்கள் மனத்தில் குருட்டுப் பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா?
இது நிற்க, மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் சிவனுக்குப் பெருமை கற்பிக்கிறதென்று நம்பிக் கார்த்திகைப் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால், வைணவர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் கடவுளைப் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன், சிவனுடைய பாதத்தைக் கூடக் காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவு படுத்தி இருப்பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண்டாட சம்மதிப்பார்களா?

இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்லாததுதானே கடவுள் என்றும் கொள்கை-யுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தமிருக்கிறது? இவற்றை-யெல்லாம் யோசிக்கும்போது, இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
அல்லது, அறிந்தோ, அறியாமலோ நமது மக்கள் மனத்தில், பண்டிகைகள் புண்ணிய நாள்கள், அவற்றைக் கொண்டாடுவதால் புண்ணியம் உண்டு; கொண்டாடாவிட்டால் பாவம் என்றும் குருட்டு எண்ணம் குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.
ஆகவே, இது போன்ற பண்டிகைகளால், நமது நாட்டில் பொருட்செலவும், வறுமையும், மூட நம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந்திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்கு-கின்றவர்களுக்கு, உடனே பகுத்தறிவற்ற வைதிக மூடர்கள், தேசத்துரோகி, வகுப்புவாதி, நாத்திகன் என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை கொண்டு, சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.

இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவுடையவர்களாகச் செய்ய இது வரையிலும் எந்த தேசியத் தலைவர்களாவது, எந்தத் தேசியத் தொண்டர்களாவது, எந்தத் தேசியப் பத்திரிகைகளாவது முயற்சியெடுத்துக் கொண்டார்களா?
இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைக்கான விஷயங்களை, சுயராச்சியம், சுதந்திரம், காங்கிரசு, பாரதமாதா, மகாத்மாகாந்தி, காந்தி ஜெயந்தி, என்னும் பெயர்களால் பிரச்சாரம் செய்து மற்றும் பண்டிகைகளையும் உற்சவங்களையும் விக்கிரகங்களையும் கற்பித்து மக்களை ஏமாற்றிக் கொண்டு தானே வருகிறார்கள்! இவ்வாறு தேசியப் பிழைப்புக்காரர்கள் ஒரு புறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதிக மூடர்கள் ஒரு புறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒரு புறமும், புராண பிழைப்புக்காரர்களும், குருக்களும், புரோகிதர்களும் மற்றொரு புறமும் பண்டிகைப் பிரச்சாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?
– (தந்தை பெரியார் – “குடிஅரசு” 22-11-1931)