– சிவகாசி மணியம்
கண்ணாடி முன் நின்று தலை சீவி, பவுடர் பூசி, மடிப்புக் கலையாத உடை அணிந்து கொண்டிருந்த பரிதியின் பார்வை வாசல் பக்கம் இருந்தது. டாடா சுமோ காரின் ஹாரன் சத்தம் காதில் விழுகிறதா என்பதில் கவனமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சந்தடியின்றி தங்கை பொன்மணி வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை.
இன்னிக்கி சனிக்கிழமை. உன்னோட பாங்க் திறந்திருக்கலாம் காலேஜ் திறந்திருக்காது. டாடா சுமோவும் வராது என்ற தங்கையின் குரல் கேட்டு வெட்கி நிற்காமல் உன்னோட பிரண்டு அருள்மொழிக்காக இல்லே. போஸ்ட்மேனை இன்னும் காணோமேனுதன்… என்று இழுத்தான்.
அவளுக்குச் சிரிப்பு. போஸ்ட் மேன் வர்ற நேரமா இது. என்னாச்சு உனக்கு? என்றாள் கிண்டலாக.
சாயங்காலம் வந்து பேசிக்கிறேன் என்று சமாளித்தவன் முகத்தை அவள் பக்கம் திருப்பாமலே வெளியேறினான். தயாராக நின்று கொண்டிருந்த டூ வீலரை உசுப்பி விட அவனைச் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்து மறைந்தது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தந்தை, சாலை விபத்து ஒன்றில் இறந்து போக, அம்மாவுக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தில் குடும்பம் பிழைத்திருந்தது. பட்டப் படிப்பு முடித்திருந்த பரிதிக்கு பொதுத் துறை வங்கி ஒன்றில் பொறுப்பான வேலை கிடைக்க, தாய் ஒரு தங்கையுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்தது குடும்பம்.
மகனுக்கு மணம் முடித்துப் பார்க்க அம்மா ஆசைப்பட்டபோது தங்கச்சி படிப்பு முடிஞ்சு புகுந்த வீட்டுக்குப் போகட்டும் என்று சட்டமே போட்டிருந்தான் பரிதி. பொன்மணிக்கு இது முதுகலை இறுதி ஆண்டு. அதே வகுப்பில் பயிலும் அருள்மொழி அவளது அருமந்த தோழி. செல்வந்தர் வீட்டுப் பெண்ணான அவள் டாடா சுமோவில் தான் வருவாள். வழியில் பொன்மணியையும் அழைத்துச் செல்வது வழக்கம். கல்லூரி வரை அரட்டை அரங்கம்தான்.
அன்று ஒரு முறைக்கு மேல் கார் ஒலி எழுப்பியும் பொன்மணி ஓடி வரவில்லை. காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் அருள்மொழி. ஓடிவந்து வரவேற்ற பொன்மணி இதோ ரெடியாகிவிட்டேன். அம்மாவுக்கு லேசா உடம்பு சரியில்லே. அதான்…. என்றாள்.
அக்கணம் அங்கே வந்த பரிதியை அறிமுகப்படுத்தினாள். என்னோட அண்ணன். பாங்க்கிலே வேலை. எனக்குச் சோறு போடுறது, படிக்க வைக்கிறது, பாதுகாக்கிறது… அண்ணன் சரி… அண்ணி? என்றாள் அருள்மொழி. கல்யாணம் ஆயிருச்சா? என்று கேட்பதற்குப் பதிலாக.
அண்ணி வரணும்னா தங்கச்சி இந்த வீட்டை விட்டுப் போகணும் என்றான் பரிதி நமட்டுச் சிரிப்புடன்.
எம்.ஏ.முடிச்சதும் அய்.ஏ.எஸ். பண்ணலாம்னு இருக்கேன் என்றாள் பொன்மணி கண் சிமிட்டியபடி.
அய்யோ பாவம்டி. உன் அண்ணனுக்கு நிறைய டை தேவைப்படும் மீசையக் கறுப்பாக்க… சில்லரையைச் சிதற விட்டாற்போல் சிரித்தார்கள் இருவரும். அவனும் சிரிப்பில் பங்கு கொள்ள நேர்ந்தது பரிதாபம்.
இன்னும் நேரமாகலையா…? என்ற குரலுடன் அம்மா அங்கே வரவும், அருள்மொழி வணக்கம் சொல்லவும், அரக்கப் பரக்க இடத்தைக் காலி செய்துவிட்டு அவர்கள் ஓடவும் சரியாக இருந்தது.
பொன்மணியை அழைத்துப் போகும் சாக்கில் அருள்மொழி அங்கே வரப் போக இருந்தாள். கல்லூரி நாட்களில் மட்டுமல்ல, விடுமுறையிலும்! காரோட்டியைத் தவிர்க்கும் நோக்கத்தில் மினி சைஸ் கார் ஒன்று வேண்டும் என பெற்றோர்களிடம் கேட்க மறுநாளே புத்தம் புதிய நானோ காரின் சாவி அவள் கைக்கு வந்தது.
சில விசயங்கள் கால நேரங்கள் பார்ப்பதுமில்லை, காத்திருப்பதும் இல்லை. பருவம் அப்படித்தான். காற்றைக் கடந்து போவது போல் அவ்வளவு சுலபத்தில் கடந்து போய்விட முடியாது. பரிதியால் மட்டும் இயலுமா என்ன! தனக்குள் ஏதோ ஒன்று துளிர் விடுவதை உணர்ந்தான். இதைத்தான் காதல் என்கிறார்களோ என்று அவனிடமே கேட்டுக் கொண்டான். கொண்டாடப்படாமல் மனதளவில் கிடந்து போனால் காதலும் சவலைப் பிள்ளையாகி விடும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும். பெண் தேடும் தொல்லையிலிருந்து அம்மாவுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாகவும் இருக்கும். அருள்மொழியிடம் அய் லவ் யூ சொல்லிவிட வேண்டியதுதான் என தீர்மானித்தபோது பெரிய இடத்துப் பெண் என்ற ஏற்றம் குறுக்கே வந்து நின்றது. அம்மாவிடமே ஆசையைச் சொல்லலாம்தான். தங்கச்சி ஒருத்தி இருக்கிறதை மறந்துட்டியா? எனும் பந்து திரும்பி வரும்.
தங்கைதான், அருகாமையில் இருப்பவள்தான் என்றாலும் கல்வியில் கவனம் வை என்று சொல்வதே ஒரு அண்ணனுக்கு அழகே தவிர என் காதலுக்குத் தூது செல் என்று எப்படிச் சொல்வது? குழம்பித்தான் போனான். ஆசை வெட்கம் அறியாது. சகோதரியைச் சரணடைவதுதான் சரியெனப்பட்டது.
இரவு ஏழு மணி இருக்கும். பொன்மணி அவளது அறையில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். வேலை விட்டு வந்த பரிதி கைலிக்கு மாறியிருந்தான். பாத்ரூம் வரை போனவன் முகம், கை, கால்களைத் துவட்டியபடி அங்கே வந்தான். பொன்மணியின் எதிரில் போய் நின்றான். சகோதரன் வந்திருப்பதை அறிந்து படிப்பதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்தாள்.
அம்மா எங்கே போனாங்க? என்றான்.
எனக்கு இடைஞ்சலா இருக்கும்னு பக்கத்து வீட்டுப் பாட்டி கூட பேசிக்கிட்டிருக்காங்க
காபி சாப்பிட்டாச்சா?
காபி என்ன, சாப்பாடே சாப்பிட்டாச்சு. உனக்கு காபி போடட்டுமா?
அம்மா வரட்டும் நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் எதிரே அமர்ந்தான். இதுபோல் அவன் ஒருபோதும் நடந்து கொண்டவன் இல்லை. அண்ணன் ஏதோ சொல்ல வந்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. உதட்டசைவுக்காக காத்திருந்தபோது உன்னோட நண்பி அருள்மொழி எங்கே காணோம்? என்றான் பீடிகையுடன்.
ஈவ்னிங் அவ கார்ல தானே வந்தேன்
அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணுன்னு கேள்விப்பட்டேன்
அட பரவாயில்லையே. வேற என்ன கேள்விப்பட்டே?
எம்.ஏ.முடிச்சதும் மேற்கொண்டு ஏதாச்சும் படிக்கத்தானா?
எதுக்குண்ணே சுத்தி வளைச்சுக்கிட்டு… வாராய் என் தோழின்னு மணப் பந்தலுக்கு அழைச்சுட்டுப் போகப் போறியான்னு கேட்டுற வேண்டியதுதானே…
மணப் பந்தலைப் பற்றிப் பேசியிருப்பீங்க. மாப்பிள்ளை யாருன்னும் பேசியிருப்பீங்க… சரியா?
அப்படி வா வழிக்கு. இதுவரை பேசிக்கலே. இனிமே பேசிட்டா போகுது…
அப்படியெல்லாம் பேச வேண்டாம். படிப்பைக் கவனி. அது போதும்
நான் ஒன்னும் டியூப் லைட் இல்லே. அண்ணனுக்கு இதைக் கூடவா செய்யக் கூடாது. அழகுச்சிலை மருமகளா வர்றது அம்மாவுக்கும் பிடிக்கும். ஆனா ஒன்னு, நம்ம தரத்துக்கும் அவங்க ஸ்டேட்டசுக்கும் சரிப்பட்டு வருமான்னு தெரியலே. எப்படியோ இன்னொரு கனமான ஏ.டி.எம்.கார்டுக்கு ஆசைப்பட்டுட்டே என்றாள் அர்த்தத்தோடு. அம்மா வந்து கொண்டிருக்கும் அரவம் கேட்க மின்தடை ஏற்பட்டதுபோல் பேச்சு நின்று போனது.
சில நாட்கள் கடந்திருந்தன. கல்லூரி விட்டு வெளியில் வந்த சிநேகிதிகள் இருவரும் நானோ காரில் ஏறிக்கொள்ள கடற்கரை நோக்கிப் பறந்தது. பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு வங்கக் கடலின் மிக அருகில் மணல் பரப்பில் உட்கார்ந்தார்கள். தொட்டுப் பேச வருவது போல் வந்து போகும் அலைகளின் ஓசையை ரசித்துக் கொண்டிருந்த இனிய வேளையில் அருள்மொழி ஆரம்பித்தாள்.
என்னமோ சொல்லணும்னு கூட்டி வந்தே. கம்னு இருக்கே
சொல்லத்தான் நினைக்கிறேன்…
பழைய சினிமா பேரையெல்லாம் ஞாபகம் வச்சுருக்கே…?
தப்பா எடுத்துக்க மாட்டியே…?
நீ தப்பா சொல்லிட மாட்டியே? இவ்வளவு நாள் பழகி என்னதான் புரிஞ்சுக்கிட்டியோ
என் அண்ணன் பரிதியப் பார்த்திருக்கே, பேசியிருக்கே.. அவனைப்பத்தி என்ன நினைக்கிறே?
தலையச் சுத்தி மூக்கைத் தொடணுமா! பரிதியப் பிடிச்சுருக்கானு கேட்டுற வேண்டியது தானே…
கரெக்ட்… அதேதான்…
அருள்மொழின்னு கூப்பிட உனக்குப் பிடிக்கலே… அண்ணின்னு கூப்பிட ஆசைப்படுறே சரியா…?
ஆமா அண்ணி… இல்லே அருள்… என்று குழறினாள் பொன்மணி.
நானே சொல்லிடலாம்னு நெனச்சேன்.
ஆகா-_பரிதி நீ கொடுத்து வச்சவன்டா என்று குளிர்ச்சியில் அவளை இறுகப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டாள். சிலிர்த்துப் போன அருள்மொழி ஏய்… ஏய்… இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்தத் துள்ளு துள்ளுறே. அவசரப்படாமக் கேளு. படிப்பு முடியட்டும் வீட்டுல சொல்லலாம்னு இருந்தேன். நானே ஓட்டிட்டுப் போறாப்ல சின்னக் கார் ஒன்று வேணும்னு அப்பா கிட்ட சொன்னேன். இருபத்து நாலு மணி நேரத்தில வந்து சேர்ந்தது. யார் என்ன சென்னாங்களோ, வீட்டுல புதுசா ஏதோ பேச்சு நடக்குறமாதிரி தெரிஞ்சது. ஆமா, மாப்பிள்ளை தேடுற வேலைல இறங்கிட்டாங்க. அமெரிக்க டாக்டர். இந்த வாரம் என்னைப் பார்த்து நிச்சயம் பண்ண வாராங்க.என்ன அவசரம்னு கேட்க எனக்குத் தோணல. ஏன் தெரியுமா? என்னைப் பெத்து வளர்த்து வசதியா படிக்க வச்சு, நான் கேட்டதெல்லாம் வாங்கித் தந்து, பிரியப்பட்டதைத் தின்னக் கொடுத்தாங்க. என் எதிர்காலம் பிரைட்டா இருக்கணும்னு நகை, நட்டு, நிலம் நீச்சுன்னு நிறைய சொத்து சேர்த்து வச்சிருக்காங்க. இது என்னோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. என்னோட உரிமையை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு சொந்த விருப்பத்தை அவங்க கிட்ட திணிக்கிறது நல்லா இல்லேன்னு படுது. நம்ம மேல நமக்கு இருக்குற அக்கறைய விட அவங்களுக்குத்தான் அதிகம் இருக்கும்.
காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லோரும் கண்ணியமா சந்தோசமா இருந்தா நமக்கும் முழு நம்பிக்கை வரும். காதல், கல்யாணம், குழந்தை குட்டி ஆனப்பிறகு கோர்ட் படிகள்ல ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க டைவர்ஸ் கேட்டு. அது கிடைச்ச அந்த நிமிசமே ஆம்பளைங்க புது மாப்பிள்ளையா சொக்கத் தங்கமா ஆயிடுறாங்க. பொம்பளை பித்தளை ஆயிடுறா. சீரழிஞ்ச பொழப்புத்தான். பெத்தவங்களைப் பகைச்சுப் போனவளுக்கு அவங்க கிட்டத் திரும்ப வர்றதுக்கு என்ன யோக்யதை இருக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே பிரிஞ்சுக்கிறது எவ்வளவோ பெட்டர். என்ன பொன்னு பேச்சையே காணோம் என்று நிறுத்தினாள்.
மணலைக் கிளறியபடி அருள்மொழி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பொன்மணி சுயநினைவு வந்தவளாய்த் தலை நிமிர்ந்தாள். ஆல் ரைட்… நான் ரொம்ப மலிவா நெனச்சுட்டேன் போல. ஒளிவு மறைவு இல்லாம வெள்ளந்தியா உன் மனசுல இருக்குறதைக் கொட்டிட்டே. உன்னோட பகிர்ந்துக்கிறதுக்கு என் கிட்டேயும் ஒரு கதை இருக்கு…
இத்தனை நாளா மறைச்சு வந்திருந்தியா? இப்பச் சொல்லு. சுமை குறைஞ்சாப்ல இருக்கும்…
தென் மாவட்டத்துல ஒரு கிராமம்தான் எங்க ஊரு. பக்கத்து டவுன்ல தான் படிச்சேன். சைக்கிள்லதான் போவேன். பிளஸ் டூ படிக்கிறப்போ பக்கத்துக் கிராமத்துல இருந்து காலேஜ் போற பையன் ஒருத்தன் என்னைப் போல சைக்கிள்ல வருவான். ஒரு நாள் அவன் என்கிட்ட தயங்கித் தயங்கி லெட்டர் ஒன்னு கொடுத்தான். வீட்டுக்கு வந்து படிச்சப்போ ரொம்ப உருகி உருகி எழுதியிருந்தான். அதை அப்படியே ஒரு புத்தகத்துல பத்திரமா வச்சிருந்தேன்…
வேற வெனையே வேணாம்…
கேளு… ரெண்டு மூனு நாள் கழிச்சு கல்வி அதிகாரிங்க ஆட்களோட வந்து இன்ஸ்பெக்சன் பண்ணினாங்க. ஒரு ஸ்டுடன்டை விட்டு வைக்கலே. ஆபாச புத்தகங்கள், போதைப் பாக்கு, காதல் கடிதங்கள் அதுஇதுன்னு ஏராளமா எடுத்துட்டாங்க. இந்தச் சமாச்சாரம் ஊர் முழுக்கத் தெரிஞ்சுபோச்சு. பேப்பர்லேயும் வந்துருச்சு. என் அண்ணன் பரிதிக்கு அப்படி ஒரு சந்தேகம் வர, நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து புத்தகங்களைப் புரட்டியிருக்கான். அந்த லெட்டர் கண்ணுல பட்டிருக்கு. அதைப் படிச்சிருக்கான். எழுதினவன் யாருன்னு தெரிஞ்சு போச்சு. லெட்டரைக் கையோட எடுத்துட்டுப் போயி, அவனைத் தேடிப் பிடிச்சு, அவன் கண் முன்னாலேயே கிழிச்சு மூஞ்சியில வீசிட்டு இனி இந்த மாதிரி லெட்டர் எழுதினா போலீஸ்ல சொல்லிடுவேன்னு என் தங்கச்சி உன்கிட்ட சொல்லச் சொன்னா ஜாக்கிரதைன்னு சொல்லி மிரட்டியிருக்கான். அதுக்குப் பிறகு அந்தப் பையன் என்ன ஆனான்னே தெரியலே. பிளஸ் டூ பரிட்சை முடிய, பரிதிக்கு இங்கே வேலை கிடைக்க சரியா இருந்துச்சு…
விட்டுத் தள்ளுடி… பெத்தவங்க இருக்காங்க, பிரிச்சு வச்சிருவாங்க என்கிற தைரியத்துல தானே நாம லவ் பண்றோம்…
ஜோக் அடிக்கிறியா? ஒன்னு சொல்லட்டுமா? நம்மோட அண்ணன் தம்பிங்க காதலிக்கிறதை நாம விரும்புறோம். சப்போட் பண்றோம். ஆனா ஆம்பளைங்கள்ல ரொம்பப் பேரு அவங்களோட அக்கா தங்கச்சிங்க காதலிக்கிறதை வெறுக்கத்தான் செய்றாங்க. ஆணாதிக்க உலகம்னு சொல்றாங்களே நிஜமாத்தானே இருக்கு என்று சலித்துக் கொண்டபோது அவளது முகத்தில் இறுக்கமும் குரலில் விரக்தியும் விரவியிருந்தன. காதல் என்பது பிரிவு வரை என்பதை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் காரை நோக்கி நடந்தபோது வழக்கமான கலகலப்பு காணாமல் போயிருந்தது.