ஆர்.எஸ்.எஸ்ன் வெறுப்பு அரசியல்
கே: ‘மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு’ என்று மோகன் பகவத் கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– கா.முத்துராமன், தாம்பரம்
ப: வேண்டுமென்றே சிறுபான்மையினரை _ குறிப்பாக முஸ்லிம்களை மனதிற்கொண்டு திட்டமிட்டே இந்த திடீர்க் கவலை ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு வந்தது போலும்! மக்கள் தொகைக் கட்டுப்பாடு எந்த மதத்தினரையும் தாண்டித்தான் சட்டம் செய்யப்பட வேண்டும். செய்யப்படுகிறது என்பதே யதார்த்தமாகும்.
கே: ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதித்திட்டங்கள், திரிபு வேலைகள், ஏமாற்றுகள் குறித்து இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ்நாடு அளவிலும் மக்களிடையே உடனடித் தொடர் பிரச்சாரத் திட்டம் கட்டாயம் அல்லவா?
– வீ.ஆறுமுகம், கோவை
ப: ‘விடுதலை’ நாளேட்டினைப் பாருங்கள். நாளும் படியுங்கள். ஏற்கெனவே பணி துவங்கி மும்முரமாய் நடைபெறுகிறது. தங்களைப் போன்றவர்களின் ஆர்வம் வரவேற்கத்தக்கது.
கே: தி.மு.க. தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்போது ஆற்றிய உரை அவரின் பண்பட்ட முதிர்ச்சிக்கான முத்திரை அல்லவா?
– வா.லட்சுமணன், மதுரை
ப: ஆம், நிச்சயம்! அதிலென்ன அய்யம்?
கே: தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவில் ப.சிதம்பரம் அவர்கள் பெரியாரை ஏற்றிப் போற்றியும், காந்தியை விமர்சித்துப் பேசியதையும், இடது கம்யூனிஸ்ட் சுப்பராயன் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புப் பேச்சையும் ஒரு சிறு நூலாக வெளியிட்டால் என்ன?
– ப.சந்திரசேகரன், திண்டிவனம்
ப: ஆலோசனைக்கு நன்றி. நிச்சயம் செயல்படுத்துவோம்.
கே: அன்றாடம் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் பேசுவதன் நோக்கம், முதன்மைச் சிக்கல்களைத் திசைதிருப்பி விடுவதற்காகவா?
– தீ.ராமலிங்கம், வேலூர்
ப: திசைதிருப்புவது ஒன்று; ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்வது மற்றொன்று.
கே: இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட, மத இணக்க மாண்புடைய திப்புசுல்தான் பெயரை நீக்கம் செய்த மோடி அரசின் மத வெறுப்பு பற்றி தங்கள் கருத்து என்ன?
– கி.மாசிலாமணி, விழுப்புரம்
ப: திப்புசுல்தான் ஸ்ரீரங்கம் கோயில் உள்பட பல கோயில்களுக்கு மான்யம் வழங்கியதற்கு அவருக்கு ஆர்.எஸ்.எஸ். காட்டும் நன்றியின் லட்சணம்தான் இந்த வெறுப்பு அரசியல் என்ற விதண்டாவாதம்!
கே: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழி என்கிற முடிவுக்கு உடனடித் தேவை, சட்டப் போராட்டமா? மக்கள் போராட்டமா?
– மோ.சிவராசன், திருச்சி
ப: மக்கள் போராட்டம்தானே ஒரே வழி.
கே: மதம் மாறினால் ஜாதிக்குரிய இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற முடியாது என்பது சரியா?
– கல.சங்கத்தமிழன், காஞ்சிபுரம்
ப: சீக்கியம், பவுத்தம் தவிர மற்ற மதங்களுக்குப் போனால் சலுகை கிடைக்காது என்பதே இன்றைய சட்டப்படியாக உள்ள நிலவரம். சீக்கியத்தையும், பவுத்தத்தையும் ஹிந்து மதத்தின் பிரிவுகளாகவே ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்க் கூட்டம் கருதி, ஹிந்து மதத்திற்கு வலு சேர்த்து (வலியவே) கொண்டாடுவதால் இந்நிலை.