தஞ்சை பெ. மருதவாணன்
[தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – (ஆசிரியர்)
அணைத்தழிக்கும் ஆரிய இந்துத்துவாக்-களின் சொல்வலை வேடங்கள் பல திறப்பட்டவை. ம. வெங்கடேசன் என்பவர் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் நூல், விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ். ஏடு 15.4.2016 அன்று வெளியிட்ட முன் அட்டைப் படத்தில் “அம்பேத்கரிஸ்ட் என்றால் ஆர். எஸ்.எஸ்ஸே’’ என்ற வாசகத்தை இடம் பெறச் செய்தது, திருக்குறள் என்பது சிறந்த இந்துக் கருத்துகளைத் தூய இந்து மொழியில் எடுத்துக்கூறும் ஓர் இந்து நூல் என்று தனது ‘ஞானகங்கை’ எனும் நூலில் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் கோல்வால்கர் கூறியது ஆகியவை நாடக வேடங்களுக்கான ஒரு சில எடுத்துக்காட்டுகளே. இத்தகையோரின் வேடங்களைக் கலைத்து வீதியில் நிறுத்தும் வீரியம் மிக்கதே பெரியாரியம். -புத்தர், பெரியார் ஆகியோரின் பெயர்களில் காணப்படும் பின்னொட்டுகள் (Suffixes) இந்துத்துவ ஆயுத மொழிகளுக்கு எதிராக வீசி எறியும் கருத்தமைந்த சொல்லாடல்களேயன்றி வேறல்ல.
இங்கே புத்தத்துவா என்ற பெயரில் குறிப்பிடப்படும் புத்த நெறியானது பிளவு-பட்ட ஆரிய மகாயானமோ, ஆரியக் கலப்புக்கு ஆளான பழைய தேரவாதமோ, தந்திரமந்திரங்கள் மலிந்த வஜ்ஜிராயனமோ மற்றும் வேறு சில பிரிவுகளோ அல்ல. மாறாக அண்ணல் அம்பேத்கரின் புத்தாக்கம் பெற்ற ‘நவயானம்’ எனும் பவுத்தமே இங்கு நாம் குறிப்பிட விரும்புவது.
உண்மையான பவுத்தத்தை அடையாளம் காணுவது எப்படி?
இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்குமுன் தோன்றி காலஓட்டத்தில் பல உருமாற்றங்–களைச் சந்தித்த பவுத்தத்தை இன்றைய காலகட்டத்தில் அடையாளம் காணுவது எப்படி? அந்த பவுத்தத்தைக் கசடறக் கற்று அதற்குத்தக நிற்பதற்குரிய வழிவகைகள் யாவை? இவ்வினாக்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள “இந்தியாவின் புத்தமதப் புனித இடங்கள் (Buddhist Shrines in India) எனும் நூலின் முன்னுரையிலும் முடிவுரையிலும் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஓரளவு விடை அளிக்கின்றன. As usual with every religious teacher legends have grown round the life of the founder of the Buddhism. By stripping the traditional accounts of the miraculous and mythical embellishments it is however possible to discover the historical nucleus (Page No.5)…. the accumulation of ages has transformed the religion a good deal by shrowding the original teachings of Gaudama Buddha. (Page No.75) – Buddhist Shrines in India, Publication Division, Ministry of information and Broadcasting, Government of India. Second Edition, May 1968) (ஒவ்வொரு சமயத்தலைவரைச் சுற்றியும் காலம் காலமாகவே பின்னப்பட்டு வரும் கட்டுக்கதைகளைப் போலவே புத்தரின் வாழ்க்கையைச் சுற்றிலும் பின்னப்பட்டுள்ளன. இவை புத்தரின் உண்மையான போதனைகளை மூடி மறைத்து விட்டன. அவ்வாறு வழி வழியாகப் படிந்துள்ள அற்புதக் கற்பிதங்களைத் தோலுரித்து அவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் வரலாற்றின் மய்யக் கருவைப் பிரித்தறிவது என்பது சாத்தியமானதேயாகும்.)
அண்ணல் அம்பேத்கரின் நவயான பவுத்தம்
அண்ணல் அம்பேத்கரின் நவயான பவுத்தத்தின் வழிகாட்டி நூலாக விளங்கும் “புத்தமும் அவர் தம்மமும்’’ எனும் நூல் புதிய புத்தாக்க பவுத்தத்தின் கொள்கைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அவற்றுள் முதன்மையான சிலவற்றை இங்குக் காண்போம். புத்தரின் எண்வழிப் பாதை, பஞ்சசீலம் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் அம்பேத்கர் நான்கு ஆரிய உண்மைகளைப் பற்றி அய்ய வினா எழுப்புகிறார். அவை புத்தரின் போதனைகளை விரக்தி போதனைகளாக ஆக்கிவிடுகின்றன என்றும், இவை ஆதியில் புத்தரால் போதிக்கப்பட்ட உண்மையான போதனைகளின் பகுதிகளா அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கிச் சேர்க்கப்பட்டவைகளா என்றும் அய்ய வினா எழுப்புகிறார். புத்தர் துறவு பூண்டதற்கான காரணங்களாக அவர் ஒரு இறந்த மனிதனையும், நோயாளியையும் முதுமையுற்றவரையும் பார்த்ததுதான் என்பதை, அபத்தம் என்று அம்பேத்கர் மறுத்துவிடுகிறார். புத்த பிக்குகள் பொதுவெளியில் சமூக சேவகர்களாக இருக்க வேண்டுமேயொழிய, தன்னளவில் சிறந்த மனிதராக இருந்தால் மட்டும் போதாது_ அதனால் ஒரு பயனும் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்து. கடவுள் நம்பிக்கை, ஆன்மா, மறுபிறப்பு, கர்மவினை, ஆரிய வேதங்கள், பிராம்மணங்கள், உபநிடதங்கள், நால்வருணங்கள், கொலை வேள்விகள், மோட்சம், பிரார்த்தனை போன்ற பிராமணிய சாஸ்திர சடங்காச்சாரங்கள் அனைத்தையும் புத்தர் நிராகரித்தார் என்பதை அம்பேத்கர் உறுதிபடக் கூறினார்.
வேதங்கள் பயனற்றவை என்பது புத்தரின் முடிவு
வேத ரிஷிகள் அனைவரையும் புத்தர் மதிக்கத்தக்கவராய்ப் பொருட்படுத்தவில்லை. மனிதனை ஒழுக்கத்தில் உயர்த்தும் செய்திகள் எதுவும் வேத மந்திரங்களில் இல்லை என்று கண்டுணர்ந்தார் புத்தர். புத்தரின் பார்வையில் வேதங்கள் பாலைவனம் போன்று பயனற்றவை. நாம் கற்பதற்கும் பின்பற்றுவதற்கும் உரிய ஏதுமற்றதாகவே வேத மந்திரங்களை அவர் ஒதுக்கினார். வேத ரிஷிகளின் தத்துவங்களிலும் சிறப்பாக ஏதுமில்லை என்பது புத்தரின் கருத்து. அந்த ரிஷிகள் இல்லாத உண்மையை இருளில் தேடியவர்கள். அவர்கள் ஒருக்காலும் அதை அடைந்ததில்லை. அவர்களின் கோட்பாடுகள் யாவும் வெறும் ஊகங்களே. அவற்றிற்குத் தருக்க அடிப்படையோ உண்மை அடிப்படையோ அறவே இல்லை. தத்துவத்திற்கு அவர்களின் பங்களிப்பு எந்த சமூக மதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை. எனவே புத்தர், வேத ரிஷிகளின் தத்துவங்களைப் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார். ரிஷிகளின் மந்திரங்களையுடைய வேதங்கள் என்பதை ஒரு பயனும் அற்றவை என்பதைப் புத்தர் தெளிவுபடுத்துகிறார் (மேற்படி நூல் பக்கங்கள் 75_76)
உபநிடதங்கள் கூறும் பிரம்மம் உள் பொருளா?
உபநிடதங்கள் மய்யப்படுத்தும் முக்கிய கருத்து பிரம்மம் அல்லது ஆத்மாவைப் பற்றியது ஆகும். பிரம்மம் என்பது அனைத்துமான பிரபஞ்சம் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற கொள்கையாகும். ஆன்மா தன்னைப் பிரம்மம் என்று உணர்வதிலேயே முக்தி இருக்கிறது. உபநிடதங்களின் மய்யக் கொள்கையாவது பிரம்மமே உள் பொருள் என்பதாகும். ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே. தானே பிரம்மம் என்று ஆன்மா உணராதது. ஏனெனில், அது உபாதிகளில் (வேதனை, துன்பம்) சிக்குண்டிருப்பதால்தான்.
கேள்வி இதுதான்: பிரம்மம் உள் பொருளா?
உபநிடதக் கோட்பாட்டை ஏற்றல் இந்த கேள்விக்கான விடையையே பொறுத்திருக்கிறது. பிரம்மம் உள் பொருள் எனும் கோட்பாட்டுக்கு ஆதரவான எந்த நிரூபணத்தையும் புத்தரால் காண முடியவில்லை. எனவே, உபநிடதங்களின் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். இந்த விஷயங்கள் பற்றிய கேள்விகள் உபநிடதங்களை இயற்றியவர்களிடம் கேட்கப்படவில்லை என்பதில்லை. அவைகளாவன: பிரகதாரண்யக உபநிடதத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் யக்ஞவல்கியர் எனும் பெருந்துறவிக்குக் குறைந்த யாரிடமும் இவ்வாறான வினாக்கள் கேட்கப்படவில்லை. அவர் வினவப்பட்டார். “பிரம்மம்’’ என்பது யாது? ஆன்மா என்பது யாது?’’ யக்ஞவல்கியர் கூறமுடிந்தது இதுதான் _ “நேதி! நேதி!!’’ நான் அறியேன்! நான் அறியேன்!!
யாராலும் யாதொன்றும் அறியப்படாத ஒன்று எவ்வாறு உள்பொருளாயிருக்க முடியும்? என வினவினார் புத்தர். வெறும் கற்பனையை அடிப்படையாகக் கொண்ட உபநிடதக் கோட்பாடுகளை நிராகரிப்பதில் அவருக்குச் சிக்கல் ஏதும் இருக்கவில்லை.
(மேற்படி நூல் பக்கம் 85)
(தொடரும்…)