தமிழகத்தில் கல்வி
தமிழகத்தில் 99.1 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். முதல் வகுப்பில் படிக்கும் 45.8 சதவிகிதம் குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் பார்க்க முடிகிறது. இரண்டாம் வகுப்புப் படிக்கும் 44.1 சதவிகித குழந்தைகளே தமிழ் வார்த்தைகளை வாசிக்கின்றனர். 5ஆம் வகுப்புப் படிக்கும் 32.3. சதவிகித குழந்தைகளே 2ஆம் வகுப்புக் கதைகளை வாசிக்கின்றனர்.
முதல் வகுப்பில் படிப்பவர்களில் ஓர்இலக்க எண்ணை 45.9 சதவிகிதமும், 2ஆம் வகுப்பில் 2 இலக்க எண்ணை 46.2 சதவிகித குழந்தைகளே அடையாளம் காட்டுகின்றனர். 5ஆம் வகுப்பில் வகுத்தல் கணக்கை 14.2 சதவிகித குழந்தைகளே செய்கின்றனர். 3 முதல் 5 வரை படிப்போர் கணக்குப் போடுதல் 2010இல் 43.2 சதவிகிதமாக இருந்து 2011இல் 41.9ஆக குறைந்துள்ளது என்று தமிழகத்தில் கல்வி கூட்டமைப்பின் 23 அரசு சாரா நிறுவனங்களில் உள்ள 690 தன்னார்வத் தொண்டர்கள் 2011இல் நடத்திய அசர் ஆய்வு தெரிவிக்கிறது.
கண்காணிப்புக் கேமராக்கள்
உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதால் ரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் அவசியமாகிவிட்டன.
அரசுத் துறைகள் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதில் அதிக முதலீடு செய்து வருகின்றன. எனவே, இதன் தயாரிப்பு சந்தையின் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவிகிதமாக உள்ளது. தற்போது உள்நாட்டுச் சந்தையில் ரூபாய் 1000 கோடியாக உள்ளது, 2015ஆம் ஆண்டில் ரூ. 2,200 கோடியைத் தொடும். சர்வதேச அளவில் 80 ஆயிரம் கோடியாக உள்ள சந்தை மதிப்பு 2015இல் 1.5 இலட்சம் கோடியாக இருக்கும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் தகவல் தெரிவித்துள்ளது.
நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்
செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் ரேத்தோ என்ற வைரஸ் கிருமியால் பரவும். நாய்களின் உமிழ்நீர் மூலமாக மனித உடலுக்குள் செல்கிறது.
மரணத்தை ஏற்படுத்தும் ரேபீஸ் நோயினால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேரும் உலகத்தில் 55 ஆயிரம் பேரும் உயிரிழப்பதாக இந்திய பொது சுகாதாரச் சங்கத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தினமும் சராசரியாக 150 பேர் நாய்க்கடிக்கு ஏ.ஆர்.வி. தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் இளங்கோ கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஜாதி மறுப்புத் திருமணங்கள்
திருமணப் பதிவு அலுவலகத்தில் 2010_2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 77,000 திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சிறப்புத் திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் 7,601 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத் திருமணப் பதிவுகளில் மதம் கடந்த திருமணங்கள் 10 சதவிகிதம் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழும் இந்து திருமணச் சட்டத்தின் கீழும் பல ஜாதி மறுப்புத் திருமணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஜாதி குறித்து விண்ணப்பப் படிவங்களில் எழுதுவதை பெரும்பாலானோர் விரும்பாததால் இது பற்றிய சரியான விவரத்தினை அறிய முடியவில்லை. எனினும், ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை மறுக்க முடியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2011_12ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 2,969 மதம் கடந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே நேரத்தில் நடைபெற்றதைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சுற்றி நடைபெற்ற புள்ளி விவரங்கள்: 20.11.2012இல் சென்னையில் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 52,303. இதில் மதம் கடந்து சிறப்புத் திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை 5,716. தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் சென்னையில் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 30,141. முதல் மூன்று மாதங்களில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 24,351. இதில், மதங்களைக் கடந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவானவை 2,949. தமிழ்நாடு கட்டாய திருமணச் சட்டத்தின் கீழ் பதிவானவை 14,557.
பகுத்தறிவுனா என்ன?
தமிழில் வில்லு என்ற பெயரில் வெளிவந்த படத்தில் இடம் பெற்றுள்ள ராமா ராமா ராமா… எனத் தொடங்கும் பாடலுக்கு தெலுங்கு இசையமைப்பாளர் தேவிசிறீபிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்திற்குப் பாடல் எழுதிய கவிஞர் கபிலனிடம் தொலைப்பேசியிலேயே பாடல் வரிகள் கேட்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல் வரிகளைத் தொலைப்பேசியில் கேட்டு எழுதியவர் தமிழ் தெரிந்த ஒரு நபர்.
பாரதியைப் படிச்சுப்புட்டா
பெண்களுக்கு வீரம் வரும்
கார்ல் மார்க்சை நினைச்சுப்புட்டா
கண்களுக்குள் நெருப்பு வரும்
பெரியாரை மதிச்சுப்புட்டா
பகுத்தறிவு தானா வரும்
என்ற பாடல் வரிகளைக் கூறியபோது, எதிர்முனையில் தொலைப்பேசியில் கேட்டு எழுதிக் கொண்டிருந்தவர், பகுத்தறிவுனா என்ன? என்று கபிலனிடம் கேட்டுள்ளார்.
அதற்குக் கவிஞர் கபிலன், பகுத்தறிவுனா என்ன என்று நீங்கள் கேட்கிறீர்களே அதுதான் பகுத்தறிவு என்றாராம்.
தீ
காடுகள் மற்றும் விளைநிலங்களில் ஏற்படும் தீ விபத்துகளால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 3.39 லட்சம் பேர் இறப்பதாக கனடாவின் வான்கோவரில் நடைபெற்ற அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆப்ரிக்காவின் சகாராவில் 1.57 லட்சம் பேர்களும், தெற்கு ஆசியாவில் 1.10 லட்சம் பேர்களும் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள்
2010ஆம் ஆண்டில் சாலை விபத்துகளால் இந்தியாவில் 1.3 லட்சம் பேர்கள் பலியாகி உள்ளனர். சென்ற 1999_2000 ஆண்டில் சாலை விபத்துகளால் ரூபாய் 55 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக திட்டக் குழுவின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. 10 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காகி ரூபாய் 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக சர்வதேச சாலைக் கூட்டமைப்பு (அய்.ஆர்.எப்) தெரிவித்துள்ளது.