ஒலிவட்டு
ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் ராப் என்ற சொல்லிசை வடிவத்தைக் கேட்டிருப்போம். ஆனாலும், அதிலும் வணிக நோக்கம்தான் இருக்கும். அவற்றிலிருந்து மாறுபட்டு சமூக அக்கறையுடன், தன்னை வளர்த்து ஆளாக்கிய இந்தச் சமூக மேம்பாட்டுக்கு இந்தச் சொல்லிசை வடிவத்தைப் பயன்படுத்தி வருகிறேன் என்கிறார் லண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜித்ஜீ. இந்தச் சொல்லிசைக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது.
இவர் அண்மையில் எழுதி வெளியிட்ட இசைத்தொகுப்பு யார் யார் பெரியார் – இதில், பெரியார், இராவண்ணன், கடவுள், யாமார்க்கும் குடியல்லோம் – என்ற நான்கு பாடல்கள் அமைந்திருந்தன. பெரியாரின் சிந்தனைகளை யார் யார் பெரியார் – பாடலிலும், ஆரிய, திராவிட வேறுபாடுகளை இராவண்ணன் – பாடலிலும், கடவுள் – என்பவர் கூர்கா போன்றவர்தான் என்கிற எள்ளல் தொனியில் இந்தப் பாடலும், யாமார்க்கும் குடியல்லோம் – என்பதில் தனது நிலையையும் அமைத்துள்ளார்.
இவர் இதுவரை 60 பாடல்கள், 4 இசைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். 2009-_இல் போர்க்காலத்தில் அணையாது என்ற தலைப்பில் ஒரு இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
யார் யார் பெரியார் – தொகுப்பு, எழுத்து, குரல் : சுஜித்ஜீ, இசை : சந்தோஸ், வெளியீடு : பெரியார் களம், வேப்பேரி, சென்னை -7.
குறும்படம்
இனி ஒரு விதி செய்வோம்
பெண்களுக்குத் திருமணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை, மகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டு, மகப்பேற்றின் போது, மகளைப் பறிகொடுத்து விட்டு, தவறை உணர்ந்து பேத்தியையாவது படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்று, பாட்டி, பேத்தியின் கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வது போல முடியும். இதுதான் இனி ஒரு விதி செய்வோம் குறும்படத்தின் கதை.
திரைப்பட கல்லூரி மாணவர் க. ராஜு இயக்கி இருக்கிறார். இந்தக் குறும்படம் பெரியார் திரை – 2011 – குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. செல்பேசி: 90031 47567
உடுமலை
இணையதளம்
சமச்சீர் கல்வி- 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்
http://www.tn.gov.in/schooleducation/
இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறுகின்றன. முதல் ஆண்டு என்பதால் வினாத்தாள் எப்படி இருக்கும் என்ற கவலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அரசும் எப்போதும் போல மாதிரி வினாத்தாள் கையேடை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்பி வைத்துள்ளதாம். ஆனால், அரசின் கல்வித்துறை இணையதளத்தில் அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை இடம்பெறச் செய்துள்ளது. இணையதளத்தில் பின்வரும் முகவரிக்குச் சென்றால் மாதிரி வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்துக் கொள்ளலாம்.