மாணவர் மனநலம் : பொறுப்பு யாருக்கு?

மார்ச் 01-15

– மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் மா.திருநாவுக்கரசு

(சென்னையில் கடந்த 9.2.2012 அன்று ஒரு உயர்நிலைப் பள்ளியில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையின் உயிரை 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கத்தியால் குத்திப் போக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நல்ல மனம் படைத்த அனைவரையும் உறையச் செய்துவிட்டது. இதுபோன்ற துயரச் சம்பவம் ஏன் நடைபெற்றது? இதற்கான காரணம் என்ன? இனி அவ்வாறு நடக்காமல் இருக்க மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து குழந்தைகள் மனநலம் என்ற சிறந்த தொடரை உண்மை இதழில் எழுதி,

தமிழக அரசின் சிறந்த குழந்தைகள் நூல் என்ற விருதைப் பெற்றவரும், உலக மனநல மருத்துவச் சங்கத்தின் தெற்காசிய மண்டல பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரும், சிறந்த மனநல மருத்துவ நிபுணருமான டாக்டர் மா. திருநாவுக்கரசு அவர்களைச் சந்தித்துக் கேட்டபோது அவர் அளித்த விளக்கம்:)

கடந்த சில வாரங்களாக நம்மைச் சுற்றி நடந்துவரும் சம்பவங்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 13 வயதில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும் செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இச்சம்பவம் மூலம் மனிதநேயம், மனிதாபிமானம், ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மதிப்பீடுகள் அறவே மறைந்து போனதாகத் தெரிகிறது. இப்படியே போனால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அனைத்துத் தரப்பினரும் அங்கலாய்க்கிறார்கள். ஏன் இந்த அவலம்? காரணம் என்ன?

எந்த ஒரு பிரச்சினைக்கும் காரணத்தைக் கண்டறிய வேண்டும். மேலும், உடனடிக் காரணம், நெடுநாளைய காரணம் என்று வகைப்படுத்த வேண்டும். அதன்பிறகு தீர்வுக்கான வழிகளை ஆலோசித்து விடை காணுவது சாலச் சிறந்தது ஆகும்.

எதிர்காலம் நிலைகுலைந்து போகும்:

அப்படிப் பார்க்கையில் இப்பிரச்சினைக்கும் உடனடித் தற்காலிகத் தீர்வு மற்றும் நெடுங்காலத் தீர்வு என்று பிரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இதில் சிறிது தாமதித்தாலும் இப்பாதிப்பு சமுதாயத்தில் புரையோடி, பற்றிப் பரவி இன்னும் 20 ஆண்டுகளில் எதிர்காலச் சமுதாயமே பாதுகாப்பின்மையால் நிலைகுலைந்து போகும். அனைத்து மக்களும் தரமான வாழ்க்கைக்காக ஏங்கப் போவது நிச்சயம்.

மனிதன் அறிவோடு இருக்க வேண்டும். அப்போதுதான் ஏனையோரிடமிருந்து மாறுபட்டு இருப்பான். அறிவின் மூலம் தனது வாழ்வையும் பிறர் வாழ்வையும் மேம்படுத்த வாய்ப்பு உண்டு. அதன்மூலம் அவன் என்றும் நிலைத்து நிற்கக் காரணமாக அமையும். அதற்கு அறிவு இன்றியமையாதது ஆகும்.

அறிவு-அனுபவம்:

அறிவு என்பது அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வது ஆகும். ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம் அறிவைப் பெறுகிறார்கள். அனுபவத்தின் மூலம் படிக்கிறார்கள். அனைத்து உயிரினங்களும் அவரவர்க்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலம்தான் அறிவைப் பெறுகின்றன. அதனால்தான் முழுமையாக அறிவை அடைவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. ஆனால், மனிதனோ மற்றவர்களின் அனுபவத்தின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்கிறான். மற்றவர்களின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டும், பார்த்தும் படித்தும் அறிகிறான்.

புத்தகம்:

எனவே, மனிதனின் அறிவு மனிதன் தோன்றிய காலத்திலிருந்து உண்டானதாகும். அவனது அனுபவம் லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இதைத்தான் படிப்பு என்கிறோம். ஏனையோரின் அனுபவங்களைத்தான் பாடம் என்கிறோம். அதன் தொகுப்புத்தான் புத்தகம் ஆகும்.

அறிவை வளர்த்துக்கொள்வதன் விருப்பம் அதிகமானதால் பள்ளிகள் தோன்றின. பெறும் அறிவின் வீரியம், தீவிரம் மற்றும் ஆழத்தைப் பொறுத்து இளங்கலை, முதுகலை என்று பிரிக்கப்பட்டது. அதற்கேற்ப இவ்வறிவை அறியும் இடங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சிக்கூடங்கள் என்று பெயரிடப்பட்டன.

கல்வி நிலையங்கள்:

இவை வரைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கான வழிகாட்டுதல்கள். நெறிமுறைகள் மற்றும் வரைமுறைகளைச் செயற்படுத்தப்படும் அமைப்புகள் பல்கலைக்கழகங்களாகின. இவற்றைப் பயிலும் மக்கள் மாணவர்களாயினர். பயிற்றுவிக்கும் நபர்களுக்கு ஆசிரியர் என்ற பெயர் ஏற்பட்டது.

தேர்வு – மதிப்பெண்:

இவ்வாறு வழங்கப்படும் அறிவை கல்வி என்றார்கள். அப்படி வழங்கப்படும் கல்வி எவ்வளவு முழுமை அடைந்துள்ளது? இம்முறையில் தேர்ந்தவர்கள் யார்? தேறாதவர்கள் யார்? என்று தெரிய வேண்டியது ஆயிற்று. அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைதான் தேர்வாகும்.  தேறியவர்கள் மிகுதியாக இருந்ததால் தர நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம் ஆயிற்று. அதன்விளைவுதான் மதிப்பெண்கள்.

அறிவை வளர்க்கத்தான் கல்வி:

தற்போது கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்கு என்ற நிலை மாறி பொருள் தேட, சம்பாதிக்க என்ற நிலைமைக்கு ஆளானது. கல்வி என்பது வருமானத்திற்கு வழிவகை செய்ய மேலும் ஒரு முதலீடாகக் கருதப்பட்டது. போட்டி ஏற்பட்டது. பள்ளிகள் தொழிற்கூடங்களாக மாறின. பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் ஆனார்கள்.

பயின்று வெளிவரும் மாணவர்கள் தரமான பொருள்களாகக் கருதப்பட்டனர். பள்ளிகள் தர நிர்ணயம் செய்யப்பட்டன. அது விளம்பரப்படுத்தப்பட்டும் வருகிறது. மனிதத் தன்மை மறைந்துபோனது. நியாயம், தர்மம் கேள்விக்குறியானது. கட்டுப்பாடு இல்லாத ஒழுக்கமற்ற அறிவுப் பொருளாக மாறியது. எப்படி இருந்தால் என்ன? வேலை முடிந்தால் சரி என்ற வாசகத்திற்கு மதிப்புக் கூடியது. ஒழுக்க மதிப்பீடுகள் என்றால் என்ன என்று இன்றைய இளைய சமுதாயத்திற்குத் தெரியாமல் போனது.

தோல்வி பயம்:

இதனால் ஏற்படும் அழுத்தம் பலவிதமான மன பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. தோல்வி பயம் விரக்தியை ஏற்படுத்தியது. வேகத்தை உண்டுபண்ணியது. தோல்வி என்பது அவமானமாகக் கருதப்பட்டது. ஆத்திரம் ஏற்பட்டது.

மனிதன் மிருகமானான்:

தோல்வியைச் சுட்டிக்காட்டியவர்கள்  மீது ஆத்திரம் ஏற்பட்டது. கோபம் ஏற்பட்டது. மனிதன் மிருகமானான். கோபத்துக்கு ஆளாகும் நபர் அல்லது பொருள் அழிக்கப்பட வேண்டும் என்ற மிருக சித்தாந்தம் தலைதூக்கியது. கட்டுப்பாடுகள் சொல்லித் தரப்படவில்லை. ஒழுக்க நெறிகள் போற்றப்படவில்லை. ஒழுக்க மதிப்பீடுகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

கொன்றான்:

இலக்கு மற்றும் இலக்கை அடையும் முறைதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. கோபத்திற்கு ஆளானவர் அழிக்கப்படுவதுதான் இலக்கானது. வழிமுறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிக் கொடுத்தது, கைகொடுத்தது. ஆசிரியையே கொன்றான். இதுதான் நடந்தது.

தீர்வு என்ன?

இதற்குத் தீர்வு என்ன? பொருளீட்டுவதற்கு  உதவி செய்யும் இயந்திரத்தனமான அறிவியல் அறிவை மட்டும் போதிப்பது போதாது. ஒழுக்கம் மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை அறிமுகப்படுத்தும் மற்றும் போதிக்கும் மொழிவழிப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கதைகள், கட்டுரைகள், வாழ்க்கைக் குறிப்புகள், வாழ்க்கை வரலாறுகள், கவிதைகள், காவியங்கள் மற்றும் இலக்கியங்கள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். அவற்றிலும் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதன் மூலம் நியாயம், தர்மங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வெற்றி, தோல்வி:

வெற்றி என்பதும், தோல்வி என்பதும் இயல்பான ஒன்றாகும். இரண்டுக்கும் பயன் உண்டு என்று சொல்லித்தர வேண்டும். கோபம் என்பது இயல்பான ஒன்றாகும். கோபத்தை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த, சொல்லிக் கொடுக்க வேண்டும். கோபம் மற்றும் ஆத்திரத்தைச் சமாளிக்கும் மற்றும் கையாளும் முறையை (Anger Managment) கற்றுத் தர வேண்டும்.

1,000 மாணவர்களுக்குமேல் உள்ள பள்ளிகளில் வளர் இளம்பருவ உளநலம் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரைப் பணி அமர்த்த வேண்டும். எண்ணிக்கையில் அதற்குக் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் பகுதிநேர மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.

மனநலப்பயிற்சி முகாம்:

ஆசிரியர்களுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் நடத்தி மனநலம் மற்றும் மனநோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், பள்ளி நிருவாகிகள் மற்றும் பள்ளி உரிமையாளர்கள் ஆகியவர்களுக்கு தற்கால இளைஞர்களின் மனம், மனநல மற்றும் மனநிலையைப் புரிந்துகொள்ளும் வகையில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கம் ஏற்பாடு செய்யும் பயிற்சி முகாம்களில் முழுமையாகக் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெறவும், பெற்ற சான்றிதழ்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். இவை அனைத்தையும் கட்டாயமாக்க வேண்டும்.

மேற்கூறிய ஆலோசனைகளைச் செயல்படுத்தினால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தரமான வாழ்க்கை, அர்த்தமுள்ள வாழ்க்கை நிச்சயமாக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

– நேர்காணல்: வே.சிறீதர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *