தொ(ல்)லைக்காட்சியால் பாழாகும் மாணவர்களின் ஆற்றல்கள்

மார்ச் 01-15

கோவையைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யும் அஜய்குமாரின் சொந்த அனுபவத்தைப் பார்த்தால், அவரது இரு குழந்தைகளின் இயல்பான ஆற்றல்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எவ்வாறு அழித்துவந்தன என்பதை உணர முடிகிறது.

அவருக்கு ஒன்பது வயது மகள், மூன்று வயது மகள் என்று இரு குழந்தைகள். அவர்கள் எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே அதிகமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மற்ற குழந்தைகளோடு விளையாட வேண்டும் என்ற இயல்பான ஆவலும் அவர்களிடம் இல்லை.

புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓவியம் வரைவது போன்ற எதிலும் நாட்டமில்லை. ஓரு குறிப்பிட்ட நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாவிட்டால், அவரது மகள் சாப்பாடு சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அஜய்குமார் தன் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிட்டார். இப்போது எனது குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுகின்றனர். பாட்டுப் பாடவும் ஓவியம் வரையவும் அவர்களுக்கு ஆர்வம் வந்துள்ளது. உடற்பயிற்சிகளையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தகவல் பரிமாற்ற ஆற்றலும், தன்னம்பிக்கையும் வளர்ந்துள்ளது என்று அஜய்குமார் கூறுகிறார்.

 

மருந்துக் கம்பெனி ஒன்றில் உயர்பதவியில் இருக்கும் சேதுராமன் என்பவர் தனது தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிடுவது அல்லது தனது நான்கு வயது மகன் உறங்கிய பிறகு நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என்று முடிவு எடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் வன்முறைக் காட்சிகள் தன் மகனைப் பெரிதும் பாதிப்பதுதான் இதன் காரணம் என்று அவர் கூறுகிறார். குழந்தைகள் நிகழ்ச்சிகளிலும் வன்முறை அதிகமாக உள்ளது. அல்லது அத்துடன் காட்டப்படும் விளம்பரப் படங்களில் வன்முறை நிகழ்ச்சிகள் அதிகமாக உள்ளன என்று அவர் கூறுகிறார்.

கணக்குத் தணிக்கையாளர் அனுபிரியா தனது தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிடுவது என்ற முடிவெடுத்தபோது, தாங்கள் பார்க்கும் தொடர்நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது என்பதால்,  குடும்பத்துப் பெரியவர்கள் முதலில் ஆட்சேபனை செய்தனர். ஆனால் அவர்களது பேரக்குழந்தைகள் அவர்களுடன் பேசி, விளையாடி பொழுது போக்குவதால் அவர்களும் இப்போது மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

நிகழ்ச்சிகளிலும், கார்டூன்களிலும் இயற்கைக்கு மாறான காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் அதிகமாக இடம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

பானுமதி என்ற விவசாய விஞ்ஞானி தனது தொலைக்காட்சிப் பெட்டியை விற்றுவிட்டார்.  விபத்துகள் பல நேர்ந்தாலும் ஏன் சோடாபீம் காயமடைவதில்லை என்று எனது நான்கு வயது மகன் கேட்டான்.  குழந்தைகளுக்கு தவறான கருத்துகளையும், எண்ணங்களையும் ஏற்படுத்தும் ஒரு மாய உலகை இந்நிகழ்ச்சிகள் உருவாக்குகின்றன என்று அவர் கூறுகிறார்.

பெற்றோர்கள் தங்கள் பொழுதுபோக்குச் சாதனமான தொலைக்காட்சியைத் தியாகம் செய்வது நல்ல செயலே என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாதபோது குழந்தைகள் இயல்பான தங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதுடன், பயன்நிறைந்த வகையில் கல்வி கற்கவும் செய்கின்றனர் என்று ஆசிரியர் ரமா மேனன் கூறுகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  காணும் காட்சிகள் குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று கூறும் மழலையர் பள்ளி ஆசிரியர் சந்தியா விக்ரம்.  எங்கள்  பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கும் நிபந்தனையே  வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கக்கூடாது என்பதுதான். இதனால் நல்ல பயன் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்ப்பதை எங்கள் குழந்தைகளின் பெற்றோர் முதலில் நிறுத்தினார்கள். இப்போது அவர்களது உறவினர்களும், நண்பர்களும் அவ்வாறு செய்யத் தொடங்கிவிட்டனர் என்று அவர் கூறுகிறார்.

நன்றி: THE  TIMES OF INDIA-24.2.2012
தமிழில்: த.க.பாலகிருட்டினன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *