ராஜபக்சேவுக்கு எதிராக ஜெனிவாவில் அய்.நா.வின் போர்க்குற்றத் தீர்மானம் : நியாயத்தின் பக்கம் இந்தியா நிற்க வேண்டும்

மார்ச் 01-15

அய்.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் பிப்ரவரி 27 ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெறவிருக்கிறது.

போர்க்குற்றவாளியாக இலங்கை ராஜபக்சேவை அரசு அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற விருக்கும் நிலையில், (மத்திய) நமது இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்? இருக்கப் போகிறது என்பது பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்களின் ஊகங்களாக ஒருபுறம் இருக்கிறது.

 

அதைவிட இனப்படுகொலைக்கும், வரலாறு காணாத வன்கொடுமைகளுக்கும், தமிழின அழிப்பும் செய்து இன்னமும் முள்வேலிகள் முற்றாக அகற்றப்படாது, அரசியல் தீர்வு காண்போம் என்பதை நீர் எழுத்துக்களாக்கி, ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டுள்ள சிங்கள ஹிட்லர் ராஜபக்சே அரசினைக் காப்பாற்ற இந்தியா முனையப் போகிறதா? காலங்காலமாகச் சுமந்த கறையைக் கழுவிட ஏற்படவிருக்கும் வாய்ப்பை நழுவவிடப் போகிறதா என்பதே இங்குள்ள தமிழர்கள், உலகத்தின் பன்னாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; மனித உரிமையை மதிக்கும் மனிதநேயர்கள் அனைவரது நியாயமான கவலையாகவும், கேள்வியாகவும் எழுந்துள்ளன.

இப்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்திய அரசு எடுத்தால், உடனே அதற்கு ஆதரவாக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும் வந்து நிற்கும். முழுக்கவே அவர்தம் குடைக்குள் – பாதுகாப்புத் தேடி – இலங்கை அரசு புகுந்துகொண்டு இந்திய எதிர்ப்பாளராக வெளிப்படையாக மாறிவிடும் என்ற பழைய பல்லவியையே – ஏதோ இராஜதந்திரத்தில் ஒரு புதுக்கண்டுபிடிப்பு என்பதுபோல – பாடப் போகிறதா இந்திய மத்திய அரசு என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இன்று அனைவர் முன்னிலையிலும் எழுந்து நிற்கின்றது!

ஏற்கெனவே இந்த மனித உரிமைகள் மீறல், இராணுவத்தின் அத்துமீறல், ராஜபக்சே அரசுகளின் மனித உரிமைகள் பறிப்பு, அழிப்புப்பற்றி முன்பு எப்போதும் கவலை கொள்ளாது, அமெரிக்கா, அய்ரோப்பிய யூனியனின் பற்பல நாடுகளும், அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினர் தந்த உண்மை விளக்க அறிக்கை – தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கள் பார்வையை மனிதநேயத்துடன் செலுத்த முன்வந்துள்ளன!

அந்த நாடுகள் _ அரசுகளுக்கெல்லாம் இல்லாத தொப்புள்கொடி உறவு பந்தபாசம் தமிழர்களைத் தன்னகத்தே கொண்டு இந்தியக் கூட்டாட்சிக்கு உண்டே!

இதற்கு முன்னரே அந்தப் பொறுப்பை உணர்ந்திருந்தால், தற்போது மனித உரிமையாளர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் – உலகத் தமிழர்கள் – இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசு நம்மைக் காப்பாற்றிடும், இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திடும் என்று எண்ணி ஏமாந்த – இன்று நம்பிக்கை இழந்த மக்களாகி நமக்குச் சாபம் தரும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ள இலங்கைவாழ் ஈழத் தமிழர்களின் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் – ரத்தக் கண்ணீர் கரை உடைந்த வெள்ளமாகப் பெருகிடும் நிலையும், இன்னமும் வைத்துள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையை இந்திய அரசு தி.மு.க.வைப் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய அய்க்கிய முன்னணி அரசு வலுப்படுத்தப் போகிறதா? அல்லது இழக்கப் போகிறதா?

நாம் மேலே சுட்டிய பழைய பூச்சாண்டியையே (அதாவது இலங்கை சீனா பக்கம் போய்விடும் என்பது போன்ற அதீதக் கற்பனையையே வாதமாக) கூறி தனது கடமையை, பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடக் கூடாது.

இன்றுள்ள பன்னாட்டு அரங்கில் இந்தியா போன்ற முன்னேறி வரும் நாட்டினை நேரிடையாகப் பகைத்துக் கொள்ளும் நிலையை அவ்வளவு எளிதாக எந்த அரசும் எடுத்துவிட முடியாது!

ஒரு சுண்டைக்காய் நாட்டைக் கூட, இன்று எந்த வல்லரசு நாடும் எதுவும் செய்துவிட முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், ஏனோ அறிவு ஜீவிகளான இராஜதந்திரவாதிகளின் பார்வைக்கு மட்டும் இது பளிச்சென்று தெரியாமல் மறைந்துவிடுகிறது!

அமெரிக்கா முதல் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் மற்ற மனித உரிமையாளர்களும் இலங்கையின்மீது போர்க் குற்றம் சுமத்தும்போது, இந்திய அரசு அதனை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ காப்பாற்றும் வேலைகளில், ராஜதந்திர போர்வையைப் போர்த்திக் கொண்டு ஈடுபட்டுவிடக் கூடாது.

பளிச்சென்று நியாயத்தின் பக்கம், நீதியின் பக்கம், மனித உரிமையின் பக்கம் நிற்க முன்வர வேண்டும்.

ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பழியைத் துடைத்துக் கொள்ள இந்திய அரசுக்கு 27 ஆம் தேதி கூட்டம் ஜெனிவாவில் நடப்பது ஒரு அரிய வாய்ப்பு. அதில் துணிவுடன் மனித உரிமையின் பக்கம் நிற்க முன்வர வேண்டும் மத்திய அரசு.

இன்றேல், தீராத பழி இறுகுவது மட்டுமல்ல, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மிகப்பெரிய அவலத்தைச் சந்திக்கவும் தயாராகிவிட வேண்டும்.

– கி.வீரமணி
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *