அலங்காரம்
நம் பெண்கள் நாட்டுக்குச் சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மை களானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன்.
அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல் புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ் போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.
டீசென்சி – சுத்தம், கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால், அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த பேஷன், நகை, துணி வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் சொல்லுவேன்.
நம் நாட்டுப் பெண்கள், மேல்நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை ஊக்கம் உடையவர்கள் ஆவார்கள்.
– தந்தை பெரியார்
குடிஅரசு – சொற்பொழிவு – 21.09.1946