கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
“மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாடினார். (குயில் 26.8.1958)
ஆம், தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் உருண்டோடியும் நாள்தோறும் நாள்தோறும் பேசுபொருளாக இருந்து வருகிறார்.
இவ்வாண்டு தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2022) உலகின் பல நாடுகளிலும் கோலாகலமாக நடந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் வட மாநிலங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.
‘திராவிட மாடல்’ அரசான _ சமூகநீதிக்கான சரித்திர நாயகர் _ தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு 21 மொழிகளில் தந்தை பெரியாரின் படைப்புகளைக் கொண்டுவர இருக்கும் செயல் மூலம், மேலும் தந்தை பெரியாரின் அரும்பெரும் சிந்தனை மலர்கள் உலகம் முழுவதும் கமழ இருக்கின்றன.
அன்று 1958இல் புரட்சிக்கவிஞர் தொலைநோக்கோடு கூறிய அய்யாவின் மண்டைச் சுரப்பு உலக மானுடத்திற்கே ஒளி காட்டப்போகிறது.
அவர் பிறந்த நாட்டில் பிறந்தோம் _ அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்பது, ‘ஆகா, எத்துணைப் பெருமை! கிடைத்தற்கரிய பேறு!!’
உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பல சமூக சீர்திருத்தவாதிகள், சமூகப் புரட்சியாளர்கள் தோன்றியிருக்கின்றனர்.
அவர்களிலிருந்து மாறுபட்டு தந்தை பெரியார் தனித்துவத்துடன் மிளிர்கிறார். எப்படி?
ஒரு தத்துவத்தை _ சித்தாந்தத்தை உருவாக்குகிறார்; அதனை மக்களிடம் பரப்பி விழிப்புணர்வை உண்டாக்க ஓர் இயக்கத்தையும் உருவாக்குகிறார்; பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என்ற முறையில் மட்டுமல்ல, நூல்களை வெளியிடுவதற்கென்றே தனி அமைப்பையும் ஏற்படுத்துகிறார். இயக்கத்திற்காக ஏடுகளையும், இதழ்களையும் ஏற்பாடு செய்கிறார்.
பிரச்சாரம், போராட்டம் என்ற அணுகு-முறையிலும் முன் வரிசையில் நிற்கிறார். போராட்டம் நடத்துவதற்கு முன்பு மக்களைப் பக்குவப்படுத்த ஒரு நீண்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
களத்தில் நின்று போராடி, சிறை செல்வதிலும் முதல் தளபதியாக தன்னையே முன்னிறுத்திக் கொள்கிறார். எந்த உரிமைக்கும் ஒரு விலை உண்டு, அதனைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார்.
இந்தப் பணிகள் எல்லாம் தனக்குப் பின்னரும் தொய்வில்லாமல் நடக்கவும் நிதி மிகவும் அவசியம் என்ற முறையில் ஓர் அறக்கட்டளையையும் நிறுவுகிறார்.
அந்த அறக்கட்டளை நேர்மையாக நடந்திடவும் இயக்கத்தைத் தலைமையேற்று இலட்சிய மிடுக்கோடு, தொண்டறமாகக் கருதிப் பாடுபடுவதற்குமானவர்களையும் அடையாளம் காட்டுகிறார்.
இத்தனை அம்சங்களும் நூறு விழுக்காடு தூய்மையாகக் கட்டமைப்புடன் எதிர் காலத்திலும் இயங்கக்கூடிய தொலைநோக்கோடு வழிவகை செய்த ஒரே உலகத் தலைவர் தந்தை பெரியாரே!
பல சீர்திருத்த அமைப்புகள், அவற்றைத் தோற்றுவித்த தலைவர்களின் மறைவுக்குப் பின் மறைந்தே போயின. அதில் விதிவிலக்காக நின்றவர் _ நின்று கொண்டு இருப்பவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே!
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அறக்கட்டளைக்கும் இயக்கத்திற்கும் முறையே தலைமையேற்ற அன்னை மணியம்மையாரும், ஆசிரியர் வீரமணி அவர்களும் தந்தை பெரியாரின் எதிர்பார்ப்பை இலக்கணச் சுத்தமாக நிறைவேற்றினர். இன்றும் அதே பாட்டையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.
ஏடுகளும், இதழ்களும் இயக்கப் பிரச்சாரங்-களும், கல்வி நிறுவனங்களும் மேலும் மேலும் எண்ணிக்கையிலும் வலிமையிலும் வளர் நிலையில்தான் இருக்கின்றன.
நவீன உலகத்திற்கேற்ப தரவுகளை அமைத்து இயக்கத்தை, இளைஞர்கள் மத்தியில் நீர்பாய்ச்சி செழிப்பான ஒரு நிலையை உருவாக்கியுள்ளார் _ தமிழர் தலைவராக அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 49 விழுக்காடு என்றால், ஆசிரியர் காலத்தில் 69 விழுக்காடாகத்தான் உயர்ந்திருக்கிறது.
ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்-பட்டோருக்கு இல்லாதிருந்த இடஒதுக்கீடு _ இப்பொழுது 27 விழுக்காடு என்ற கனி பிற்படுத்தப்பட்டோர் மடியில் விழுந்துள்ளது.
இதற்காக (மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்துவதற்காக) திராவிடர் கழகம் _ அதன் ஒப்பற்ற தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஓய்வறியா ஒப்பற்ற உழைப்பாலும், தீர்க்கத்தாலும் 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும் இந்திய அளவில் நடத்தப்-பட்டுள்ளன.
அதனுடைய வெற்றிக் கனிதான் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடாகும்.
இதனை அதிகாரப்-பூர்வமாகச் செயல்-படுத்திய சமூகநீதிக் காவலர் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் மிகவும் வெளிப்படையாகவே, “வீரமணியைப் பார்க்கும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்ச்சியைப் பெறுகிறேன்’’ என்று சொன்னதுண்டு. (திருச்சி, 23.12.1992)
“மண்டல் குழுப் பரிந்துரைகளில் எஞ்சி இருப்பனவற்றைச் செயல்படுத்திட அகில இந்திய அளவில் வீரமணிதான் ஒருங்கிணைப்பாளராக -_ கொறடாவாக இருந்து செயல்பட வேண்டும்’’ என்று டில்லி மாவலங்கர் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு வி.பி.சிங் சொன்னாரே! (19.9.1995)
“என் சோர்வை நீக்குவது வீரமணியும் திராவிடர் கழகமுமே’’ என்று முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் சொன்னதுண்டே! (திருச்சி, 11.11.2006)
இப்பொழுது நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் முழுமையான நினைப்பெல்லாம் _ அசைவெல்லாம் நம் காலத்திலேயே தந்தை பெரியாருக்கு நிரந்தரமான நினைவுச் சின்னத்தை பேருருவாக உருவாக்க வேண்டும் என்பதுதான்.
திருச்சியையடுத்த சிறுகனூர் என்னும் ஊரில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்-படவிருக்கும் “பெரியார் உலகம்’’ என்பதாகும்.
இதுகுறித்து தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலரில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
”பெரியார் உலகம்” என்ற பெயரில் திருச்சியை அடுத்த சிறுகனூரில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் ஒரு பகுத்தறிவுப் புத்துலகு _- உலகத்தாரை ஈர்க்கும் சாதனை! உன்னத அறிவுக்காட்சியகமாகவும் திகழ்ந்து, தந்தை பெரியாரின் தத்துவ வித்தகம் எப்படி உலக அளவில் வென்ற கொள்கை என்பதை நடைமுறையில் மக்களுக்குக் காட்டப் போகிறோம். ”பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது” என்பதைக் காலத்தை வென்ற கருத்தாக்கமாகக் காட்டும் முயற்சிகள் ஒரு நல்ல தொடக்கத்தினை எட்டியுள்ளது!
கடந்த ஆட்சியில் அனுமதி தராமலே கிடப்பில் போடப்பட்ட இந்த ‘மெகா திட்டம்’ இன்றைய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி பதவிக்கு வந்த பிறகு, அனுமதியளிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் அனுமதிகளைப் புதிதாகப் பெற்று, ஒரு முழு நிறைவை அடைந்துள்ளது!
நம் அறிவு ஆசான் உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 95 அடி உயரச் சிலை, 60 சதுர அடி உயர அளவில் உள்ள பீடத்தோடு அமைந்து புதிய ஒளியூட்டும்! (பல அறைகள் – படிப்பகங்கள், காட்சியகங்களும் அடங்கும்) அடுத்து ஆய்வகம், பெரியாரியல் பயிலகம், நூலகம், அறிவியல் கண்காட்சி, குழந்தைகள் பூங்கா, உணவகம் உட்பட பல கட்ட (விணீஸீஹ் றிலீணீsமீs) வளர்ச்சியடைந்து பெரியாரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் நிறைவடையும்.
இதுவரை அதற்கென வந்துள்ள நன்கொடை-கள் தொகை ரூ.5.70 கோடி!
திட்டச் செலவோ மிக அதிகம்!
அதற்கும் வழிவகை தேடுவோம்! தேடிக்-கொண்டே பணி தொடருவோம்!
தொடக்கத்தில் தமிழ்நாடு அரசின் அனுமதிக்கான கட்டணமாகவே ரூ.31.42 லட்ச ரூபாய் கட்டியுள்ளோம் என்றால், திட்டத்தின் ‘பேருரு’ எப்படி என்பதை மனக்கண்ணால் எண்ணிப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடையலாம்!
நன்றி காட்டுவோரை நாடுவோம்!
நல்லதோர் ஆதரவைத் தேடுவோம்!
எதிர்காலத்திலும் பணி தொடர்வார்கள்!
அதுதான் என்றும் பெரியார் கொள்கை புகழ் பாடும்!’’ என்று குறிப்பிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.
பெரியார் உலகிற்கான அடிக்கல் நாட்டு விழா, தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17இல் (2022) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க, தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி விழாப் பேருரை நிகழ்த்தினார்.
பெரியார் உலகம் தொடர்பாக, தனது நன்றியுரையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் தெரிவித்த தகவல்கள் முக்கியமானவை.
“அறிவாசான் தந்தை பெரியாரின் அருந்-தொண்டை அகிலமே புரிந்து உணர்ந்து, காலத்தை வென்ற கருத்துக் கடலான தலைவரை _ உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கிறது என்ற பெருமையை நிலைநாட்டும் வகையில், திருச்சி சிறுகனூரில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியார் உலகமும் அதில் 95 அடி உயரத்தில் சிலையும், 60 அடியில் பீடமும் இணைந்து மொத்தம் 155 அடியில் அமையவுள்ளது. இதுவே உலகளவில் அய்யாவின் சிலைகளுள் மிகப் பெரியதாகும்.
பீடம் 3 தளங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் இருக்கும். அதனுள் நீதிக்கட்சி, திராவிடர் இயக்க வரலாற்றை விளக்கும் ஒளி _ ஒலிக் காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம், மெழுகுச்சிலை அரங்கம், குழந்தைகளுக்குரிய விளையாட்டுப் பூங்கா, அறிவியல் கண்காட்சி, பெரியாரியப் பயிலகம் _ ஆய்வகம், சிறிய அளவிலான திரையரங்கம், உணவகம் போன்றவை அமைக்கப்படவுள்ளன. இப்பணி-கள் பல கட்டங்களாக நடைபெறவுள்ளன.
மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சிதான் தேங்கிக் கிடந்த இதற்கான கோப்புகளை ஆய்ந்து பார்த்து, அனுமதியளித்தது. அவரே இன்று பெரியார் உலகத்திற்கான அடிக்கல் நாட்டி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியைத் தொடங்கி வைத்துள்ளார்.
அய்யாவின் சிலை டிஜிட்டல் ஸ்கல்ப்டிங் (Digital Sculpting) என்னும் தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்-படுகிறது. அதி நவீன தொழில்நுட்ப மென்பொருள்கள் இதற்காகப் பயன்படுத்தப்-படுகின்றன. இத்தாலியிலும் துருக்கியிலும் பணிபுரியும் தொழில்நுட்பக் குழு இதை வடிவமைக்கிறது.
கணினி வடிவமைப்பினைப் பயன் படுத்துவதன் மூலம் அய்யாவின் உருவத்தினை மிகவும் துல்லியமாக வடிவமைக்க முடியும்.
கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆன குழு மேற்பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களைச் செய்தது. இந்தக் கணினி வடிவமைப்பு பின்னர் கட்டடக் கலை வடிவமைப்பிற்கு மாற்றி அமைக்கப்பட்டு அய்யாவின் சிலை உருவாகிறது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்-படுத்துவதன் மூலம் அய்யாவின் சிலை மிகவும் சிறப்பாக அமைய உள்ளது.
‘பெரியார் உலகம்’ திட்டத்திற்காக இதுவரை பல துறைகளில் அனுமதி பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அனுமதி பெறும்-போது பல்வேறு Soil Test Report-க்கான பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டன. பொதுப்பணித்துறையும், சென்னை அய்.அய்.டி. வல்லுநர் குழுவும் பரிசோதித்த பிறகு அனுமதி பெற்றோம்.
எத்தகைய இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி தந்தை பெரியாரின் சிலை நிற்கும்.
திருச்சி _ சிறுகனூர் பூகோளத்தின்படி பூகம்பத்தில் 2ஆம் படிநிலையில் (Semi Rock) இருக்கிறது. நிலநடுக்கம் வந்தால்கூட அதனைத் தாங்கக் கூடிய அளவில் மண்ணின் உறுதித்தன்மை (முக்கால் பங்கு பாறை அளவு) உள்ள இடத்தில் அய்யாவின் சிலை அமையவுள்ளது.
சாதாரணமாக திருச்சியில் அடிக்கக்கூடிய காற்றின் அளவு மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் அடிக்கும். அதைவிட 6 மடங்கு அதிகமாக (330 கிலோமீட்டர் வேகத்தில்) காற்று அடித்தாலும் அதனைத் தாங்கக் கூடிய நவீன முறையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி (Finite Element Method Latest Technology for Accurate Information) என்ற முறையில் அமையவுள்ளது.
2001இல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 7.7 ரிக்டர் அளவுகோலாகும். அண்மையில் ஜப்பான் _ தென்கொரியாவில் மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் புயல் தாக்கியது. இவை இரண்டும் ஒன்றுசேர வந்து தாக்கினாலும், அதனை மூன்று மடங்கு எதிர்த்து நிற்கும் வலிமையுடன் இந்தச் சிலை என்ற முடிவு கிடைத்தது.
பெரியார் உலகத்தின் பல்வேறு பணிகளுக்-காக உலகளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் நம்முடன் கைகோத்துள்ளனர். அவர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முதலாவதாக, எங்களுடைய நிறுவனம்
1. The Periyar Self Respect Propaganda Institution Dr.V.Sundararajulu அய்யா அவர்களுக்கும்,
2. Structural Consultant PR Structural Consultant Mr.Rjaraman அவர்களுக்கும்,
3. CBRE South Asia Put Ltd (CB Richard Ellis) Mr.Rajaraman) அவர்களுக்கும்,
4. MEP Consultant Innowell Engineering International Pvt Ltd Mr.K.Senkathir Selvan அவர்களுக்கும்,
5. Architecture Consultant Padgro Consultants Pvt Ltd Mr.B.S.Murthy அவர்களுக்கும்,
6. Statue Vendor & Consultant Polox Technologies LLC Mr.Sathyanarayanan அவர்களுக்கும் நன்றி.
சிறப்புமிகுந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சான்றோர் பெருமக்கள் அனை-வரையும் வரவேற்று உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், தலைமை வகித்து உரை நிகழ்த்திய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், இம்மாபெரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ள தமிழ்நாட்டு மக்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் போற்றக்கூடிய வகையில் பல்வேறு சரித்திரச் சாதனைகளைச் செய்து வரும் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மாண்புமிகு மானமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் ஆகியோருக்கும், வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்களுக்கும், துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்களுக்கும், இங்கே வருகை தந்துள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தோழர்கள், கழகத் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்’’ என்று கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தமது நன்றியுரையில் குறிப்பிட்டார்.
உலகத்தில் அரும்பெரும் நினைவுச் சின்னங்கள் உள்ளன. பெரும்பாலும் பார்த்து இரசிப்பதற்கும், மகிழ்ச்சி அடைவதற்குமான சுற்றுலாத் தலங்கள்தான் அவை.
நாம் உருவாக்க இருக்கும் “பெரியார் உலகம்’’ என்பது வேறுபட்டது. எழிலுக்கும், ஈர்ப்புக்கும் குறைவு இருக்காது என்றாலும், சுற்றுலாத் தலம் என்பதைவிட, கற்றுலாத் தலமாக நிமிர்ந்து நிற்கும்.
புத்தம் புதிய சிந்தனைக் கருவூலம் _ காண்போரின் புத்தியைச் சாணை தீட்டுவதாக இருக்கும்.
ஏற்கெனவே ஒட்டி இருந்த பழைமைவாத அழுக்குகளை, கிருமிகளை விரட்டி ஒழித்து, ஆரோக்கியமான புத்துலகுக்கான திறவுகோலாக இருக்கும்.
எல்லைகளைத் தாண்டி, இதன் உருவாக்கத்திற்கான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளித்து, உதவியவர்களும் உதவ முன்வருவோரும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும். மண்டைச் சுரப்பை முழு அளவில் உலவச் செய்வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!