ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக பொங்கல் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். 2012ஆம் ஆண்டிற்கான விழா டோக்கியோ நகரில் கசாய் சமூக கூடத்தில் ஜனவரி 21 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழக நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதுடன் மாலையில் நகைச்சுவை விருந்தும் கொடுத்தார். சென்னை அஜய் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளின் பொங்கல் விழா பற்றிய விளக்கம், ஆடல் பாடல்களும் நடைபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர்… என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலுடன் பாடல் விளக்கத்தையும் விளக்கி, இப்படிப்பட்ட ஒரு பண்பாட்டை, கலாச்சார வளத்தை, நாகரிகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே தன்னகத்தே கொண்டு திகழும் தமிழ் மொழிக்கு வணக்கம் கூறி பொங்கல் திருநாள்- தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்றார் திரு.செந்தில்குமார்.
அடுத்து உரையாற்றிய முரளி, திருநெல்வேலியிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் இடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பற்றிய விளக்கம் கொடுத்து தமிழர் பாண்பாட்டின் தொன்மையை விளக்கினார். செந்தில் குமார் மற்றும் முரளி மணிகண்டன் நிகழ்ச்சிகளை அழகு தமிழில் தொகுத்து வழங்கியது விழாவிற்கு மேலும் சிறப்பைப் பெற்றுத் தந்தது.