Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

கலைஞரின் சொற்போர் ஆரியர் சூழ்ச்சித் திரையை அகற்றியது (1943)

(திருவாரூரில் 1925 இல் பிறந்த தீப்பிழம்பு கலைஞர் ஆவார்.  அப்பிழம்பு இன்றுவரை தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று ஆரியர் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் அவை மக்களிடையே உண்டாக்கியுள்ள தீய நோய்களான ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், மதம், கடவுள், சாஸ்திரம் ஆகியனவற்றைத் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுட்டுப் பொசுக்கி வருகின்றது.  தங்கள் பிழைப்பு பறிபோவதைக் கண்டு ஆரியக் கூட்டம் ஆரியத் தலைவியின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர். அந்தக் கூட்டத்திற்கு வழமைபோல் நம் இன வீடணர்கள் துணையாய் நிற்கும் கொடுமையைப் பார்க்கின்றோம்.  அவர்களுக்கு மேடையிலேயே பாடம் நடத்துகின்றார் அம்மையார்!  இனி கலைஞரை அவ்வாறு அழைக்காது திருவாரூர் தீயசக்தி என்றே அழையுங்கள் என்று கூறுகின்றார்.  நம் இன வீடணர்கள் அதைக் கேட்டு ரசிக்கும் அநாகரிகம் அரங்கேறுகிறது.  ஆனால், வடக்கே திரு. அத்வானி அவர்கள் திருமதி. சோனியாவிடம் ஒரு காரணம் பற்றி மன்னிப்புக் கேட்கிறார்.  இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  ஒரு முறை சட்டமன்றத்தில் கலைஞரைக் கருணாநிதி எனப் பெயரிட்டு அழைத்தமைக்காக ஓர் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் கண்டிக்கப்பட்டார்.

அதையும் நினைவுகூருங்கள், 1962 பொதுத்தேர்தலில் அண்ணா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் தோல்விக்காக வெறுப்புற்ற திரு. என்.வி, நடராசன், காங்கிரஸ்காரர்களைக் கல்லால் அடித்து நாய்களைப் போல் தமிழ்நாட்டை விட்டு விரட்டுங்கள் என்று கொதிப்புடன் கூறியமைக்கு மேடையிலேயே வருத்தம் தெரிவிக்கச் செய்தார் பேரறிஞர் அண்ணா.  இதையும் அண்ணா பெயரைத் தம் கட்சிக்கு வைத்துள்ள தோழர்கள் நினைவு கூறலாமே!  கருத்து மோதல் அரசியலுக்கு வேண்டியதுதான் ஆனால், கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்தி கலைஞரை ஏசுவது முறைதானா?  என்பதைத் தமிழக மக்கள் முடிவு செய்தல் நலம்: ஒரு முறை திருமதி. சோனியாகாந்தி கூட அம்மையாரின் ஏசலுக்கு ஆளானார் என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருக.

கலைஞரின் அரசியல் பின்னணி பற்றி குடிஅரசு 30.10.1943 தரும் வரலாற்றுக் குறிப்பு கீழே தரப்படுகிறது. மாணவராய் திருவாருர் பள்ளியில் அவர் நிகழ்த்திய சொற்போர் எவ்வாறு  ஆரிய சூழ்ச்சித் திரையை விலக்கிப் பள்ளியெங்கும் எப்படி விழிப்புணர்வு உண்டாக்கியது என்பதைப் படித்து அ.இ.அ.தி.மு.க. வீடணர்கள் திருந்துவார்களா?) 19.11.1943 தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 1/2 மணிக்குத் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியின் நடுக்கூடத்தில் தனித்தமிழும் பிறமொழிக் கலப்பும் என்பதுபற்றி ஒரு சொற்போர் நடைபெற்றது. தனித்தமிழ் வேண்டுமென்பதுபற்றி மாணவர் மு.கருணாநிதி தக்க சான்றுகளுடனும், வடமொழியால் தமிழும் தமிழரும் கெட்ட வரலாற்றையும் விரித்துரைத்தார்.  அதனை எதிர்த்துப் பார்ப்பன மாணவர் ஆர்.வைத்தியநாதன் ஆரியமே ஆதிமொழி யென்றும், தமிழுக்குத் தனித் தியங்கும் வன்மை இல்லையென்றும் கூறினார்.  அதனையொட்டி ஒரு பார்ப்பன மாணவர் தமிழருக்கு நூல் இயற்றும் வன்மை கிடையாது என்று பேசினார்.

பின்னர் தமிழ் மாணவர்களாக, மு.கருணாநிதி, கோ. இராசகோபால், பொன்னம்பலநாதன், கு.அருணாசலம், மா. கோபாலசாமி ஆகியோர் ஆரிய மொழியின் அநீதியை விளக்கி, மனுநீதி சட்டத்தின் தன்மையைக் காட்டி, ஆரியர் தமிழர் வேறு என்பதற்கு ஆணித்தரமான மறுப்புரை வழங்கினர்.  தலைமைவகித்த துணைத் தலைமை ஆசிரியர் கே.எஸ். சுப்பிரமணிய அய்யர் ஆரிய மாணவர் பேசும்பொழுது அவர்களுக்கு ஆதரவு அளித்து, தமிழ் மாணவர் பேசும் போது அடக்கு முறைகளைப் பயன்படுத்தினார்.  அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.  எனினும், முடிவுரைக்குப் பின் தமிழ் வாழ்க!  ஆரியம் ஒழிக!  வெற்றி நமதே! என்ற பேரொலியுடன் கூட்டம் இனிது கலைந்தது.  இச்சொற்போரால் ஆரிய சூழ்ச்சித் திரை தூக்கப்பட்டது.  பள்ளியெங்கும் குடிஅரசு  திராவிடநாடு முரசொலி முதலிய இதழ்கள் பரவி தமிழரைத் தமிழராக்கி வருகின்றன.

– குடிஅரசு – பக்கம் 16 – 30.10.1943