பட்டியலின மக்களின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்விப்பதில் நாட்டம் கொண்டு அதற்காகவே பணியாற்றிய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ந.சிவராஜ் அவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
1918ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் சுயமரியாதை இயக்க வீராங்கனையான மீனாம்பாள் அவர்களைத் திருமணம் செய்து-கொண்டார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய முதலாம் மீனாம்பாள் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெண்களைத் திரட்டி தீவிரமாகப் போராடியவர்.
சிவராஜ் நீதிக்கட்சியின் தொடக்க காலம் முதலே அக்கட்சியின் ஆதரவாளர் ஆவார். பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும் நீதிக்கட்சி மாநாடுகளிலும் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார்.
அம்பேத்கரும் இரட்டைமலை சீனுவாசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து-கொண்டு பட்டியல் பிரிவு மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடெடுத்து சென்னை மாகாணத்தில் செயல்பட்டார்.
1937இல் சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பதவியை விட்டுவிலகி முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 1942இல் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை அம்பேத்கர் உருவாக்கியபோது சிவராஜை அதன் அகில இந்தியத் தலைவராக நியமித்தார். அதன் மூலம் அகில இந்தியாவுக்கும் அறிமுகமான ஒரு பட்டியல் இன மக்களின் உரிமைப் போராளியாக உருவெடுத்தார். அம்பேத்கருடன் நெருக்கமாகி சமூகப் பணி-களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அம்பேத்கர் மறைவுக்கு முன் செப்டம்பர் 26ஆம் நாள் 1956இல் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலின மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் தலைமகனாக அறியப்பட்டார்.
ஆதிதிராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை என்ற சென்னை பச்சையப்பன் கல்லூரி மரபினை மாற்ற அக்கல்லூரி அறக்கட்டளையின் மீது வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றார். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தொடர்ந்து போராடி வந்த நிலையில் 1928ஆம் ஆண்டு முதல் அக்கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர் சேர்க்கைக்கு இவ்வழக்கு வாய்ப்பாக இருந்தது.
தென்னார்க்காடு மாவட்டம் வெள்ளையன்-குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று 7.8.1935 அன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.
இவர் 1926 முதல் 1936 முடிய இருந்த நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
20.11.1945 அன்று சென்னை மாநகர மேயராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார்.
1957 தேர்தலில் இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் தி.மு.க. கூட்டணியில் திருப்பெரும்புதூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே அதே செப்டம்பர் 29ஆம் நாள் அதிகாலை 5:30 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.