கல்வெட்டு : சோறு சொல்லும் வரலாறு!

2022 செப்டம்பர் 16-30 மற்றவர்கள்

தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பனவாகும்.
எச்சோறு
கிராம ஊழியர்களுக்கு இரவில் சோறு போடும் கடமை எச்சோறாகும். நெல் குத்துபவர்களுக்கு இரவில் சோறு இடும் கடமை, ‘எச்சோற்றுக் கூற்று நெல்’ என்றும், ‘எச்சோற்றுக் கூற்றரிசி’ என்றும் குறிப்பிடப்பட்டது.
(சுப்பிரமணியன்: தி.நா. 2011:18)
பொது ஊழியர்களுக்குப் பகலில் கொடுக்கும் சோறு (ஒரு வரி) என்று சுப்பராயலு (2002:109) விளக்கம் அளிக்கிறார். இரு அறிஞர்களுக் கிடையில் எச்சோறு வழங்கப்படும் நேரம் குறித்து மாறுபாடான கருத்துகள் இருந்தாலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சோறு என்பதில் இருவரும் உடன்படுகின்றனர். ‘எச்சோற்று கூற்று நெல்’ என்பதற்கு, எச்சோறு வழங்கும் பொருட்டு குற்றும் நெல் என்று சுப்பராயலு (மேலது) விளக்கம் தருகிறார்.
வெட்டிச்சோறு
ஊதியமின்றிச் செய்ய வேண்டிய கட்டாய வேலை (Forced labour) ‘வெட்டி’ என்று பெயர் பெற்றது. இதைச் செய்வோர் ‘வெட்டியாள்’ என்று அழைக்கப்பட்டனர். வெட்டி வேலை செய்வோருக்கு வழங்கப்பட்ட உணவு ‘வெட்டிச்சோறு ’ எனப்பட்டது. (மேலது)
புள்ளிச்சோறு
நிலவுரிமையாளர்கள் மன்னனது ஊழியர்-களுக்குச் சோறு வழங்க வேண்டியிருந்தது. நிலமதிப்பிற்கேற்ப இது அமையும். இவ்வாறு வழங்கும் சோறு ‘புள்ளிச்சோறு’ எனப்படும்.
சட்டிச்சோறு
இவ்வரிசையில் ஊதியமாகவும், கொடைப் பொருளாகவும் வழங்கப்பட்ட சோறு ‘சட்டிச்சோறு’ ஆகும். கோவில் பணியாளர்கள், தேசாந்திரி, பரதேசிகள், சிவனடியடியார் ஆகியோர். சட்டிச்சோற்றைப் பெற்றுள்ளனர். சட்டிச்சோறு என்பது குறித்து சி. கோவிந்தராசன் (1987:171) பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
‘கோவில் பணியாளர்களுக்கும் சிவனடியார் களுக்கும் சட்டி அளவிட்டுக் கொடுக்கும் சோறு. ஒரு சட்டிச்சோறு இருநாழி அரிசி சமைத்த சோற்றின் அளவுடையதாகும்.
மூத்த கல்வெட்டாய்வாளர் தி.நா.சுப்பிரமணியன் (2011:36) கோயில் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் உரிமைப் பிரசாதம் என்று பொருளுரைக்கிறார்.
ஒரு சட்டியளவுள்ள கோயிற் பிரசாதம் என்று சுப்பராயலு (2002) குறிப்பிடுகிறார். ஆனால், சட்டிச்சோறு கோயிற் பிரசாதமாக மட்டும் வழங்கப்படவில்லை.
சட்டிச்சோறின் அளவு இருநாழி அரிசி என்று குறிப்பிடுவதற்குச் சான்றாக,
‘இரு நாழியரிசிச் சோறு’ இரண்டு சட்டியிட்டு வருவேனாகவும் (தெ.இ.க. 5:226)
‘ஒரு சட்டிச்சோறு இருநாழி அரிசியால் அமுது செய்விக்கக் கடவோமாக’ (தெ.இ.க.622)
என்ற இரு கல்வெட்டுத் தொடர்களைக் கோவிந்தராசன் (1987:171) குறிப்பிடுகிறார். அவரது கூற்றுக்கு வலுவூட்டும் வகையில் வேறு சில கல்வெட்டுகளும் உள்ளன(தெ.இ.க.