ஆசிரியர் பதில்கள்! :அப்படிப்பட்ட வழக்குகளை அனுமதிப்பதே தவறு!

2022 ஆசிரியர் பதில்கள் செப்டம்பர் 16 -30 2022

https://unmai.in/images/magazine/2022/september/16-30/30.jpg

கே: தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் நேர்மையான கேள்விக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்தவர் தெரிவித்த கருத்து ஏற்புடையதா?
– ப.அரிகிருஷ்ணன், வேலூர்
ப: ஆசைகளில் மிக மோசமான _ பார்வை, ஒழுக்கம் மறைக்கும் அல்லது பறிக்கும் ஆசை பதவி ஆசையே என்பதால்தான் தந்தை பெரியார் அதனை அறவே ஒதுக்கினார். ஓய்வு பெறுபவர்களுக்கு, அடுத்தும் பதவி சுகம் மாறாது கிடைக்க, எதை எப்படிச் செய்தால் தூண்டிலில் மீன் சிக்கும் என்ற எதிர்பார்ப்பு பேதமையால் விளையும் வினை இது!

கே: சமூக ஊடகங்களை மதவெறி சக்திகள் பயன்படுத்துவதைப் போல், மதச்சார்பற்ற சக்திகள் அதிகமாகப் பயன்படுத்தவில்லை என்ற நிலை மாற திட்டமிடுவீர்களா?
– கா.வேல்முருகன், புதுக்கோட்டை
ப: தொடங்கி நடந்து கொண்டுள்ளன; விளம்பரத்தோடு செய்யப்படுவன அல்ல அவை! நடந்து கொண்டுள்ளன!


கே: ‘நீட் தேர்வு’ போன்று உடனடித் தீர்வுக்குரிய வழக்குகளை ஒத்தி வைத்துவிட்டு, “இலவசங்கள் தேவையா?’’ என்ற வழக்கை உடனடியாக விசாரிப்பது உச்சநீதிமன்ற மாண்புக்கும் மக்கள் நலனுக்கும் உகந்ததா?
– க.பரமேஸ்வரி, மதுரை
ப: நீதிமன்றங்களும் அண்மைக் காலத்தில் வித்தைகளின் வித்தாரமாக- _ காட்சியகங்களாக மாறுகின்றனவோ என்ற அய்யம் மக்களிடையே வலுவாகவும் பரவலாகவும் ஏற்படுகிறது!

கே: நிதிஷ்குமார் பல தலைவர்களைச் சந்தித்து எதிர் அணியை வலுவாகக் கட்டமைக்க முயற்சிக்கும் நிலையில், எதிர் அணித் தலைவர் யார் என்பதை, பின்னர் முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாடு சரிதானே?
– வா.கஜேந்திரன், நாகை
ப: சரியான அணுகுமுறை அது ஒன்றே. முதலில் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, வெற்றிக்குப் பின்பே அந்தத் தலைமை _ சூழலுக்கேற்ப. பொது எதிரி _ மதவாதமும் யதேச்சாதிகாரமும்தான்!


கே: தங்களின் அறுபது ஆண்டு கால ‘விடுதலை’ ஆசிரியர் பணி உலக சாதனைக்குரியது. ‘விடுதலை’ ஆசிரியர் என்கிற முறையில் இந்தியா முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்களுக்கு தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?
– தீ.கோவிந்தன், தாம்பரம்
ப: ஒன்றுபடுங்கள் _ தீயணைப்பு தியாக வீரர்களைப் போலே; உங்களை எண்ண நேரமில்லாமல் எதிரிப் படையை விரட்டுங்-கள் என்பதே!

கே: ராகுல் காந்தி அவர்களின் நெடும்பயணம் நல்லதொரு தொடக்கம் தானே?
– மோ.சீதாலட்சுமி, காஞ்சி
ப: நிச்சயமாக _ நல்ல திருப்பம். சீரிய விளைவு நிச்சயம் ஏற்படும்.

கே: திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாடு எதிரிகளுக்கு உணர்த்த வேண்டியதை உணர்த்தி வெற்றி பெற்றுள்ளது என்ற எனது மதிப்பீடு சரிதானே?
– ச.கணேசன், செங்கை
ப: வாயைத் திறக்கச் சொல்லி, உங்களுக்குச் சர்க்கரை போடுவதாக எண்ணி மகிழுங்கள் _ என் சார்பில்…!

கே: கோடிக்கணக்கில் பணம் கொடுத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்க சட்டப்படி என்ன செய்யலாம்?
– சு.பாஸ்கர், வந்தவாசி
ப: திட்டமிட்டே சட்டத்தை ஊமையாக்கி விட்டார்கள்; இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டுக் குற்றவாளிகளே! கட்சித் தாவல் தடைச் சட்டத்தை உண்மையில் முடக்காமல் எழுந்து நடக்க வைக்க _ செயல்பட வைக்க யாரும் உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை! பிறகு எப்படி நாடு உருப்படும்?

கே: “அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை நாடாளுமன்றமே மாற்ற முடியாது’’ என்று உச்சநீதிமன்ற 13 நீதிபதிகள் உறுதியாகத் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அதற்கு எதிராய் சுப்பிரமணியசாமி தொடுத்துள்ள வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்கலாமா?
– தே.முனியசாமி, திருத்தணி
ப: முதலில் அதுபோன்ற வழக்குகளை அனுமதிப்பதே முதல் தவறு. எண் போடும் கட்டத்திலேயே பதிவகத்தில் தள்ளுபடி செய்திருந்தால், வழக்கு நிலுவை எண்ணிக்கைகள் கூடாது! சட்டத்தைப் பார்க்காமல், ஆளைப் பார்ப்பதால் இதுபோன்ற அவலங்கள்! “எத்தனை காலம்தான் ஏமாறுவர் இந்த நாட்டிலே!’’ஸீ