– சு.அறிவுக்கரசு
ஆவியுடன் பேசமுடியுமா?
ஆப்ரகாம் கோவூர் தம் வாழ்நாளில் பல்வேறு மூடநம்பிக்கைகளில் வாழ்ந்தவர்களைத் (வாழ்வா, அது?) திருத்தி நேர்வழிப்படுத்தியிருக்கிறார். பலநூறு கட்டுரைகளை எழுதுவதையும்விட, பல ஆயிரம் பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தி விளக்குவதைவிட, மிகவும் பலன் உள்ளதும் மனதை மாற்றக் கூடியதுமான பிரச்சாரம் செயல் விளக்கங்களே! அந்த வகையில் அவர் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை மிகச் சிறப்பாகச் செய்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பின் பிரபல அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் தன் 62ஆம் வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவிக்கு வயது 40 என்றாலும் அவளுக்கு அது முதல் திருமணமே! இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின், இருவரும் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தனர். கணவன் தியானம், யோகாசனம் என்று பொழுதைக் கழித்தார். கணவனும் மனைவியும் இரவுக் காலங்களில் பள்ளியறை ஆட்டங்களுக்குப் பதில் ஆவிகளுடன் பேசும் டம்ளர் டாக் எனும் விளையாட்டில் ஈடுபட்டனர். பல ஆவிகளுடன் பேசினர்.
ஒருநாள், புனித யூடா என்பாரின் ஆவி மாட்டிக்கொண்டது. மனைவிக்குத் தங்கமோதிரம் ஒன்று வாங்கிக் கொடுக்கும்படி கணவனிடம் கூறியது. தன் பங்குக்கு ஒரு மோதிரத்தைத் தேவாலயத்தில் தன் பொம்மைக்குக் கீழ் வைப்பதாகவும் கூறியது. மறுநாள் தேவாலயம் போய்த் தேடியபோது மோதிரம் இருக்கவில்லை. மனைவி ஜெரீனா அழ ஆரம்பித்தாள். ஏமாற்றம் அடைந்த மனைவியை ஆறுதல்கூறி வீட்டுக்கு அழைத்து வந்த கணவர் டம்ளர் டாக் இனிமேல் வேண்டாம் எனக் கண்டித்தார்.
ஆனாலும் ஜெரீனா, ஆவியுடன் பேசுவதைத் தொடர்ந்தாள். புனித யூடாவின் ஆவி தினந்தோறும் வந்தது. தேவாலயத்துக்கு ஜெரீனா மட்டும் தனியாக வந்து பார்த்தால் மோதிரம் கிடைக்கும் என்றது. நம்பிக்கையுடன் போனாள். ஏமாந்து தேவாலயத்திலேயே உட்கார்ந்து புலம்பினாள். அவளுடன் சென்றிருந்த அவளின் சகோதரன் வலுக்கட்டாயமாக அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். அதன்பிறகும் ஜெரீனா புனிதரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு நாள், திடீரென்று தன் கணவரிடம் ஒரு குண்டைப் போட்டாள். தான் ஒன்பதுமாதக் கர்ப்பிணி என்றாள். கணவருக்கும் குழப்பம். எப்படி கர்ப்பிணியாக முடியும் என யோசித்தார். அடி வயிற்றைப் பார்த்தால் அப்படிக் கர்ப்பிணியாகத் தெரியவில்லை. மனைவியைப் பேய் பிடித்தது என நம்பி மாந்திரீகர்களிடம் அழைத்துப் போனார்.
கனுகுமாரி மோகினி பிடித்து ஆட்டுவிப்பதாக ஒருவன் கூறிப் பூஜை போட்டான். பலன் இல்லை. கணவனின் முதல் மனைவியின் ஆவி எனக் கூறி ஒருவன் மந்திரக் கயிறு கட்டி, எண்ணெய் கொடுத்தான். பலன் இல்லை.
இலங்கையின் பெரிய முருகன் கோவில் கதிர்காமம் கூட்டிப் போனார்கள். முருகனின் முன்னிலையில் ஜெரீனா ஆட்டம் போட்டாள். அத்தோடு சரி. ஒன்றும் முன்னேற்றமில்லை.
மாந்திரீகன் ஒருவன் ஆவியோட்ட இலங்கையில் ஆடப்படும் தொவில் நடனம் ஏற்பாடு செய்தான். ஒன்றும் நடக்கவில்லை. நடனக்குழுவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஜெரீனாவை அழைத்துக் கொண்டுபோய் கோவூரைப் பார்க்கும்படி புத்திமதி கூறினான். ஏமாற்றுக்காரக் குழுவில், நாணயமானவன் போலும்.
கோவூர், ஜெரீனாவை ஹிப்நாடிச மயக்கத்தில் ஆழ்த்தி, அவள் கதையைக் கூறச் செய்தார். தனிமையில் டம்ளர் டாக் நடத்தியபோது புனித யூடா அந்தரங்கமான பல செய்திகளைப் பேசியதாம். முந்தைய பிறவியில் ஜெரீனாவின் கணவனாக புனித யூடா இருந்ததாகக் கூறி, அவனை அம்மணமாக்கி உடல் முழுக்க முத்தமழை பொழிவாராம். அதைச் சொல்லும்போது, ஜெரீனா தன் ஜாக்கெட்டைக் கழற்றித் திறந்த மார்பில் இருந்த சில காயங்களைக் காட்டினாள். இந்த விசயங்களை அவள் கணவரிடம் கூறக்கூடாது என ஆவி மிரட்டியதாம். பிறகு தான் கர்ப்பிணி என்பதைக் கூறி, ஒழுக்கம் கெட்டவளாகிய தான் இறந்துபோவதே நல்லது என்று கூறினாள்.
மயக்கத் தூக்கத்திலிருந்த அவளை கோவூர் எழுப்பியதும், ஒன்றுமே நடவாததுபோல் எழுந்து போய்விட்டாள்.
அவள் கணவரிடம் கோவூர், டம்ளர் டாக் நடத்தியதைக் கண்டித்தார். அதன்மூலம் ஜெரீனாவின் மூளையைத் தாக்கி, நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. தாம்பத்ய சுகம் சுமார் 3 வருடங்கள் மட்டுமே அனுபவித்த நிலையில் அந்தச் சுகத்திற்காக ஏங்கினாள். கணவன் தியானம், யோகம் எனப் போய்விட்ட நிலையில் கற்பனையில் உடல் உறவைச் சுகித்து ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அதன் உச்சகட்டம்தான் பிள்ளைத்தாய்ச்சி என நம்பிப் பிதற்றியுள்ளாள் என விளக்கிக் கூறி அவரை அவளுடன் உடல் உறவு கொள்ளத் தூண்டினார். அவரும் சம்மதித்தார்.
பின்னர் ஜெரீனாவை அழைத்து ஹிப்நாடிசத் தூக்கத்தில் ஆழ்த்தி, அவள் காதில் கோவூர் கூறினார், புனித யூடா வந்திருக்கிறேன். உன்னிடம் விடைபெற்றுப் போக வந்திருக்கிறேன். உன் வயிற்றில் இருக்கும் என் குழந்தையை எடுத்துப் போகிறேன். இனிமேல் நான் வரமாட்டேன். எனக்குப் பதில் உன் கணவர் உன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார், குட் பை எனக் கூறியவுடன் சில நிமிடங்களில் ஜெரீனா விழித்துப் பார்த்தார். தன் கணவருடன் கோவூரிடம் விடைபெற்றுத் தம் வீட்டுக்குப் போனாள்.
டம்ளர் டாக் என்பது ஒருவகையில் வட்ட வடிவில் ஆங்கில எழுத்துகள் ஏ முதல் இசட் வரை எழுதப்படும். அதன் நடுவில் டம்ளர் ஒன்று வைக்கப்படும். அதன்மேல் கைவிரல்களை வைத்து ஆவிகளை மனதில் நினைத்து அழைப்பார்கள். ஆவி யாருடையது என்பதைக் காட்ட, டம்ளர் நகரும். எழுத்துகளின்மேல் நகர்வதைக் கொண்டு கூட்டிப் படித்தால் பெயர் தெரியவரும். அப்படிப் பார்த்தபோதுதான் யூடாவின் ஆவி ஜெரீனாவுடனும் அவள் கணவனுடனும் பேசியது.
இது நம்பக் கூடியதல்ல. டம்ளரை நகர்த்துபவர்களே இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள்தான்! அந்த வகையில் ஜெரீனா, ஒவ்வொரு நாளும் யூடாவின் ஆவியோடே பேசியிருக்கிறாள். அதற்கான அசைவுகளை அவளே நடத்தி, ஆவி பேசுவதாக நம்பியிருக்கிறாள்.
மிகப் பெரும் பொதுஉடைமைக் கொள்கைக்காரர் என நம்பப்படும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர் (மலையாளப் பார்ப்பனர்) தற்போது ஆவிகளுடன் பேசும் விளையாட்டை ஆடிவருகிறார் என்பது தற்போதைய செய்தி! என்ன முற்போக்கோ?
ஒரு இசுலாமிய வணிகரின் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனது. திருடன் யார் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. மந்திரவாதி ஒருவன் வந்து மந்திரித்த கயிறு கட்டினான். திருட்டு சில நாள்கள் நடக்கவில்லை. பின்னர் ஒரு நாள் மீண்டும் பணம் காணாமல் போனது. ஒரு நாள் நகைகள் காணாமல் போய்விட்டன என்று வியாபாரியின் மனைவி கூறினாள். உடனே தொவில் நடனம் ஏற்பாடு செய்தனர். பின்னர் சில நாள் கழித்து வியாபாரியின் மனைவி மயங்கி விழ ஆரம்பித்தாள். வீட்டின் மூலைகளில் எலும்புகள், தலைமயிர், எலுமிச்சம்பழங்கள், செப்புத் தகடுகள் போன்றவை சிகரெட் டின்களில் அடைத்து வைக்கப்பட் டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அவரது கோட் பைகளில் காதல் கடிதங்கள் இருந்தன. மொத்தம் 11 கடிதங்கள். 10 ஆங்கிலக் கடிதங்கள், ஒன்று மட்டும் தமிழில்.
வியாபாரி மிஹ்ரா பாகிஸ்தான் நாட்டு முசுலீம். அவரை இந்தியாவுக்கு வந்துவிடுமாறு வற்புறுத்தி ஒரு பெண் எழுதிய காதல் கடிதங்கள். மிஹ்ரா குழம்பிப் போனார். வழக்கம் போலவே மந்திரவாதி வந்தார். மந்திரித்த கயிறு கட்டிவிட்டுப் போனார். ஆயிரக்கணக்கில் பணம் மந்திரவாதிகளுக்கு இறைக்கப்பட்டது. பலன் சுழிதான்.
கடைசியில் கோவூரிடம் வந்தார் மிஹ்ரா. அவர் வீட்டுக்குக் கோவூர் போனார். மிஹ்ராவின் மனைவி, அவளின் இரண்டு தம்பிகள், மிஹ்ராவின் தாயார் என நான்கு பேர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அவர்களைத் தனித்தனியே கூப்பிட்டு விசாரித்த கோவூர் சில வாக்கியங்களைக் கூறி அவர்களைத் தாளில் அவற்றை எழுதச் சொன்னார். அவர்களும் எழுதினார்கள். அவற்றைத் தம்மிடம் வைத்துக்கொண்டார்
சில நாள் கழித்து மிஹ்ராவின் மனைவியை ஹிப்நாடிசத் தூக்கத்தில் ஆழ்த்திக் கேள்விகள் கேட்டார். வீட்டில் நடந்த திருட்டுகள், எலும்பு, தலைமயிர் போன்ற பொருட்களை வைத்தது, காதல் கடிதங்களை எழுதியது என அனைத்தையும் செய்தது தான்தான் எனக் கூறினார். மயக்கத் தூக்கத்தில் இருக்கும்போதே (பழைய) காதல் கடிதத்தை மீண்டும் எழுதச் செய்தார். எல்லாக் காதல் கடிதங்களிலும் AFTER என்னும் ஆங்கிலச் சொல் UFTER என்றே தவறுதலாக எழுதப்பட்டிருந்ததை வைத்து மிஹ்ராவின் மனைவிதான் எல்லாவற்றையும் செய்தது என்று கோவூர் முன்னரே தீர்மானித்துக் கூறியிருந்தார். அதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சரி, மிஹ்ராவின் மனைவி ஏன் இதைச் செய்தார்? சந்தேகம்தான்! கொழும்பில் நடனமாட வந்த வடஇந்தியக் குழுவில் இருந்த சாரி என்ற பெண்ணிடம் தன் கணவர் மய்யல் கொண்டுவிட்டார் என்கிற சந்தேகப் பேய் அவர் மனைவியைப் பிடித்துக் கொண்டதால் இத்தனையையும் செய்திருக்கிறாள்.
பகுத்தறிவாளரான கோவூர் இதனை விளக்கிய பிறகு, தெளிவடைந்த அவர்கள் அவரின் அறிவுரைப்படி வாழத் தொடங்கினார்கள்.
இப்படி எத்தனையோ நிகழ்வுகள்! கோவூரின் ஆய்வுகள்! பகுத்தறிவுப்பூர்வ தீர்வுகள்! நிம்மதியடைந்த வாழ்வுகள்! சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனாலும் அயோக்கியர்கள் ஆவி, பேய், பிசாசு, பில்லிசூன்யம், செய்வினை வைத்தல் என்று ஏமாற்றுகிறார்கள். முட்டாள்கள் நம்புகிறார்கள். அறிவைத் தொலைக்கின்றார்கள். தம் வாழ்வை மாய்க்கிறார்கள்! என்றைக்கு இதற்கெல்லாம் முடிவு?
பகுத்தறிவு ஒன்றினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்கிற அறிவு அனைவருக்கும் வரவேண்டும். எண்ணற்ற பகுத்தறிவாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் கூறும் உண்மைகள் மக்களின் மடமையைப் போக்க உதவட்டும்!