பிறப்பு: 16.9.1884 மறைவு: 26.2.1933
சிவகங்கைச் சீமையிலே வசதி வாய்ப்புமிக்க குடும்பத்திலே பிறந்தவர் இராமச்சந்திர சேர்வை. அந்தக் காலகட்டத்திலேயே பி.ஏ, பி.எல். படித்தவர் என்றால், அதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைக்கத் தேவையில்லை.
சுயமரியாதை இயக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். 1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தன் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ‘சேர்வை’ என்ற ஜாதி வாலை ஒட்ட நறுக்கி வீதியிலே வீசி எறிந்த செம்மல் அவர்! சுயமரியாதை மாநாடுகளில் எல்லாம் பங்கு கொண்டவர்; பல மாநாடுகளுக்குத் தலைமை வகித்தவரும்கூட! நெல்லையில் சுயமரியாதை மாநாடு (21.7.1929); அம்மாநாட்டின் தலைவர் இவர்தான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் துப்பாக்கி வரை ஏந்திய ஏந்தலிவர். தாலுகா போர்டு தலைவராகவும் இருந்து அருந்தொண்டாற்றினார்.
நீதிக்கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு அன்றைய பிரதம அமைச்சர் முனிசாமி நாயுடு அவர்கள் அழைப்பு விடுத்தபோது, தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனையை ஏற்று பதவிப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் சுயமரியாதைத் தொண்டினை தந்தை பெரியார் பாதையில் தொடர்ந்த தொண்டறத்தின் இலக்கணம் இவர்.
தென் மாநிலச் சீமையிலே கொடிகட்டிப் பறந்த இந்தப் பெருமகனாரைக் காங்கிரசின் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்டனர். மதுரை வைத்திய-நாதய்யர்தான் அந்தத் தூண்டிலைப் போட்டவர். அந்தச் சிவகங்கைச் சிங்கம் என்ன சொன்னது தெரியுமா? மனிதருள் ஏற்ற தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றினால் நாங்கள் காங்கிரசில் சேருகிறோம் என்று பொறி பறக்கப் பதிலடி கொடுத்தார்.
இந்தத் தன்மான இயக்கத் தளபதி 49 வயதிலேயே பிப்ரவரி 26இல் (1933) மரணத்தைத் தழுவினார் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். அவர் மறைவு குறித்து தந்தை பெரியார் கூறிய ஒன்றே அந்தப் பெருமகனாரின் பெருமைக்குரிய சாசனமாகும்.
“தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின்வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிகமிக அரிதேயாகும்’’ என்றாரே அய்யா!
எத்தகைய சீலர் அவர்! இவருடைய அருமை மகள்தான் நம்மோடு வாழ்ந்து மறைந்த சுயமரியாதை மூதாட்டி சிவகங்கை ராமஇலக்குமி அம்மாள் ஆவார்கள். இவரின் பிரகடனப்படுத்தப்பட்ட பொன்மொழி என்ன தெரியுமா? இந்தக் கையால் எந்த ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன் என்பதுதான்! ஸீ