ஆரியர் செருக்கறுத்து திராவிடர் தலைநிமிர தன்மான இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் போர்ப்படை தளபதிகளாய் மிளிர்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர். அவர்-களில் தலையாய இடத்தில் வைத்துப் போற்றப்-பட வேண்டியவர் புலவர் குழந்தை என்று சொன்னால் அது மிகையாகாது. புலவர் குழந்தை அவர்கள் பன்முகத் திறனாளர். இளமையிலேயே ‘பா’ புனையும் ஆற்றலுடையோராய்த் திகழ்ந்தார்.
1.7.1906ஆம் ஆண்டு முத்துசாமி _ சின்னம்மையாருக்கு ஒரே மகனாகப் பிறந்த இவர், தாமே முயன்று படித்து 1934ஆம் ஆண்டு புலவராகத் தேறினார். 39 ஆண்டுகள் மாணவச் செல்வங்களிடை அறிவொளி பரப்பும் ஆசிரியப் பணியாற்றினார்.
தமிழ்ப் புலவர்கள் பலரும் தன்மான உணர்ச்சியும், பகுத்தறிவுச் சிந்தனையும் இன்றி மூடநம்பிக்கை மிக்கவர்களாய் இருப்பது குறித்து அவர்கள் மீது வெறுப்புற்றிருந்த தந்தை பெரியார் அவர்களாலேயே போற்றப்பட்டவர்; தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழர்தம் உயர்ச்சிக்கும் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டவர் இவர்.
இந்தித் திணிப்பு வந்த போதெல்லாம் அதை எதிர்த்துப் போரிடுவதில் முனைப்புக் காட்டியவர். 1938, 1948 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பங்கு கொண்டதோடு, இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் எழுதி எழுச்சியூட்டினார்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’’ என்று வேட்டி, புடவை கறைகளில் அச்சிடச் செய்து தமிழ்நாடெங்கும் அனுப்பி தமிழ், தமிழர் உணர்வை ஊட்டினார்.
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்று, மத மறுப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை தகர்ப்பு, இன உணர்வு, தன்மான உணர்வு ஊட்டல் போன்றவற்றை முனைப்போடு செய்தார். 1930ஆம் ஆண்டு ‘ஞானசூரியன்’ இதழ் ஆசிரியரான சிவானந்த சரஸ்வதி என்பவருடன் ‘கடவுள் இல்லை’ என்று நான்கு நாள்கள் சொற்போர் நடத்தி வெற்றி பெற்ற சிறப்புக்குரியவர்.
அரசியலரங்கம், நெருஞ்சிப் பழகம், உலகப் பெரியோன் கென்னடி, திருஞானச் சிலேடை வெண்பா, புலவர் குழந்தை பாடல் ஆகிய செய்யுள் நூல்களையும், ‘திருக்குறள்’ குழந்தையுரை, ‘தொல்காப்பியப் பொருளதிகார உரை’, ‘நீதிக் களஞ்சிய உரை’ ஆகிய உரை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கண நூல்களாக ‘யாப்பதிகாரம்’, ‘தொடையதிகாரம்’, ‘நன்னூல்’ ஆகியவையும் உரைநடை நூல்களாக ‘தொல்காப்பியர் காலத் தமிழர்’, ‘திருக்குறளும் பரிமேலழகரும்’ ‘பூவாமுல்லை’, ‘கொங்கு நாடு’, ‘தமிழக வரலாறு’, ‘அருந்தமிழ் விருத்தி’, ‘அருந்தமிழ் அமிழ்து’, ‘தமிழ் வாழ்க’, ‘கொங்கு நாடும் தமிழும்’, ‘சங்கத் தமிழ்ச் செல்வம்’, ‘ஒன்றே குலம்’, ‘அண்ணல் காந்தி’, ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்’ ‘தீரன் சின்னமலை (நாடகம்)’ போன்றவை இவரது படைப்புகளாகும். இந்நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
இத்தனை நூல்களை இவர் இயற்றியிருந்தாலும், புலவர் குழந்தை என்று சொல்லும்போதே தமிழ் மக்கள் நினைவில் மின்னுவது இவர் படைத்த ‘இராவண காவியம்’ நூலேயாகும்.
1946இல் வெளிவந்த இந்த நூலை அன்றைய காங்கிரஸ் அரசு 1948இல் தடை செய்தது. இத்தடை பற்றி தந்தை பெரியார் கூறும்போது, ‘இராவண காவியம்’ கூடாது என்கிற மத நடுநிலையாளர்கள் முதலில் ‘இராமாயணத்தை’ அல்லவா தடை செய்ய வேண்டும் என்று கூறினார். ஈரோடு மாநாட்டில் இத்தடை நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தையும் தந்தை பெரியார் நிறைவேற்றினார். ஆனால், 1971இல் கலைஞர் அரசால்தான் இத்தடை நீக்கப்பட்டது.
அவர்தம் இரு மகள்களுக்கும் ‘சமரசம்’, ‘சமத்துவம்’ எனப் பெயர் சூட்டி தன் சமத்துவ வேட்கையை வெளிப்படுத்தினார். தன்மான இயக்கத்தின் தனிப் பெருஞ்சுடரான புலவர் குழந்தை அவர்கள் 22.9.1972இல் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!