இதயம் இதயமாய் இயங்க…- 2

பிப்ரவரி 16-29

பேராசிரியர். மருத்துவர் வெ.குழந்தைவேலு
MD.phD.DLitt.DHSc-Echocardio.FCCP

மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது?

மாரடைப்பு ஏற்படுவதற்கு ஏதுவாக இருக்கிற காரண காரணிகளான இதயத்தசைகளுக்கான கொரோனரித்தமனி நாளங்களில் ஏற்படக்கூடிய கொழுப்புத் திவலைகளின் படிமங்கள் – படிமப் பெயர்ச்சி (displacement of atheromatous plaque); அதன் காரணமாக, கொரோனரித்தமனி நாள உட்சுவர்களில் சிராய்ப்பினால் ஏற்படும் இரத்தக் கசிவு மற்றும் இரத்த உறைவுகள் அடைத்துக்கொள்ளுதல் (coronary wall bleed / and coronary thrombosis); கொரோனரித்தமனி நாளத் திடீர்ச் சுருக்கம் (coronary arterial spasm)  போன்றவற்றால் இதயத்தசைகளுக்கான இரத்த ஓட்டம் முழு அளவிலோ பெரும் அளவிலோ திடீரெனத் தடைப்படும்போது, தடைப்பட்ட பின்பகுதி இதயத்தசைகள் பாதிப்பிற்குள்ளாகிச் சிதைவடைகின்றன. மேலும் பல காரண_காரணிகளாலும் மாரடைப்பு ஏறபடலாம். இளமைக் காலந்தொட்டு கொரோனரித் தமனியில் அவ்வப்போது சீராகப் படிந்து படிந்து வரும் கொழுப்புத் திவலைகள், வயது ஏற ஏற நாளடைவில் பெரிய திவலையாக உருப்பெறும் _ பெரும் தடையாகவும் அமைந்துவிடும். கொழுப்புத் திவலைகளின் வளர்ச்சியும் அதன் பெருக்கமும் சூழல்களுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் மாறுபட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே இளைஞர்களுக்கும் – சிறுவர்களுக்கும்கூட இதய மாரடைப்பு ஏற்பட்டுவிடும் நிலைமைகள் ஏற்பட்டுவிடுகின்றன.

மாரடைப்பிற்கான அடிப்படைக் காரணங்கள்; தூண்டுதல் காரணங்கள்!

சர்க்கரை நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், இரத்தத்தில் கொழுப்பு மிகுதல், இரத்த நாள உட்சுவர்களில் கொழுப்புத் திவலைகள் பெருமளவில் தொடர்ச்சியாகப் படிதல், கொழுப்புச் சத்து நிறைந்த மற்றும் மிகுதியான உணவு, புகை, புகையிலை, மூக்குப்பொடி, மரபுத்தன்மை _ பரம்பரைத் தன்மை, முதுமை, மிகுதியாக மது அருந்துதல், பருமனான உடம்பு, உடலுழைப்பற்ற அலுவல், நோய்க்கிருமிகளின் தாக்குதல்கள், உளைச்சல் நிறைந்த வாழ்க்கை போன்றவைகளெல்லாம் மாரடைப்பு உண்டாவதற்கான – வெளிப்படுவதற்கான அடிப்படைக் காரணங்களாகவும், தூண்டுதல் காரணங்களாகவும் உள்ளன.

மரபுத்தன்மையின் அடிப்படையிலேயே குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும்கூட மாரடைப்பு பெரும்பாலும் ஏற்படுகின்றது. மாரடைப்பு ஏற்படுவதில் பரம்பரைத்தன்மை நீங்கலாக ஏனைய தூண்டுதல் காரணிகளுக்குச் சுற்றுச் சூழல்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஆகவே, மரபணுவின்பாற்பட்ட பரம்பரைத் தன்மையானது   (genetic or hereditory predisposition) எவ்வளவு கடுமையானதாக இருப்பினும், பிற சுற்றுச்சூழல் தூண்டுதல் காரணிகளைக் கண்காணிப்புடன் கட்டுக்குள் கொணர்ந்தால் பரம்பரைத் தன்மையின் வீரியத்தைக்கூட கட்டுக்குள் கொணரலாம்.

மிகுதியாக உண்ணுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை மேற்கொள்வதாலும், புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்குப் பெரிதும் ஆட்படுவதாலும், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, நீரிழிவு, இரத்தத்தில் கொழுப்பு மிகுதல் போன்ற நோய்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்பவர்களாக இருந்து, மாரடைப்பு உண்டாகும் சூழ்நிலைகளை வளர்த்துக் கொள்பவர்களாவார்கள்; மாரடைப்பிற்கும் இலக்காகுவர்.

மாரடைப்பின் முன்னெச்சரிக்கை அறிகுறிகள்!

ஒருவருக்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் இல்லாமல் மாரடைப்பு திடீரென ஏற்படக்கூடும் என்கிற நிலை இருப்பினும் சிலருக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கை அறிகுறிகளும் உண்டு.

மார்பின் மய்யப்பகுதியில் அமுக்கிப் பிழிவதோ, அழுத்துவதோ போன்ற வலி – கடுமையான நெஞ்சுவலி, இதய நெஞ்சுவலி மார்பின் மய்யப்பகுதியிலிருந்து இடத் தோள்பட்டை, இடக்கை, வலத் தோள்பட்டை, மார்பின் இடப்புறம், வலப்புறம், தொண்டைப் பகுதி, வயிறுப்பகுதி, மார்பின் பின்பகுதி ஆகிய இடங்களுக்குப் பரவக்கூடிய வலியோடு, வியர்த்துக் கொட்டுதல், சில நேரங்களில் மயக்கம், தலைச்சுற்றல், உணர்விழந்த நிலை, மார்பில் படபடப்பு _ போன்றவை சற்றொப்ப அய்ந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு நீடிக்கவல்லதாக இருப்பின் அதுவே இதய மாரடைப்பின் முன்னெச்சரிக்கை அறிகுறிகளாகும். சில நிமிடங்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய இதய வலியினை ஆஞ்ஜைனா பெக்டோரிஸ் (angina pectoris)’’ என மருத்துவர் அழைப்பர்.

மாரடைப்பிற்கானஅறிகுறிகள்:

மாரடைப்பிற்கான அறிகுறிகள் பல கட்டங்களில், மேலே குறிப்பிட்டுள்ள, ஆஞ்ஜைனா பெக்டோரிஸ்” எனப்படும் இதய நெஞ்சுவலி வெளிப்பாடுகள் போன்றே வெளிப்படும்.

ஆயினும், நோய் அறிகுறிகளின் தன்மைகள் கடுமையானதாகவும், விபரீத விளைவுகளை உண்டுபண்ணிவிடக்கூடியதாகவும் அமைவதோடு, அந்த அறிகுறிகளும் ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியதாகவும் இருந்திடும். அந்த மாறுபட்ட அறிகுறிகளும்கூட எந்தப் பகுதி இதயத்தசை பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அமையும்.

நெஞ்சுவலியின் வெளிப்பாடுகளானது, பொதுவான வலி நீக்கும் மருந்து வகைகளாலும், ஆஞ்ஜைனா பெக்டோரிஸ் எனப்படும் இதயவலி போக்கும் நைட்ரோகிளிசரின் மாத்திரை அல்லது சற்று ஓய்வினையடுத்து நீங்காததோடு அரைமணி நேரத்திற்கு மேலாக நீடிக்கவல்லதாக இருந்திடும்.

குறிப்பாக, இதய நெஞ்சுவலி வெளிப்பாடுகளானது திடீரெனத் தோன்றக்கூடியது; மார்பின் மய்யப் பகுதியிலிருந்து வலி வெளிப்படுவதாக உணரப்படுவது; முறுக்கிப்பிழிவது அல்லது அழுத்துவது போன்ற தன்மை உடையது; சில நேரங்களில் விவரிக்க முடியாத அளவில் நெஞ்சில் ஓர் சிரமத்தை உண்டுபண்ணி விடுவது; குமட்டல், வாந்தி, மார்பில் எரிச்சல் அளவிலேயேகூட அமைந்துவிடுவது.

நெஞ்சுவலியானது, மார்பின் மய்யப்பகுதியிலிருந்து இடத் தோள்பட்டை _ கைக்குப் பரவவல்லது; மற்றும் நெஞ்சின் இட, வலப் பக்கம், கழுத்துப்பகுதி, வயிறுப்பகுதி, முதுகு, வலத்தோள்ப்பட்டை போன்ற இடங்களுக்குப் பரவவல்லது.

நெஞ்சுவலியோடு உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டுதல், அமைதியற்ற தன்மை, பீதி நிரம்பிய நிலை போன்றவை, மாரடைப்பின்போது பெரும்பாலும் தோன்றக்கூடிய அறிகுறிகளாகும்.

கடுமையான நெஞ்சுவலியினைத் தொடர்ந்து அதிக அளவில் வியர்த்துக் கொட்டுதல், உடல் சில்லிட்டுப்போதல், தலைச் சுற்றல், மயக்கம், மார்பில் படபடப்பு, மூச்சுத்திணறல், சுயநினைவிழத்தல் போன்றவை, மாரடைப்பின் விபரீத விளைவுகளால் தோன்றக்கூடிய அறிகுறிகளாக அமையக்கூடும். முதியோர்களுக்கும், நெடுநாளைய சர்க்கரை நீரிழிவு நோயுடையோருக்கும் மாரடைப்பு ஏற்படினும், நெஞ்சுவலி வெளிப்படாமல் இருக்கலாம்; மாறாக, மூச்சுத்திணறல் மட்டுமே மாரடைப்பின் அறிகுறியாக வெளிப்படலாம். குறிப்பிட்டுள்ள மாரடைப்பு நோயின் பொதுவான அறிகுறிகள் அனைத்தும், மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருந்திடல் வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. அப்படி அனைத்து அறிகுறிகளும் இருந்திடல் வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறானது மட்டுமின்றி விபரீதமான எண்ணமும் ஆகும். மாரடைப்பு ஏற்படினும், குறிப்பிடப்படும் அல்லது பெருமளவில் கவனத்திற்கு வராத அளவிலும், மாரடைப்பிற்கான அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். மாரடைப்பினையடுத்து சிலருக்கு வயிற்றுவலி, குமட்டல் _ வாந்தி போன்றவை இருந்திடும்போது, செரிமானக் கோளாறாக எடுத்துக்கொண்டு முறையான மருத்துவ அறிவுரைகள் மற்றும் சிகிச்சைகள் பெறுவதிலிருந்தும் தவறிடுவர். ஆகவேதான், மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுத் தெளிவுபெற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

மாரடைப்பின் விபரீத விளைவுகள்:

மாரடைப்பின் விபரீத விளைவுகள் என்று கூறுமிடத்து, சற்றே இதயத்தசைச் சிதைவு என்கிற அளவில் இருக்கலாம் அல்லது மரணம் என்கிற நிலைக்குக் கொண்டு போய்விடலாம்.

மாரடைப்பையடுத்து, மரணமானது, உடனடியாகவோ, சிலமணி நேரங்கழித்தோ அல்லது நாள்கள் கழித்தோ நேரலாம். மாரடைப்பின்போது, பெரும்பாலும் இதய இயக்கம் நின்று விடுவதாலேயே மரணம் ஏற்படுகிறது.

தாறுமாறான இதயத்துடிப்பு, ஈடுசெய்ய முடியாததும், பெரிய அளவில் அமைந்ததுமாகிய இதயத்தசைப் பாதிப்பு, இதயத்தசைச் சிதைவு, இதயத்தில் இன்றியமையாப் பகுதி பாதிப்பு, இதயத்தசை கிழிந்துபோதல், இதய மேலுறைகளுக்கிடையே ஏற்படும் இரத்தப் பெருக்கு ((pericardial haemorrhage), இதய அதிர்ச்சியை (cardiogenic shock)யடுத்து உடலில் தோன்றக்கூடிய கடுமையான உடல் அதிர்ச்சி போன்றவை, இதய இயக்கம் பெறாததற்கான (cardiac arrest) குறிப்பிடத்தகும் இதயப் பாதிப்புகளாகும்.

நெஞ்சுவலிகள் அனைத்தும் இதயவலிகளா? நெஞ்சுப்பகுதி அல்லது மார்புப் பகுதியானது, இதயம், இதயத்தோடு அமைந்த இதய மேலுறைகள், நுரையீரல்கள், நுரையீரல்களோடு அமைந்த நுரையீரல் மேலுறைகள், மார்பின் மய்யப் பகுதியிலமைந்த இரத்த நாளங்கள், நிணநீர்த்தாரைகள் – நிணநீர்க்கழலைகள், நரம்புகள், விலா எலும்புகள், குருத்தெலும்புகள், விலா எலும்புகளோடு அமைந்த விலாத்தசைகள், தசைநார்கள், மார்பகங்கள், மார்பகத்திசுக்கள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளையும் திசுக்கோளங் களையும் உள்ளடக்கியதாகும். இவற்றில் எந்தப் பகுதியில் அழற்சி ஏற்படுகிறதோ, அந்த அழற்சியின் – உறுத்தலின் வெளிப்பாடாக _ நெஞ்சுவலியாக _ மார்புவலியாக வெளிப்படும். நெஞ்சுவலிகளில் இதயவலியும் அடங்கும். நெஞ்சுவலிகள் அனைத்தும் இதய வலிகளாகிவிடா. இருப்பினும், நெஞ்சுவலிகள் அனைத்தையுமே இதய வலியாக எண்ணி, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனவலியற் றோரையும் சமுதாயத்தில் பார்க்கிறோம். எந்த ஓர் உடல் நோய்ப் பாதிப்பும் இல்லையெனினும், உடல்நலம் குன்றாமல் இயல்பாகத் தோன்றக்கூடிய வலியையும் பெரிதாக நினைக்கும் மனநிலை அல்லது மன அதிர்வின்பாற்பட்ட தன்மை சிலரிடம் உண்டு. அப்படிப்பட்ட மனவலிமையற்றோர், இயல்பாக ஏற்படக்கூடிய நெஞ்சு வலியையும் கடுமையான இதயவலியாக எண்ணி அல்லலுறுவர். இதற்கு உளவியல் ரீதியான மனவலிமையின்மையே காரணமாகும். இதனை மருத்துவத் துறையினர், கார்டியாக் நீரோசிஸ் (cardiac neurosis)” என அழைப்பர். மேலும், இந்த வகையிலானவர்கள் பல மருத்துவர்களையும் நாடி சிகிச்சை மேற்கொள் வதற்குத் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவர். மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சைகள் மேற்கொண்டாலும் இவர்களுடைய நெஞ்சுவலி அதாவது, இதயவலி(!) எளிதில் நீங்குவதில்லை. இருப்பினும், இவர்களது நெஞ்சுவலியைப் போக்குவதில் உளவியல் மருத்துவர் (Psychiatrist) உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *