5.12.1926ஆம் நாளன்று, பெரியார் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் சுருக்கமாகவும், தெளி-வாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
1. மனிதன் தன்மான உணர்ச்சியோடு வாழ வேண்டும். ஒரு நாட்டின் மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. எவரும் எவருக்கும் தாழக் கூடாது. எவரும் எவரையும் தாழ்த்தவும் கூடாது. மனிதனை மனிதனாக மதிக்கின்ற சமத்துவ மனப்பான்மை ஏற்பட வேண்டும்.
2. மனிதனுக்கு மனிதன், பிறப்பதிலும், சாவதிலும் இயற்கையில் வேறுபாடு எதுவும் கிடையாது. பிறப்பில் வேறுபாடுகள் கற்பித்து, உயர்வு_தாழ்வு என்ற நிலைகளை ஏற்படுத்தியது, ஆதிக்க உணர்வு கொண்ட மோசடிக்காரர்களும், பித்தலாட்டக் காரர்களும் இடைக்காலங்களில் செய்த வேலையே ஆகும்.
3. மனிதனும் மனிதனும் ஒருவரோடு ஒருவர் அன்போடும், பண்போடும், உறவோடும், உரிமையோடும், நட்போடும், ஆதரவோடும், அரவணைப்போடும் பழகுவதற்கு ஏற்ற மனிதத் தன்மை உடையவர்களேயல்லாமல், தீண்டாமை, பாராமை, சேர்க்காமை, மதிக்காமை போன்றவற்றால், ஒருவரையொருவர் புறக்கணிப்-பதற்கும், தள்ளி வைப்பதற்கும் இடமேயில்லை.
4. மனிதர்களுக்குள்ளாகவே, அவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் கொள்கைக் கோட்-பாடு, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சமயங்களும், ஜாதிகளும் வேரோடு களைந்தெறியப்பட வேண்டும்.
5. மனிதனை முட்டாளாக ஆக்குவதற்கும், முரடனாக ஆக்குவதற்கும், வெறியனாக ஆக்கு-வதற்கும், பைத்தியக்காரனாக ஆக்குவதற்கும், ஆதிக்கக்-காரனாக ஆக்குவதற்கும், ஆணவக்-காரனாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும் கடவுள், மதம், ஜாதி, சாத்திரம், புராணம், இதிகாசம், வேதம், மோட்சம், நரகம், பேய், பூதம், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம், குறி, மந்திரம், பூசை, யாகம் சடங்கு, பண்டிகை போன்ற கற்பனைக் கூறுபாடுகள் அனைத்தும், அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும்.
6. மனிதனின் சிந்தனை அறிவுத்திறன், செயலாற்றல் திறன், சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை, சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் பாங்கு, தகுதி, திறமை போன்றவற்றையெல்லாம் கெடுத்து, அவனை முழு முட்டாளாக்கக் காரணமாக இருக்கும் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்க வழக்கம், பஜனை பாடுதல், செபம் செய்தல், வழிபாடு நடத்துதல், சடங்குகளைக் கடைப்பிடித்தல் போன்றவை, மனித சமுதாயத்தை விட்டு அறவே அகற்றப்பட வேண்டும்.
7. உலகில், நல்லது -_ தீயது, உயர்ந்தது -_ தாழ்ந்தது, சிறந்தது -_ சிறுமையது, பலன் அளிப்பது -_ பலன் அளிக்காதது, உதவுவது -_ உதவாதது, ஆக்குவது -_ அழிப்பது, மதிக்க வேண்டியது -_ மதிக்க வேண்டாதது எவை எவை என்று பகுத்தறிந்து பார்த்து, பயன்படும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் துணிவு மட்டும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும்.
8. தன்மான உணர்ச்சி, உரிமையுணர்வு, விடுதலை வேட்கை, சிந்திக்கும் ஆற்றல், செய்து முடிக்கும் தன்மை ஆகியவற்றைக் கட்டிக் காக்கும் தகைமை ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும்.
9. எதிர்காலம் அறிவியலுக்கு உரிய-தேயல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல; மனிதனுக்கு உரியதே அல்லாமல் கடவுளுக்கு உரியது அல்ல என்ற நிலை ஏற்பட வேண்டும்.
10. பகுத்தறிவு நெறியில் நின்று, பண்பாட்டுத் தன்மையோடு, தன்மானவுணர்வு கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தவும், செம்மைப் படுத்தவும் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய முன்வர வேண்டும்.
11. பகுத்தறிவுணர்வோடு எதையும் சிந்தித்து, பகுத்தறிவுணர்வோடு எதையும் சொல்லி, பகுத்தறிவுணர்வோடு எதையும் செயலாற்ற மக்களனைவரும் தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
12. நல்லறிவு, நல்லாற்றல், உயர் உண்மை, நல்ல உழைப்பு, நல்ல நோக்கம், நாணயம், நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம், இயற்கைப் போக்கு ஆகியவற்றிற்கு மதிப்பு அளித்துப் பாடுபடவே சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கொள்கை விளக்கம் செய்தார்.