பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பொதுவாக, மதம் என்பது நாமெல்லாம் விதந்து பேசுமளவிற்கு அத்துணை உயர்ந்ததன்று என்றாலும், மிக வலிந்த ஒன்று, பொது மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. ஒரு பெரிய நம்பிக்கை வலை. நாம் விரும்பாமலேயே வீழ்ந்து கிடக்கும் ஒரு படுசேற்றுப் பள்ளம். அதை ஒரு கடவுட்-கட்சி என்றுங்கூட விளங்கிக் கொள்ளும்-படி கூறலாம். இக்கால் உள்ள திரைப்படங்-களுக்குள்ள கவர்ச்சியும் விளம்பர ஆரவாரங்களும் மதங்களுக்கு உண்டு. திரைப்-படங்கள் மக்களமைப்பையே நஞ்சாக்கும் வகையில் வளர்ந்து சிறந்து வல்லமை பெற்றாலும், அவற்றை எப்படி ஒழித்துவிட முடியாதோ, அல்லது ஒழிப்பது எவ்வளவு கடினமோ, அப்படி மதங்களையும் ஒழித்துவிட முடியாது; அல்லது ஒழிப்பது அவ்வளவு கடினம். இன்னுஞ் சொன்னால், இக்காலத்து அரசியல் கட்சிகளைப் போன்றவையே மதங்களும். கட்சிகளை ஒழிக்க ஒழிக்க வேறொரு வடிவில் அவை வளர்ந்து கொண்டே வருவது போல், மதங்களும் ஒன்று ஒழிய அல்லது மறைய வேறொன்று தோன்றிக் கொண்டே வரும். இக்கால் புதுவிளம்பரங்கள் பெற்றுள்ள அய்யப்ப மதம், மூகாம்பிகை மதம் போன்ற புதுக்கடவுள் கட்சிகளை நோக்குகின்றவர்களுக்கு நாம் சொல்வதன் உண்மை விளங்கும்.
இத்தகைய மத அமைப்புகள்தாம் மக்களை முதன் முதலாக வேறு பிரித்தன. மத அமைப்பு-களை ஒட்டியே ஜாதியமைப்புகள் வளர்ந்தன. அவையும் ஏற்கனவே மதங்களால் பிரிந்து கிடந்த மக்களை மேலும் வேறு பிரித்துப் பிளவுகளைப் பெரும் பள்ளங்களாக ஆக்கின. அவ்வாறு பிரிக்கப்பட்ட பல்வேறு மத, ஜாதிப் பிரிவுகளில் தங்களை உறுப்பாக்கிக் கொள்ளாத பல கோடி மக்கள் அந்தப் பிளவுகளிலும் பள்ளங்களிலுமே வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர். மக்கள் நம்பிக்கையின் மேலும், மடமைகளின் மீதும் கட்டப்பட்ட மதங்கள் என்னும் இச் செயற்கைப் போலி அமைப்புகள், வலிந்த செல்வமும் ஆளுமையும் உள்ளவர்களின் கைகளில் சிக்கியவுடன், அவை மேலும் வலிவடைந்து, சட்டங்களாகவும், அரசுகளாகவும் உருவெடுத்தன. இந்த வகையில் மதங்கள் இவ்வுலகையே கட்டியாளுகின்ற வல்லமை பெற்றன. அதன்பின் மக்களின் எந்தவொரு தேவையும், மாறுதலும், இம் மதங்களை யொட்டியே சிந்திக்கப் பெற்றன; செயல்படுத்தப்பட்டன.
தொடக்கத்தில் ஒரு சில கற்பனைக் கடவுள்-களுக்காக உண்டாக்கப் பெற்ற மதங்கள், இவ்வாறு வலுப்பெற வலுப்பெற, பின்னர், புதுப்புதுக் கடவுள்களையே படைத்து வெளி விற்பனைக்கு அனுப்பும் பட்டறைகளாக மாறின. ஓர் உருவாக்கத் தொழிற்சாலையிலிருந்து வெளி-யேறும் பல பண்டங்களை விற்பனை செய்வதற்குரிய விற்பனைக் கூடங்கள் பல ஏற்படுவதைப் போல, புதிது புதிதாக உருவாகி வெளிவந்த கடவுள் மதங்களுக்கும் மடங்கள் போலும் மத வாணிகக் கூடங்கள் உருவாயின. கட்சி அலுவலகங்களைப் போல், அவையும் சட்டதிட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்கின. அவ்வம் மதங்களின் பண, அதிகார, ஆட்சி வலிவுகளுக்கேற்ப, அச் சட்ட திட்டங்களும், நெறிமுறைகளும் மக்களைக் கட்டுப்படுத்தின; அவர்களைச் சிந்திக்க விடாமல் அறிவுப்போக்கிற்குத் தடையிட்டன. மன ஒருமையை வளரவிடாமல் மன வேறுபாடுகளை _ -தாழ்ச்சி உயர்ச்சிகளைக் கற்பித்தன, கடைப்பிடித்தன. மத வரலாற்று நூல்களில் இவற்றை நெடுகலும் பார்க்கலாம்.
இவ்வாறு வளர்ந்துவிட்ட உலக மதங்-களுக்குள் இந்துமதம் என்பது, ஆரியப் பார்ப்பனர்-களுக்காகவே வளர்த்துக் கொள்ளப்பட்ட, தூர் நிரம்பிய ஒரு மதமாகும். வேதமதம் என்னும் நச்சு விதையைச் சுற்றியுள்ள சதைப் பகுதியே இந்து மதம் ஆகும். இந்தச் சதைப் பகுதியை மூடியுள்ள தோல் மிகக் கவர்ச்சியுடைய வண்ணப் பூச்சுகள் கொண்டது; இவ்வண்ணப் பூச்சு ஒன்றினாலேயே மனம் மயங்கிப் போகும் படிக்காத ஏழைப் பொதுமக்கள் இந்நாட்டில் ஏராளம்! தோல் வண்ணத்தால் கவர்ச்சியுற்று, இதன் சதைப் பகுதியைச் சுவைப்பவர்களுக்கு ஏற்படும் மதி மயக்கமும், மதவெறியும் மிகுதி! அதன் இனிமையான இன்பவெறி நுகர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதென்பது அரிதினும் அரிது!
ஆனால், அதையும் வேறு பிரித்துணர்ந்து, தன் ஆய்வறிவால், தான் யார், இவ்வுலகம் எது, தன் தோற்ற மாற்ற வாழ்வு வளர்ச்சிக்கு என்ன பொருள் என்பவை பற்றியெல்லாம் பகுத்தறிவு வழியினும் மெய்யறிவு வழியினும் உய்த்துணர்ந்து கொண்டு, மேலே செல்பவர்கள் தாம் அவ்விந்து மதத்தின் நச்சுவிதையையும் அதன் தீய நோக்கங்களையும் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். இந்து மதத்தின் நச்சுவிதை அது போன்ற நச்சுத்தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே வாழ்வளிக்கக் கூடியது. மற்ற அனைத்து மாந்தப் பிரிவினரையும் வேரறுத்து, அடியோடு அழித்-தொழிக்க வல்லது. அந்த மூலவிதை எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடியது. எந்த மண்ணிலும் வளர்ந்து செழிக்கும் திறம் சான்றது. அது வேரூன்றிய நிலத்தின் அண்டை அயலில் வளர்ந்து படரும் செடிகொடிகள் அனைத்தையும் தனக்கு எருவாக்கிக் கொள்ளும் வலிமை பெற்றது. அதனால் தான் அந்த வேதமத நச்சுச் செடி, முன்னரே இந் நிலத்தில் பற்றிப் படர்ந்து வளர்ந்து செழித்திருந்த புத்தம், சமணம், உலகாயதம், சாருவாகம், சாங்கியம் முதலிய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட மதங்களின் சாரங்களை யெல்லாம் முற்ற உறிஞ்சிக்கொண்டு, இந்து மதம் என்னும் பெயரில் இப்பொழுது வானளாவிச் செழித்து வளர்ந்துள்ளது.
பொதுவாகவே ஆரியம் தன்னைச் சூழ்ந்த அனைத்துத் தனிநிலைச் செழிப்புகளை யெல்லாம் தன்வயமாக்கக் கூடியது. அந்த ஆரியத்தின் அப்பட்டமான நச்சுக்காடே இந்த இந்து மதம். மற்றபடி இந்து மதம் என்பது எவ்வகை மாந்த முன்னேற்றத்திற்கும் சிறிதும் பயன்படாது. மாந்த இனத்தையே கட்டழிக்க வல்ல இக் கொடிய மதம், அடித்து நொறுக்கப்பட வேண்டிய காட்டுவிலங்கு! சுட்டுப் பொசுக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக்காடு! தூர்த்து மூடவேண்டிய ஓர் அறியாமை நச்சுப் பொய்கை! மக்களை முன்னேறவிடாமல் மடமைச் சேற்றில் புதைந்து போகச் செய்கின்ற படுசேறு நிறைந்த ஒரு சாப்பள்ளத்தாக்கு! இத் தன்மையுள்ள இந்துமதத்தினின்று வெளியேறுவதற்கு மிக்க தன்மான உணர்வும், வெட்டிச் சலுகைகளைத் தூவென்று காறித் துப்புகின்ற பற்றற்ற துணிவும், வாழ்க்கை என்பது இதுவென்று தேர்-கின்ற மனவிளக்கமும் வேண்டும். அல்லது தங்களை வெளியேற்றிக் கொள்ளுகின்ற உள்முகத் தாக்கங்களாகிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.
…………. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆடுமாடு-களைப் போல் அழுத்தி வைக்கப்பட்ட பள்ளம் படுகுழிகளிலிருந்து, கையூன்றி, மார்-பால் வலித்து, கால் தூக்கி நின்று, ஜாதி வேறுபாடற்ற, மேடுபள்ளங்களற்ற, சமவெளிகளை நோக்கி, நிகரமை வாழ்வு மூச்சுக் காற்றை உள்வாங்கும், அங்காந்த நெஞ்சுடன், அகன்று விரிந்த கைகளுடன் எல்லாமாகிய அல்லாவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அவர்களை நிறுத்துவது கடினம்! மிகமிகக் கடினம்! இனி, எவரும், எந்த ஓர் ஆற்றலும், எந்த இந்து மதக் கொம்பனும் – அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது!
மதம் மக்களைவிட உயர்ந்த அமைப்பன்று. மதம் மட்டுமன்று; எந்த ஒரு மக்கள் அமைப்பும் அம்மக்களைவிட உயர்ந்ததாகிவிட முடியாது. அவர்கள் அறிந்தோ அறியாமலோ அல்லது இன்றோ நேற்றோ அமைத்துக் கொண்ட, அல்லது அமைந்துவிட்ட ஓர் அமைப்பு -அது மக்கள் தொடர்புடையதாகட்டும்- அல்லது கடவுள் தொடர்புடையது என்று கருதப்படுவதுதான் ஆகட்டும் – அவர்களின் _- அந்த மக்களின் – முன்னேற்றத்திற்கோ அல்லது வாழ்க்கை மகிழ்ச்சிக்கோ – தடையாக இருக்குமானால், அது தகர்த்துத் தள்ளப்பட வேண்டியதே! விலக்கி வீழ்த்தப்பட வேண்டியதே! அப்படிச் செய்யவியலாத பொழுது, அந்த அமைப்பினின்று விட்டு விலகுவதே மேலில்லையா? அதைத்தான் மீனாட்சிபுரங்களும், பிறவூர்களும் நமக்கு உணர்த்திக் கொண்டுள்ளன. அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாத அல்லது அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலாத நரம்புத் தளர்ச்சி கொண்ட காஞ்சிக் காமகோடிகளும், கூட்டிக் கொடுக்கும் இதயங்களும், காட்டிக் கொடுக்கும் வீடணர்-களுந்தாம் அந்த அருமையான முடிவுக்கு மாசு கற்பித்துப் பேசித் திரிவார்கள்!
இனி, இறுதியாக இந்து மதம் என்னும் அணிமணி தொங்கும் ஆரவாரப் பளிங்கு மாளிகையின் ஓர் இருண்ட மூலையில், பல்லியாய் – பூச்சியாய் – புல்லிய தேரையாய் ஒட்டிக் கிடந்த – இரக்கத்திற்குரிய அத் தாழ்த்தப்பட்ட உயிர்கள் – இடிந்து விழப்-போகும் அம் மணிமண்டபத்தினின்று – வெளியேறிக் கொண்டுள்ளன! இனி, ஓரிரண்டு சலுகைகளின் பொருட்டு, இந்து மதம் என்னும் அம் மண்டப மூலை – முடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வாழ்க்கை முடிவதற்குள் அவ் விழிவு சேர்ந்த பகட்டு மண்டபத்தினின்று வெளியே போவோமா? அல்லது அதன் இறுதி மூச்சான இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டு திக்கித் திணறித்தான் சாகப் போகிறோமா? அது நம் துணிவையும் தன்மானத்தையும் பொறுத்தது! வீழ்க இந்து மதம்! வாழ்க தன்மானப் பழந்தமிழ் மக்கள்!
– தென்மொழி, சுவடி : 17, ஓலை : 12, 1981