– எழுதியவர் : ந.சேதுராமன், திண்டிவனம்
காட்சி 13
அரண்மனை
உறுப்பினர்கள்: இரணியன், சித்ரபானு, வீரன்
சூழ்நிலை: இரணியன் தூங்கிக்கொண்டு இருக்கிறான். மெதுவாக சித்ரபானு ஈட்டியுடன் வருகிறாள். மார்பில் குத்தப்போகும்போது இரணியன் அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளுகிறான்.
இரணி: யாரடா நீ! (தலையைத் தட்டுகிறான். தலைப்பாகை விழுகிறது. கூந்தல் தொங்குகிறது.) மிலேச்சப் பெண்ணே! யாரடா அங்கே? எங்கே போய்த் தொலைந்தார்கள்.
வீரன்: (வந்து) அரசே!
இரணி: இதோ பார்! ஆரியப் பெண். என்னைக் கொலை செய்ய வந்தவள்.
வீரன்: (வாளை உருவி, இவளை இங்கேயே கொன்று போடட்டுமா அரசே!
இரணி: வேண்டாம்! பேடிகள் நேரில் எதிர்க்கத் துணிவில்லாமல் பெண்ணை அனுப்பி இருக்கிறார்கள். ஆரியப் பதர்கள். எய்தவர் இருக்க அம்பை நோவதில் பயன் என்ன? ஈட்டியை அவள் கையில் கொடுத்து வெளியே துரத்துங்கள். பேதையே, பெண் என்பதால் உன்னை உயிரோடு விட்டேன். ஓடு. (வெளியே வருதல்)
வீரன்: ஏய் பெண்ணே! எங்கள் மன்னரின் பெருந்தன்மையைக் கண்டாயா? தன்னையே கொல்ல வந்தபோதும் பெண் என்ற காரணத்தால் விடுதலை செய்துவிட்டார். இதுதான் தமிழர் பண்பாடு.
சித்ர: தெரிந்துகொண்டேன் வீரரே! நான் போய் வருகிறேன். நீங்கள் போகலாம்.
(வீரன் போகிறான். பிரகலாதன் வருகிறான்.)
பிரக: சித்ரபானு! எங்கே போய்விட்டாய்? இந்த அரண்மனை முழுவதும் உன்னைத் தேடும்படிச் செய்துவிட்டாயே.
சித்ர: ஒன்றுமில்லை அத்தான். அந்தப்புரத்தில் என் மாமனாரைப் பார்க்கலாம் என்று போனேன். ஆகா! உங்களைப் போலவே எவ்வளவு அழகாய் இருக்கிறார். அவர் பாதங்களைத் தொட்டு வணங்கலாம் என்று குனிந்தேன். அப்போது என் கையிலிருந்த ஈட்டி கீழே விழுந்து சத்தமெழுப்பி விட்டது. என் மாமனார் விழித்துக் கொண்டார். அடேயப்பா சிங்கத்தைப்போல கர்ச்சித்து என்னைக் கொல்ல என் ஈட்டியை எடுத்துக் கொண்டு என் மேல் பாய்ந்தார். நான் அவரது மருமகளாயிற்றே, விடுவேனா! அவர் கையிலிருந்த ஈட்டியைப் போராடி பிடுங்கிக்கொண்டு இருளில் மறைந்து வந்துவிட்டேன்.
பிரக: எப்படியோ தப்பி வந்தாயே, அதுபோதும். வந்த வேலையைக் கெடுத்துவிட்டாய். அரண்மனையில் எல்லோரும் எழுந்து விட்டார்கள். வா தப்பிச் செல்லவேண்டும்.
சித்ர: என் உறவினர்கள்.
பிரக: என்ன செய்வது. அதற்குத்தான் உன்னை வரவேண்டாம் என்றேன். உன்னைத் தேடுவதிலேயே நேரம் கழிந்துவிட்டது. சரி வா! வேறு வழி பார்ப்போம். (ஓடுதல்)
காட்சி 14. பூங்காவில் ஒரு பகுதி
உறுப்பினர்கள்: வெற்றி வீரன், சித்ரபானு
சூழ்நிலை: வெற்றி வீரன் பாடுகிறான். பாடல் முடிவில் சித்ரபானு வருகிறாள்.
வெற்றி: சித்ரபானு! ஏன் இவ்வளவு நேரம்?
சித்ர: கண்ணாளா? (ஆவலுடன் அருகில் ஓடி வருகிறாள். பின் திடுக்கிட்டுப் பின் வாங்கி) நான் உங்களை….
வெற்றி: என்ன சித்ரபானு? மஞ்சள் ஆடை?
சித்ர: அதை ஏன் கேட்கிறீர்கள்? நம் காதலை என் தந்தையிடம் சொன்னேனா! (அழுதல்) அவர் (தேம்புகிறாள்) அவர்…
வெற்றி: (பதறியபடி) என்ன சித்ரா! ஏன் அழறே!
சித்ர: நீங்க தமிழராம். ஆரியர்கள் தமிழரை விவாகம் செய்துக்கக் கூடாதாம்.
வெற்றி: நான்தான் ஆர்ய தர்மத்தை ஒப்புக் கொள்கிறேனே. ஏன் தயக்கம்?
சித்ர: ஆரிய தர்மத்தை ஒப்புக் கொண்டால் மட்டும் போதாதாம். நமக்கு விவாகம் ஆய்ட்டா இந்த அரசர் இரணியன் உங்களை அந்தப் பெண்ணை விட்டுவிடுன்னா என்னா செய்வீர். பாவம் நீங்க இந்நாட்டு அரசரின் அடிமைதானே.
வெற்றி: அப்படி ஏதாவது நடந்தால் என் தளபதி பதவியையே துறந்துவிடுவேன்.
சித்ர: போச்சு! போச்சு! நீங்க தளபதியா இருக்கிறதாலதானே உங்களைக் காதலிச்சேன்.
வெற்றி: அதுக்கு நான் என்ன செய்யணும்?
சித்ர: அதுக்குத்தான் நான் கௌரி விரதம் இருக்கிறேன்.
வெற்றி: என்ன! நான் அரசனாக முடியுமா?
சித்ர: நிச்சயம் முடியும்! எங்க கௌரியம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள்.
வெற்றி: நான் என் அரசர் இரணியச் சக்கரவர்த்திற்குத் துரோகம் செய்ய முடியாது.
சித்ர: உங்களை யார் துரோகம் செய்யச் சொன்னது? சர்வ சக்தியுள்ள எம்பெருமான் சிறீமந் நாராயண பகவானும், அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைக்கும் எங்கள் அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி கௌரியம்மனும் இதை நிறைவேற்றி வைப்பார்கள்.
வெற்றி: எப்படி?
சித்ர: ஏன், எப்படி, ஏதுன்ற கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. கடவுள் சங்கற்பத்தை நாம் காண முடியாது. இதுதான் ஆரிய தர்மத்தின் அடிப்படைக் கொள்கை. அதை அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள்.
வெற்றி: அப்படியா!
சித்ர: அதற்காக நான் கௌரி விரதம் அனுஷ்டிக்கின்றேன்.
வெற்றி: கௌரி விரதமா? இது எதற்கு? சித்ர: பார்த்தீரா! மீண்டும் கேள்வி. நம்பிக்கை என்ற வேரிலேதான் ஆர்ய தர்மம் என்ற ஆலமரமே தழைக்கிறது.
வெற்றி: நம்புகிறேன். என் ஆருயிர்க் காதலி சித்ரபானுவுக்காக நம்புகிறேன்.
அருகில் வா! (நெருங்குகிறான். அவள் விலகிப் போகிறாள்) ஏன்? கண்ணே! ஏன் விலகிச் செல்கிறாய்?
சித்ர: என்ன செய்வேன் கண்ணாளா? உங்களைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்க என் உணர்ச்சி தூண்டுகிறது. ஆனால் கௌரி விரதம் அதைத் தடுக்கிறது.
வெற்றி: கௌரி விரதமிருந்தால் கட்டியணைக்கக் கூடாதா?
சித்ர: கட்டியணைப்பது மட்டுமல்ல. நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவே கூடாதாம். அப்போதுதான் விரதம் பலன் அளிக்குமாம். உங்களை நான் பார்க்காமல், பேசாமல் எப்படி இருப்பேன். அதுதான் என்னை வாட்டுகிறது கண்ணாளா!
வெற்றி: எத்தனை நாளைக்கு?
சித்ர: கொஞ்ச நாள்தான், மூன்று மாதம்.
வெற்றி: உன் கௌரி விரதம் என்னை வேந்தனாக்கிவிடும் அல்லவா?
சித்ர: பார்த்தீர்களா? தமிழர்களுக்கே உரிய சந்தேகம். அவநம்பிக்கை. அப்பப்பா!
வெற்றி: இல்லை சித்ரா! நம்புகிறேன். மூன்று மாதம்தானே? அதன்பிறகு நான் இந்நாட்டின் மாமன்னர். நீ எனது பட்டத்து ராணி.
சித்ர: இந்த லட்சியங்களுக்காகத்தான் பிரிவுத் துன்பத்தையும் பொறுத்துக் கொள்ள மனதைத் திடப்படுத்திக் கொள்ளுகிறேன்.
வெற்றி: உன்னைவிட எனக்கு மன உறுதி அதிகம் சித்ரா!
சித்ர: தாங்கள் எனக்கு ஒரு வரம் அருள வேண்டும்?
வெற்றி: என்ன வரம்?
சித்ர: நீங்கள் ஆர்ய தர்மத்தை ஏற்றுக் கொண்டது உண்மை என்பதை என் தந்தையும் எனது உறவு ஜனங்களும் நம்ப வேண்டும்.
வெற்றி: அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சித்ர: ஆரிய இன ஜனங்களுக்கு நீங்கள் எந்தவிதத்திலும் தீங்கு செய்யக் கூடாது.
வெற்றி: நானாகச் செய்ய மாட்டேன்.
சித்ர: அப்படியென்றால்?
வெற்றி: அரசர் கட்டளையிட்டால் அதை நிறைவேற்றத் தவறமாட்டேன்.
சித்ர: இப்படிச் சொல்லிவிட்டால் எப்படி? எங்கள் ஆரிய இனத்தார் சிறைப்பட்டிருக்கிறார்கள் அல்லவா?
வெற்றி: ஆமாம்!
சித்ர: அவர்களைக் கொல்லும்படி அரசர் ஆணையிட்டிருக்கிறார் அல்லவா?
வெற்றி: ஆமாம்!
சித்ர: அதை நிறைவேற்ற தங்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார் அல்லவா?
வெற்றி: ஆமாம்!
சித்ர: நீங்கள் ஆரிய மதத்தின் காவலராக இருப்பது உண்மையானால், நமது விவாகம் நடைபெற எனது தந்தை உடன்பட வேண்டுமென்றால், நீங்கள் இந்நாட்டின் மன்னனாக அரியணை ஏறவேண்டுமென்றால் நான் சொல்வதுபோல நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்.
வெற்றி: என்ன அது?
சித்ர: (சுற்றுமுற்றும் பார்த்து) அருகில் காதைக் கொண்டு வாருங்கள். (ரகசியமாக ஏதோ சொல்கிறாள்)
வெற்றி: இது துரோகமல்லவா?
சித்ர: இது எப்படித் துரோகமாகும்? ஆபத்துக்குப் பாவமில்லை என்பார்கள். உங்கள்மேல் பழிவரக் கூடாது அவ்வளவுதானே.
வெற்றி: மந்திரத்தால் எதையெதையோ சாதிப்பதாகச் சொல்லுகிறீர்களே. ஏன் அப்படிச் செய்யக்கூடாது?
சித்ர: இந்தச் சின்ன வேலைக்கெல்லாம் மந்திர சக்தியைச் செலவிடலாமா? தந்திரத்தால் சாதிக்க வழியிருக்கும்போது…
வெற்றி: அப்படியா? மீண்டும் உன்னை எப்போது சந்திப்பது சித்ரபானு.
சித்ர: விரதம் முடிந்ததும்தான். அப்படியேதேனும் முக்கியச் செய்தியிருந்தால் ஓலைமூலம் எழுதி அனுப்புகிறேன்.
வெற்றி: வெல்க உனது விரதம். வருகிறேன். (போகிறான்)
காட்சி 15 – மலைப்பாறை
உறுப்பினர்கள்: வீரர்கள் இருவர், ஆரியர்கள் நால்வர், வெற்றி வீரன்.
சூழ்நிலை: ஆரியர்களின் கைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவர்களைத் தள்ளிக்கொண்டு வீரர் இருவர் வருகிறார்கள்.
வீரன் 1: ஆரியப் பதர்களே! போங்கள், உம் போங்கள்.
வீரன் 2: இங்கேயே நில்லுங்கள். எங்கள் தளபதி வரட்டும்.
வீரன் 1: என்னமோ மந்திரம் மாயம்னு சொல்வீங்களே! எங்கே அதெல்லாம்.
வீரன் 2: இன்னும் கொஞ்ச நேரத்துல தலை வேறு முண்டம் வேறா ஆகப் போறீங்க.
வீரன் 1: கழுகுக்கும் காக்கைக்கும் இரையாகப் போறீங்க.
ஆரியன் 1: எங்க தெய்வசக்தி உங்களுக்குத் தெரியாது. எப்பெப்ப எதை எதை எப்படிச் செய்யணும்னு எங்க வானுலகத்துல இருக்கிற தேவர்களுக்குத் தெரியும்.
வீரன் 2: அக்கா! தெரிஞ்சி கிழிச்சிங்க. தளபதி அய்யா வரட்டும். அப்பத் தெரியும் உங்க தெய்வத்தின் சக்தி.
வீரன் 1: இதோ தளபதி அய்யா வந்துட்டார்.
இரு வீரர்கள்: வணக்கம் தளபதி அய்யா!
வெற்றி: இந்த ஆரியப் பயல்களா வீதியில் அரசருக்கெதிரா கோஷம் போட்டானுங்க!
வீரன் 1: ஆமாம் அய்யா! யாரோ நாராயண மூர்த்தியாம். நம்மை அழிச்சிடுவாராம்.
வெற்றி: இவர்களை இழுத்து இந்தப் பாறையிலே தலைகளை வரிசையாக வைக்கச் சொல்.
வீரன் 2: யேய்! ஆரியர்களே! உங்கள் நால்வர் தலையையும் இக்கல்லின்மேல் வைத்துக் குனிந்து நில்லுங்கள். (தாறுமாறாகத் தலையை வைக்கின்றனர்)
வீரன் 1: அடடே! அப்படியில்லை. இப்படி. (சரி செய்கிறான். மீண்டும் அவர்கள் சரியாக வைக்கத் தெரியாமல் அல்லாடுகின்றனர்.) வெற்றி: வீரர்களே! சற்று நில்லுங்கள். யேய்! ஆரியப் பதர்களே! கவனியுங்கள். எங்கள் வீரர்கள் இப்போது எப்படித் தலை வைக்க வேண்டும் எனக் காட்டுவார்கள். அதைப் பார்த்து நீங்கள் செய்ய வேண்டும். உம்… வீரர்களே உங்கள் தலையைப் பாறைமீது வைத்துக் காட்டுங்கள்.
(வீரர்கள் இருவரும் அப்படியே தலை வைக்க, வெற்றி வீரன் அவர்கள் தலைகளை ஒரே வெட்டால் துண்டிக்கிறான். ஆரியர்களின் கட்டுகளை அறுத்து விடுவித்து).
வெற்றி: சித்ரபானு! நீ சொல்லியதுபோலவே செய்துவிட்டேன். இன்னும் மற்றதையும் ஓ! யாரோ வருகிறார்கள். (கீழே படுத்து விடுகிறான்.) (அமைச்சரும் தத்தனாரும் வருகின்றனர்.)
அமைச்: தத்தனாரே! நீர் என்ன இருந்தாலும் இளவரசர் பிரகலாதனை விட்டுவந்திருக்கக் கூடாது.
தத்த: நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர்தான் என் நண்பன் காங்கேயன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான். நீங்கள் அரண்மனைக்குப் போங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
அமைச்: அவர் உடம்புக்கு ஏதேனும் வந்தால்… அரசர் கவலைப்படுகிறாரே!
தத்த: நான் மருந்து மட்டும்தான் தருவேனாம். அவரது நண்பர் மருந்தும் தருவார், மாந்திரீகமும் செய்வார் என்று சொல்லும்போது…
அமைச்: அது யார் அவரது நண்பர். பெயர் என்ன சொன்னீர். காங்கேயனா? (திடுக்கிட்டு) அதோ பாருங்கள் மருத்துவரே! யார் அது?
தத்த: ஆமாம்! தளபதிபோல தெரிகிறது.
அமை: வாரும். (அருகில் வந்து)
தத்த: இது என்ன கொடுமை. வீரர்கள் இருவரும் வெட்டுண்டு கிடக்கிறார்கள். நமது தளபதி (மூக்கில் விரல் வைத்துப் பார்த்து, நாடி பார்க்கிறார்.) உயிர் இருக்கிறது. மயங்கிப் போய்க் கிடக்கிறார். (ஒரு பச்சிலையை எடுத்து வந்து கசக்கி மூக்கில் வைத்து முகரச் செய்கிறார். மயக்கம் நீங்கியவனாக எழுந்து)
வெற்றி: யார்? நான் எங்கே இருக்கிறேன்.
அமை: தளபதி வெற்றிவீரரே! என்ன இது?
வெற்றி: (சுற்றுமுற்றும் பார்த்துப் பதறியபடி) இதென்ன கொடுமை! யார் இவர்களைக் கொன்றது. எங்கே ஆரியப் பேடிகள்?
அமை: யாரைக் கேட்கிறீர்? என்ன நடந்தது?
வெற்றி: அமைச்சரே! அந்த ஆரியப் பயல்களை இந்தக் கல்லின் மீது தலைசாய்த்து வைத்தேன். அவர்கள் தலைகளை ஒரே வெட்டாக வெட்டிவிட வாளை உயர்த்தினேன். அப்போது வானிலிருந்து ஓர் ஒளி தோன்றியது. நான் அப்படியே மயங்கி விழுந்துவிட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. நீங்கள் எழுப்பிய பிறகுதான் இந்தக் கோலத்தைக் காண்கிறேன்.
அமைச்: இதென்ன புதுமை! வாரும் மன்னரிடம் சொல்வோம். (செல்கின்றனர்)
– தொடரும்