முனைவர் வா. நேரு
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின் தேவை இன்று உலகம் முழுவதும் உணரப்படுகிறது, அதிலும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
அண்மையில் எனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரம் சென்று இருந்த போது திருவனந்தபுரம் ஸ்டேச்சு பகுதியில் உள்ள ஸ்பென்சர் சந்திப்பில் உள்ள மைத்திரி புத்தக நிலையம் சென்று இருந்தேன். அந்தப் புத்தகக் கடை நிறையப் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடையின் ஒரு பகுதியில் ‘பெரியார் கார்னர்’ என்னும் பெயர்ப் பலகை தொங்கியது.
‘பெரியார் கார்னர்’ பகுதியில் நின்று பார்த் தால் அந்தப் பகுதி முழுவதும் மலை-யாள மொழியில் பெயர்க்கப்பட்ட தந்தை பெரியாரின் புத்தகங்கள் இருந்தன. அங்கு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்னும் நூல் மலையாள மொழியில் வரவேற்றது.
அதைப்போல வைக்கம் சத்தியாகிரகம், இந்து மதமும் திராவிடமும், பெரியாரின் ஒளி முத்துக்கள், ராமாயணம் ஒரு கட்டுக்கதை, மனுஸ்மிருதி பற்றி பெரியாரின் சிந்தனைகள், ஜாதி ஒழிப்பின் அவசியம், பகுத்தறிவு, பெண் ஏன் அடிமையானாள்?, இந்தி இணைப்பு மொழியா?, மதமும் மனிதனும், இந்து விழாக்கள், இனிவரும் உலகம், சுயமரியாதைத் திருமணம், தந்தை பெரியாரின் சுயசரிதை, புராணம் ஒரு கட்டுக்கதை போன்ற பல நூல்கள் மலையாள மொழியில் பெயர்க்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் போன்ற நூல்களும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.
இதைத் தவிர self respect movement in Tamilnadu, Periyar and Ambedkar, collected works of Periyar, On nationalism by Periyar E V R, Men and religion, Social revolution or social reform by Periyar E.V.Ramasamy போன்ற ஆங்கில நூல்களும் பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.
தந்தை பெரியாரின் புத்தகங்களை எல்லாம் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அனுமதி பெற்று மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று மைத்திரி நூலக உரிமையாளர் திரு. லால் சலாம் அவர்களைப் பாராட்டிவிட்டு தந்தை பெரியாரின் புத்தகங்கள் எல்லாம் எப்படி கேரளாவில் விற்பனையாகின்றன எனக் கேட்டேன். “மிக நன்றாக இருக்கிறது; எப்போதும் என் கடையில் அதிகமாக விற்பனையாவது தந்தை பெரியாரின் புத்தகங்களும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களும்தாம்’’ என்றார்.
தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்த நாளை ‘சமூக நீதி’ நாள் என அறிவித்து, ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழர் தலைவர் அவர்களால் பாராட்டப்பட்ட தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 21 மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், கருத்துகள் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். 21 மொழிகளில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பப்படும் தந்தை பெரியாரின் நூல்களைப் போன்றே தந்தை பெரியாரின் கருத்துகளை அதன் தேவையை உணர்ந்த பல்வேறு மொழிகளைச் சார்ந்த தோழர்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கும் சமத்துவ சிந்தனை உடையோர் பல மொழிகளில் தந்தை பெரியாருடைய கருத்துகளைக் கொண்டு செல்கிறார்கள். அண்மையில் சத்ய நாராயணா, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., அய்தராபாத் அவர்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இன்னும் நமக்குத் தெரியாமலும்கூடப் பல்வேறு மொழிகளில் ஊடகங்கள் வழியாக தந்தை பெரியாருடைய கருத்துகள் போய்க் கொண்டிருக்கின்றன.
என்றாலும், இவையெல்லாம் தொடக்கமே! இன்றைய இந்திய அரசியல் நெருக்கடியில் பெரியார் கொள்கைகள் பெருமளவில இந்தியா முழுமையும் கொண்டு சேர்க்க வேண்டியது கட்டாயமாகும்.