முற்றம்

பிப்ரவரி 16-29 முற்றம்

ஒலிவட்டு

உடும்பன்

இசை: எஸ்.பாலன்

பாடல்கள்: பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழோடு சேர்த்து இங்கிலீசையும் கொல்லும் கொலவெறிப் பாடல்கள் கேட்கப்படும் காலத்தில் பாவேந்தரின் பாடல்களை, பட்டுக்கோட்டையாரின் பாடல்களை மட்டுமே திரைப்படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார் உடும்பன் இயக்குநரும், இசை அமைப்பாளருமான எஸ்.பாலன். காற்றில் எல்லாம் இன்பம் என்ற பாவேந்தரின் காதல் பாடல் ஹரிஹரன் – சாதனா சர்கம் குரல்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஓரம் கிழிஞ்சாலும் என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் நவீன இந்தியாவின் வறுமையைத் தோலுரிக்கிறது. இந்தப் பாடலைப் பாடியுள்ள முகேஷ், தமிழுக்குக் கிடைத்த இன்னொரு சீர்காழி கோவிந்தராஜன். பள்ளிக்கூட முதல் மணி, பாலாய்ப் போன மனம், கண்டவுடன் காதல் என பாவேந்தரின் தமிழை, பாப், ராக் போன்ற மேற்கத்திய இசையில் தந்துள்ள இசை அமைப்பாளர் எஸ்.பாலன் பாராட்டப்பட வேண்டியவர். இந்தத் தலைமுறைக்கு தமிழ்ப் பாடல்களை எப்படிக் கொண்டுபோக வேண்டும் என்பதற்கு உடும்பன் ஒரு வழிகாட்டி.


வலைப்பூ


http://thamizhoviya.blogspot.in/

கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கிவரும் வலைப்பூ. இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவு, இனஉணர்வுக் கட்டுரைகள், செய்திகளுடன் பெரியார், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் விடுதலை, உண்மை இதழ்களில் வரும் கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன. செய்திகளை உடனுக்குடன் வலையேற்றி வாசகர்களை விவாதத்தில் பங்கேற்க வைக்கிறது. தமிழின் முன்னணி இணைய விவாதக் களங்களான தமிழ்மணம், இன்ட்லி, தேன்கூடு, திரட்டி, தமிழ்தளம் ஆகியவற்றில் தமிழ் ஓவியா வலைப்பூவில் வரும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.


புதுச் சொல்

SMS –  – என்ற ஆங்கிலச் சுருக்கச் சொல்லுக்கு தமிழில் செல் குறுஞ் செய்தி என்று அழகாகவும் பொருள்படவும் மொழிபெயர்த்துப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

SIM card –  என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் எப்படி மொழிபெயர்க்கலாம்? எண் தேக்கி என்று சொல்லலாமா? அல்லது பொருத்தமான வேறு சொல்லை உருவாக்குவோமா? எழுதுங்கள்.

 


இணையதளம்


http://www.bookclubindia.net

முற்றிலும் இங்கிலீஷில் அமைந்த இணையதளம். புத்தக ஆர்வலர்களுக்கு புத்தம் புதிய இங்கிலீஷ் நூல்களை அறிமுகம் செய்கிறது. புத்தக மதிப்புரை, நூலாசிரியர்களின் பேட்டிகள், நூல்கள் பற்றிய கட்டுரைகள், நூல்கள் பற்றிய செய்திகள், சிறந்த சிறுவர் நூல்களின் அறிமுகம் அவை குறித்த சிறப்புகள், புத்தகக் கண்காட்சிகள் எங்கெங்கே நடைபெறுகின்றன என்பது குறித்த அறிவிப்புகள் என இங்கிலீஷ் நூல்களைப் படிக்கத் தூண்டும் இணையதளமாக இயங்குகிறது. அண்மையில் இங்கிலீஷ் புத்தக வாசிப்பு பற்றி ஒரு பயிற்சி அரங்கையும் நடத்தியுள்ளார்கள்.


குறும்படம்

யோசி

இயக்கம் – தயாரிப்பு: ஜெ.பாலா
செல்: 90955 68365
கால அளவு: 8 நிமிடம்

பெரிய திரையில் சொல்ல முடியாத கருத்துகளைக் குறும்படங்களில் சொல்லிவிடுகிறார்கள் இக்கால திரைப் படைப்பாளிகள். மனநிலை பாதிக்கப்பட்டு,சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாத ஒருவர்,கோவில் சுற்றுச் சுவற்றின் ஓரம் படுத்துக்கிடக்கிறார். அவரை சாமியார் ஆக்கிவிடுகிறது மக்களின் மடமை. மனிதராகப் பிறந்தவர்கள் எதையும் யோசித்துப் பின்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பதியவைக்கிறார் இயக்குநர் ஜெ.பாலா.

பெரியார் திரை 2011 குறும்படப் போட்டியில் யோசி முதல் பரிசைப் பெற்றுள்ளது.


நூல்

பணம் எனும் உலக மொழி
ஆசிரியர்: ச.அ.இளமாறன்
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்,
தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017
மொத்த பக்கங்கள்: 48
விலை: ரூ.40/-

பெருங்கவிதைகள், கவிதை அரும்புகள், கருத்துத் துளிகள், அனுபவ அறநெறிகள் என்ற நான்கு பிரிவுகளில் எண்ணச் சிதறல்களை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.

பணபலம் பதினொன்றும் செய்யும் என்றுகூறி, பணத்தின் மொழியே உலகம் ஏற்கும் சிறந்த மொழி என விளக்கம் பெறும் முதல் கவிதையே நூலின் தலைப்பாக அமைந்துள்ளது.

நண்பனுக்கும் எதிரிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விளக்கி அனல் தெறிக்கும் வரிகளாய் தித்திக்கும் தீ, மனிதன் என்பதன்   ஆழமான _ எளிமையான விளக்கம், தியாகி_துரோகி வேறுபாடு, தனிமை நிலை பற்றிய விளக்கங்களுடன் வேண்டு கோளாகவும் கட்டளையாகவும் இடம் பெற்றுள்ள நீ உன்னை அறிந்தால் மற்றும் பல மனம் கவரும் கருத்துகளைக் கவிதைகளாய்த் தாங்கி நிற்பதே பணம் எனும் உலக மொழி.


ஜோதிடத்தை இகலும் நாலடியார்

நிலையாமை நோய் முப்பு, சாக்காடு என்ரு எண்ணி

தலையாயார் தம்கருமம் செய்வார் தொலைவு இல்லாச்

சித்தமும் சொதிடமும் என்று ஆங்கிவை பிதற்றும்

பித்தரின் போதையார் இல்

தகவல் : சேக்கிழான்
தொண்டையார்பேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *