சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பிப்ரவரி 16-29

யாருக்கு யார் அந்நியர்கள்?

நூல்: அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு
ஆசிரியர்: ஜெ.பிரபாகரன்
வெளியீடு: பென்னி குயிக் பதிப்பகம்,
4/1411, செந்தில்நாதன் தெரு,
தாசில்தார் நகர், மதுரை – 625 020
செல்பேசி: 99944 97418
மொத்த பக்கங்கள்: 32
விலை: ரூ.60/-

அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு…

ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் எழுதும் ஒரு மாசற்ற கடிதம். நலம் என்று சம்பிரதாயமாக எழுதி இக்கடிதத்தில் பொய்மை கலப்பதை நான் விரும்பவில்லை. உங்கள் நாட்டில் நடந்ததை, நடந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கும் எவரும் நலமில்லை. 30,000 சிங்கள குடும்பங்கள் கடந்த போரில் தங்களது குடும்பத்தினரை இராணுவத்தில் பலி கொண்டிருக்கும்போது, நலமறிய ஆவல் என்று தங்களைக் கேட்டு எழுதுவதிலும் பொருளில்லை. நிற்க.

முதலில் உங்களின் போர் வெற்றிக்கு நான்  வாழ்த்துச் சொல்லியாக வேண்டும். ஆனாலும் வாழ்த்துவதற்கு என்னிடம் உளப்பூர்வமான வார்த்தைகள் ஒன்றும் இல்லை. அதற்குப் பதிலாக சம்பிரதாயமாக வாழ்த்துவதற்கு எனக்குச் சம்மதமில்லை. மேலும், எந்த ஒரு போர் வெற்றியும் வாழ்த்துவதற்கு உரியதல்ல.

******

போரில் கொல்லப்படும் ஒரு மனித உயிரின் மதிப்பை விட உயர்வானதாக எந்த ஒரு போர் வெற்றியும் இருக்க முடியாது. இருப்பினும் பொது மரபு கருதி கூட உங்கள் போர் வெற்றியை வாழ்த்த இயலாமைக்கான காரணம். உங்கள் அரசு சொல்வது போல் நடந்தது. பயங்கரவாத எதிர்ப்புப் போர் இல்லை. அதில் நீங்கள் அடைந்தது வெற்றியும் இல்லை. காட்டியது வீரமும் இல்லை. தோற்றுப்போன இனத்தைச் சேர்ந்தவன் இப்படித்தானே எழுதுவான் என அவசரப்பட்டு முடிவு எடுத்துவிடாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு மாசற்ற கடிதத்தையே எழுத விழைகிறேன்.

போரில் உங்கள் இராணுவத்தினரின் வீரம் எப்படியிருந்தது என்பது குறித்து சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன்.

மனிதனுக்கு மனிதன் வீரம் என்பதோ, நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் வீரம் என்பதோ, இன்றைய நவீன நாகரிக உலகிற்கு ஏற்புடையதல்ல. மேலும் எதிர்ப்புதான் உலகில் வீரமாக ஏற்கப்பட்டு வருகிறதே ஒழிய, அடக்கு முறைகள் வீரமாக உலகில் பதிவு செய்யப்படுவதில்லை. அடக்குமுறைகள் என்பவை அரசுகளால் கையாளப்படுபவை. உங்கள் அரசு செய்தது அடக்குமுறை. அது எப்படி வீரமாக இருக்க முடியும்? வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களை விட, தங்களை வீரர்களாக காட்டிக் கொள்வது எல்லா போர்களிலும் நடந்து வருவதுதான். போரில் வெற்றியும், தோல்வியும் வீரத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. இலங்கையில் புரன் அப்பு, கெப்பிட்டி பொல, தமிழ் மன்னர்கள் சங்கிலியன், பண்டாரவன்னியன், விக்கிரமராசசிங்க என பலரும் அந்நியரை எதிர்த்து இறுதியில் தோற்றவர்களே. இவர்களெல்லாம் வீரமில்லாமல்தான் தோற்றார்களா? இல்லை அந்நியர்தான் வீரத்தால் வென்றார்களா? படைச் சமநிலையும், போர்ச் சூழல்களும், மிகவும் ஏற்றத் தாழ்வாக இருக்கும் போர்களில், வலியவரின் வீரம் அர்த்தமற்றது. வெற்றிப் பெருமிதங்கள் அற்பத்தனமானது.

******

ங்கள் நாடு விடுதலையடைந்த போது,  பெரும்பான்மை அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்ற மக்கள் நீங்கள். இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் நீங்களே அப்போது இருந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் இலங்கையின் இயற்கை வளத்தையும், மனித வளத்தையும் கொண்டு மிக விரைவில் அதைச் செல்வச் செழிப்பான நாடாக மாற்றி இருக்க முடியும். ஆனால், 1948இல் இலங்கை விடுதலை அடைந்ததும் உங்கள் சிங்கள ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? அடுத்த ஆண்டிலேயே இலங்கையின் முக்கிய மனித வளமான இந்திய வம்சாவளித் தமிழ்மக்கள் 10 இலட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில்கூட 4 முறை வாக்களித்த மக்கள் சிங்களவர் ஆட்சி வந்ததுமே வாக்களிக்க  இயலாமல் போனார்கள். விடுதலை பெற்ற உடன், உங்கள் சிங்கள ஆட்சியாளர்களின் சிந்தனை ஏன் அப்படிப் போகவேண்டும்? மலையகத் தமிழ்மக்கள் உங்களுக்கு என்ன கெடுதல் இழைத்தார்கள்? புத்தளத்திலிருந்து கண்டி வரையிலான காடுகளை 5 தலைமுறைகள் வெறும் வயிற்றுப் பசிக்காக கடுமையாக உழைத்து தேயிலைத் தோட்டங்களாக செழிக்கச் செய்தார்கள். 150 ஆண்டுகள் இந்த மண்ணிலே வாழ்ந்து இலங்கையின் தேயிலைத் தொழிலை வளப்படுத்திய மக்கள் என்றுகூட பார்க்காமல், அடுத்ததாக அவர்களை இந்தியாவிற்கு விரட்டியடிக்க திட்டம் தீட்டி செயல்பட்டார்கள் உங்கள் ஆட்சியாளர்கள். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து கூலிகளாக கொண்டு வரப்பட்ட மக்கள்தானே அவர்கள். அவ்வாறு வந்ததில் அவர்களின் குற்றம் என்ன இருக்க முடியும்? ஆங்கிலேயரின் கீழ் அப்போது இந்தியாவும், இலங்கையும்கூட ஒரே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தானே.

ஒரு மண்ணிலே பிறந்து, அம்மண்ணிலேயே வளர்ந்து, அம்மண்ணைச் செழிப்பாக்கவே தலைமுறையாய் உழைத்து வாழ்ந்து வரும் மக்களை, திடீரென ஒரு நாளில் இது உங்கள் மண் இல்லை, உங்கள் நாடும் இல்லை என்று ஒரு ஒப்பந்தத்தில் விரட்டியடிக்க எப்படித்தான் மனம் வந்தது உங்கள் ஆட்சியாளர்களுக்கு? அந்த 10 இலட்சம் பேரும் இந்தியாவிலிருந்து வந்த சிங்களவர்களாக (ஒரு வேளை) இருந்திருந்தால் அப்போதும் இப்படித்தான் விரட்டியிருப்பீர்களா? இல்லை என்றால் இது இனவெறி இல்லாமல் வேறென்ன?

அடுத்து இலங்கையின் பூர்வீகத் தமிழர்களாகிய ஈழத்தமிழர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் இழைத்தார்கள்? உங்களை விட கல்வியில் சிறந்து விளங்கினார்கள், அதனால் வேலைவாய்ப்புகளைப் பெற்றார்கள். ஒரு இனம் கல்வியில் சிறந்து விளங்கியதற்காக ஒடுக்கப்பட வேண்டுமா? உங்கள் கையில்தான் அரசு அதிகாரமே இருந்ததே, சிங்களவர்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் அரசு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமே, ஏன் உங்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்ப வேண்டும்?

2000 ஆண்டுகள் தாங்கள் ஆண்ட தமிழ்மண்ணின் அதிகாரத்தைக் கூட உங்களிடம் விட்டுக் கொடுத்து விட்டு தமிழர்கள் பதிலுக்கு உங்களிடமிருந்து என்ன கேட்டார்கள்? தங்களின் மொழி, கல்வி, பண்பாட்டு உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று கேட்டார்கள். உலகில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைக் காப்பது பெரும்பான்மை இனத்தின் கடமையாகவே கருதப்படுகிறது. ஆனால், உங்கள் ஆட்சியாளர்கள் அரசு அலுவல் மொழியாக இருந்த தமிழை ஒரே சட்டத்தில் அதிலிருந்து நீக்கினார்கள். உயர்கல்வி வாய்ப்பைப் பெற சிங்கள மாணவனைவிட, தமிழ் மாணவன் அதிகம் படித்து அதிக மதிப்பெண் காட்ட வேண்டும் என பாகுபடுத்தினார்கள். இதுபோன்ற பல இனப்பாகுபாடு சட்டங்களுக்கு அகிம்சை முறையில் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைக் கூட பொறுக்க முடியாமல் அதிகாரத்தாலும், சிங்கள இனவெறியர்களாலும் தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றார்கள்.

******

ன் இந்தக் கொலை வெறி, அரைநூற்றாண்டு தாண்டியும் தணியாத இந்த இனவெறி. இலங்கையில் தமிழர்கள் ஒரு இன அடையாளத்தோடு வாழக்கூடாது. இலங்கையின் இன அடையாளம் சிங்களவர்கள் மட்டுமே. மொழி அடையாளம் சிங்களம் மட்டுமே. மத அடையாளம் பௌத்தம் மட்டுமே. இதை ஏற்பவர்கள் இங்கு வாழலாம், எதிர்ப்பவர்கள் அழியலாம். நாங்கள் எங்கள் மொழியையும், மதத்தையும் அரசியல் சட்டத்திலேயே பாதுகாத்து இன அடையாளத்தோடு வாழ்வோம். ஆனால், எங்களைப் போலவே தமிழர்களும் இன அடையாளத்தோடு வாழ போராடக்கூடாது. வேண்டுமானால் இலங்கையர் என்ற அடையாளத்தோடு இங்கு உயிர் வாழ்ந்து கொள்ளலாம். ஏனென்றால் இலங்கை முழுவதுமே பௌத்த – – சிங்கள பூமி. மற்ற இனத்தினரும், மதத்தினரும் இங்கு அந்நியர்களே! அந்நியர்கள் இத்தீவின் சொந்த மக்களாகிய சிங்களருக்கு இணையாக உரிமைகள் கோரக்கூடாது.

இதுதானே அடிமட்டத்து சிங்களவர் முதல் ஆட்சி செய்யும் சிங்களவர் வரை கொண்டிருக்கும் சிந்தனை. சரி, இலங்கை முழுவதும் பௌத்த _ சிங்கள பூமி என்று யார் சொன்னது? எந்த வரலாறு சொல்கிறது? இலங்கைத் தீவில் உங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமைகள் ஈழத்தமிழருக்கும் உண்டு. நீங்கள் 2000 ஆண்டு இத்தீவில் வாழ்கிறீர்கள் என்றால், அவர்கள் 2000 ஆண்டுகளுக்கும் அதிகமாக இத்தீவில் வாழ்கிறார்கள். தொல்லியல் ஆய்வுகளிலிருந்தும் இலக்கிய சான்றுகளிலிருந்தும், அறிவியல் பூர்வமாக இந்த உண்மைகளை அறிந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா? நவீன அறிவியல் ஆதாரங்களான புகைப்படங்களையும், சானல்_4 காணொளிகளையுமே நம்ப மறுக்கும் உங்களிடம், ஆய்வுகளைக் கொண்டு, வரலாற்று உண்மைகளை விளக்குவது இமாலயக் கடினமே. எனவே, பெரும்பான்மை சிங்களவர்கள் நம்பக் கூடிய உங்கள் வேத நூலாகிய மகாவம்சத்தை எடுத்துக் கொள்வோம்.

இலங்கைத் தீவிற்கும், தமிழருக்கும் இடையிலான உறவு 2000-ஆண்டுகளுக்கும் பழமையானது என்பதை மகாவம்சமே சொல்லிவிடுகிறது. கி.மு.145 முதல் 101 வரை 44 ஆண்டுகாலம் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையில் நல்லாட்சி புரிந்தான். போரில் வெல்ல முடியாத 77 வயதான எல்லாளனை, துட்டகாமினி என்ற சிங்கள இளைஞன் தனியாளாக சண்டைக்கு அழைத்து வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினான். இது நீங்கள் அனைவரும் அறிந்த உங்கள் மகாவம்சத்தில் உள்ள செய்தி. எல்லாளனை அந்நூல் இந்தியாவிலிருந்து வந்த மன்னன் என்றே குறிப்பிடுகிறது. சரி அப்படியே இருக்கட்டும். எல்லாளன் எங்கிருந்து வந்த மன்னன் ஆனாலும் நிச்சயம் ஒரு பெரும் தமிழர் படையோடு வந்துதான் இலங்கையைக் கைப்பற்றி இருப்பான். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

மகாவம்சம் உங்கள் இனத்தோற்றத்தைப் பற்றி குறிப்பிடும்போது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கையின் பூர்வகுடிகளோடு கலந்து சிங்கள இனம் உருவானதாக குறிப்பிடுகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், நாடு கடத்தப்பட்டு வந்த விஜயனால் ஒரு சிங்கள இனம் பரிணமித்திருக்கும்போது, பெரும்படையோடு வந்து 44 ஆண்டுகள் நாடாண்ட எல்லாளனால் ஒரு தமிழ் இனம் பரிணமிக்காமல் போய்விடுமா? இதை ஒரு வாதத்திற்குத்தான் எழுதியிருக்கிறேனே தவிர, எல்லாளனால்தான் இலங்கையில் தமிழ்ச் சமூகம் உருவானது என்று கூற வரவில்லை. இலங்கையில் தமிழர்களுடனான சிங்களரின் பகை 2000 ஆண்டு பழமையானது என உங்கள் மகாவம்சம் கூறுவது உண்மை என்றால், இலங்கையில் தமிழரின் பூர்வீகம் 2000 ஆண்டு பழமையானது என்பதும் உண்மைதானே!

******

ஒரு கடிதத்திற்கான நாகரீகத்தையும் மீறி உங்களைக் கடுமையாக எழுதிவிட்டேனோ, என எண்ணி ஒருமுறை படித்துப் பார்க்கிறேன். இல்லை, உண்மைகள் கடுமையாக இருப்பதால் ஒரு பொய்மையற்ற கடிதம் கடுமையாக அமைந்துவிட்டது என உணர்கிறேன். உங்கள் பக்க நியாயங்களை இக்கடிதம் எடுத்துரைக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். பிறர் மண்ணை ஆக்கிரமிப்பவர்கள் எவராயினும், அவர்கள் பக்கம் என்ன நியாயத்தைத் தேடுவது என எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் தமிழர்களை விட சமூக ரீதியில் பின்தங்கியிருந்த உங்களின் முன்னேற்றங்களுக்கான நடவடிக்கைகள் மிகவும் நியாயமானவை. ஆனால், அவற்றை தமிழினத்தை அழித்து அடைவது என்ற உங்கள் வழிமுறைகள் நியாயமற்றவை.

எப்படியிருப்பினும் இக்கடிதம் உங்களுக்குக் கசப்பானதே. நோயைத் தீர்க்கும் மருந்தின் கசப்பாகவே நீங்கள் இதைக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு வகையில் இக்கடிதம் உங்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும். அதற்காக மனம் வருந்தி இக்கடிதத்தை முடிக்கிறேன்.

பத்தாயிரம் ஆண்டுகள் பின்னே போனால், நாமெல்லாம் சகோதர குடும்பங்கள்.

1 இலட்சம் ஆண்டுகள் பின்னே போனால் ஒரு தாய்க்குப் பிறந்த சகோதரர்கள். இதில் யாருக்கு யார் அந்நியர்கள்?

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *