கைலாயமே
களை கட்டியிருந்தது!
தேவலோகமே திரண்டு வந்திருந்தது!
முப்பத்து முக்கோடி
தேவர்களும் வந்து
முன்னிருக்கையில் அமர்ந்திருக்க…
நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள்,
கின்னர், கிம்புருடர்,
அட்டத்திக்குப் பாலகர்கள்
அனைவரும் வந்து ஆவலோடு காத்திருக்க…
சிவகணங்களெல்லாம்
சிரத்தையாய் காவல்காக்க…
தேவ கன்னியரெல்லாம்
தோகை மயிலாய் வளையவந்து
மலர்தூவி வரவேற்க…
நந்திதேவன் மத்தளம் தட்ட
நண்டுசிண்டுகள் துந்துபி முழங்க
நாரதமுனியும் காலத்தோடு வந்து
கலகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க
நடுவர்களாம்
நான்முகனும், விஷ்ணுவும்
சிறப்பு இருக்கையில்
செம்மாந்து அமர்ந்திருக்க…
அழுக்கில் பிறந்த
ஆனைமுகனும்
அசிங்கத்தில் பிறந்த
ஆறுமுகனும்
சபாஷ்! சரியான போட்டி!
எனக் கூடிக்கைத்தட்டி
கேலியாய்ச் சிரித்திருக்க…
அம்மையப்பன் நடனப்போட்டி
அமர்க்களமாய் தொடங்கியது!
எடுத்த எடுப்பிலேயே
அன்னை உமையவளும்
அங்க அசைவுகளில்
அழகினைக் கூட்டி
பரத முத்திரைகளை
பாவங்களில் காட்டி
பார்ப்போர் விழிகளில்
பரவசம் ஊட்டினாள்!
திரிபுரம் எரித்த
விரிசடை சிவனும்
சளைத்தவன் நானல்ல
சகியே உனக்கென
கற்ற வித்தைகளைக் காட்டி
கைலாயம் கிடுகிடுக்க
ஊழிக்காற்றாய் ஆடினான்!
உச்சக்கட்டத்தைத் தொட்டது நாட்டியப்போட்டி!
வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க முடியாமல்
நடுவர்கள் திகைத்திருக்க…
பார்ப்போர் மனதினில்
பரபரப்பு பற்றிக்கொள்ள…
சற்றும் எதிர்பாராத
திருப்பமாய்…
தேவலோகத்து வாலிபரெல்லாம்
தேன்குடத்து ஈக்களாய் மிதக்க…
தேவி உமையவள்
அச்சம், மடம்
நாணம், பயிர்ப்பெனும்
ஆணாதிக்கச் சுமைகளை
அடித்து நொறுக்கிவிட்டு
ஒற்றைக் காலை
சட்டெனத் தூக்கினாள்!
ஆண்மகன் தானென
ஆணவம் தலைக்கேற
பாவையர் கூட்டத்தை
ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே
பரமேஸ்வரன் தானும்
ஒற்றைக்காலை உயரே தூக்கினான்!
அக்கணமே அவனது சிசனம்
அவசரமாய் வெளியில் தலைகாட்ட..
விருட்டென்று காலை இறக்கி
வெட்கத்தால் தலைகுனிந்தான்!
அன்னை பார்வதிதேவி
அணிந்திருந்ததோ…
ஜீன்ஸ் பேண்ட்!
அப்பன் பரமேஸ்வரன்
அணிந்திருந்ததோ…
பஞ்சகச்சம்!
– காழி கு.நா. இராமண்ணா, சென்னை