ரிச்சர்டு டாக்கின்ஸ்
“இங்கிலாந்தின் தலைமை நாத்திகர்”
– சு. அறிவுக்கரசு
அமெரிக்காவுக்கு ஆப்பு
அமெரிக்காவில் புத்தியுள்ள வடிவமைப்பு (INTELLIGENT DESIGN) என்று அறிவியல் சொல்லித்தரப்படுகிறது. அதைப்பற்றிக் கூறும்போது, அந்தக் கருத்து அறிவியல்பூர்வமாக வைக்கப்படுபவை அல்ல; மத நம்பிக்கை அடிப்படையில் கூறப்படுபவையே என ஓங்கியடித்துக் கூறுகிறார். அதேபோல, இங்கிலாந்து நாட்டில் உள்ள அறிவியலின் உண்மை (TRUTH IN SCIENCE) எனும் அமைப்பு படைப்புக் கொள்கையை அரசுப் பள்ளிகளில் கற்றுத் தருகிறது. இதனை எதிர்த்து அதனைக் கல்வித் துறையின் ஊழல் என்று வருணிக்கிறார். அத்துடன் நிறுத்தாமல், தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளையின் சார்பில் அந்தப் பள்ளிகளுக்கு நூல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை அளித்து படைப்புக் கொள்கைக்கு மறுப்பான பரிணாமக் கொள்கையை விளக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
இந்தச் செயல்பாடுகளினால் அவர் வெளிப்படையான நாத்திகர், மதத்தை மறுப்பவர், முரட்டுத்தனமான குரல் எழுப்பும் பகுத்தறிவாளர் என்றெல்லாம் கூறப்படுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்தின் தலைமை நாத்திகர் என்றே தி ஃபைனான்சியல் டைம்ஸ் ஏடு (15.9.2010) வருணித்து எழுதியுள்ளது. நாத்திகத் தலைவர், நம் அறிவு ஆசான், தந்தை பெரியார் பிறந்தநாளில் இப்புகழ் மகுடம் அவருக்குச் சூட்டப்பட்டுள்ளது நமக்கும் மகிழ்வானது தானே! அவரேகூட, தம்மை முரட்டு நாத்திகர் எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுபவர். அறிவியலறிஞரா, நாத்திகரா என்ற கேள்விக்கு பெர்ட்ரண்டு ரசல் தம்மை பண்பான பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொண்டார்; நானோ அதற்கும் மேலே போய்ச் சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன் எனக் கூறி தம்மை நாத்திகர் என்றே அழைக்கலாம் என்றார். செக்யுலர் சங்கத்தின் கவுரவ நிருவாகியாகவும் பிரிட்டிஷ் மனிதநேயச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் சர்வதேச மனிதநேய அமைப்பின் விருது பெற்றவராகவும் உள்ளார். அமெரிக்க மனிதநேய அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் ஒப்பமிட்டு, அதனை வழிநடத்துபவராக 2003 முதல் இருந்து வருகிறார்.
பரிணாமக் கொள்கையின் விரிவுபடுத்திய அறிவுதான் நாத்திகம் என்றே அறுதியிட்டுக் கூறுகிறார். டார்வினின் கண்டுபிடிப்புகளுக்கு முன்பு வேண்டுமானால் ஒருவர், உயிர்களின் அமைப்பு பற்றி எதுவும் அறியாமல் அனைத்தும் ஆண்டவனின் படைப்பு எனக் கூறலாம்; ஆனால், டார்வின் ஆய்வு முடிவுகளின்படி, சிந்திக்கும் திறன்படைத்த ஒவ்வொருவரையும் நாத்திகராகவே வளர்த்துவிட்டார் எனலாம் என்று தமது பார்வையற்ற கடிகாரம் செய்பவர் (BLIND WATCH MAKER) என்ற நூலில் எழுதியுள்ளார். கிறித்துவமானாலும் இசுலாம் ஆனாலும் அம்மதங்களின் தீவிர வாதங்களை வெறுப்பவர் டாகின்ஸ்.
மதக் கொடுமைகள் பற்றி
2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவின் இரட்டைக் கட்டடங்களை விமானம் மோதி இடித்துத் தள்ளிய சம்பவத்திற்குப்பின் அவர் கூறியது இதுதான்; தீங்கற்ற மடத்தனம்தான் மதம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருந்தார்கள். மனநிம்மதி பெறுவதற்கு ஊன்றுகோல் போல மதத்தைக் கருதிக் கொண்டிருந்தார்கள் என்பதால் விட்டுவைத்தோம். ஆனால், செப்டம்பர் 11 அதை மாற்றிவிட்டது, மத நம்பிக்கை தீதற்ற மடத்தனமல்ல; அபாயமான மடத்தனம் என்பது உறுதியாகிவிட்டது. தங்களைத் தாங்களே கொல்லக்கூடிய அளவுக்கான மன தைரியத்தை மதம் தந்துள்ளது. அதன் காரணமாக மற்றவர்களையும் கொல்லக்கூடிய துணிச்சலை மதம் தந்துவிட்டது. மாற்றுக் கருத்துடைய மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய அளவுக்கு மனித மனத்தில் வெறுப்பையும் குரோதத்தையும் மதம் ஏற்படுத்திவிட்டது. மதத்திற்கு இதுவரை நாம் அளித்துவந்த மரியாதைக்கு அது தகுதியில்லை. மரியாதை தருவதை நிறுத்திக் கொள்வோம் என்று பிசிறில்லாமல் கூறிவிட்டார்.
மதக் கருத்துகளையும் அவற்றின் நடைமுறைகளையும் பற்றி மனதின் விஷக் கிருமிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடும்போது, மத நம்பிக்கையற்றவர்கட்கு அளிக்கப்படவிருக்கும் நரக வேதனைகளையும் தண்டனைகளையும் பற்றி எழுதுகிறார். எந்தவித ஆதாரமுமின்றி இப்படியெல்லாம் எழுதப்பட்டிருப்பவை, உலகின் மாபெரும் கொடுமை என்று குறிப்பிட்டுள்ளார். இந்து மதத்தின் கருடபுராணத்தலும், கிறித்துவத்தின் பைபிளிலும், இசுலாத்தின் குரானிலும் எழுதப்பட்டுள்ள தண்டனை முறைகளுக்கு என்ன ஆதாரம்? எவன் பார்த்தான்? பார்த்துவந்து எழுதினான்? அப்பாவி மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்களாக அவை பயன்படுத்தப்படுகின்றன என்பது அல்லாமல் வேறென்ன?
உலகத்தில் நிலவும் கொடுமைகளுக்கு எது காரணம் என்கிற கேள்வி கிறித்துவுக்கு 400 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டில் கேட்கப்பட்டது. எபிகியூரஸ் என்பார் கொடுமையின் தோற்றுவாய் எது என்றே (ORIGIN OF EVIL) கேட்டார். பதில் கிடையாது. அனைத்துக்கும் ஆண்டவன் காரணம் என்றால் அதற்கும் ஆண்டவன்தானே பொறுப்பேற்க வேண்டும்? ஆம் என்று கூற மதவாதிகள் இன்றுவரை தயாராக இல்லை. ரிச்சர்டு டாகின்ஸ் எல்லாக் கொடுமைகளின் வேர் (THE ROOT OF ALL EVIL) என்று ஆவணப்படம் ஒன்றினைத் தயாரித்தார். இரண்டுபாகப் படம். தாம் கண்டவை, கேட்டவை, அறிந்தவை அனைத்தையும் ஆவணமாக்கி மதம் கெட்ட விளைவை, கெடுதலை மனித சமுதாயத்திற்குச் செய்துள்ளது என்பதை நிறுவியுள்ளார். மத நம்பிக்கையாளர்களால் நாள்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கு அறைகூவல் விடும் ஆதாரப்பூர்வப் படமாக இது அமைந்துள்ளது.
செயல் வீரர்
உலக நாத்திகர்களெல்லாரும் ஒரு குடையின்கீழ் கூடித் தங்கள் கொள்கைகளைப் பரப்பிடவேண்டும் என்கிற நோக்கத்தில் 2007 இல் OUT CAMPAIGN ஆரம்பித்துள்ளார். ஆண் உறவுக்காரர்கள் வெளிப்படையாக வெளியே வந்து, தங்களை அடையாளங் காட்டித் தங்கள் உறவுகளை வெளிப்படுத்தி உரிமைகளுக்காகப் போராடியதைப் பார்த்த உத்வேகத்தில் உதயமானது இந்த அமைப்பு. நாத்திகத்தின் நன்மைகளைப் பகிரங்கப்படுத்தும் போதுதான் மதவாதிகளின் மயக்கும் பிரச்சாரம் மங்கத் தொடங்கும் என்பது இவரின் கணக்கு, கணிப்பு. 2008 ஆம் ஆண்டில் துருக்கி நாட்டின் நீதிமன்றம் அவரது இணைய தளத்தை அந்நாட்டில் யாரும் பார்க்கக் கூடாது, படிக்கக் கூடாது எனத் தடை செய்துவிட்டது. அல்லாதான் உலகையும் உயிர்களையும் படைத்தது எனும் நம்பிக்கை கொண்ட அட்னன் ஒக்டர் என்பவர் போட்ட வழக்கின் அடிப்படையில் இந்தத் தடை. அதுபோலவே, ஆஸ்திரேலியாவில் 2010 இல் மெல்போர்ன் நகரில் நடந்த உலக நாத்திகர் மாநாட்டில்கூட அவர் விமர்சிக்கப்பட்டார் என்பது வியப்பைத் தரும். போப் பயஸ் XII என்பவர் இரண்டாம் உலகப் போரின்போது வாழ்ந்தவர். யூதர்களை இட்லர் கொன்று குவித்த கொடுமை நிகழ்த்தப்பட்டபோது கிறித்துவரான அவரை போப் பன்னிரெண்டாம் பயஸ் கண்டிக்க வில்லை. இதற்காக அவரை நாஜி போப் என்று வருணித்திருந்தார் டாகின்ஸ். இதை ஆஸ்திரேலியாவில் விமர்சனம் செய்து கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட விமர்சனங்களை அவர் ஏராளம் எதிர் கொண்டு வருகிறார். என்றாலும் சோர்வடையாதவர்.
கடவுள் மறுப்புப் பேருந்து
பிரிட்டனில் தொலைக்காட்சியில் நகைச்சுவை எழுத்தாளராக உள்ள அரியன் ஷெரின் எனும் பெண் லண்டன் நகரப் பேருந்துகளில் கடவுள் அநேகமாக இல்லை (THERE’S PROBABLY NO GOD) என விளம்பர வாசகங்கள் எழுதி உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய செய்தி விடுதலை, உண்மை படிப்போருக்குத் தெரிந்ததே. பிரிட்டிஷ் மனிதநேயச் சங்கம் இதற்கு ஆதரவளித்து நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இதில் ரிச்சர்டு டாகின்ஸ் முழுமூச்சாக ஈடுபட்டு 5,500 பவுன்டு தொகை வசூலிக்க உதவினார். ஆனால், ஒருலட்சம் பவுண்டு தொகை வசூலானது. நான்கே நாள்களில் தொகை வசூலானதுதான் சிறப்பு. இந்த வாசகங்கள் படிப்போர் மனதில் கடவுள் உண்டா இல்லையா எனும் சிந்தனையை உறுதியாக உருவாக்கும். இப்படிச் சிந்திப்பதே மதத்திற்கும் மதவாதிகளுக்கும் வெறுப்பை ஏற்படுத்தும் செயல்தானே என்று மிகப் பெருமையாகப் பேசுகிறார் டாகின்ஸ்.
மதங்களுக்கு எதிராகப் போராடி வரும் கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் என்பாருடன் சேர்ந்து 2010 இல் தற்போதைய போப் கைது செய்யப்பட்டு மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் எனும் இயக்கம் நடத்தினார். 1998 இல் சிலி நாட்டு சர்வாதிகாரி அகஸ்டோபிரைகெட், இங்கிலாந்து நாட்டுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, அதே சட்டப் பிரிவுகளின்படி போப் பெனடிக்ட் XVI கைது செய்யப்படவேண்டும் என்று குரல் எழுப்பினார். போப் பெனடிக்ட் இங்கிலாந்துக்கு வருகை தந்ததை எதிர்த்துக் கையெழுத்து இயக்கமும் நடத்தினார்.
– தொடரும்