பி.சிதம்பரம் பிள்ளை
பிராமணர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைவதாலும், அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் ஜன சமூகத்துக்கும் கேடு விளையுமென ஆகமங்கள் வெளிப்படையாகப் பிராமணர்களைத் தடுத்திருந்த போதிலும், நாம் இப்பொழுது என்ன காண்கின்றோம்?
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் குறித்திருக்கின்றார்.
“ஒரு நூற்றாண்டுக்கு முன் வரையிலும் பழனிக்கோவில் பூசாரிகூட பார்ப்பன அல்லாதானாகவேயிருந்தான்’’ என்று ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் அவர்கள் குறிப்பிட்டார். இப்பொழுது, அதாவது அந்தக் கோவில் பிரிட்டிஷாரிடமிருந்து பிராமண ஆதிக்கத்துக்கு மாறிய பிற்பாடு, அங்குள்ள பூசாரி ஒரு பிராமணன்தான் என்பது இதனின்றும் வெளிப்படையாகின்றது.
“உதாரணமாக திருச்செந்தூரில் சுப்பிரமணியக் கடவுளுக்குப் பூசை செய்ய ஆதி சைவப் பூசாரிகளுக்குப் பதிலாக ஏற்படுத்தப்-பட்ட மாத்துவ அல்லது ஸ்மார்த்தப் பூசாரி-களுக்கு, அந்தக் கோவில் வழிபாட்டுக்காக ஆதிகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட குமார மந்திரம் என்ற ஆகமத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
’’ “கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து பூசை செய்யப் பல இடங்களிலும் பல தடவைகளில் ஸ்ரீ சங்கராச்சாரியார் முயற்சித்த-துண்டு.’’ திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ய “லோககுரு’’வான சங்கராச்-சாரியாருக்குக் கூடச் சில கட்டுப்பாடுகளுண்டு என்பதாகத் திருவிதாங்கூர் அரசாங்கச் சரித்திரக் குறிப்பில் (Travancore State Manual) குறிக்கப்பட்டிருக்கிறது. “ஸ்ரீ சங்கராச்சாரியார் தீட்சை பெறாதவரான படியால், ஆகமவிதிப்-படி அவர் கர்ப்பக்கிரகத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.’’ “ஆதிசங்கரரின் விக்கிரகத்தை சைவக் கோவில்களில் பிரதிஷ்டை செய்ய பலத்த முயற்சி செய்யப்பட்டது; இன்னும் செய்யப்-பட்டு வருகிறது.’’ சில சந்தர்ப்பங்களில் பிராமணர்களால் தூண்டப்பட்டு சங்கராச்-சாரியார் “கோவிலுக்குள்ளேகூட தங்குவ-துண்டு.’’ இவையெல்லாம் ஆகம சாஸ்திரங்-களுக்கு முற்றும் விரோதமானவையாகும்.
சில பொதுக் கோவில்களில் “சூத்திரப் பூசாரிகளை, தர்மகர்த்தாக்கள் தமது அறியாமையால் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் பிராமணர்களை நியமித்திருக்-கின்றார்கள். இது காரணத்தால் இந்த ஆலயங்களில் ஆகம முறைப்படி வழிபாடு நடத்தப்படவில்லை.’’
ஆகமங்கள் பூராவாகக் கைவிடப்பட்டு, ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்ட பிராமணியக் கிரியைகள் மட்டும் நடத்தப்-படுவதற்கு எடுத்துக்காட்டாக இன்னும் பல உதாரணங்களைக் காண்பிக்கலாம். பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றின பிற்பாடு, அவர்களுடைய ஆதரவில் தென்னிந்திய இந்து சமூகத்தில் பிராமணர்கள் ஆதிக்கமும், பதவியும் பெற்ற காலத்தில் இது ஏற்பட்டது. கோவில் பூசாரி, கமிட்டியார், தர்மகர்த்தாக்கள் இவர்கள் அனைவரும் ஆகமத்தைப் பற்றிச் சிறிதேனும் தெரியா திருந்ததும் தங்களது ஸ்மிருதிகளைப் பரப்ப வேண்டுமென்று அக்கறை கொண்டிருந்த பார்ப்பனரது ஆதிக்கமும் இவ்வாறு ஏற்படக் காரணமாயின.
இன்று பொதுக் கோவில்களில் நடைபெற்று வரும் கைங்கரியங்களெல்லாம் ஆகமப்படியோ, பழக்க வழக்கத்தின்படியோ நடக்கவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கோவில்-களெல்லாம் எந்த விதிகளின்படி ஸ்தாபிக்கப்-பட்டனவோ அந்த விதிகளையே புறக்கணித்து-விட்டன. இன்றைய ஆலய வழிபாட்டு முறை சகல மத விதிகளுக்கும் எதிரிடையானது. ஆகையினால், ஆலய வழிபாட்டினின்றும் யாரையுந் தடுப்பதானது மதத்துக்கு மாறுபாடானது என்பது மட்டுமன்றி, கோவிலின் ஸ்தாபனத்துக்கே எதிரிடையானது-மாகும். ஏனெனில், நாம் ஏற்கெனவே கண்டபடி தென்னிந்திய ஆலயங்கள் அனுசரிக்கும் ஆகம தத்துவப்படி தீண்டத்தக்க அல்லது தீண்டத்தகாத எந்த இந்துவையும் ஆலயத்தினுள் பிரவேசிக்கவோ, வழிபடவோ தடுக்க இடமில்லை.
ஆகவே, தற்காலத்தில் சில வகுப்பாருக்கு ஆலயப் பிரவேசம் மறுக்கப்படுவதற்கு மத சம்பந்தமான ஆதரவு ஒன்றுமேயில்லை யென்று நாம் திட்டமாக அறிகிறோம். பின், இந்தத் தடை ஏற்படக் காரணமென்ன?