மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
கடந்த உண்மை தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் பெரியாரின் பொங்கல் வாழ்த்து மற்றும் எனது பொங்கல் பரிசு பகுதிகளும், இழி மொழி எது?, தமிழின் பிள்ளைகள், பெரியாரும் தமிழ் இலக்கியங்களும், அறிவியலும், மூடநம்பிக்கைகளும், சுயமரியாதைத் திருமணம், பாவானந்தியின் நெசந்தானுங்க, தமிழ் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது?, தமிழ்ப் புத்தாண்டு – சங்க இலக்கியங்களும், அறிஞர்களும் சொல்வதென்ன?, சனீஸ்வர சக்தி – சயிண்டிபிக் பீலா ஆகிய அனைத்துப் பகுதிகளும் தமிழ் மொழி, தமிழனின் பண்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்ள உதவின.
இன்றைய தமிழ் மாதப் பெயர்கள், வருடத்தின் பெயர்கள் எல்லாம் தமிழ்ச் சொற்களா? என்று எனக்குள் இருந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக இருந்தன.
ஈழத்து சொல்லிசைக் கலைஞர் சுஜீத்ஜீ, பெரியார் என்றால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அவர் ஒரு நாத்திகவாதி அவ்வளவுதான், எனக் குறிப்பிட்டது போல்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று சொல்பவர் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். தத்துவயியல் பட்டதாரியான எனக்கு ஒரு வகுப்பில்கூட தந்தை பெரியார் கடவுள், மதம், ஜாதி, மனிதன், சமூகம், பார்ப்பனர்கள் பற்றி கூறிய கருத்துகளைப் படித்ததாக எனது நினைவில் இல்லை. அவர் ஆற்றிய சமூகத் தொண்டைக் கூட சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை.
தந்தை பெரியாரின் சமூகத் தொண்டும், கடவுள், மதம், ஜாதி, மனிதன், சமூகம், பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்துகளும் ஒரு மனிதனைச் சென்றடைந்தால் அன்றே அவன் பகுத்தறிவாளி ஆகிவிடுவான்.
– சி.ஜான் பெனடிக்ட், திருப்பரங்குன்றம்