தலையங்கம் : அயல்நாட்டில் பணிபுரியும் இடத்தில் ஜாதி ஆதிக்கம் செய்யும் பார்ப்பனர்கள்!

2022 செப்டம்பர் 1-15-2022

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், கணினியின் பயன்பாடும், மின்னணு யுகத்தின் அதிவேக வளர்ச்சியும் உலகில் புதிய தொழில்துறை அத்தியாயத்தைப் படைத்து வருகின்றன.
இத்துறையில் பொறியியல் _ மின்னணுவியலில் படித்த நம் நாட்டு இளைஞர்களின் நேர்மையான உழைப்புக்கு உலகளாவிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தொழில்துறையில் நல்ல தேவை (Demand) ஏற்பட்டு, பலரும் அந்நாடுகளில் தங்கி தொழில் புரியும் வாய்ப்பை _ குடியுரிமை பெறாவிட்டாலும்கூட பெற்றுள்ளனர்!
இது அந்த உள்நாட்டுவாசிகளுக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் தந்தாலும், இவர்கள் அளவுக்குக் கடுமையாக உழைத்துக் கடமையாற்றுவதில் அவர்களால் ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், வேறு வழியின்றி நம் இளைஞர்களைப் புறந்தள்ள முடியாத நிலையே உள்ளது.

மனுதர்மத்தை உடைத்ததால் ஏற்பட்ட விளைவு!
இப்படி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான பேர் சென்றதற்கு அடிப்படை மூல காரணம் மனுதர்மக் கலாச்சாரத் திணிப்பேயாகும். உயர்ஜாதியினர் மட்டுமே படிக்க வேண்டும்; மற்ற ‘‘கீழ்ஜாதியினரான சூத்திர, பஞ்சமர்’’களான இளைஞர்கள் படிக்க முடியாமலிருந்த நிலையை எதிர்த்து, சமூகநீதி இயக்கங்களை வடக்கே ஜோதிபாபூலே, சாகு மகராஜ், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் _ தெற்கே தந்தை பெரியார், நாராயணகுரு போன்ற சமூகநீதிப் போராளிகளால் நடத்தப்பட்ட போராட்டங்களால் மனுதர்ம தடைச் சுவர் உடைந்து, கல்வி நீரோடை பாயத் தொடங்கியது.

அக்கிரகார ஆதிக்கம் உடைந்தது!
அக்கிரகாரத்தின் _ பார்ப்பனர்களின் தனி உடைமையாகவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கல்வி, உத்தியோக உரிமை, 20, 21ஆம் நூற்றாண்டுகளில் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொது உடைமை, பொது உரிமையாக ஆயிற்று!
அதனால்தான் கல்வியைக் கற்று, வெளிநாட்டில் தொழில்நுட்பத் துறையில் ‘இந்தியர்கள்’ நுழைந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்களுக்குள்ள தந்திர உபாயங்கள் மூலமும், ஆரிய பார்ப்பனர்கள் படிப்பில் முந்திய பந்தியில் அமர்ந்து பயன்பெற்ற காரணத்தாலும் அவர்களில் பலர் அங்கும் முந்திக் கொண்டனர்!
ஒடுக்கப்பட்டோர், ‘சூத்திர _ பஞ்சம’ தலித்துகளான நமது இளைஞர்கள் அந்தப் பந்தயத்தில் இப்போது பங்கேற்று, அவர்களைத் தாண்டும் அறிவு ஆற்றலும், தகுதியும், திறமையும் பெற்று (பெரிய தனியார் துறையான அய்.டி. நிறுவனங்களில் நுழைந்து பணியாற்றி) முன்னேறி வரும் நிலை உள்ளது.
இதைத் தடுக்க, அங்கே முன்னே சென்று அந்நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் மேலாளர்களாக உள்ள பார்ப்பனர்கள் அடுத்து பதவி உயர்வு பெற்று, அந்நிறுவனங்களின் நிருவாகத்தில் மேலே வரவிடாமல் நமது இளைஞர்களை அழுத்தி வைக்க ‘அவாளுக்கே’ உரிய ‘சூழ்ச்சி’ வலைகளையும், உள்ளடி வேலைகளையும் செய்து தடுத்து வருகின்றனர்!

வெளிநாடுகளிலும் பார்ப்பனர்களின் மேலாண்மையும் – விஷமமும்!
இங்கிருந்து கடலைத் தாண்டிச் செல்லும்-போது, நடுக்கடலில் தூக்கி எறிந்துவிட்டுப் போக வேண்டிய ஜாதி _ வருண தர்ம வெறியைப் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு போய், அதைப் பயன்படுத்தி, நமது இளைஞர்-களை _ தலித் போன்ற ஒடுக்கப்பட்டோரை உயர விடாமலும், உள்ளே விடாமலும் தங்களது ‘உத்திகள்’ மூலம் தடுப்பணை கட்டி வருவதை எதிர்த்த குரல், குமுறலாகி, குமுறல் வழக்காகி சில நிறுவனங்களில் வழக்குகள்கூட நடந்து, கலிஃபோர்னியா மாநிலத்தில், இத்தகைய தொழில்நுட்ப நிறுவனங்களில் இப்படி ஜாதிப் பாகுபாடு (ஞிவீsநீக்ஷீவீனீவீஸீணீtவீஷீஸீ) கொடுமையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது _ அது சட்ட விரோதம் என்று கூறி, அது பல முன்னணி அய்.டி., தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இது ஒரு பெரிய பிரச்சினையாகி விடுமோ என்றும், அது உற்பத்தித் தொழில் திறனை வெகுவாகப் பாதிப்பதுடன் தங்கள் நிறுவனத்திற்கும் அவப்பெயர் உருவாக்கிவிடக் காரணமாகி விடக் கூடுமோ என்பதால், அந்த நிறுவனங்கள், இந்தியாவின் ஜாதி, வருண தர்ம முறைப்பற்றி (அதற்குமுன் அவர்களுக்கு _ பல வெளி-நாட்டவருக்கு ஜாதி _ தீண்டாமை புரிவதே இல்லை _ பிறவி பேதக் கொடுமையின் வீச்சு அவர்கள் அறியாததால்) இப்போது ‘ஆப்பிள்’ போன்ற நம்பர் ஒன் நிறுவனத்தின் முக்கிய தலைமை அதிகாரிகள், ஜாதிபற்றித் தெரிந்து, (Discrimination) பாடம் படித்து, அந்தக் கிருமியின் தாக்கத்தைத் தடுக்க கவலையுடன் முயற்சி எடுக்கின்றனராம்.
என்னே வேதனை!
எவ்வளவு வெட்கக்கேடு!
இதுதான் இந்தியத் திருநாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் பெருமையா?

‘சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?’ – தந்தை பெரியாரின் கேள்வி!
இதைத்தான் தந்தை பெரியார் 1947_லே ‘‘சுதந்திரம்’’, ‘‘சுதந்திரம்’’ என்று துள்ளிக் கூத்தாடியவர்களிடம்,
‘‘சுதந்திர நாட்டில், ‘‘ஜாதி’’, ‘‘பள்ளன், பறையன், சூத்திரன், பஞ்சமன்’’; ‘‘பார்ப்பான் _ பிராமணன்’’ என்றும், உயர்ஜாதி _ கீழ்ஜாதி, தொடக்கூடியவன் _ தொடக்கூடாத வன், படிக்க உரிமை பெற்றவன் _ படிக்க உரிமை-யற்றவன் என்றும் பிறவி பேதம் இருக்கலாமா?’’ என்று ஒரு நெற்றியடி கேள்வி கேட்டார்!
இன்றுவரை அதற்குப் பதில் உண்டா?

ஒரே நாடு, ஒரே மதம் என்போர் ஒரே ஜாதி என்று சட்டம் செய்ய மறுப்பது ஏன்?
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். என்ற ஏவுகணையின் பா.ஜ.க. ஆட்சி _ காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதையெல்லாம் நாங்கள் செய்வோம் என்று தம்பட்டம் தட்டி, பொய் வாக்குறுதி களை வாக்காளர்களிடையே வாரி விட்டு, வளர்ச்சி முகமூடியுடன் வந்துள்ள ஆட்சி,
ஒரே நாடு _ ஒரே மதம் _ ஒரே மொழி _ ஒரே பண்பாடு _ ஒரே தேர்தல் _ ஒரே ரேஷன் கார்டு _ ஒரே தேர்வு _ என்று ‘‘ஒரே, ஒரே, ஒரே’’ என்று முழங்குகின்றதே, அதில் ஏன் ‘ஒரே ஜாதி மக்களிடையே’ என்று சட்டம் மூலம் பிரகடனம் செய்து, சமத்துவத்தின் அரசமைப்புச் சட்ட கோட்பாட்டைச் செய்ய மறுக்கின்றனர்?

யோசியுங்கள் இளைஞர்களே!
வெளிநாட்டிலும் நம் நாட்டு வருண தர்மத்தின் _ சனாதன தர்ம கொடுமையின் சாயம் வெளுக்கிறதே _ இதற்குப் பிறகாவது ஜாதியை _ தீண்டாமையை நடை முறையில் ஒழித்து, அனைவரையும் ‘‘மனிதர்களாக’’ _ சமத்துவ மனிதர்களாக, சகோதரத்துவத்துடன் நடத்தும் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டாமா?
மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாக்குவதன் மூலம் செய்துவிட முடியுமா?
இதைவிட முரண்பட்ட ஏமாற்று வித்தை வேறு உண்டா?
யோசியுங்கள், இளைஞர்களே!

– கி.வீரமணி,
ஆசிரியர்