கே: ‘திருவரங்கம் கோயில் முன் பெரியார் சிலை இருப்பது ஆத்திகர்களைப் புண்படுத்தும்’ என்ற கருத்துப் பற்றி?
– ம.கோபாலகிருஷ்ணன், தாம்பரம்
ப: யாரோ ஒரு அனாமதேயம், விளம்பரம் தேடிட இப்போது உளறியுள்ளது; உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் படையெடுத்து தோற்றோடிய பழைய செய்தி, இந்த உளறுவாயனுக்கு ‘ஒளிந்து திரியும் வீராதி வீரனுக்கு’ இது தெரியாது போலும்! சிலையே காவியை மிரட்டுகிறது!
கே: ‘இலவசத் திட்டங்கள் கூடாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசும், பி.ஜே.பி. கட்சியினரும் கூறுவது ஏற்புடையதா?
– கி.மாசிலாமணி, செங்கை
ப: அப்படிப் பேசிடும் பிரதமர் விவசாயி-களுக்கு 6000 கோடியை முன்பு மூன்று தவணைகளில் இலவசமாகக் கொடுத்-தேன் என்றும், தடுப்பூசி இலவசம் என்றும் அறிவித்தாரே!
பசி போக்கிடவும், கல்வி பரப்பவும், வாழ்வாதாரத்திற்கும் அது தேவை! தேவை! இது கார்ப்பரேட் கூட்டாளி-களுக்குத் தெரியாது!
கே: பிகாரில் நிதிஷ்குமாரின் அதிரடி முடிவு போல உ.பி. போன்ற மாநிலங்களிலும் நடக்க என்ன செய்ய வேண்டும்?
– வே.ஆறுமுகம், திருவண்ணாமலை
ப: நிதிஷ்குமார் _ தேஜஸ்வி போன்ற மதியூகத் தலைவர்கள் கிடைக்க வேண்டும்!
கே: பொய்யாகக் கூறப்பட்ட 2ஜி ஊழலை ஊதிப் பெருக்கி அரசியல் ஆதாயம் அடைய முடிந்தபோது, 5ஜி ஏலத்தில் ஒன்றிய அரசின் ஊழலை நாடு தழுவிய அளவில் எதிர்த்து, பெரும் போராட்டமாக வடிவமைத்தால் பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவுகட்ட முடியாதா?
– கோ. செல்வராஜ், வேலூர்
ப: நிச்சயம். இந்த 5ஜி ஏலம் விடப்பட்ட முறை, அம்பானிகளுக்குச் சலுகை காட்டியது போன்ற நிலையாகும். நாடு தழுவிய பிரச்சாரம் மூலம் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டியது முக்கியம்.
கே: ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்று இன்றோடு (10.08.2022) 60 ஆண்டுகள்! உங்கள் உணர்வுகளைப் பகிர்வீர்களா?
– பெ.கதிரவன், கரூர்
ப: வாசக நேயர்களான உங்களைப் போன்றோர் தரும் பேராதரவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது; பெரியார் வைத்த நம்பிக்கை ஒருபோதும் எதிலும் பொய்யாகாது!
கே: திராவிட மொழி பேசும் மாநிலங்களில், கருநாடகம் மட்டும் காவிப் பிடியுள் சிக்கியுள்ளதை பிகார் பாணியில் மீட்க உங்களைப் போன்ற தலைவர்கள் உடனடி முயற்சி மேற்கொள்வீர்களா? நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உதவுமல்லவா?
– த.கன்னித்தாய், அரக்கோணம்
ப: அண்மையில் கருநாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்குப் போனேன். அங்கே என்னைச் சந்தித்த பலதரப்பட்டோரும், அங்கே ஆட்சி மாற்றம் தேர்தலின்போது நிச்சயம் வர ஏராளமான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றும், அங்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி சித்தராமையா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் நிச்சயம் ஏற்பட்டு, புதுவெளிச்சம் பாய்ந்து, காவி இருட்டை விரட்டுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்கள். மகிழ்ச்சிதானே!
கே: ஆர்.எஸ்.எஸ். ஊடுருவும் துறைகளை, இடங்களை கவனமுடன் கண்காணிக்கவும், அதைத் தடுக்கவும் அரசுக்கு அறிவுறுத்து வீர்களா?
– ச.வெற்றி, மதுரை
ப: செய்து வருகிறோம். அதிவேகத்தில் பரப்பப்படும் “பொய் உற்பத்தி, போலிச் செய்திகள் தயாரிப்பு சமூக ஊடகங்கள் மூலம் அதிகம் செய்யப்படுவதைத் தடுக்கும் அவசரத் திட்டம் தேவை’’ என்பதை சகோதரர் தொல்.திருமாவளவனும் நானும் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், அனைத்துக் கட்சி தலைவர்களும் அறியும் வகையில் பேசியுள்ளோம்.
கே: பி.எஸ்.என்.எல்., மின்சாரவாரியம் போன்ற ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் பொதுத் துறைகளையெல்லாம் முடமாக்கி, அம்பானி, அதானிகளையே ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிக்கும் பா.ஜ.க. ஒன்றிய அரசின் செயல் இடஒதுக்கீட்டையே ஒழிக்கும் சதியல்லவா?
– மோ.நெடுஞ்செழியன், தூத்துக்குடி
ப: ஆம்! காவி _ கார்ப்பரேட் கூட்டாட்சியே இப்போது நடை-பெறுகிறது. அதில் இதுதானே முக்கிய அம்சம். இரயில்கள்கூட விற்பனைப் பொருளாக ஆகிவிட்டனவே!