– அப்ரேனிபுரம் பால்ராசய்யா
அன்னூர் அரசுப் பள்ளிக்கூடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் வசந்த குமார். சினிமா தியேட்டரில் பலநாட்கள் ஓடிய திரைப்படம் இன்றே கடைசி என்பதைப்போல அன்னூர் அரசுப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வருவது இன்றே கடைசி என்ற முடிவோடு புத்தகப்பையை அலட்சியமாகப் பார்த்தான்.
கணக்கு வாத்தியார் தம்பிதுரை இனி வீட்டுப்பாடம் ஏன் பண்ணிக்கிட்டு வரலையின்னு ஸ்கேலால் மணிக்கட்டில் அடிக்க மாட்டார். சந்தோஷம் டீச்சர் டிக்டேசன் போட்டு தவறாக எழுதும் வார்த்தைகளுக்கு நூறு தடவை எழுதச்செய்யும் தண்டனை வேலை இனி இல்லை என்ற குதூகலத்தோடு வீட்டுக்கு நடையைக் கட்டினான் வசந்த குமார்.
“டேய், ஏன்டா பள்ளிக்கொடம் போகாம திரும்பியாற! தெருவில் அறுந்துபோன செருப்புகளைத் தைத்துக் கொடுக்கக் காத்துக்கொண்டிருந்த கோரச்சாமி ஆச்சரியமாய்க் கேட்டான்.
“இனிமே நான் பள்ளிக்கூடம் போறதில்ல சித்தப்பு, முடிவு பண்ணிட்டேன், இதா இங்ஙனெ ஒன் பக்கத்துலேயே நானும் செருப்புத் தைச்சிப் பொழப்ப ஓட்டலாமுன்னு இருக்கேன்!.
“ஏன்டா, பள்ளிக்கொடத்துல ஏதாச்சும் பிரச்சினையாடா? பதட்டமாய்க் கேட்டான் கோரச்சாமி.
“அப்பிடி ஒன்னும் இல்ல சித்தப்பு, நமக்குப் படிப்பு ஏறமாட்டேங்குது, அந்தக் கணக்கு வாத்தியாருல்ல, எப்பப்பாரு வீட்டுப்பாடம் ஏன் செய்யலையின்னு மணிக்கட்டுலேயே அடிக்கிறார், அந்த சந்தோஷம் வாத்திச்சி நூறு தடவ எழுதிட்டு வான்னு தண்டனை கொடுத்து என் உயிர வாங்கறாங்க, நமக்குப் பள்ளிக்கூடம் ஒத்துவராது சித்தப்பு! தீர்மானமாய்ச் சொன்ன வசந்த குமாரை ஏற இறங்கப் பார்த்தான் கோரச்சாமி.
“ஏன்டா, நம்ம ஜாதியில நீ ஒரு பயதான் பத்தாம் கிளாஸ் வர போய் படிக்குறன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தா இப்பிடி பாதியுல பள்ளிக்கொடம் போவமாட்டேன்னு வந்து நிக்கறியே, அப்பன் இல்லாத உன் குடும்பத்த நீ படிச்சி உத்யோகம் வாங்கி நீதான் உன் ஆத்தாளையும் அக்காவையும் காப்பாத்தணும், போப்பா, பள்ளிக்கொடம் போயி நாலு எழுத்துப் படிச்சி வாழ்க்கையில முன்னுக்கு வர்ற வழியப்பாரு! கோரச்சாமி தனக்குத் தெரிந்த புத்திமதியச் சொல்லிப் பார்த்தான். அதற்கு அவன் மசியாமல் கால்போன போக்கிலே நடந்தான்.
பக்கத்திலிருந்த சினிமா தியேட்டரில் மாட்டினி சினிமா பார்த்துவிட்டு சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தான் வசந்த குமார். வீட்டில் அவன் அக்காவிற்கு நாளை சீர் நடக்கும் விஷேசம் நடப்பதால் அவன் பள்ளிக்கூடம் ஏன் போகவில்லையென்று யாரும் கேட்கவில்லை.
“டேய் வசந்த்து, குழாயில தண்ணி வரல, நாளைக்கு நம்ம வீட்டுல சீரு நடக்குதுல்ல, பக்கத்துத் தெருவுக்குப் போய் ரெண்டு கொடம் தண்ணி பிடிச்சுட்டு வாடா! அவனது தாயார் பாக்யம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இன்று பள்ளிக்கூடம் போகாமல் சினிமாவுக்குப் போன விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை, பேசாமல் அம்மா சொல்வதைக் கேட்போம் என்று குடத்தைத் தூக்கிக்கொண்டு பக்கத்துத் தெருவுக்கு நடந்தான் வசந்த குமார்.
இரவு எட்டிப் பார்த்து வெகுநேரமாகியிருந்தது. தெருவெங்கும் காற்றின் இரைச்சல் நிறைந்திருந்தது. காற்றை எதிர்கொண்டு அடர்ந்த இருட்டில் நடந்தான் வசந்த குமார். பொதுக் குழாயடி, மின்கம்பத்துக்கு அருகே வெளிச்சங்களுக்கிடையில் தெரிந்தது.
சற்று நேரத்துக்கு முன்பு யாரோ தண்ணீர் பிடித்துப் போயிருக்கக்கூடும், குழாயடி முழுவதும் ஈரம் பரவி உலராமலேயே கிடந்தது. ஆள் அரவமற்றதொரு இடத்தில் அனாதையைப்போல குழாயடி தனித்திருந்தது.
வசந்த குமார் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு குடத்தைத் தரையில் வைத்து குழாயின் வாயைத் திருக பொங்கி வரும் பாலைப்போல தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு வந்து குடத்திற்குள் நுழைந்து ஒலி எழுப்பியது.
குடம் நிறைகிறதா என்று குனிந்து பார்த்துக் கொண்டு நின்றான் வசந்த குமார். அவன் முதுகில் யாரோ பின்னாலிருந்து பலமாய் எட்டி உதைக்க தண்ணீர்க் குடத்தில் மோதி தண்ணீரோடு தரையில் உராய்ந்து உடம்பில் சிராய்ப்புகளோடு எழுந்தான். “ஏன்டா, எச்சக்கல நாயே எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா எங்க ஜாதி ஜனம் தண்ணி பிடிக்குற இடத்துல தண்ணி பிடிப்ப, வெட்டிப் பொலி போட்டுடுவேன், ஓடுடா நாயே! மீண்டும் காலால் எட்டி உதைத்தான் தாமோதரன். அவன் ஆத்திரம் அடங்காமல் குடத்தைத் தரையில் அடித்து உடைத்து காலால் எட்டி உதைக்க ஒரு கால்பந்தைப்போல உடைந்த குடம் வெகு தூரத்தில் போய் விழுந்தது.
“அய்யோ அய்யோ அய்யோ நீசப்பய இங்க வந்து தண்ணி மோந்துட்டானே, ஏன்டா உனக்குத் தண்ணி வேணுமுன்னா எங்களக் கேட்கமாட்டியா? நீ பாட்டுக்கு தண்ணி மோந்துக்கற, உங்களுக்குன்னு வெச்சிருக்குற குடத்துல தண்ணி மோந்து தருவோம், அதத்தான் எடுத்துக்கிட்டுப் போவணும், மவனே இன்னொருவாட்டி இந்த மாதிரி நடந்தது உன்னக் கொன்னே போட்டிருவோம்! ஆவேசமாய் வந்த மூன்று பெண்களில் ஒருத்தி காட்டுக் கத்தலாய் கத்தினாள்.
“எங்களுக்குன்னு வெச்சிருக்குற குடத்துல நாய் அசிங்கம் பண்ணி வைக்குது அந்தக் குடத்துல எப்பிடி தண்ணி பிடிக்க முடியும்! அழுகையினூடே தன் பக்க நியாயத்தைச் சொன்னான் வசந்த குமார்.
“எதுத்தால பேசுற பரதேசி நாயே! வந்திருந்த மூன்று பெண்களுக்கும் பொசுக்கென்று கோபம் வர அவனை அடி அடியென்று அடித்தார்கள். “அம்மா என்று அழுதபடியே ரத்த சிராய்ப்புகளோடு நொண்டியபடி தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் வசந்த குமார். அவன் அழுகைச் சத்தம் ஊழைக்காற்றோடு கலந்திருந்தது.
தூரத்தில் அழுகையோடு வரும் தனது மகனைப் பார்த்ததும் பாதிதூரம் வரை ஓடிச் சென்று காரணம் கேட்டாள் அவனது தாயார் பாக்யம். வசந்த குமார் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் விசும்பலுக்கிடையே சொல்லி முடித்தான்.
“இத சும்மா விடக்கூடாது இன்னும் எத்தன நாளைக்குத்தான் இப்பிடி நாம பணிஞ்சு போறது, வாம்மா இப்பவே நாம போலீசுல புகார் குடுப்போம்! கோபம் கொப்பளிக்க கோரச்சாமி சொன்னபோது சுற்றியிருந்த ஜாதிஜனமும் சம்மதிக்க வீட்டில் நடக்கப்போகும் விஷேசத்தை மறந்து காவல் நிலையப் படியேறினார்கள்.
மறுநாள் அந்தச் சம்பவம் நாளிதழில் வெளியானபோது தமிழகமே தலைகுனிந்தது. மனித உரிமைக் கழகம் தொடங்கி பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அன்னூருக்குப் படையெடுத்தன. பாதிக்கப்பட்ட வசந்த குமாரையும் அவன் தாயார் பாக்யத்தையும் அந்த பைப்பில் தண்ணீர் பிடிக்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். யாரும் எதிர்க்காமல் அடங்கிப் போயிருந்தனர். இரண்டு நாட்கள் நகர்ந்திருந்தது, பள்ளிக்கூடம் போகாமல் சுற்றித் திரிந்த வசந்த குமாரை அழைத்து ஆதரவாய் அவன் தலைமுடியைக் கோதிவிட்டான் கோரச்சாமி. “வசந்த்து, இன்னைக்கு அந்த ஜாதிக்காரங்க பேப்பர்ல வந்த செய்தியப் பார்த்துட்டு அமைதியா இருக்காங்க, இத வெச்சுக்கிட்டு நாம ஜெயிச்சுப்புட்டதா நினைச்சுக்கிட வேண்டாம். கொஞ்ச நாள் ஆனா மறுபடியும் பழைய நிலமைக்கு வந்துடுவாங்க, அவங்க ஜாதியில ஆள்பலமும் பணபலமும் அதிகம், நம்ம ஜாதியில் அது ரெண்டும் இல்ல. நாம உரிமையோட இந்த ஊருல வாழணுமுன்னா நம்ம ஜாதிஜனத்துலயும் நாலு எழுத்துப் படிச்சவங்க வரணும். உனக்கு நடந்த நிலமை வேற யாருக்கும் வரக்கூடாது, போலீஸ் ஸ்டேசன்ல இதுமாதிரி புகார் மனு எழுதுறதுக்காவது நாலு பேரு நம்ம ஜாதியில படிக்கணும், நீ படிப்பியா ராசா! சொல்லச் சொல்ல கோரச்சாமியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வந்து இறங்கி அவன் உடம்பில் பட்டுத் தெறித்தது.
வசந்த குமாருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினான். அன்றைய சம்பவம் அவன் மனதை மிகவும் பாதித்திருந்தது. திடமான முடிவோடு எழுந்தான்.
“நான் பள்ளிக்கூடம் போறேன் சித்தப்பு! மண்சுவரின் மீது வைத்திருந்த புத்தகத்தை எடுத்துத் தூசி தட்டி யூனிபார்ம் போட்டுக்கொண்டு வேகமாய் நடந்தான் வசந்த குமார். அவன் மனதில் ஆற முடியாத காயமாகிப் போயிருந்த அந்தச் சம்பவத்தைத் தனது படிப்பின் மூலம் ஆற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் அவனோடு பயணமானது.