கேள்வி : பென்னி குயிக்குக்கு மணிமண்டபம் அமைப்பது எந்த வகையில் சரியானது? இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்க முடியுமா?
க.செந்தமிழன், ஊத்துக்கோட்டை
பதில் : பென்னி குயிக்கு முல்லைப் பெரியாறு அணைகட்ட மூல உதவியாளர். நன்றி உணர்ச்சியோடு நாம் செயல்படுவது தவறல்ல. ஏன் காந்திக்கு அங்கே (இங்கிலாந்து) சிலை உண்டே!
கேள்வி : ஆச்சாரியார்களும் அறிஞர்களும் தங்கள் கருத்துகளை புனிதமான வேதங்களிலும், உபநிசத்து களிலும் பதிவு செய்திருக்கின்றனர். இந்த சமஸ்கிருத மொழியை வளப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளாரே? – தி.இரமணன், சென்னை-81
பதில் : யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்த பிரதமர் – அது செத்தமொழி, அதை வளப்படுத்த, பிரபலப்படுத்த முயற்சிப்பது என்று கூறுவது அபத்தமானது, அர்த்தமற்றது. யாரையோ திருப்திப்படுத்த முயலுகிறார் போலும்!
கேள்வி : தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கின்றது. தீண்டாமையை யாதொரு உருவத்தில் கையாள்வதும் தடுக்கப்பட் டிருக்கிறது. இது இந்திய அரசியல் சட்டத்தில் 17ஆவது விதி. ஆனால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்பதை மட்டும் சட்டம் ஏற்க மறுப்பது ஏன்? இது சட்டத்தையே அவமதிக்கும் செயல்தானே? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : அதைவிட அரசியல் சட்டத்தின் 25, 26 அடிப்படை உரிமை விதிகளின் (Articles) படியே முறையாகவே அர்ச்சகர் பயிற்சி, நியமனச் சட்டம் நிறைவேறியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது!
கேள்வி : திராவிடக் கொள்கைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. திராவிடக் கட்சிகளைத்தான் எதிர்க்கிறோம் என்று மருத்துவர் ராமதாசு தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளாரே? – க.தமிழரசன், சென்னை
பதில் : பரவாயில்லை; நல்ல கண்டுபிடிப்புதான்! இதையாவது கடைசிவரை காப்பாற்றுவாரா அவர்?
கேள்வி : ஆங்கிலேயர் வருகைக்கு முன்னால் இந்தியப் பகுதிகளை ஆண்ட பலநூறு அரசர்களில் யாராவது தங்கள் பகுதியில் உடன்கட்டை ஏறுதல் அல்லது சதி என்னும் கொடிய பழக்கத்தை நீக்க சட்டம் இயற்றினதாக வரலாறு உண்டா?
ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
பதில் : அந்த அரசர்களுக்கு ராஜகுருக்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அவர்கள் எப்படி அதை நிறைவேற்றுவார்கள்? வர்ணதர்மம், மனுமுறை, பெண்ணடிமையைப் பாதுகாத்தவர்கள்தானே அவர்கள்!
கேள்வி : உத்தரபிரதேசத்தை மாயாவதி குட்டிச்சுவராக்கி விட்டதாகவும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் சிறப்பாக உள்ளதாகவும் ராகுல் கூறுகிறாரே?
கோ.ரமேஷ், சே.பேட்டை
பதில் : அவர் பங்குக்கு அவர் சொல்கிறார். இவர்கள் பங்குக்கு இவர்கள் சொல்கிறார்கள்! உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பனே!
கேள்வி : துக்ளக் சோவுக்கும் இவர் சார்ந்த பிரிவினருக்கும் பகுத்தறிவு என்ற வார்த்தையைக் கேட்கும்போதே பாகற்காய், வேப்பங்காயாகக் கசக்கிறதே ஏன்? – இயற்கைதாசன், கொட்டாகுளம்
பதில் : இருக்காதா பின்னே, பகுத்தறிவு மற்றவர்களுக்கு வந்துவிட்டால் இவாள் எல்லாம் அறிவுஜீவி வேஷம் போட்டு அரசியல் காலட்சேபம் நடத்த முடியுமோ?
கேள்வி : மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இலங்கை சென்று மும்மொழிக் கல்வித் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளாரே. இதுபற்றி…?
க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி
பதில் : மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது கூடாது! நல்லவரின் தவறான பயணம்!
கேள்வி : கேத்தன் தேசாய் என்ற குஜராத் பார்ப்பான், மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தபோது கொள்ளையடித்தது கொஞ்சம்தான், ரூ.2500 கோடி. வீட்டில் தங்கக் கட்டிகள்கூட கொஞ்சம்தான். ஆமாம், 1500 கிலோதான்! லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். 1992இல் இதே பதவியில் இருந்து ஊழலுக்காகப் பதவி நீக்கப்பட்ட இதே ஆசாமி மறுபடியும் 2ஆம் தடவையாக அமர்த்தப்படுவதுதான் ஏனோ? – க.பழநி, வள்ளிவிளை
பதில் : ஊழலை அடியோடு ஒழிப்பதற்கு என்றுதான் பூணூல் கேத்தன் தேசாய் மீண்டும் அமர்த்தப்படுகிறாரா? அவருக்கு அடுத்த ஆண்டு பத்ம விபூஷன், பாரத ரத்னா கிடைத்தாலும் கிடைக்கும்.
கேள்வி : காமராசர் அன்று, காடாவது மேடாவது என சொல்லாமல் பீர்மேடு, தேவிகுளம் தமிழ்நாட்டிற் கெனப் போராடி இருந்தால் முல்லைப் பெரியாறு பிரச்சினை இருந்திருக்காதல்லவா? – கு.ம.விசுணுகுமாரன், சென்னை-112
பதில் : நிச்சயமாக. காமராசர் கூற்று வருந்தத்தக்கது; அப்போதே நம்மால் ஏற்கப்படாத, பேசப்பட்ட கருத்து! நா காக்காமல் பேசப்பட்டதே!