கடவுள் கதை – தந்தை பெரியார்

பிப்ரவரி 16-29

கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே,

நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, சொல்லு – ஒரே ஒரு கடவுள். அப்புறம்?

கதை சொல்லுகிறவன்:- ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, எப்போ?

கதை சொல்லுகிறவன்:- பாரு, மறுபடியும் இரட்டை அதிகப் பிரசங்கமாய்க் கேட்கிறாயே.

கதை கேட்கிறவன்:- சரி, சரி. தப்பு; சொல்லப்பா சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.

கதை கேட்கிறவன்:- அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒருநாள் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார், பாவம்! என்று நினைத்துக் கொண்டு (கொஞ்ச நேரம் பொறுத்து) சரி  அப்புறம்? (என்று சொன்னான்.)

கதை சொல்லுகிறவன்:- என்ன இந்த மாதிரி? நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே.

கதை கேட்கிறவன்:- இல்லை. நீ சொல்லுகிற போதே சில சந்தேகம் தோன்றின. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப் பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய். ஆதலால், மனதிலேயே நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
கதை சொல்லுகிறவன்:- அப்படியெல்லாம் சந்தேகம் கூடத் தோன்றக் கூடாது. கதை பாட்டி கதையல்ல, கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும். தெரியுமா? கதை கேட்கிறவன்:- சரி, அப்படியே ஆகட்டும் சொல்லு பார்ப்போம்.

கதை சொல்லுகிறவன்:- எதிலே விட்டேன்? அதுகூட ஞாபகமில்லை, உன் தொந்தரவினால்.

கதை கேட்கிறவன்:- சரி, கோபித்துக் கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.

ஒரே ஒரு கடவுள். அவர் ஒருநாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தைச் சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக் கொள். என்னை அதிகப் பிரசங்கி என்கிறாய். எனக்காவது ஞாபகமிருக்கிறது; மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது, பாவம். அப்புறம் சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- பாவம் என்ன எழவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணிச் சொல்லுகிறேன். பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாக்கக் கடவது என்று சொன்னார்.

கதை கேட்கிறவன்:- உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்! பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்!

கதை சொல்லுகிறவன்:- அதையெல்லாம் நீ தெரிந்து கொள்ளுவதற்குத் தானே இந்தக் கதை சொல்லுகிறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.

கதை கேட்கிறவன்:- சரி, சரி சொல்லு. உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போல் இருக்கிறது.

கதை சொல்லுகிறவன்:- என்ன போட்டி?

கதை கேட்கிறவன்:- இல்லையப்பா, வெளிச்சத்தைத் தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்கு முன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப் பயல் கடவுளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப் போய் விட்டான் போலிருக்கிறது. நான் அவனைக் கண்டால் என்ன செய்வேன் தெரியுமா?

கதை சொல்லுகிறவன்:- தொலைந்து போகுது, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே; சொல்வதைக் கேளு.

கதை கேட்கிறவன்:- சரி சொல்லு.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆக வேண்டும் என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று.

கதை கேட்கிறவன்:- கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களையெல்லாம் சமன் ஆக வேண்டும் என்று சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள், நல்ல கடவுள்! எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள்! மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்னாவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்!

ஆனால், அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருட்டும், மேடும், பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது! இருக்கட்டும், அதைப் பற்றிக் கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! அப்புறம் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.

கதை கேட்கிறவன்:- சரி, யோசித்தார்.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் ஒரு நாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே காற்று உண்டாய் விட்டது.

கதை கேட்கிறவன்:- பிறகு என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்:- அதற்கும் ஒருநாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார். பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார். உடனே சமுத்திரம், செடிகள் உண்டாயின.

கதை கேட்கிறவன்:- பிறகு?

கதை சொல்லுகிறவன்:- இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்தார், யோசித்தார், ரொம்ப கஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று யோசித்தார்!

கதை கேட்கிறவன்:- அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா? போனால் போகட்டும். அப்புறம் என்ன செய்தார்? சொல்லு, சீக்கிரம்.

கதை சொல்லுகிறவன்:- அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா?  சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார். உடனே உண்டாகி விட்டன.

கதை கேட்கிறவன்:- சரி, சரி, இப்போது புரிந்தது, அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பதும் வெளியாயிற்று!

கதை சொல்லுகிறவன்:- பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசி வரை பொறுமையாய்க் கேட்டால், எல்லாச் சந்தேகமும் விளங்கி விடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.

கதை கேட்கிறவன்:- அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தையெல்லாம் சமன் செய்தது ஒன்று, மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்தது பார்! இது எவ்வளவு அற்புதமான செய்கை! அப்புறம் மேலே சொல்லு; மிகவும் ருசிகரமாகவும், மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது, இந்தக் கடவுள் கதை.

கதை சொல்லுகிறவன்:- அதற்குள் என்ன தெரிந்து கொண்டாய்? இன்னும் கேள். எவ்வளவு அதிசயமாயும், ருசியாயும் இருக்கும் பார்! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும், பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார், உடனே ஆகிவிட்டன.

கதை கேட்கிறவன்:- இத்தனை கோடி, கோடி, கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும், பெருமையும் எப்படிப்பட்டது பார்! அப்புறம்?

தந்தை பெரியார் அவர்கள் ‘சித்திரபுத்திரன்’ என்ற
புனைபெயரில் எழுதிய கட்டுரை (‘விடுதலை’ 27.12.1953.)

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *