வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனிச் சிறப்பு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சிக்கு உண்டு.
மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே நடத்தும் புத்தகக் காட்சி சிறப்பானது!
மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே முன்வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஏற்பாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நாள்கள் புத்தகக் காட்சி விற்பனையை மக்களிடையே பரப்பிடும் அரிய பணி _ புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகங்களின் செழுமையான விற்பனைக்காக என்பதைவிட, அறிவு கொளுத்தும் பகுத்தறிவைப் பரப்பும் ஓர் ஒப்பற்ற பெரும் பணியாகும்!
5.8.2022 அன்று சுயமரியாதை பூமியான தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் ஆண்டுதோறும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களது சீரிய முயற்சியில் சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியை காணொலிமூலம் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில அருமையான அரசின் சாதனைகளைக் குறிப்பிட்டார்.
ரூ.4 கோடியே 96 லட்சம் – அரசின் நிதி ஒதுக்கீடு
‘‘சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். சென்னையைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில்தான் இதுபோன்ற புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு இத்தகைய புத்தகக் காட்சி நடக்கவேண்டும். அதற்காக இந்த ஆண்டு ரூபாய் 4 கோடியே 96 லட்சம் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார். இப்படி வேறு எந்த மாநில அரசும், அறிவு கொளுத்தும் ‘‘திருப்பணி’’யை நடத்தி மக்களின் பொது அறிவை, புத்தகங்கள்மூலம் புத்தாக்கத்தினைத் தரும் புதுமையான ஏற்பாட்டினைச் செய்தது உண்டா?
இதற்குப் பெயர்தான் ‘‘திராவிட மாடல்’’ அரசு என்பது!
புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தக் கூடியது!
நமது இளைஞர்கள், தாய்மார்கள் அனைவரிடத்தும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தக் காலகட்டத்தில் இப்படிப்பட்ட முயற்சிகள் முக்கியத் தேவையாகும்.
பலரது நேரமும், இணைய தளத்தில் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி, திரைப்படப் போதைகளிலுமே செலவிடப்பட்டு, புத்தகங்கள் வாசிப்பு என்பதே குறைந்துவரும் நிலையைக் கட்டுப்படுத்திட, இப்படிப்பட்ட அறிவுத் திருவிழாக்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற, தமிழ்நாடு அரசு ஆதரவுக் கரம் நீட்டி உற்சாகப்படுத்துவது பெரிதும் வரவேற்றுப் பாராட்டிட வேண்டிய அருஞ்சாதனையாகும்!
மலிவு விலையில் நூல்களைப் பரப்பியவர் தந்தை பெரியார்
மக்களிடையே கல்வி அறிவு, படிப்பறிவு பெருக, குலதர்மமான மனுதர்மத் தடையை அகற்றிட, அனைவருக்கும் கல்வியைப் பொது உரிமையாகவும், பொது உடைமையாகவும் ஆக்கி, வெற்றி பெற்ற தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதனை விரிவாக்கும் பணியாக புத்தகங்களை மலிவு விலைக்கு வெளியிட்டு, தந்தை பெரியாரே நாட்டின் நாலாபக்கங்களிலும் கூட்டங்களில் மக்களிடையே பரப்பிய வரலாறு – உலகில் எந்தத் தலைவரும், எந்த ஓர் இயக்கமும் செய்யாதது!
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மையான சமூகநீதி பூமியாக, சுயமரியாதைக் களமாக இருப்பதற்கு இந்த அடிக்கட்டுமானம் போன்ற அறிவுத் திருப்பணியே மூலாதாரம் ஆகும்!
முதலமைச்சரின் புத்தாக்கம் தரும் முயற்சி!
முற்போக்கு இயக்கங்கள் ஏற்படுத்தி வரும் இந்த முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட, திராவிடர் இயக்கமும், பொதுமக்களைத் திரட்டி அவ்வப்போது பொதுக் கூட்டங்களை சிற்றூர், பேரூர், பட்டணம், பட்டிக்காடு வேறுபாடின்றி நடத்தி வருகிறது. அதேபோல, ஏடுகள், நூல்களை அச்சிட்டுப் பரப்புதலும், கலைத்துறை, நாடகம், திரை (பிறகு) என்றும் பிரச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முக்கியம்.
தமிழ்நாடு அரசின் இன்றைய முதலமைச்சர் ஊக்கம் தரும் உற்சாகப் பெருவிழாக்களாக புத்தகத் திருவிழாக்களை நடத்துவதும், நூலகங்களுக்கு நல்ல நூல்களை அவர் அன்பளிப்பாகத் தருவதும் ஒரு புதுமை நிறைந்த பயனுறு பாராட்டத்தக்க ஏற்பாடு.
புத்தகப் புரட்சி!
அதேபோல, புத்தகங்கள், நூல்களை விலைக்கு வாங்கி, தமிழ்நாடு அரசு பரப்புவதும் பாராட்டத்தக்கது. இடையில் இடைத்தரகர்கள் நுழைந்து, அதன் தூய்மையான தொண்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தாவண்ணம் பார்த்துக் கொள்வதும் அவசியம்!
புத்தாக்கப் புத்தகப் புரட்சி தொடரட்டும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்