தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பின்தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டம். ஊட்டியின் தட்பவெப்ப நிலையைக் கணக்கில் கொண்டு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. பின் 1986இல் ஒரு புதிய பகுதியும் தொடங்கப்பட்டு அமெரிக்க நிறுவனத்தின் கூட்டோடு பாலிஸ்டர் கலந்த எக்ஸ்ரே பிலிம் தயாரிக்கப்பட்டது.
ஊட்டியில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை வியாபாரச் சந்தையில் 80 விழுக்காட்டைப் பிடித்து நல்ல அளவு இலாப நோக்கில் நடைபோட்டு வந்தது. இந்திய அரசின் தாராளமயக் கொள்கையால் லைசென்ஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதாலும், இறக்குமதிக்கு வரிகள் தளர்த்தப்பட்டதாலும் சிறு நிறுவனங்கள் கூட வெளிநாடுகளிலிருந்து பிலிம்களை இறக்குமதி செய்யப்பட்ட காரணத்தாலும் உதகைத் தொழிற்சாலையின் இலாபகர நிலை பெரும் பாதிப்புக்கு ஆளானது.
80 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக சந்தை வியாபாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது.
இதன் காரணமாக உற்பத்தியின் அளவும் குறைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
4100 பணியாளர்கள் 1992இல் இருந்தனர் என்றால் படிப்படியாக 2002இல் வெறும் 1370 பேர்தான் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
மருத்துவம், அச்சுத்தொழில், கல்வி, ஒலிபரப்பு பாதுகாப்புத் துறைகளுக்கு தேவையான படச்சுருள்களை ஒருங்கிணைந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இது ஒன்றுதான்!
இத்தகைய தொழிற்சாலைகள் உலகில் மொத்தம் ஆறுதான். இத்தகைய நிறுவனம் மிகப் பெரிய அளவில் போற்றி வளர்க்கப்படுவதற்குப் பதிலாக, இதனை இழுத்து மூடுவதிலேயே மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதுபோல் தோன்றுகிறது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பிலிம்கள், இந்நிறுவனத்திலிருந்தே வாங்கப்பட வேண்டும் என்ற ஆணை நடைமுறையில் இருந்து வந்தது. இப்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு ஆ. இராசா அவர்கள் சிறையில் இருந்தாலும், தனது தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவலை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலுக்குக் கடிதம் எழுதி, ஊட்டித் தொழிற்சாலையின் புனரமைப்புக்கு நிதி உட்பட எல்லா வகையிலும் உதவிட வேண்டும் என்று எழுதியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
நீலகிரி மாவட்டம், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதியாகும். இந்த நிறுவனத்தில் தோடர், குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களே பெரும்பாலும் வாழுகின்றனர்.
ஊட்டி தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் 66 சதவிகிதத்திலும் இத்தகைய பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே.
இந்தத் தொழிற்சாலையை மூட நினைத்தாலோ, பலகீனப்படுத்த நினைத்தாலோ, அதன் விளைவு இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கச் செய்வதாகும்.
இதில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் இப்பொழுதுதான் கல்வி வாசனையைப் பெற ஆரம்பித்துள்ளனர். எந்தக் காரணத்தாலோ ஊட்டி பிலிம் தொழிற்சாலை இயங்குவது தடை செய்யப்பட்டால், இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் இருட்டறையில்தான் தள்ளப்படும்.
வெறும் தொழிற்சாலை வியாபாரம் என்பதோடு சமூக நீதிப் பிரச்சினை இதில் உள்ளடக்கமாக உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து திரு. இராசா எம்.பி., அவர்கள் கடிதத்தில் தெரிவித்திருக்கும் தகவல் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. ஊட்டி பிலிம் தொழிற்சாலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும், வளர்ச்சித் திசைக்கு அதனை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு அரசியல் கண்ணோட்டமின்றி அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று வற்புறுத்துகிறோம்.
மத்திய அரசில் தி.மு.க. இருக்கிறது என்பதாலோ இதில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை காட்டுகிறார்கள் என்பதாலோ, ஊட்டி தொழிற்சாலை எக்கேடு கெட்டால் என்ன என்ற மனோபாவம், தமிழ்நாட்டு ஆட்சிக் கண்ணோட்டத்தில் உகந்ததல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
10.2.2012 உதகை ஃபிலிம் தொழிற்சாலையின் (HPF) புனரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதுகுறித்து திரு. ஆ. இராசா எம்.பி. அவர்கள் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இத்தொழிற்சாலைக்கான மதிப்பீட்டுத் தொகையில் நிலுவையில் உள்ள ரூ.272 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும், கடந்த 20 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த ஊதிய உயர்வினையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள் மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, ஊட்டி பிலிம் தொழிற் சாலையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் (நிதி உள்பட) செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கட்சிக் கண்ணோட்டமின்றி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் போதிய அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
இதற்கு முன்பு பல தடவைகள் ஊட்டி தொழிற்சாலை மூடப்படும் அபாயம் வந்த போதெல்லாம் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதையும் மறுபடியும் அந்த நிலைக்குத் தள்ள வேண்டாம் என்றும் மத்திய – மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
ஆசிரியர்