முகப்புக் கட்டுரை : தீட்சிதர்களின் எல்லையில்லா முறைகேடுகள்! தில்லை நடராசர் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்!

2022 ஆகஸ்ட் 01-15 2022 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

“சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்’’ பொதுக்கோயில் என சென்னை உயர்நீதிமன்றத்தால் 17.3.1890 (AS No.103 மற்றும் 159/1888) மற்றும் 3.4.1939 (AS No.306/1936) நாளிட்ட தீர்ப்புகளில் உறுதி செய்யப்-பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு 1933ஆம் ஆண்டில் நிருவாகத் திட்டம் அறநிலைய வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் நிருவாகத் திட்டம் ஏற்படுத்திட வாரியத்திற்கு அதிகாரம் இல்லையென தீட்சிதர்களால் தொடரப்பட்ட வழக்கில் 3.4.1939 உத்தரவில் பொதுக்கோயில் என்பதால் அறநிலைய வாரியத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு ஊழல், முறைகேடு, சட்டவிரோதச் செயல்கள் நடந்ததையொட்டி, கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அக்கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர செயல் அதிகாரி ஒருவரை நியமித்தது. இதை எதிர்த்து, கோயில் நிருவாகச் செயலாளர் பொன்.தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதிகாரி நியமனத்திற்குத் தடை உத்தரவு பெற்றார்.

இந்தத் தடையை நீக்கக் கோரி அரசு தரப்பிலும், நெடும் போராட்டத்தை நடத்தி நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி வந்த சிவனடியார் ஆறுமுகசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி முன் கடந்த 22.01.2009 அன்று நடை-பெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி உத்தரவு பிறப்பித்தார்.
“சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் சரியாகப் பராமரித்து வரவில்லை என்பதும், கோயில் நகைகள் நிறைய காணாமல் போய் உள்ளது எனவும் தெரிகிறது.
இந்து அறநிலையத் துறை சட்டப்படி ஒரு கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக அரசுக்குத் தகவல் வந்தால், செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படி, செயல் அதிகாரியை அரசு நியமித்துள்ளது.

தீட்சிதர்கள் கணக்கு வழக்குகளை முறையாகக் கவனிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளின்படி, கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடந்தால் செயல் அதிகாரியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, செயல் அதிகாரியை நியமித்த அரசு உத்தரவு சரிதான். மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.
இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மனுவை இந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து தள்ளுபடி செய்தது சரியானதுதான். கோயிலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
சிதம்பரம் கோவிலின் ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே. கையிருப்பு வெறும் ரூ. 199 மட்டுமே என நா கூசாமல் தீட்சிதர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையில் புளுகினார்கள். இதே கோவிலில் அரசு உண்டியல்கள் வைத்ததில் வசூலான தொகை சுமார் இரண்டு கோடி ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை தீட்சிதர்களிடமே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்தனர்.

நடராசர் கோவிலில் பிரசாதக் கடை மட்டும் ஆண்டுக்கு ரூ.35 இலட்சத்திற்கு ஏலம் போனது. இன்று உண்டியல்கள் இல்லை, பிரசாதக் கடை ஏலம் இல்லை. வருகின்ற வருமானம் எவ்வளவு? என்பதை தமிழ்நாடு அரசு மக்களுக்குச் சொல்ல வேண்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் இருக்கக் கூடாது. சிதம்பரம் கோவிலை நிர்வகிக்கும் அருகதையை தீட்சிதர்கள் இழந்து பல காலம் ஆகிவிட்டது.
இதை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று அரசு கருதுவது சரியானது. எனவே, கோயிலை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை ஆணையர் ஒரு வாரத்தில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் கோயிலை நிர்வாகம் செய்ய தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.’’
இவ்வாறு நீதிபதி பானுமதி உத்தரவில் கூறியிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை இந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி, விழுப்புரம் இணை ஆணையர் திருமகளுக்கு பேக்ஸ் மூலம் அன்று இரவே நடராஜர் கோயிலை அரசு ஏற்பது குறித்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட இணை ஆணையர் திருமகள், கடலூர் உதவி ஆணையர் ஜெகன்நாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி. நரேந்திர நாயர் ஆகியோருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயிலில் ஆலோசனை நடத்தினார்.
நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் கடித நகலைக் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீட்சிதர்களின் வழக்குரைஞர் சிவக்குமார், “நீதிமன்ற உத்தரவு வேண்டும். இணை ஆணையரின் கடிதத்தை ஏற்க முடியாது’’ என்று கூறினார். தீட்சிதர்களும் வாக்குவாதம் செய்தனர்.
“நடராஜர் கோயில் செயல் அலுவலராக தில்லை காளியம்மன் கோயில் பொறுப்பை வகிக்கும் கிருஷ்ணகுமார் நியமிக்கப் பட்டுள்ளார்.
செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டது குறித்த அறிவிப்பு தாக்கீதை பொது தீட்சிதர்களின் செயலக அலுவலக தாக்கீது பலகையில் அதிகாரிகள் அன்று இரவே ஒட்டினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பல ஆண்டுக் கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டதானது தமிழ் ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

தீட்சிதர்கள் விட்டு விடுவார்களா? மேல் முறையீடு செய்தனர். கலைஞர் ஆட்சியில் அறநிலையத் துறை கையகப்படுத்தியதால் வழக்கமான அரசியலை இதிலும் காட்டினார் ஜெயலலிதா.
ஓய்வு பெறுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்திலேயே மேல்ஜாதி நீதிபதி பச்சையாகச் சொன்னார்:
“ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு நல்ல காரியத்தை செய்து விட்டுப் போகிறேன்” என்று கூறினார். அந்த நல்ல காரியம் வேறு ஒன்றும் இல்லை. சிதம்பரம் நடராசர் கோயில் மீண்டும் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டதுதான்.அதன்பின், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி மீண்டும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வசம் சென்றது. இதனால், தீட்சிதர்களின் அத்துமீறல் பல்வேறு சமயங்களில் அதிகரித்து வந்தது.

14,098 புகார்கள்
பின்னர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் அறநிலையத் துறை சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு மேற்-கொண்டது. முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு_- செலவுக் கணக்குகளைக் காட்ட வேண்டும் என்றும், 2 நாள்கள் ஆய்வு நடத்த உள்ளதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தீட்சிதர்களுக்குத் தாக்கீது அனுப்பியிருந்தது. அதன்படி சிறப்பு அதிகாரி சுகுமாரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்-கொண்ட-போது, தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு_செலவுக் கணக்குகளையும் காட்ட மறுத்த அவர்கள், நீங்கள் சட்டரீதியான குழு இல்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு – செலவு கணக்குகளை ஒப்படைப்போம், இல்லையேல் நிர்வாகக் கணக்குகளைக் காட்ட முடியாது என்றும் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் நிருவாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை-களை வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவித்தார்.அஞ்சல் மூலமாகவும் இணையம் மூலமாகவும் வந்த கருத்துகளின் அடிப்படையில் மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மொத்த மனுக்களில் 14,098 மனுக்கள் கோயிலில் புகார்கள் இருப்பதை உறுதி செய்தது.

ரூ.10 ஆயிரம் கொடுத்தால் பிரசாதம்
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.10,000 கொடுத்தால் பிரசாதம் வீடு தேடி வரும் என ரசீது இன்றி வசூல் செய்வதாகப் புகார்.
* ஆண்டு முழுவதும் வீட்டுக்குப் பிரசாதம் அனுப்ப ரூ.2,500 வசூலித்து ரசீது வழங்கப்படவில்லை.
* கோயிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை.
* கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமைச் சுவரை அகற்ற கோரிக்கை.
* கோயிலுக்கு வருபவர்களைத் தரக் குறைவாகப் பேசி அவமதிப்பதாவும், பெண்களை மரியாதைக் குறைவாக நடத் துவதாகவும் புகார்.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை உரிய நேரத்தில் நடைபெறுவதில்லை.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது.
* நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங் கால் மண்டபத்தை நட்சத்திர விடுதிபோல் பயன்படுத்துகிறார்கள்.
* ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணத்தின் போது தொழிலதிபர்கள் காலணியுடன் சென்றனர்.
* சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அருகே இருந்த நந்தனார் சிலையை தீட்சிதர்கள் அப்புறப்படுத்தி விட்டதாகப் புகார்.
* தீட்சிதர்கள் ஆண்டாள் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு.
* பைரவர் சன்னதி அருகே சுரங்கத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான ஆபரணங்களை தீட்சிதர்கள் எடுத்து சென்றதாகப் புகார்.
* பக்தர்களால் வழங்கப்படும் தங்கம், வெள்ளி பணத்தை ரசீது தராமல் தீட்சிதர்கள் எடுத்துக் கொள்வதாகப் புகார்.
* நந்தனார் நுழைந்த தெற்குக் கோபுர வாயிலை அடைத்து தீண்டாமையைப் பின்பற்றப் படுகிறது.

குழந்தைத் திருமணங்கள்
இந்தியா முழுதும் ‘பால்ய விவாகம்’ எனப்படும் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்ட பொழுதிலும், இன்றுவரை இச்செயல் சிதம்பரத்தில் தொடர்கிறது. இத்திருமணங்கள் 1930ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டன.தீட்சிதர்கள் 2014ஆம் ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை நடத்தினர். நான்கு வீதிகளிலும் ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன், நகர மார்க்சிஸ்ட் செயலாளர் தோழர் இராமச்சந்திரன் முயற்சியால் ஊர்வலம் தடுக்கப்பட்டது.

தீட்சிதர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் அனைத்தையும் அன்றுமுதல் இன்றுவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும், தமிழ்நாடு அரசின் மேனாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் அவர்கள், தற்பொழுது தீட்சிதர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
கடந்த 16.3.2017 வியாழன்று சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் குஞ்சிபாத தீட்சிதர் செல்வகணபதி என்ற குழந்தைக்கும், ரத்தினசபாபதி தீட்சிதரின் பெண் குழந்தையான தாராபாய்க்கும் பத்திரிகை அடித்து வெளிப்படையாகத் திருமணம் செய்துள்ளனர்.
இச்செய்தியறிந்த முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் அவர்கள், ஆடுரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இளங்கோவன் என்பவர் மூலம் காவல் துறைக்கும், சிதம்பரம் சார்_ஆட்சியருக்கும் புகார் மனு அளித்தார்.
எனப் பல முக்கிய புகார்கள் அறநிலையத் துறைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

தீட்சிதர்களின் திமிர்ப் பதில்
மேலும் கடந்த 19ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருகிற 25ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்வுக்காக வருவதாகக் கூறி தீட்சிதர்களுக்கு இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு கோயில் தீட்சிதர்கள் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், தங்கள் தரப்பு ஆட்சேபணை அனுப்புவதற்காக தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும், தற்பொழுது மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் 17 ஆண்டு-களுக்குப் பிறகு நகைகள் ஆய்விற்காக வரும் 25ஆம் தேதி அன்று வருவதாக தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் குறிப்பிட்டுள்ள-தாகவும், கடந்த இரண்டு மாதங்களாக நடராஜர் கோயில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கும்போது தாங்கள் ஆய்வுக்கு முன்பே ஏற்கெனவே முடிவு செய்து ஆய்வுக்கு வர உள்ளதாக தாமதமாகத் தகவல் அனுப்பி உள்ளீர்கள் என்று சந்தேகப் படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது ஏதோ தீட்சிதர்களின் தனிச் சொத்து என்பது போல அனுபவித்து வருகின்றனர்.
இது மன்னர்களால் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு உரிமையான கோயில். தீட்சிதர்கள் அண்டிப் பிழைத்தவர்கள். அப்படியிருக்க அவர்கள் அதிகாரம் செலுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.

“முற்காலந்தொட்டே இத்திருக்கோயில் ஒரு பொது வழிபாட்டிற்குரிய இடமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. மேலும், இத்திருக்கோயிலானது தீட்சிதர்களுக்குச் சொந்தச் சொத்து என்பதற்கு சிறு துளியளவுகூட ஆதாரம் கிடையாது.’’
இப்படிச் சொன்னது பொதுக்கூட்டத்திலே அல்ல. சொன்னது அறநிலைய பாதுகாப்புத்-துறை அல்ல. சொன்னது முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அல்ல. சொன்னது புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் நண்பர் வி.வி.எஸ். அல்ல. சொல்லுவது நாங்களல்ல.
இதை யார் சொன்னது? சர்.டி.முத்துசாமி அய்யர். எப்பொழுது சொன்னார்? ஒரு நூற்றாண்டுக்கு முன்னால். இந்த தீட்சிதர்கள் அங்கே வழக்கிற்குப் போனபோது ரொம்பவும் தெளிவாகச் சொன்னார். உரிமை சில துளிகூட இல்லை என்று சொல்லியிருக்கிறாரே _ நீங்களெல்லாம் பெருமையோடு சொல்கிற முதல் இந்திய நீதிபதி _ அவர் எழுதிய தீர்ப்புதானே அது!

சிற்றம்பல மேடையில் வழிபட அனுமதி!
“இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் உள்ள கனகசபை மண்டபத்தின் மீதேறி குறைந்த இடைவெளியில் அருள்மிகு சபாநாயகரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி திரு.எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவரால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.9447/2022. வழக்கில், 20.04.2022 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, கோவிட் – 19 தற்போதைய நிலை மற்றும் இதர காரணங்களையும் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிருவாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கடலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, கோவிட்-19க்கு முன்பிருந்த நடைமுறைப்படி ஆகம விதிகளைப் பின்பற்றி கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, கடலூர் மாவட்ட ஆட்சியரது பரிந்துரையை ஏற்றும், திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின் படியும், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றும் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலின் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்-துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயிலின் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது”
முதுபெரும் ஓதுவார் ஆறுமுகசாமி அவர்கள் நீண்ட காலமாகப் போராடினார். அவரைத் தீட்சிதர்கள் தாக்கி ரவுடிகள் போல நடந்து கொண்டனர். அவர் கை முறிக்கப்பட்டது. அவர் மறைந்தாலும், அவரின் போராட்ட உணர்வை நினைவு கூரலாம்.

நீண்டகாலமாக நடைபெற்று வந்த போராட்டத்தில் இப்பொழுது வெற்றி கிடைத்துள்ளது.
சட்டப்பிரிவு 23இன்படி ஒவ்வொரு திருக்கோவிலும் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்திடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 33இன்படி திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், கணக்குகள் மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்திட ஆணையர் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்-பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 27இன்படி திருக்கோயில் அறங்காவலர்கள் உரிய அலுவலர்களால் சட்டப்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் ஆவர். சட்டப்பிரிவு 28இன்படி அறங்காவலர்கள் திருக்கோயில்கள் மற்றும் அதன் சொத்துகளை சட்ட விதிகளின்படியும், வழக்கத்தின்படியும் நிர்வகிக்க வேண்டும்.
எனவே, மக்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், பொதுச் சொத்தான சிதம்பரம் நடராசர் கோயில் முறைகேடு, ஆதிக்கம், அடாவடிச் செயல்களைத் தடுக்கவும், அகற்றவும், வருவாய்ச் செலவுகளை முறைப்-படுத்தவும், பக்தர்கள் உரிகைளைப் பாதுகாக்கவும் அரசு தனக்குள்ள சட்ட அதிகாரங்களின்படியும், நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின்படியும் இக்கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசே உடனடியாக ஏற்று நடத்த வேண்டும். இதுவே மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்!