நூல்: “ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?”
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, முதற்பதிப்பு மார்ச் 2022
பக்கங்கள் 144 – நன்கொடை: 120/-
பொ. நாகராஜன்
பெரியாரிய ஆய்வாளர், சென்னை.
அண்மைக்காலமாக – ஆர்எஸ்எஸ்; பாஜக; சங்கிகள்; ஆதீனங்கள்; ஜீயர்கள்; யோகிகள்; பார்ப்பனர்கள் போன்ற ஆதிக்க சுரண்டல் கூட்டம், தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்-துறையைத் கலைத்து விட்டு, எல்லாக் கோயில்களையும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும், கோயில்களை அரசு பராமரிப்பது ஆகமங்களுக்கும் ஆன்மிகத்திற்கும் எதிரானது என்றும், தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றார்கள்!
கோயில் சொத்துகளை அபகரித்தல்; கொள்ளையடித்தல்; கோயிலிலுள்ள சிலை-களைக் கடத்தி வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தல்; கோயில் கர்ப்பகிரகத்திற்குள்ளேயே சில புரோகிதர்கள் காம லீலைகளில் ஈடுபடுதல்; கோயில் வளாகத்திலேயே கொலைகளை நிகழ்த்தித் தப்பித்தல் போன்ற _ சமூக விரோதச் செயல்களைச் செய்து வரும் ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு _ இந்து அறநிலையத்துறை என்னும் அரசு அமைப்பு இல்லாமல் இருந்தால், கஜானாவின் கதவைக் கழற்றி, தனியாக வைத்தது போல உதவியாக இருக்கும்.
அதற்குத்தான் இப்படிப்பட்ட அயோக்கிய-தனமான கோரிக்கைகள்!
“கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது!” என பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய புகழ் பெற்ற வசனத்தில் வலியுறுத்துவது போல, அறநிலையத்துறையின் அவசியத்தை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்ட நூல் இது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இந்த நூல், -ஹிந்து அறநிலையத்துறையின் தேவை பற்றியும், ஹிந்து அறநிலையத்துறை உருவான வரலாறு பற்றியும், கோயில் நிருவாகத்தை கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பனர்களின் பணத்தாசை பற்றியும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் அளித்த செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய சிறப்பான தொகுப்பாகவும் அமைந்துள்ளது!
தமிழ்நாட்டில் 1817ஆம் ஆண்டு முதல், பிரிட்டிஷ் அரசின் ரெவின்யூ போர்டுதான் கோயில் அறக்கட்டளைகளை நிருவாகித்து வந்தது. பின்பு 1863ஆம் ஆண்டு முதல் கோயில் நிருவாகத்தை அரசு தன்னிடமிருந்து விடுவித்தது.
பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 1874, 1876, 1884, 1894 ஆகிய ஆண்டுகளில் பல கமிட்டிகள் நியமிக்கப்பட்டும் பரிந்துரை செய்யப்பட்டும், பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது. இதற்கு கோயில் பெருச்சாளிகளும், ஆதிக்க முதலைகளுமே முக்கியக் காரணம்! பத்தொன்பதாம் நூற்றாண்டு இவ்வாறு கழிந்தது!
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சியின் ஆட்சி இதற்கு ஒரு தீர்வைக் கண்டது. இந்து அற நிறுவனங்களின் நிருவாகத்தைக் கவனிக்கவும், உபரி வருமானத்தைச் சரியான முறையில் பயன்படுத்தவும், முதல் மசோதாவை 1922ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றியது. அன்றே அந்த மசோதாவை பார்ப்பனர்களின் பாதுகாப்புக் கூடாரமான, ‘இந்து’ நாளேடு எதிர்த்து எழுதியது.
இதன் பிறகு நீதிக்கட்சியின் பானகல் அரசரின் ஆட்சியின் போது இரண்டாவது மசோதா 1923 ஏப்ரலில் நிறைவேறியது. இந்த மசோதாவையும் ‘ இந்து ‘ தனது அக்கிரகார நலத்தைக் காப்பாற்ற அக்கறையோடு எதிர்த்தது!
அப்போது தமிழ்நாடு காங்கிரசின் மாநிலத் தலைவராக இருந்த தந்தை பெரியார் “கட்சி வேற்றுமை பாராட்டாமல் ‘அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டத்தை’ ஆதரிக்க வேண்டும்! இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்து இல்லை. அவற்றின் செல்வங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! மதத்தின் பெயரால் கொள்ளையடிப்பவர்களால்தான் ஆபத்து!” … என்று தனது தெளிவான கருத்தை வெளியிட்டார்.
கடவுளை மறுத்த நாத்திகரான பெரியாரின் சமூக அக்கறையும் ஒழுக்கமும் அவரை, கடவுளையும் கடவுள் சொத்துகளையும் காப்பாற்ற குரல் கொடுக்கச் செய்திருக்கிறது. ஆத்திகக் கும்பல்களின் கொள்ளையடிக்கும் திட்டங்கள் அன்றே நிறைவேறாமல் போனது!
பானகல் அரசர் காலத்தில் கொண்டு வந்த இரண்டாவது மசோதா வைஸ்ராயின் ஒப்புதல் பெற்று, 1925ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமானது. இதுபோன்ற பல அரிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்ட ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை உருவான வரலாறு, ஹிந்து அறநிலையத்துறை வந்தது எப்படி?, கோயில் சொத்துகளைக் கொள்ளையடிக்க பார்ப்பனர்கள் சூழ்ச்சி, கோயில் பூனைகளின் கொள்ளைகள், ஹிந்து அறநிலையத் துறையின் பணி என்ன?, கோயில் சொத்துகளை விழுங்கியது யார்?, கோயில் காணிக்கைகள் எங்கே போகின்றன?, யார் இந்த ஜக்கிவாசுதேவ்? போன்ற 14 தலைப்புகளில் விடைகளும் விளக்கமும் விழிப்பும் எழுச்சியும் ஊட்டும் வகையில் செய்திகள், செறிவாய்க் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு இந்த நூலில் பதிலும் உண்டு! பாடமும் உண்டு!! காலத்திற்கேற்ற கருவியாய்ப் பயன்படும். ஆசிரியர் அய்யா அவர்களின் பணி மகத்தானது; பாராட்டுக்குரியது.ஸீ