– பாவலர்மணி ஆ.பழநி அவர்களுடன் ஒரு நேர்காணல்
அனிச்ச அடி செய்யுள் நாடக இலக்கியம் வாயிலாக தமிழகம் அறியப் பெற்றவர், இந்நூலுக்குத் தமிழக அரசின் விருதைப் பெற்றவர்; சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு நூல்களைத் தந்தவர்; பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்ற ஒப்பாய்வு நூலின் ஆசிரியர்; தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர், திராவிட இயக்கக் கவிஞர் மானமிகு கவிஞர் ஆ.பழநி. இவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாகப் படிக்கப்படுகின்றன. அண்மையில் ஆ.பழநி அவர்கள் எழுதிய திருக்குறள்: உரைகளும் சில குறைகளும் என்ற நூல் இதுவரை குறளுக்கு எழுதிய உரை நூல்களில் புதிய முறையில் அமைந்தது. அகவை 83அய்த் தொட்ட நிலையில் அறிவியக்கக் கொள்கை உரத்தோடு காரைக்குடியில் வாழ்ந்து வருகிறார். பொங்கல் – புத்தாண்டையொட்டி அவரை உண்மை நேர்கண்டது.
உண்மை: வணக்கம் அய்யா, பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த இனிய நாளில் உங்களைக் கண்டு உரையாடுவதில் மகிழ்கிறோம். வாழையடி வாழையெனத் தொடரும் திராவிடர் இயக்கக் கவிஞர்களில் நீங்களும் ஒருவர். ஆதலின் இயக்கம், தமிழர், சமூகம், இவற்றுக்கிடையேயான உங்கள் உறவு ஆகியன குறித்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டுகிறேன். இன்று தமிழ்மொழியின் வளர்ச்சி எவ்வாறுள்ளது? கவிஞர்ஆ.பழநி: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் ஒரு பக்கம் காதைத் துளைக்கின்றது. அலுவலகங்களிலோ ஆங்கில, இந்திப் படிவங்கள், கடிதங்கள் தோன்றி மிரட்டுகின்றன. என்றாலும்கூட, இன்று தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், அந்த வளர்ச்சி முழு நிறைவைத் தருவதாக இல்லை. சிலருக்குக் கழுத்திலே கட்டி வளர்ந்திருக்கிறது; சிலருக்குக் கால் யானைக் காலாக பெருத்திருக்கின்றது. கழுத்திலும் காலிலும் வளர்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால் அது நோயின் வளர்ச்சி அல்லவா? இதனால் நான் தமிழ் வளரவே இல்லை என்று சொல்வதாக எண்ணிக் கொள்ள வேண்டா. சில பகுதியில் தமிழ் வளர்ந்திருக்கின்றது; சில பகுதியில் நோய் வளர்ந்திருக்கின்றது.
தமிழ் வளர்ச்சி என்பது மொழியின் வளர்ச்சி என்பதாக மட்டும் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது. தமிழில் வெளிப்படுத்தப்பட்ட வாழ்வியல் விழுமியங்களின் வளர்ச்சியும் தமிழ் வளர்ச்சி என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் பார்க்கின்ற பொழுது தன்னல உணர்வுகளின் பெருக்கமும், பணப்பித்தும், நுகர்வு வெறியும் விழுமியங்களை விழுங்கி ஏப்பம் விடுவதை எல்லா இடங்களிலும் காண முடிகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எழுத்துகள் மட்டுமே மிஞ்சும். அவ்வெழுத்துகளால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை விழுமியங்களின் சுவடுகள் முற்றாக இல்லாமல் அழிந்துவிடும். இந்த உண்மையை நாம் மனங்கொள்ள வேண்டும். இன்று தமிழ் வளர்ச்சி என்பது ஆடம்பரங் களுக்குள் அகப்பட்டுத் தவிக்கின்றது. எளிமையாக – ஆனால் வலிமையாக தமிழ் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்து. உண்மை: வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு?
கவிஞர்ஆ.பழநி: தாய்_பிள்ளை தொடர்புதான். வாழ்க்கையிலிருந்துதான் இலக்கியம் பிறக்கின்றது. இலக்கியத்திலிருந்து வாழ்க்கை சிலபோது சில வழிகாட்டல்களைப் பெறுவது உண்மைதான். என்றாலும், இலக்கியம் பிறப்பது வாழ்க்கையின் மடியில்தான். வாழ்க்கை விழுமியங்களால் அணி செய்யப்படுகின்றபொழுது அக்கால இலக்கியங்களும் அணி பெற்றுத் துலங்கும். வாழ்க்கை தன் விழுமியங்களைத் தொலைக்கின்ற பொழுது அக்கால இலக்கியங்களில் அவ்விழுமிய அழிவின் வெளிப்பாட்டைக் காணலாம். வாழ்க்கையில் பிறந்து வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு கருவிதான் இலக்கியம். அது வரலாற்றுக் கண்ணாடியாக விளங்கி வருங்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டுகிறது; தாழ்ந்து போகாதே! நீ யார் என்பதை மறவாதே! என்று எச்சரிக்கின்றது; ஏறு! ஏறு! முன்னேறு என்று ஊக்கப்படுத்துகின்றது. மரத்திலிருக்கின்ற இலைகள் உதிர்ந்து நிலத்தில் புதைந்து மரத்தின் தொடர்ந்த வளர்ச்சிக்கு உரமாவதுபோல _ இலக்கியமும் வாழ்க்கையில் பிறந்து அதற்கே உரமாகி வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது.
இன்னொரு வகையில் பார்த்தால் வாழ்க்கையின் நிழல்தான் இலக்கியம் என்று அறியலாம். இந்த உயிரற்ற நிழல்தான் உயிர்ப்புள்ள வாழ்க்கைக்கு உந்துதலாக விளங்குகின்றது. ஆதலின் இலக்கியத்தைப் புனைவுகளுக்குள் போட்டுப் புதைத்து விடாமல் எழுச்சி ஊட்டும் ஒன்றாக – என்றும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாக வைத்திருக்க வேண்டியது படைப்பாளர்களின் தலையாய கடமை.
உழவர்கள் தம் நிலத்தில் நாற்றங்கால் என்று ஒரு பகுதியைத் தனியே ஒதுக்கி வைத்திருப்பார்கள். எல்லா இடத்தையும் நாற்றங்காலாகப் பயன்படுத்துவதில்லை. காரணம், நாற்றங்காலாகப் பயன்படுத்தப்படும் நிலத்தின் தன்மை, வளம், நீர் பாய்ச்சவும், நீர் வடிக்கவுமான வசதி போன்ற சிறப்பியல்புகளைப் பொறுத்துத்தான் நாற்றங்கால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுத்த பின் அந்நிலத்தைத்தான் தொடர்ந்து நாற்றங்காலாகப் பயன்படுத்துவர். தமிழர் விழுமியங்களின் நாற்றங்கால் எது தெரியுமா? இலக்கியம்தான். விழுமியங்கள் இங்கேதான் பதியமிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தேவையான விழுமியத்தைத் தேர்ந்தெடுத்து தன் வாழ்க்கை வயலில் வளர்த்துக் கொள்ளலாம். எந்தப் பயிரும் நாற்றங்காலிலேயே இருந்து விளைந்து பயன் தருவதில்லை. வாழ்க்கை நிலத்திலிருந்து பறித்து நட்ட பின்னர்தான் பெரும்பயன் விளைக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் – இலக்கியத்தின் இன்றியமையாமை தெளிவாகப் புலப்படும்.
உண்மை: உங்களுக்குத் திராவிட இயக்கத் தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது? அச்சூழல் குறித்துக் கூறுங்கள்.
கவிஞர்ஆ.பழநி: படிப்பை அய்ந்தாம் வகுப்போடு முடித்துக் கொண்டு குழந்தைத் தொழிலாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன். கடைகளில் சிற்றேவல் புரிபவனாக – விற்பனையாளனாக என்று சில ஆண்டுகள் ஓடின. அந்தக் காலகட்டத்தில்தான் அழகப்பர் கல்லூரி தொடங்கப்பட்டது. அதில் பயில இளைஞர்கள் பலர் காரைக்குடிக்கு வந்தனர். அவர்களில் தியாகராசன் என்பவரோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். திராவிட இயக்கத்தில் ஆழமான பற்றுக் கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டாலும் படிக்கும் பழக்கத்தை (புத்தகம்) நான் என்றுமே கைவிட்டதில்லை. ஆதலின் நண்பர் தியாகராசன் வாங்கி வைத்திருக்கும் ஏடுகளைப் படிப்பதும் பின்னர் அவரோடு விவாதிப்பதும் பொழுதுபோக்காகத் தொடங்கியது. பின்னர் என்ன ஆயிற்று. கம்பளிப் போர்வை என்று கரடியைத் தொட்டவன் கதையாயிற்று. திராவிட இயக்கச் சிந்தனைகள் என்னைச் சிக்கெனப் பற்றிக் கொண்டுவிட்டன.
சார்ந்ததன் வண்ணமாக எதுவும் மாற்றமடையும் என்பார்களே, அது என் வாழ்க்கையிலும் நடந்தது. இந்த மாற்றம் தந்த வேகம் எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளி இருந்த அண்ணன் இராம.சுப்பையா அவர்களோடு கொண்ட உறவை வலுப்படுத்தியது. பிறகு? பிறகென்ன முழுமையான திராவிடர் இயக்கத் தொண்டன் ஆனேன். இயக்கப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பின்னர்தான் எனக்குத் திராவிடர் இயக்க ஈடுபாடு ஏற்பட்டது. அதுவும் தி.மு.க.வில்தான் தொடங்கியது. என்றாலும், அந்தக் காலத்துத் தி.மு.க தந்தை பெரியாரின் கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்ட காலம். கடவுள் மறுப்பு, புராண எதிர்ப்பு போன்றவற்றில் எந்தத் தடுமாற்றமும் ஏற்படாத காலம். எனவே, நான் தி.மு.க.வில் இருந்தாலும் தந்தை பெரியாரின் கருத்தை முற்ற முழுக்க ஏற்றுக் கொண்டவனாகவே இருந்தேன் _ இன்றும் இருக்கின்றேன். எம் போன்றோர் தாய்க் கழகத்தை நோக்கி நடப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏற்றுக் கொண்ட கொள்கையை இழக்க முடியாமல் இடத்தை மாற்றிக் கொண்டதன் வாயிலாகக் கொள்கைப் பிடிப்பை உறுதி செய்து கொண்டேன். தேர்தல் அரசியல் தேவையில்லை என்ற பெரியாரின் சிந்தனை ஆழத்தை என்னால் இன்றுதான் உணர முடிகின்றது.
உண்மை: உங்களால் இயக்கம் அடைந்தது என்ன? இயக்கத்தால் நீங்கள் பெற்றது என்ன?
கவிஞர்ஆ.பழநி: என்னால் இயக்கம் அடைந்தது என்ன என்பதைத் தனியே பார்த்துக் காட்டுவது முடியாது. சாம்பாரில் உள்ள உப்பு, புளிப்பு போன்றவற்றைத் தனியே எடுத்துப் பார்க்க முடியாது. ஏனென்றால், அது மற்றவற்றோடு சேர்ந்து கரைந்து போய்விடும். அதை உணர மட்டும்தான் முடியும். ஆனால், இயக்கத்தால் நான் அடைந்த பயன்களைத் தனியே எடுத்துக்காட்ட முடியும்.
இயக்க ஏடுகளில் வெளிவருகின்ற இனம், இலக்கியம், வரலாறு போன்ற செய்திக் கட்டுரைகள் எனக்குப் புதியதோர் கிளர்ச்சியை ஊட்டின. அவைபற்றி மேலும் விரிவாக அறிய வேண்டும் என்ற ஆசை பெரிதாக வளர்ந்தது. இதற்கு நான் படித்த அய்ந்தாம் வகுப்புக் கல்வித் தகுதி போதுமானதாக இல்லை. இலக்கிய மூல நூல்களை நேரிடையாகக் கற்க வேண்டும் என்ற என் ஆவல் என்னை தமிழ்க் கல்லூரியின் மாணாக்கனாக்கிற்று. இலக்கண இலக்கியங்களை நேரிடையாகக் கற்பித்தது. இதன் விளைவு? ஒரு புலவனாக _ ஆய்வாளனாக _படைப்பாளியாக மாற்றப்பட்டேன். நான் மிகப்பெரிய சிகரங்களை எட்டாமல் இருக்கலாம். ஆனால் சராசரிக்கும் மேலான இடத்தில்தான் இருக்கின்றேன் என்பதில் எந்த அய்யமும் இல்லை. இந்தச் சராசரிக்கும் மேலான இடத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது எது என்றால், எந்தத் தயக்கமும் இல்லாமல் கூறுவேன் _ இந்த நிலை திராவிடர் இயக்கம் எனக்களித்த கொடை என்று. பாரதி சொல்வானே நாற்பதாயிரம் கோவிலில் சொல்லுவேன் என்று. அதைப்போல நாற்பதாயிரம் மன்றினில் கூறுவேன் இத்தகுதியை எனக்களித்தது திராவிடர் இயக்கமே என்று. இயக்கம் முதலில் என்னைச் சிந்திக்க வைத்தது. படைப்பாளியாக்கியது, திறனாளி ஆக்கியது; நீ வந்து நேர்காணல் நடத்தும் அளவுக்கு என்னை உயர்த்தியது. இயக்கத்தில் என்னுடைய இடம் வேராக மறைந்து கிடக்கின்றது. என்னுள் இயக்கத்தின் இடமோ பூவாக _ காயாக _ கனியாக பலரும் அறியுமாறு கிடக்கின்றது. இதுதான் என்னால் இயக்கமும், இயக்கத்தால் நானும் பெற்ற பயன்.
உண்மை: அய்யா, கடவுள் மறுப்பாளன் என்று உங்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள். இதனை நீங்கள் எளிதாகக் கடைப்பிடிக்க முடிந்ததா? ஊசலாட்டம் ஏதேனும் நேர்ந்தது உண்டா?
கவிஞர்ஆ.பழநி: இல்லை. எந்த ஊசலாட்டமும் இல்லை. ஒருவன் ஊசலாட்டத்திலிருந்து தப்ப வேண்டும் என்றால் அவன் இரண்டு நிலைகளில் தேறியாக வேண்டும். ஒன்று: அறிவிலே தெளிவு; இரண்டு: நெஞ்சிலே துணிவு. இந்த இரண்டும் குறைவற இருக்குமானால் எந்தத் தொல்லையும் இருக்காது.
சிலர் அறிவில் தெளிவுடையவர்களாக இருப்பார்கள். ஆனால், நெஞ்சிலே துணிவிருக்காது; சிலர் நெஞ்சில் மிகுந்த துணிவுடையோராக இருப்பார்கள். ஆனால், அறிவிலே தெளிவிருக்காது. இவ்விரு வகையினரும் நெருக்கடியான நிலை வருகின்றபோது தடுமாறுவார்கள்; பின்னர் தடம் மாறுவார்கள். நான் கடுமையான நோய்க்கு ஆளாகி, தொடர்ந்து பல அறுவை மருத்துவம் செய்து கொண்டிருந்த காலை என் காதுபடவே மருத்துவர்கள் நிலைமை கைமீறி விட்டது; நாளை நீங்கள் உடலைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று என் தமையனாரிடம் ஒரு முறையல்ல இரண்டு முறை கூற நேர்ந்தது. இதனைக் காதுகுளிரக் கேட்டுக் கொண்டிருந்த நான் எத்தகைய பதற்றத்திற்கும் ஆளாகவில்லை. மாறாக, மரணத்திற்குப் பிறகு மனிதன் நிலை என்ன என்பதை யாரும் கண்டு சொன்னதில்லை. அந்த இரகசியத்தை இன்று நாம் சந்திக்கப் போகிறோம் என்று ஆவலோடு காத்திருந்தேன். ஆனால், என்னுடைய தெளிவும் துணிவும் சாவோடு நிகழவிருந்த சந்திப்பை ஒத்திப் போட வைத்துவிட்டன. தெளிவும் துணிவும் அச்சத்தை அடித்து வீழ்த்துகின்றபோது மரணம்கூட வரும் வழியை மாற்றிக்கொண்டு வழிவிடுகின்றது என்பதுதான் உண்மை. தெளிவும் துணிவும் இருந்தால் – முழுமையாக இருந்தால் கடவுள் மறுப்பாளனாக இருப்பதில் எத்தகைய இடர்ப்பாடும் இல்லை.
உண்மை:: உங்களுடைய ஆசிரியப் பணி பற்றிக் கூறுங்கள்.
கவிஞர்ஆ.பழநி:: என்னுடைய ஆசிரியப் பணி ஒரு வரையறுக்கப்பட்ட வழியில் மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தமிழாசிரியன் ஆதலின் புராணங்களையும் கடவுட் பாசுரங்களையும் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றபோது ஒன்றை மாணாக்கருக்குத் தெளிவுபடுத்தி விடுவேன். இதில் வருகின்ற செய்திகள் கருத்துகள் எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்று எடுத்துக்கொண்டு விடாதீர்கள். இதில் கற்பனையும் ஆசையும் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. எனவே, விழிப்போடு கவனியுங்கள் என்று சொல்லிய பிறகுதான் அவற்றை நடத்தத் தொடங்குவேன்.
ஆசிரியர்களில் சிலர் மதிப்பெண்கள் நோக்கிலேயே பாடத்தை நடத்துவார்கள். நான் அவ்வாறு நடத்துவதில்லை. மாறாக சிந்தனையைத் தூண்டுகின்ற வகையில்தான் பாடம் நடத்துவேன். எந்தப் பாடத்தை நடத்தினாலும் மாணவர்களின் முழுக் கவனமும் பாடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருக்கும்.
பாடலின் கருத்து அவலம் என்றால் மாணாக்கர்கள் முகம் சோகத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். மகிழ்ச்சியானது என்றால் மகிழ்ச்சியும் சிரிப்பும் அலைமோத வேண்டும். பாடத்தின் அடிப்படையான உணர்ச்சியிலிருந்து மாணவர்கள் விலகிவிடாமல் கொண்டு செலுத்துவதுதான் என்னுடைய கற்பிக்கும் முறை. இதனை மாணவர்களும் விரும்பினர் என்றே கருதுகின்றேன்.
உண்மை:: அய்யா! ஏடுகளில் இருந்த தமிழ் தாள்களுக்கு மாறி இன்று இணைத்திற்குள் குடிபுகுந்துவிட்டது. இதில் தமிழ் வளர்ச்சி எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?
கவிஞர்ஆ.பழநி: மனிதனின் நுகர்பொருள்களில் ஏனைய பொருள்களின் வளர்ச்சி வேகத்தைவிட மின்னணுக் கருவிகளின் வளர்ச்சி புயல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கின்றது. தொலைத் தொடர்பு என்பதில் உள்ள தொலை தொலைந்து போய்விடும் என்று அஞ்சும் அளவுக்கு தொடர்புகள் அணுக்கமாகிவிட்டன. அறிவியல் போக்கில் இஃதொரு ஆர்ப்பாட்டமான நிலை. இதனால் உலகின் எந்த மூலைக்கும் தமிழைக் கொண்டு செல்ல முடிகின்றது. தமிழ்ச் சிந்தனைகள் உலகம் முழுவதும் வலம் வருகின்றன. இது ஒரு நல்வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் தருகின்ற செய்திகளின் தரம் மேலானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்வரும் நாளில் மனித குலம் வளர்ச்சிப் பாதையில் பல்வேறு முரண்களைச் சந்திக்க நேரும்; மோதல்களை எதிர்கொள்ளக்கூடும். அத்தகு நிலைகளில் முரண்களில் இருந்து விடுபட்டும், மோதலில் இருந்து புதுமையைத் தேர்ந்தும் இலக்கை எட்டுவதற்கான வடிகாலாக இணையத் தமிழ் இலங்க வேண்டும். உலகம் ஒரு குலம் என்ற கோட்பாட்டின் வெற்றிக்கு உதவுவதாகவும் அது அமைய வேண்டும். எந்த ஒன்று விரைந்து செல்லவல்லதோ அது தீமையையும் விரைந்து செலுத்தும்; நன்மையையும் விரைந்து செலுத்தும். ஆதலின் இணையத்தில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
உண்மை: நீங்கள் தர விரும்பும் பொங்கல் புத்தாண்டுச் செய்தி என்ன?
கவிஞர்ஆ.பழநி: பொங்கல் என்பது தமிழ் நாகரிகத்தின் ஒப்பற்ற விழா. உழைப்பின் வெற்றியை ஊரறியச் சொல்லும் விழா. உழைப்பும் அதன் பயனும் உலகின் பொது என்பதைப் போதிக்கும் விழா. உழைப்பும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; பயனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற சமனியக் கருத்தைச் சடங்காக நிகழ்த்திக் காட்டும் விழா. பொங்கலிட்டுச் சூரியனை வணங்குவதும், மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதும் தமிழன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையன் என்பதை எடுத்துக் காட்டுவதாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. வாழ்க்கையில் ஒரு வழி பிறக்க வைக்கின்ற நாளை ஆண்டின் தொடக்க நாளாகவும் கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. நீண்ட நாள்களாக சித்திரையே இருந்துவிட்டது. ஆகவே, அதை மாற்றக்கூடாது என்று அடம் பிடிப்பவர்கள் அனுபவப் பாத்தியதைக்கான சட்டப்பிரிவை நீட்டுகின்றனர். இன்றும் சிலர் ஜோதிடரின் புரட்டுகளைச் சொல்லம்புகளாக்கி வீசுகின்றனர். ஒரு வட்டத்தின் தொடக்கத்தை எவ்வாறு அறிய முடியும்? ஒரு புள்ளியை வைப்பதன் மூலமாகத்தான் அறிய முடியும். சிலர் சித்திரையில் வைக்கின்றார்கள். சிலர் தையில் வைக்கின்றார்கள். சித்திரையாயினும் சரி, தை ஆயினும் சரி, அது இயற்கை வைத்த புள்ளி இல்லை. இவை எல்லாம் மனிதனால் வைக்கப்பட்ட புள்ளிகள்தாம். இதுதான் உண்மை என்பதை உலகின் பல நாடுகளில் நிலவும் ஆண்டுப் பிறப்பைக் குறிக்கும் நாள்காட்டிகளை ஒருமுறை பார்த்தாலே போதும். உண்மை விளங்கும். ஆதலின், தையைப் புத்தாண்டின் தொடக்கம் என்றும் இவ்வாறு இதனைப் புத்தாண்டுத் தொடக்கம் என்று சொன்னால் பூமி இரண்டாகப் பிளந்து விடாது என்றும் தேறுதல் சொல்வது பகுத்தறிவியக்கத் தாராகிய நம் கடமை.
நேர்காணல்: தி.என்னாரசு பிராட்லா