பேராசிரியர் மருத்துவர் வெ.குழந்தைவேலு
இதய நோய்கள்
உடலின் அனைத்துப் பகுதிகளின் உறுப்புகளை நோக்கிலும் உயிர் வாழ்க்கைக்கு இதயமே இன்றியமையாத செயலினை ஆற்றவல்லதாகும். அப்படிப்பட்ட இதயமானது பல்வேறு காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகலாம்.
எடுத்துக்காட்டாக,
- பிறப்பிலேயே தோன்றும் இதயக் குறைபாடுகள் ஊனங்கள் (congenital heart diseases/anomalies);
- முடக்குவாத நோய் தொடர்புடைய பாதிப்புகள்; வால்வு பாதிப்புகள் (rheumatic heart diseases; valve diseases);
- பால்வினை நோயான வெட்டை நோயின்பாற்பட்ட மாதமனியின் நீண்டகால அழற்சி பாதிப்பு (chronic syphilitic aortitis; valvular damage and coronary arteritis);
- பிற பாக்டீரியா_வைரசு கிருமிகளின் நேரடித் தாக்குதல்கள் (other bacterial and viral cardiac diseases);
- வளர்ச்சிக்கட்டிகள் (tumours);
- இதயத்தசைகளுக்கே உரிய நோய்கள் பல (cardiomyopathies);
- மது, புகை, புகையிலையின் நச்சுகள், இரசாயனப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் (alcohol, cigarette, tobacco, toxins, chemical induced cardiomyopathies);
- நுரையீரல் தொடர்பான நோய்களையடுத்து ஏற்படக்கூடிய இதய பாதிப்புகள் (corpulmonale);
- இதய வெளியுறை, உள்ளுறை பாதிப்புகள் (pericardial diseases);
- காரணம் கண்டறிய முடியா நிலையில் உள்ள இதய நோய்கள் (idiopathic cardiac diseases);
- உயர் இரத்த அழுத்தம் (hypertension);
- இரத்தத்தில் கொழுப்புப் பொருள்கள் மிகுதல் (hyper-lipideamias);
- தொடர்ந்து அவ்வப்போது ஏற்படக்கூடிய இதய இரத்த நாளத்தடைகள் (recurrent coronary occlusive disorders)
- நீரிழிவின்பாற்பட்ட இதயப் பாதிப்புகள் (diabetic cardiac disorders)
- இதய மாரடைப்பு (heart attack or myocardial infarction) போன்றவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அடிப்படையில் பெரும்பாலும் இதய நோய்கள் அமைகின்றன.
பல்வேறு இதய நோய் களைக் கணக்கில் கொண்டா லும் நீரிழிவும், இரத்தக் கொதிப்பும், இதய மாரடைப்பும் குறிப்பிடப்படும் அளவில் மனித சமுதாயத்தை அலைக்கழிக்க வல்லனவாகவே உள்ளன.
உரிய பராமரிப்பற்ற நிலையில் அவை ஒருவரின் வாழ்நாளிலேயே பெரும் பொருளாதார இழப்பிற்கும் காரணமாகிவிடுகின்றன;
சில நேரங்களில், அவை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி உயிரினைப் பறிப்பனவாகவும் அமைகின்றன. ஆகவே, அந்த நோய்கள் பற்றிய பட்டறிவும் விழிப்புணர்வும் அவசியமாகிறது; அவைபற்றி நோக்குவோம்.
நோய்களுள் கொடிய நோய்…
உடலிலமைந்த அனைத்துத் திசுக்களின் – செல்களின் உயிரோட்டத்திற்கு இன்றியமையாத தாகக் கருதப்படும் உயிர் வளியினைத் தாங்கிய குருதியினை, துடிப்புள்ள இதயம் தொடர்ந்து இறைத்துவிடுவதாலேயே உயிர் நிலைத்து நிற்க ஏதுவாகிறது.
உடலுறுப்புகளிலேயே தலையாயதாகக் கருதப்படும் இதயமானது, பிறவி நோய்கள், முடக்குவாத நோய்கள், பால்வினை நோய்கள், வைரசு – பாக்டீரியா தாக்குதல்கள், வளர்ச்சிக் கட்டிகள் – புற்றுகள், இதயத்தசைப் பாதிப்பு நோய்கள், மது, புகை, நச்சுக்கள், வேதியல் பொருள்களின் பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றாலும் குருதி அழுத்த மிகையான இரத்தக்கொதிப்பு, குருதியில் கேடுவிளைவிக்கக்கூடிய கொழுப்புப் பொருள்கள் மிகை அதனால் ஏற்படக்கூடிய இதயத் தசைகளுக்கான கொரோனரித்தமனி நாள பாதிப்புகள் _ தடைகள்; அவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய திடீர் இதயத்தசைச் சிதைவு _ மாரடைப்பு, நேற்றிருந்தார்; இன்றில்லை! எனும் கூற்றிற்கு எடுத்துக்காட்டாக இருந்து, அதனை மெய்ப்பிக்கின்ற அளவில், சில வேளைகளில் பெரும் விபத்து போன்று திடீரென உயிரினைப் பறித்துவிடுவதால் உடலில் தோன்றக்கூடிய நோய்களிலேயே கொடிய நோயாகக் கருதப்படுகிறது; சமுதாயத்தை அலைக்கழித்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது; பெரும் பொருளாதார இழப்பிற்கும் காரணமாகிவிடுகிறது.
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், தூண்டுதல் காரணங்கள், தற்காப்பு நடவடிக்கைகள் – தடுப்பு முறைகள், கிட்டக்கூடிய பரிசோதனைகள், மருத்துவம், நோய் பராமரிப்பிற்கான வழிவகைகள் பற்றிய உண்மைகள் பற்றி அறியா நிலையில் – தெளிவுபெறா நிலையில் – உரிய பராமரிப்பற்ற நிலையிலேயே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்பட்டுவிடுகிறது; மாரடைப்பின் கொடுமைகளிலிருந்து தப்பமுடிவதில்லை. மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு இலக்காகுபவர்களே, பெரும்பாலும் அந்நோய்கள்பற்றி அறிந்துகொள்வதற்கு நாட்டம் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, மருத்துவர்கள் அளித்திடும் ஆலோசனைகளாலும், அரிய மருத்துவ ஆலோசனைக் குறிப்பு நூல்களாலும் நன்மைகள் கிட்டுமெனினும், அந்நோய்களைப் பற்றி மக்களனைவரும், குறிப்பாக, இளைஞர்கள் அறிந்து வைத்திருப்பார்களேயானால், அதுவே பெரும்பாலும் அவர்களது உடல் நலத்தினைப் பேணிக் காப்பதற்கு வழிவகுத்திடுவதோடு ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கே பயனுள்ளதாக அமையும்; பொருளாதாரப் பேரிழப்புகளிருந்து காப்பதோடு திடீர் மரணத்திருந்து தப்பிவிடுவதற்கும் வழி கிடைத்துவிடும்.
குறிப்பிட்ட நோய்கள் எவருக்கு, எப்பொழுது தோன்றும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது என்கிற நிலை இருப்பதாலும், இந்நோய்கள் எவருக்கும் வரக்கூடிய சூழ்நிலைகள் உண்டு என்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது.
இதயத் தசைகளுக்கான கொரோனரித் தமனி நாளங்கள்…
இதயம் என்பது, உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான குருதியை (இரத்தத்தை), குருதி நாளங்கள் (இரத்த நாளங்கள்) வாயிலாகத் தொடர்ச்சியாக இறைத்துவிடும் இயந்திரம்’ ஆகும்.
இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பதாலேயே உடலில் அமைந்த அனைத்துத் திசுக்கள் – செல்கள் குருதியைப் பெற்று உயிர் பெறுவதற்கும் செயலாற்றுவதற்கும் ஏதுவாகிறது.
தான் இயங்கினால்தான் பிற உறுப்புகள் – திசுக்கள் – செல்கள் இயங்க முடியும் என்பதற்கேற்ப இதயம் தமக்கே உரிய குருதியைக் கொரோனரித் தமனி நாளங்கள் வாயிலாகப் பெறுகிறது.
வலப்பக்கம் அமைந்த இதயத் தசைகளும், இடப்பக்கம் அமைந்த இதயத்தசைகளும் முறையே, வலக்கொரோனரித் தமனி வாயிலாகவும் இடக் கொரோனரித் தமனி வாயலாகவும் உயிர்வளியைத் தாங்கிய குருதியைத் தொடர்ச்சியாகப் பெற்று செயல் புரிகின்றன.
வல கொரோனரித் தமனியானது (right coronary artery) மாதமனியின் அடிப்பகுதியில் வலப் பக்கத்திலிருந்து வெளிப்பட வல்லதாகும். இந்த இரத்த நாளமானது இதயத்தின் வலப் பக்கமாகச் சென்று வல கீழறையான வல வென்ட்ரிக்கலின் முன்பகுதித் தசைகளுக்கும் வல, இட கீழறைகளான வல, இட வென்ட்ரிக்கலின் பின்பகுதித் தசைகளுக்கும் இரத்தத்தைச் செலுத்துகின்றன. அப்படி இரத்தத்தைச் செலுத்திடும்போது, S.A. NODE, A.V. NODE ஆகிய இதயத்துடிப்புக் கேந்திரங்களும், இந்த வல கொரோனரித் தமனித் தாரைகளிருந்து இரத்தத்தைப் பெறுகின்றன.
இட கொரோனரித் தமனியானது மாதமனியின் அடிப்பகுதியில் இருந்தே இடப்புறத்திருந்து வெளிப்படுகிறது. இட கொரோனரித் தமனி, அளவில் பெரியதாகும். இந்த இட கொரோனரித் தமனியானது. இரண்டு பெரும் கிளைகளாகப் பிரிந்து, இதயத்தின் முன்புறமாகக் கீழ்நோக்கிச் செல்லும் தமனித்தாரைக் கிளையாகவும் (left anerior descending coronary artery), இடப்பக்கமாக வளைந்து செல்லும் தமனித்தாரைக்(left circumflex coronary artery) கிளையாகவும் பிரிந்து சென்று இதயத்தசையின் பிற பகுதிகளுக்கும் இரத்தத்தைப் பாய்ச்சுகின்றன.
இதயத்தின் முன்புறமாக அமைந்த இட கொரோனரித் தமனியானது வல, இட வென்ட்ரிக்கலின் முன்பகுதி, வல – இட வென்ட்ரிக்களுக்கிடையே அமைந்த தடுப்புச் சுவரான இன்ட்டர் வென்ட்ரிக்குலார் செப்டம் (inter ventricular septum), இட வென்ட்ரிக்கலின் நுனிப்பகுதி ஆகிய இடங்களில் அமைந்த இதயத் தசைகளுக்குக் குருதியைச் செலுத்துகின்றது.
இட கொரோனரித் தமனியிலிருந்து இடப் பக்கமாக வளைந்து கீழ் நோக்கிச் செல்லும் தமனியானது, இட வென்ட்ரிக்கலின் இடப் பக்க மேல்பகுதி அதன் பின்புறத்தின் மேல்பகுதி ஆகிய இடங்களில் அமைந்த இதயத்தசைகளுக்கு இரத்தத்தைச் செலுத்துகிறது (படம்).
கொரோனரித்தமனிகள் அனைத்தும் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்த இதயத் தசைகளுக்கும் இதயத் துடிப்பின் அடிப்படைக் கேந்திரங்களுக்கும் இரத்தத்தைப் பாய்ச்சுகின்றன.
மாரடைப்பு என்றால் என்ன?
இதயத் தசைகளுக்குக் குருதியை ஏந்திச் செல்லும் கொரோனரித் தமனிகளில் திடீரெனத் தடை ஏற்படும்போது, இதயத் தசைகளுக்குத் தேவையான இரத்த ஓட்டமும் உயிர்வளியும் பெரும் அளவிலோ, முழு அளவிலோ கிடைக்காத நிலையில் இரத்த ஓட்டத்தடைப் பகுதிக்குப் பின்னாலமைந்த பகுதிகளில் இதயத் தசைகள் பாதிப்பிற்குள்ளாகி சிதைவடைகின்றன.
இதயத் தசைகளுக்கான இரத்த ஓட்டத் தடையைத் தொடர்ந்து, இதயத்தசைப் பாதிப்பினால் – சிதைவினால் ஏற்படும் கடும் இதய நெஞ்சுவலியின் வெளிப்பாடுகளே, மாரடைப்பு (HEART ATTACK OR MYOCARDIAL INFARCTION)’’ ஆகும்.
கொரோனரித்தமனியின் ஆரம்பக் கட்டத்திலேயே தடை ஏற்படுமாயின், இதயத்தசைப் பாதிப்பானது அந்த கொரோனரித் தமனி பரவியுள்ள பரவலான பகுதியைப் பாதிக்கவல்லதாக அமையும். கொரோனரித் தமனிகள் பாதிப்பிற்கேற்ப மாரடைப்பிற்குள்ளானவர்களின் எதிர்காலமும் சிகிச்சை முறைகளும் அமையும்.