ஆறு.கலைச்செல்வன்
தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்-தான் வீராச்சாமி.
நீண்ட நாள்கள் வேலையின்றி இருந்த அவனுக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. அவன் எதிர்பார்த்ததைவிட அதிக ஊதியமும் கிடைத்தது.
அவனது தாய், தந்தை, ஒரே தங்கை இவர்களை இனிமேல் நல்ல முறையில் வாழ வைக்க முடியும் என நம்பினான். படித்துக் கொண்டிருக்கும் தங்கைக்கும் பிற்பாடு திருமணத்தையும் நடத்தி விடலாம் என நினைத்தான். மேலும் அவன் தங்கை மீராவுக்கு எப்படியாவது அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற அளவு கடந்த ஆசை இருப்பதும் அவனுக்குத் தெரியும்.
“இதெற்கெல்லாம் காரணம் எனது குலதெய்வந்தான். குலதெய்வத்தின் அருளால்-தான் தனக்கு வேலை கிடைத்தது. ஆகவே, குலதெய்வமான வீராதிவீரன் சுவாமிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
வீராதிவீரன் சுவாமிகள் என்பது வீராச்சாமி வசித்து வந்த கிராமத்தில் அவனது பங்காளிகள் குடும்பங்களைச் சேர்ந்த இருபது குடும்பங்களுக்குக் குலதெய்வமாகும். அந்தக் குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்களை அந்த ஊரில் வீரன் வகையறா என்றே அழைப்பார்கள்.
அந்த வகையறாவுக்கென்று அந்த ஊரில் பத்தாயிரம் சதுர அடியில் மனை ஒன்று இருந்தது. அந்த மனையின் ஒரு பக்கத்தின் நடுவில் ஒரு சூலம் நடப்பட்டிருந்தது. அதன் அருகில் செங்கற்களால் ஆன சிறிய மண்டபம் ஒன்றும் இருந்தது. அந்தக் கோயில் மனையின் ஒரு பக்கம் சாலையும் மற்ற மூன்று பக்கங்களிலும் அந்த வகையறாவைச் சேர்ந்தவர்களின் வீடுகளும் அமைந்திருந்தன. ஆனால், அவர்களே அந்த மனையை கொஞ்சம் கொஞ்சமாக வேலியை நகர்த்தி ஆக்கிரமித்து வந்தார்கள்.
வீரன் வகையறா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குக் காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை குலதெய்வம் கோயில் வளாகத்தில் நடத்துவார்கள். மேலும் திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்தவுடன் முதல் அழைப்பிதழை அங்கு வைத்து படைப்பார்கள். மாட்டுப் பொங்கலன்று ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றைப் பலிகொடுத்து அவற்றின் இறைச்சியை இருபது குடும்பங்களும் பங்கிட்டுக் கொள்வார்கள்.
வீராச்சாமி வெளிநாடு சென்று அய்ந்தாண்டுகள் கழிந்தன. நிறைய சம்பாதித்துக் கொண்டு நீண்ட நாள்கள் விடுமுறையும் எடுத்துக் கொண்டு ஒரு நாள் ஊர் திரும்பினான்.
வந்தவுடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த சூலத்தில் எலுமிச்சம் பழங்களைச் செருகிவிட்டு, மண்டபத்தில் இருந்த சிறிய வீரன் சிலைக்கு மாலை போட்டுக் கும்பிட்டான்.
“வீராதி வீரனே! உன்னோட அருளால்தான் நான் வெளிநாடு சென்று சம்பாதித்து வந்திருக்கேன். உனக்குப் பெரிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வேன். எங்களையெல்லாம் நீதான் காப்பாற்ற வேண்டும்’’ என வேண்டினான்.
அடுத்த சில நாள்களில் தனது பங்காளிகள் குடும்பங்களையெல்லாம் தனது வீட்டிற்கு அழைத்தான். அவனது அழைப்பை ஏற்று அனைவரும் வந்தனர். எதற்காக நம்மை அழைத்தான் எனப் பலரும் குழம்பியிருந்தார்கள். அவர்களிடையே பேசினான் வீராச்சாமி.
“நம்ம குலதெய்வம் வீராதிவீரன். நமக்குன்னு கோயில் இடம் இருக்கு. ரொம்ப காலமா ஒரு சூலமும் சின்ன செங்கல் மண்டபமும் மட்டுமே இருக்கு. இப்ப நாம் அந்த இடத்தில் பெரிய கோயில் கட்டணும். அதுக்கு பத்து லட்சம் செலவாகலாம். நாம் எல்லோரும் பங்கு போட்டு வசூல் பண்ணி கோயில் கட்டலாம்.
வசதி படைத்த ஒரு சிலர் மட்டும் அவன் பேச்சை ஆமோதித்தனர். ஆனால், பலரும் பணம் கொடுக்க வசதியில்லாத நிலையில் ஒப்புக் கொள்ளச் சங்கடப்பட்டனர். ஆனாலும், மறுத்தால் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என அஞ்சினர். அதனால் எதுவும் பேசாமல் இருந்துவிட்டனர்.
ஆனால், இளஞ்சூரியனுக்கு கோயில் கட்டுவது அறவே பிடிக்கவில்லை. அவன் மட்டும் எழுந்து பேசினான்.
“பத்து லட்சம் போட்டு கோயில் கட்டுவது அவசியமா? இங்க யார்கிட்ட பணம் இருக்கு? குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள்தான். அவர்கள் நினைவைப் போற்றுவதில் தவறில்லை. அதற்காக நாம் சின்னதாக தகரத்தால் ஒரு கொட்டகை போடுவோம். அதில் நம் முன்னோர்கள் படங்கள் இருந்தால் மாட்டுவோம்.’’
இவ்வாறு இளஞ்சூரியன் பேசியதைக் கேட்ட வீராச்சாமிக்குக் கடும் கோபம் வந்தது. ஆனால், பலரும் ஏதும் பேசாமல் அவன் பேசியதை ஆமோதிப்பதைப் போல் உட்கார்ந்திருந்தனர். குல தெய்வத்துக்கு எதிராகப் பேசினால் நம்மை குலதெய்வம் தண்டித்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு.
“இளஞ்சூரியா! நம் குல தெய்வத்துக்கு கோயில் கட்டுவதைத் தடுக்கக் கூடாது. கோயில் கட்ட நான் ரெண்டு லட்சம் பணம் தர்ரேன். மீதிப் பணத்தை நீங்க எல்லோரும் பிரிச்சி கொடுத்திருங்க. இந்த மாசமே கட்டுமானப் பணிகளைத் துவக்கிடலாம்’’ என்றான் வீராச்சாமி.
பண வசதி படைத்த ஒரு சிலர் ஒப்புக் கொண்டாலும், பலரும் என்ன செய்வதென்று விழித்தார்கள். ஆனாலும், கவுரவத்தை விட்டுக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லை. எதையாவது விற்றாவது பணத்தைக் கொடுக்க வேண்டியதுதான் என முடிவு செய்தார்கள்.
அடுத்த சில நாள்களில் பண வசூலில் இறங்கினான் வீராச்சாமி. இந்நிலையில் ஒரு நாள் வீராச்சாமியின் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து அவனுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது அந்த நிறுவனத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேலை இல்லை எனவும், அதற்குப் பிறகு ஆணை வந்த பின் வரலாம் எனவும் அதன் மேலாளர் தகவல் அனுப்பியிருந்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வீராச்சாமி அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து கோயில் கட்டும் பணியில் இறங்கினான். அதற்காக மீண்டும் கூட்டம் போட்டான்.
“கோயிலைச் சீக்கிரம் கட்ட வேண்டும். அதில் சாமி சிலைகளையும் வைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்’’ என்றான் வீராச்சாமி.
அதைக் கேட்ட இளஞ்சூரியன் மிகவும் கோபப்பட்டான்.
“இது குலதெய்வக் கோயில். அதில் நம் முன்னோர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சாமி சிலைகள் எல்லாம் தேவையில்லை. அதோடு இந்த வருஷம் விவசாயமும் சரியில்லை. அதனால் இப்ப கோயில் கட்டும் வேலையை நிறுத்தி வைச்சுடுவோம். நம்ம குடும்பங்களில் படிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் போட்டித் தேர்வு எழுதி அரசாங்க வேலைக்குப் போகணும். அதுக்கு என்ன தேவையோ அதை இப்ப செய்வோம். வீராச்சாமி தங்கச்சிக்கும் தான் அரசாங்க வேலைக்குப் போக வேணும் என்பதுதான் லட்சியம். அது எனக்கும் தெரியும். நம் முன்னோர்களும் நம்ம சந்ததியில் எல்லோரும் நல்ல வேலைக்குப் போய் சம்பாதிச்சு நல்லாயிருக்கணும்னுதான் விரும்பியிருப்பாங்க.’’
இப்படி இளஞ்சூரியன் பேசியதைக் கேட்ட பலரும் ஆமோதித்தனர்.
“அப்படியே செய்வோம். கோயில் கட்டும் பணியை ஒத்தி வைப்போம்’’ என்றனர்.
வீராச்சாமி கோபத்துடன் வெளியேறினான். சில நாள்கள் சென்றபின் ஒரு நாள் அந்த ஊர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் வீராச்சாமியைக் காண வந்தார்.
“அய்யா! நம்ம ஊர் பள்ளிக் கட்டடம் மிகவும் சேதமடைஞ்சி இருந்ததால் அரசாங்கம் அதை இடிச்சுட்டுது. புதிய கட்டடம் கட்டித் தர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். பள்ளியில் மிக முக்கியமான பதிவேடுகள் எல்லாம் இருக்கு. அதை உங்க வீட்டுல வைச்ச பாதுகாத்தா நல்லதுன்னு நெனைக்கிறேன். பள்ளிக் கட்டடம் கட்டுற வரைக்கும் பள்ளியை நடத்த வேற இடம் நீங்க பார்த்துக் கொடுங்க அய்யா’’ என வீராச்சாமியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“சார், நான் கோயில் கட்டுற சிந்தனையில் இருக்கேன். பள்ளிக்கூடத்திற்கெல்லாம் நான் எதுவும் செய்ய முடியாது. போய் அரசாங்கத்திடம் கேளுங்க.’’ என்று அவரிடம் எரிந்து விழுந்தான் வீராச்சாமி.
“இது உங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம். உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை. அரசும் செய்யும். உங்க ஊர் நன்மைக்காகத்தான் கேட்கிறேன்’’ என்றார் பன்னீர்செல்வம்.
ஆனாலும், அவர் பேச்சைக் கேளாமல் அவரை அனுப்பிவிட்டான் வீராச்சாமி.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவன் தங்கை மீரா மிகவும் மனம் வருந்தினாள்.
“அண்ணா, உனக்கும் இப்ப வேலை இல்லை. எனக்கு இருக்கிறது ஒரே ஆசை. அதுதான் அரசு வேலை. தாத்தா சாகும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு என்ன சொன்னார்? எனக்கு கோயில் கட்டுன்னா சொன்னார்? இல்லையே! நீ படிச்சு அரசாங்க உத்தியோகத்துக்குப் போகணும்னுதானே சொன்னார்!
எனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தது இந்தப் பள்ளிக்கூடம்தானே! ஆசிரியர் அய்யாவை அவமானப்படுத்திட்டியே!’’ என்று அண்ணனிடம் கேட்டு மிகவும் கோபித்துக்கொண்டாள் மீரா.
இதற்கிடையில் படித்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி அனைவரையும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வைத்தான் இளஞ்சூரியன். காலை, மாலை வேளைகளில் அவனே வகுப்புகளை நடத்தினான். அந்த வகைறயா மட்டுமல்லாமல் ஊரில் உள்ள எல்லோரையுமே விண்ணப்பிக்க வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தான்.
அரசுப் பணிகளில் குறிப்பாக பெண்கள் பலரும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைப் பலமாக அவர்கள் மனத்தில் விதைத்தான்.
அந்த நேரத்தில் அரசுப் பணிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்ற அறிவிப்பும் வந்தது. அதற்கு ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரையுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளஞ்சூரியன் அனைவரையும் அழைத்துக் கொண்டு சான்றிதழ் பெற பள்ளிக்குச் சென்றான். தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டினான்.
பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டதால் எல்லாப் பதிவேடுகளையும் ஒரு பெட்டியில் போட்டு ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார் தலைமை ஆசிரியர்.
ஆனால், அந்தப் பதிவேடுகள் அனைத்தும் மழையில் நனைந்தும் செல்லரித்தும் வீணாகிப் போய் இருந்தன. இவர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. சான்றிதழ் தர இயலாத நிலையில் இருந்தார் பன்னீர்செல்வம்.
அரசின் சலுகையைப் பெற முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சிய மீரா, ‘ஓ’வெனக் கதறி அழுதாள். வீட்டுக்கு ஓடிச் சென்று அண்ணனிடம் தனது வாழ்வே பறிபோய் விடுமோ என அஞ்சுவதாகக் கூறிக் கதறினாள். அதேபோல் போட்டித் தேர்வு எழுத உள்ள அந்த வகையறா மட்டுமல்லாமல் மற்றவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். வெளிநாடு சென்று வந்தாலும், அந்த ஊரில் படித்தவர்கள் அதிகம் இல்லாததாலும் வீராச்சாமிக்கு அந்த ஊரில் மரியாதை இருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் வீராச்சாமியைக் கவலையுடன் பார்த்தனர். அரசின் சலுகையை அனுபவிக்க முடியாதது பற்றி வீராச்சாமியிடம் முறையிட்டனர்.
அனைத்தையும் காதில் வாங்கிய வீராச்சாமி ஒரு முடிவுடன் எழுந்து பள்ளியை நோக்கி விரைந்தான். அவனை அனைவரும் பின் தொடர்ந்து சென்றனர். பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு விட்டதால் சமையல் அறையில் உட்கார்ந்திருந்தார் தலைமை ஆசிரியர். பிள்ளைகள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தனர்.
“அய்யா, மன்னிக்கணும். இந்தாங்க அய்யா பணம்’’ என்று கத்தையாக பணத்தை எடுத்து தலைமை ஆசிரியரிடம் நீட்டினான் வீராச்சாமி.
“ஏன்? எதுக்கு?’’ என்று திகைப்புடன் கேட்டார் தலைமை ஆசிரியர். பணத்தை அவர் வாங்கவில்லை.
“ஊரில் பள்ளிக்கூடம் எவ்வளவு முக்கியம்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. இது குலதெய்வக் கோயில் கட்ட வைச்சிருந்த பணம். இதை வைச்சுக்கிட்டு பள்ளிக்கூடம் கட்டுங்க. பதிவேடுகளையெல்லாம் தற்சமயத்துக்கு என் வீட்டில் வைச்சுக்கலாம் அய்யா. பள்ளிக்கூடத்தைக் கூட எங்க வகையறா கோயில் இடத்தில் தற்காலிகமா கட்டிக்கலாம்’’ என்றான் வீராச்சாமி.
தலைமை ஆசிரியர் வீராச்சாமியை வியப்புடன் பார்த்தார்.
“ஆமாம் அய்யா. அரசு சலுகையைப் பெற முடியாம என் தங்கச்சியும் மற்றவங்களும் படும் கஷ்டத்தைப் பார்த்தேன். பள்ளிதான் கோயில்னு நான் உணர்ந்துட்டேன். இந்தாங்க பணம்’’ என்று மீண்டும் பணத்தை நீட்டினான்.
“ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் பணத்தில் நீங்களே தற்காலிகமா ஒரு கொட்டகை கட்டிக் கொடுங்க. பிள்ளைகள் படிக்கவும் பதிவேடுகளைப் பராமரிக்கவும் ரொம்ப உதவியா இருக்கும். இப்போ அரசு சலுகையைப் பெற முடியாதோ என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். எனது மேலதிகாரிகளிடம் சொல்லி எப்படியாவது சான்றிதழ் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்ற தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வத்தை அனைவரும் நன்றியுடன் பார்த்தனர்.
வீராச்சாமியின் செயலை அந்த வகையறா மக்கள் மட்டுமல்லாமல் ஊர் மக்கள் அனைவரும் பாராட்டினர்.