– புதுக்கோட்டை ம.மு.கண்ணன்
ராசன் அவரது கடைசி மகன் பாபுவின் திருமணத்துக்காக ஓடி ஓடி வேலை பார்த்தார். பாபு வெளிநாட்டில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். திருமணம் செய்து வைத்து கொஞ்ச நாட்கள் இங்கு வைத்திருந்து இருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க பெண்ணின் வீட்டாரும் ஒத்துக் கொண்டதால் திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
தாழ்த்தப்பட்ட இனத்தில் ராசன் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர். ஊருக்குள் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. பிள்ளைகள் ஆசைப்பட்டதாலும் கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டால் நல்லது என்று அய்யர் ஒருவர் சொன்னதாலும் கோவிலுக்குள் போவதை தான் பார்த்துக் கொள்வதாக அய்யர் சொன்னதை நம்பி ஏற்றுக் கொண்டு கோவிலில் திருமணம் என்று முடிவாகி விட்டது. பெண் வீட்டுக்காரர்கள் கோவிலில் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். ஆனாலும் கோவிலிலேயே ஏற்பாடு ஆகிவிட்டது. நல்ல முகூர்த்த நாள் என்பதால் சமையல்காரர் அதிகமாகக் கூலி கேட்டார். காய்கறி, பூ விலையோ விண்ணைத் தொட்டு நிற்கிறது. வீடியோ கிராபர் பிடித்தாயிற்று. போட்டோகிராபர் கிடைக்கவில்லை. திருமணம் நடக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அனைவரும் காலை எட்டு மணிக்கே வந்துவிட்டார்கள். அய்யர் வந்து சேர்ந்தபோது ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அய்யரைப் பார்த்து முறைத்தார்கள்.
பார்வையின் கடுமையைப் புரிந்து கொண்ட அய்யர் கோபிச்சுக்காதீங்க. விடிகாலை மூன்று மணிக்கெல்லாம் தேவரின் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். ஆறு மணிக்கெல்லாம் செட்டியார் நகைக்கடைத் திறப்பு விழாவிற்கு ஹோமம் செய்யப் போயிருந்தேன். முடிச்சுட்டு வர லேட்டாயிடுத்து. இருந்தாலும் சொன்ன டைமுக்கு வந்திட்டேனோ இல்லியோ? கேள்விக்குறியோடு நிறுத்த, அருகிலிருந்தவர்கள் ‘வந்தது வந்துட்டீங்க சீக்கிரம் வேலையை ஆரம்பிங்க என்றனர். நெல்லை எடுத்துப் பரப்பி அதன்மீது பாயை விரித்துப் போட்டார். என்னென்ன பொருட்கள் தேவையோ அனைத்தையும் கேட்டுப் பெற்று மணமக்கள் அமரும் இடத்துக்கு முன்புறத்தில் பரப்பினார். மணமக்களை ஒவ்வொருவராக அழைத்து வந்து அமரச் செய்தார். மணி சரியாக பத்தாகியது.
மின்சாரம் நின்றுவிட்டது. கோவிலுக்குள் போதிய வெளிச்சம் இல்லாமலிருந்தது. அதனால் வீடியோ எடுக்க முடியாமல் வீடியோகிராபர் தடுமாறினார். பேட்டரியில் கேமரா இயங்கும், ஆனால் போதிய வெளிச்சத்திற்கு எங்கே போவார்? எடுத்தால் படம் கருப்பாக இருக்கிறது. என்ன சடங்கு முறைகள் நடைபெறுகின்றன என்பது அறவே தெரியவில்லை. ‘எல்லோரும் கொஞ்சம் உட்காருங்க என்று சொன்னதுதான் தாமதம், ‘யாரைப் பார்த்து உட்காரச் சொன்னே. நான்தான் இங்கு மாமன்தனம் செய்ய வந்திருக்கேன். எடுக்க முடிஞ்சா எடு இல்லாங்காட்டி பேசாம இரு என்றார் ஒருவர்.
கரண்ட் கட்டாகிடுச்சு. இருக்கிற வெளிச்சத்துல நீங்க கொஞ்சம் ஒத்துழைப்புக் கொடுத்தீங்கன்னா படம் எடுக்கலாம். அதுக்காகத்தான் சொன்னேன் என்று கூறி முடிப்பதற்குள், அந்த நபர் ‘யோவ் நான் மாமங்காரனா நீயா என்று சத்தமிடவும் அங்கு இந்தச் சத்தம் காதில் விழுந்தவுடன் ராசன் அருகில் வந்து வீடியோகிராபரிடம் சார் அவுங்கதான் மாமா. நான் இந்த இடத்தில் எதுவும் சொல்ல முடியாது. ஜெனரேட்டர் கிடைத்தாலும் கோவிலுக்குப் பக்கத்தில் வைக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். பார்த்து எல்லோரையும் சமாளிச்சு எடுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு அவரது அடுத்த வேலைக்குப் போய்விட்டார்.
இருக்கும் வெளிச்சத்தில் கிடைத்த படத்தை எப்படிக் கிடைக்கிறதோ அப்படி எடுத்து வைப்போம், படம் கருப்பாக இருந்தால் பிற்பாடு பேசிக் கொள்வோம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு படத்தை எடுக்கத் துவங்கியபோது சாம்பிரானிப்புகை வேறு. அய்யர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த ஒரு பெரிசு ‘சாமி எல்லா மந்திரங்களையும் நல்லா சொல்லுங்க. ஒரு சடங்கையும் விட்டுவிடக் கூடாது. அதுக்காகத்தான் உங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். அய்யருக்கு நல்ல மகிழ்ச்சி. இதுபோன்ற ஆட்கள் இருந்தால்தானே நல்லா ஏமாற்றிக் காசு பார்க்கலாம்.
பொண்ணு மாப்பிள்ளைக்கு அவர்களது கைகளில் கங்கணக் கயிறு கட்டுவதில் தொடங்கி கன்னிகாதானம் செய்வது தொடர்ந்து மஞ்சள் தண்ணீரில் மோதிரம் தேடி எடுப்பது கடைசியாக கங்கணக்கயிறு அவிழ்ப்பதுவரை பொண்ணு மாமன் வாங்கோ மாப்பிள்ளை மாமன் வாங்கோ என்று அவர்களைத் தேடித்தேடிப் பிடித்து கூவிக்கூவி அழைத்து அவர்களிடம் தட்சணை வைக்கச் சொல்லி இரண்டு பேரிடமும் பதினோரு ரூபாய் வையுங்கோ நூற்றி ஒன்னு வையுங்கோ என்று இரு மாமன்காரர்களிடமும் பலநூறுகளைக் கறந்து விட்டார். மாமன்கள் இருதரப்பும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் ‘இந்தச் சாமிக்கு எவ்வளவு கருணை பாருங்க நம்பளை விட்டு விடாமல் எல்லாத்துக்கும் அழைச்சு அழைச்சு என்னமா மரியாதை தர்றாரு பாருங்க. அய்யருன்னா இப்படித்தான் இருக்கணும். நூறம்பது காசு போகுது. இந்தக் காலத்துல எவன் மரியாதை தர்றான். இந்த மாதிரி அய்யர்களைத்தாங்க கல்யாணத்துக்கு அழைக்கணும். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மணமகளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இவனுங்க தொல்லை வேண்டாம் என்று கருதித்தான் மண்டபத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே சொன்னோம். ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்கவில்லை. இவர்கள் எப்போதான் திருந்துவார்களோ தெரியவில்லை என மணமகள் நினைத்தாள்.
மணி பன்னிரெண்டாகியபோது மின்சாரம் வந்தது. அய்யர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருந்தார். ‘பகவான் அருளைப் பாருங்க. இந்தப் பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆயுசு நூறு. திருமணம் முடிஞ்ச கையோட கரண்ட் வருது பாருங்க. எல்லாம் பகவான் செயல் என்று அடுத்தவர்கள் காதுகளில் ஒலிக்குமாறு அய்யரே சொல்லிக் கொண்டு ராசனைத் தேடிப் பிடித்து ‘சார் நான்… என்றான்.
‘ஓ! அதை மறந்துட்டேனா!! சாரி சாமி கோவிச்சுக்காதீங்கோ. எவ்வளவு சாமி?
‘என்ன அதை மறந்துட்டீங்களா மூவாயிரத்து ஒன்னு பேசினது ஆயிரம் கொடுத்தீங்க! பாக்கி ரெண்டாயிரத்து ஒரு ரூபாய் ராசன்.
‘சரி சரி ஒரு நிமிடம் இருங்க சாமி தோ வந்துடறேன் அந்தப் பக்கம் திரும்பி ‘எங்கப்பா ஒரு தட்டெடுங்க அதுல வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வச்சு எடுத்துக்கிட்டு வாங்க. மறக்காம ஆப்பிள்ல ரெண்டு எடுத்து வச்சுக் கொண்டுவாங்க என்றார் ராசன். அங்கிருந்த ஒருவர் ராசன் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்ததை வாங்கிக் கொண்டார். அய்யர் மனதுக்குள் ஆத்துல மாமிக்கு ஆப்பிள்னா ரொம்பப் பிடிக்கும். மகராசன் மாமி விரும்பும் காஷ்மீர் ஆப்பிளே தந்திருக்கார் என்று நினைத்துக் கொண்டார்.
‘இந்தாங்க சாமி. சாமிக்கு நிறைய வேலை இருக்கும். போதுமா சாமி? என்றார். எல்லாம் பகவான் அருள். நீங்களா கொடுக்கறதை நான் வாங்கிக்கறேன். இதுலெ கூட என்ன குறைய என்ன, நன்னா இருப்பேள் என்று சொல்லி வாங்கிக் கொண்டு பணத்தை எடுத்துச் சரிபார்த்துவிட்டு சுருட்ட முடிந்ததை எல்லாம் சுருட்டிக் கொண்ட திருப்தியோடு ‘சரிசரி எல்லாரும் போய்ச் சாப்பிடுகிற வேலையைப் பாருங்க நான் பேங்க்ல ஒரு வேலை இருக்கு போயிட்டு வர்றேன் என்று எல்லோரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் அய்யர்.
ஒரு வாரம் ஆனது. வீடியோவைக் கொண்டு வந்து ராசனிடம் கொடுத்துவிட்டு பாக்கிப் பணத்தையும் பெற்றுக் கொண்டு, ‘சார் படம் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும். ஏன்னா அன்றைக்கு காலை பத்துலேர்ந்து பன்னிரெண்டு வரைக்கும் கரண்டு கட். எங்கேயுமே கரண்டு இல்லை. கோவிலைத் தவிர வெளியில எடுத்தது கரண்டு வந்த பிறகு எடுத்தது எல்லாம் நல்லா இருக்கும் என்றார்.
அதற்கு ராசன் ‘ஏற்கெனவே நீங்கள் எடுத்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துட்டுத்தானே இந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தேன். படம் நல்லா இல்லைன்னா உங்களைச் சும்மா விட மாட்டேன் என்றார்.
சி.டி ஓடிக் கொண்டிருந்தது. முதலில் ஓடியதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு வீடியோ தொழில் புரட்சியில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை கிராபிக்ஸ்களும் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் நிகழ்ச்சி தொடங்கியது. எல்லாம் ஒரே கருப்புமயம்தான். யாருடைய முகமும் தெரியவில்லை. அனைவருக்கும் கோபம் வந்தது. படத்தைப் பார்த்த பாபு ‘என்னய்யா படம் எடுத்து வச்சிருக்கான் அந்த வீடியோகிராபர்? இனி இன்னொரு தடவையா கல்யாணம் செய்ய முடியும்? புடிச்சாங்க அந்த வீடியோக்காரனை என்று ருத்ர தாண்டவமே ஆடிவிட்டான். எவ்வளவு சொல்லியும் கோபம் அடங்கவில்லை.
ராசன் வீடியோகிராபரைத் தொடர்புகொண்டபோது அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்தது. அப்போது அந்த வழியாக திருமணம் செய்து வைத்த, அய்யர் வண்டியில் வந்தார். அவரைப் பார்த்து விட்டு ‘என்ன சாமி தூரப்போயிட்டு வர்றீங்களா? என்றார் ராசன். அதற்கு அய்யர் ‘பேங்கிங்கு ஒரு வேலையா போயிட்டு வர்றேன். பையன் அய்தராபாத்துக்குப் படிக்கப் போறேன்னான். அவனுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அதான் பேங்கிலே ஒரு அய்ம்பதாயிரம் பணம் எடுத்துக்கிட்டு வர்றேன் என்றார்.
பாபு தன் அப்பாவைப் பார்த்து ‘அப்பா சாமியை உள்ளே அழைங்க வந்துட்டுப் போகட்டும் என்றான். சரி, இதுமாதிரி சந்தர்ப்பத்திலே எல்லாம் வந்து போனால்தான் ஏதோ ஒன்று என்றாலும் நம்ப நினைவு வரும் என்று கருதிய அய்யரும் வீட்டுக்கு வந்தார். அடி செருப்பால அந்த அய்யரை என்று பாபு கத்தியதும் எல்லோரும் அதிர்ந்துவிட்டார்கள்.
என்னய்யா கிறுக்கா புடிச்சிருக்கு பாபுவிற்கு.
‘ஏய்! ஏய் பாபு என்னப்பா இது?
‘அப்பா முதல்ல அந்த அய்யரைப் புடிச்சுக் கட்டுங்கப்பா மரத்துல. நீங்கதான் எல்லாம் பார்த்துக்குவீங்கன்னு நானும் பேசாம இருந்தேன். நீங்க என்னடான்னா முகூர்த்தம் பார்க்குறேன்னுட்டு இந்த அய்யரைப் பார்த்து நாள் நேரம் எல்லாம் குறிச்சீங்க. முகூர்த்த நாள்ன்னா அன்றைக்கு முழுவதும் நல்ல நாள்தானே. அப்புறம் என்ன நல்ல நேரம்? நாள் நேரம் எல்லாம் பார்த்துக் குறிக்கத் தெரியுது.
மின்சார வாரியத்துலேர்ந்து எப்போ கரண்ட் கட் ஆகுதுன்னு தெரியாதா. காலையில் பத்துலேர்ந்து பனிரெண்டு வரைக்கும் கரண்ட் கட் என்று தெரிந்திருந்தும் அந்த நேரத்துல அதுவும் கோவில்ல கல்யாணம் செய்யணும்னு அந்தாளு சொல்றதைக் கேட்டுக்கிட்டு நீங்களும் செலவு செஞ்சிட்டீங்க. சரி சாப்பாட்டுக்குத்தானே மண்டபம் புடிச்சீங்க. அங்கேயே வச்சு திருமணத்தையும் நடத்தியிருக்கலாம் அல்லவா?
அய்யர் மட்டும் தெளிவா இருந்திருக்கிறான். 24- மணி நேரமும் நல்ல நேரம் என்பதைச் சரியா கடைபுடிச்சுக் கிட்டிருக்கிறான். விடிகாலையில் வீடு திறப்பு விழாவை நடத்தி மூனு மணி நேரம் தவளை கத்துற மாதிரி கத்தி அவன் கூடவே இன்னும் ரெண்டு அய்யரையும் அழைச்சுக்கிட்டுப் போயி இருபதாயிரம் ரூபாய் பேசி அந்த நிகழ்ச்சியை முடிச்சுப் பணம் வாங்கிக்கிட்டு வந்திருக்கிறான்.
காலையில் ஆறு மணிக்கெல்லாம் கடை திறப்பு விழாவில கலந்து கொண்டு அங்கேயும் 15-ஆயிரம் ரேட்டு பேசி அதையும் ஒன்பது மணிக்குள்ளே நிகழ்ச்சியை முடிச்சுட்டு நம்ப திருமணத்திற்கு வந்து நிகழ்ச்சியை நடத்தினான். திருமண மண்டபத்துல நிகழ்ச்சியை நடத்தினா அவன் செய்யுற பித்தலாட்டமெல்லாம் அம்பலத்துக்கு வந்துடும்ங்கறதுனால கோவிலுக்குள்ளே இருக்கிற கும்பல் நெரிசலில் யாரும் எதுவும் கண்டுக்க மாட்டாங்கங்கறதோட சாமியைச் சொல்லியே நம்மகிட்டே மட்டுமில்லாம நம்ப உறவினர்கள் கிட்டேயெல்லாம் பாக்கெட்டைப் பதம் பார்த்துக் கறந்திடலாம்னு கோவில்லயே திருமணத்தை ஏற்பாடு செய்யச் சொல்றான்.
கரண்ட் இல்லாத நேரத்துலயும் அவன் காசு பார்த்துட்டான், நம்ம வீட்டுத் திருமணத்தைக்கூட இப்ப நம்மால் பார்க்க முடியாம இப்போ நமக்குள்ளே சண்டை போட்டுக்கிட்டிருக்கிறோம். அவன் குறிச்சுக்கொடுத்த முகூர்த்தத்தால் நமக்கு மண்டபம் மற்ற செலவுகள்லாம் அய்ம்பதாயிரத்துக்கும் மேலே நட்டமாகிப் போச்சு. காசு போனதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஆனாலும் இனி மறுபடியும் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன?
அவன் பாக்கெட்டுல இருக்கிற பணத்தைப் பிடுங்கி வீணாப் போன செலவுகளை ஈடுகட்டுங்க. கரண்டு இல்லாததால 12- மணிக்குப் பிறகு திருமணத்தை நடத்தியிருந்தால் இன்றைக்கு வீடியோ சி.டி நல்லா இருந்திருக்கும். அதுக்கு முன்னாடிதான் நல்ல நேரம்னு அவனும் சொல்லிக்கிட்டேயிருக்கிறான். நாமளும் காலங்காலமாக கேட்டுக்கிட்டேயிருக்கிறோம். இருட்டுக்குள்ளதான் திருமணம் செய்யணும்னு நம்மை முட்டாள்களாக்கிய அய்யரைப் பிடிச்சு செருப்பால அடிச்சாதான் இதுமாதிரித் தப்பை இனி செய்யாம இருப்பான். அதுக்குத்தான் சென்னேன். அடி செருப்பால அய்யரை என்று.