ஜாதிக்குள் திருமணம், மதத்திற்குள் திருமணம் என்பதுபோல உறவுக்குள் திருமணம் என்பதும் தவிர்க்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அத்தை பிள்ளை, மாமா பிள்ளை, அக்காள் பிள்ளை என்று இரத்த உறவில் திருமணம் செய்து அதில் பிறக்கும் பிள்ளைகள் உடல்நலமும், உள நலமும் குன்றிப் பிறப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாளும் கண்கூடாகவும் இப்பாதிப்புகளைப் பல குடும்பங்களில் பார்க்கவும் முடிகிறது.
உறவுக்குள் திருமணம் என்ற இந்த அவலம் தமிழ்நாட்டில் உயர்நிலையில் இருக்கிறது என்ற புள்ளிவிவரம் நமக்குக் கூடுதல் கவலையளிக்-கிறது. நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வோர் வழக்கம் மாநிலவாரியாக எத்தனை சதவிகிதம் உள்ளது என்று தேசிய குடும்பநல ஆய்வகம் ஆய்வு நடத்தியது, அதில்,
“2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், மதரீதியாகப் பார்க்கையில் முஸ்லிம் மற்றும் புத்த மதம் _ நியோ_புத்த மதத்தைச் சேர்ந்தோர் உறவுக்குள் திருமணம் செய்யும் பழக்கத்தில் அதிகமிருப்பது தெரியவருகிறது.
தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக கருநாட-காவைப் பொறுத்தவரை 15_49 வயதுக்குட்பட்ட பெண்களில், தங்கள் தாய்வழியில், ‘திருமண முறை’வரும் முதல் நபரையே திருமணம் செய்வோரின் எண்ணிக்கை 13.9% என்றும், தந்தை வழியில் வரும் உறவுக்காரரைத் திருமணம் செய்வோர் எண்ணிக்கை 9.6% என்றும், ஆய்வு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இதேபோல, திருமண உறவுமுறை வரும் இரண்டாவது தர உறவுக்காரரைத் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை தாய்வழியில் 0.5% என்றும், தந்தை வழியில் 0.2% என்றும் உள்ளதாம்.
இந்திய அளவில் 2.5%க்கும் மேலான இணக்கமான திருமணங்கள் வெவ்வேறு உறவு முறை கொண்ட, ஆனால், ரத்த சம்பந்தம் இருக்கும் நபர்களுக்குள்தான் நடக்கிறது. 0.1% பெண்கள், தங்கள் அக்கா வழியில் வரும் கணவரின் தம்பி முறை உடையோரைத் திருமணம் செய்திருக்கிறார்கள்.
ஆய்வு சொல்லும் பிற தகவல்கள்:
தாய்வழி உறவுக்காரரைத் திருமணம் செய்வோர் விகிதம்:
தேசிய அளவில்: 40%
கருநாடகா: 13.9%
ஆந்திரா: 11.6%
தமிழ்நாடு: 11.2%
புதுச்சேரி: 7.6%
தெலங்கானா: 5.3%
தந்தை வழி உறவுக்காரரைத் திருமணம் செய்வோர் விகிதம்:
தேசிய அளவில்: 4%
ஆந்திரா: 10.5%
தமிழ்நாடு: 10%
தெலங்கானா: 9.9%
கருநாடகா: 9.6%
புதுச்சேரி: 7.6%
இந்த ஆய்வு முடிவைத் தொடர்ந்து, ‘இப்படி நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதுகுறித்து அவர்கள் விழிப்புணர்-வுடன் இருக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்த முறையில் திருமணம் செய்து கொள்வோர் தங்களுக்கு தாலசீமியா, சிக்கிள் செல் நோய் பாதிப்பு, நோயெதிர்ப்புக் குறைபாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும்; அப்படிஇருந்தால் உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்-கின்றனர்.
தந்தை பெரியார் மண்ணில் இந்த நிலை-யென்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, சமூக அக்கறையுள்ள அனைவரும் உறவுமுறைத் திருமணத்திற்கு எதிராய் மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதும், அவ்வாறு திருமணம் செய்ய முயல்வோரிடம் அதன் பாதிப்பை எடுத்துக் கூறித் தடுக்க வேண்டியதும் கட்டாயக் கடமையாகும்.