மூவலூர் இராமாமிருதம் அம்மையார்
(1883 – 1962) அடக்குமுறையும் ஆதிக்க வெறியும் நிறைந்திருந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருவாரூரில் பிறந்தவர். வளர்ந்தது – வாழ்ந்தது மூவலூரில்.
இசை வேளாளர் குலத்தில் பிறந்ததினால் தேவதாசியாக மாறக் கட்டாயப்படுத்தப் பட்டவர். தன் குலத்தின் இழிவையும், சிலரின் சுய நலத்திற்காகத் தன் குலப் பெண்களின் வாழ்வு கலை, இலக்கியப் பாதுகாப்பு என்னும் பேரால் நசுக்கப்படுகின்றன என்பதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பிற்காகவே தன் வாழ்நாளைப் போராட்ட நாள்களாக வரித்துக் கொண்டார்.
தன்னுடைய சமூகப் போராட்டத்தை வலுப்படுத்திக்கொள்ளும் ஒரு கருவி யாகவே இலக்கியத்தைக் கையாண்டார். இவர் எழுதிய ஒரே சிறுகதை தமயந்தி (1945). நூல்கள் : தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் – நாவல் (1936) – இஸ்லாமும் திராவிடர் இயக்கமும் (கட்டுரை)
“பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று, தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்-பில் செய்த பாவத்தின் காரணமாகவே தங்கட்குப் பிள்ளைப்பேறு இல்லாது போயிற்று; அதற்கும் பரிகாரமாகத் தாங்கள் தீர்த்த யாத்திரை செய்தால் புதல்வன் பிறப்பான்’’ என்று புரோகிதன் கூறினான். தள்ளாத வயதில் யாத்திரை செய்வது முடியாதென்றும், வேறு ஏதாவது மார்க்கம் இருந்தால் கூறும்படியும் அரசன் புரோகிதரைக் கேட்டான். உலகத்திலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சமுத்திரத்தில் அடக்கம். சமுத்திரமோ பிராமணர் பாதத்தில் அடக்கம். ஆகையால், பிராமணர்-களுக்கு ஏராளமான திரவியங்களைக் கொடுத்து அவர்கள் காலைக் கழுவி அந்த நீரைப் பருகுவீரானால் உமக்குப் புதல்வன் பிறப்பான் என்று புரோகிதன் கூறியதைக் கேட்ட அரசன், அங்ஙனமே செய்தான். செய்தும் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை. இதனால் மனமுடைந்த மன்னன், மடாதிபதியிடம் தன் குறையை விண்ணப்பிக்க, எல்லாம் விதியின்படிதான் நடக்கும் என்று மடாதிபதியும் கூறிடவே, இனிப் பிள்ளைப் பேற்றுக்காக முயற்சி செய்வதில் பயன் இல்லை என்ற முடிவோடு தனது புதல்வியையே தனக்குப்பின் அரசியாக்க வேண்டுமென்று நினைத்து, அவளுக்கு வேண்டிய கல்வி கற்பிப்பதற்குத் தமயந்தி என்னும் பெண்ணை ஆசிரியையாக அமர்த்தினார். தமயந்தி சீர்திருத்த நோக்கம் கொண்டவளாதலால், தன்னிடம் கல்வி கற்கும் இளவரசிக்கும் சிறிது சிறிதாகச் சீர்திருத்தக் கருத்துகளைப் போதித்து வந்தாள்.
முன்னர், மந்திரி வேலையினின்றும் நீக்கிய திருநாவுக்கரசு என்பவர், சமூக நலப்பணியில் ஈடுபட்டு மக்களிடம் பதிந்திருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றித் தன்னுடைய கருத்துகளைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும்படிச் செய்து வந்தார்.
மடத்திற்குப் பணி செய்யும் மனோன்மணியின் மகள் தமயந்தி. தற்கால நிலைக்கேற்ப தாசித் தொழிலுக்கு விடுவதை விரும்பாது எத்தகைய எதிர்ப்புகளுக்கும், கேளாது கல்வி பயில வைத்தாள் அவள் அன்னை. தமயந்தியும் ஆர்வமாகக் கல்வி பயின்றாள். காலத்தின் சுழற்சியில் தமயந்தி கண்ணைக் கவரும் கட்டழகியாகிவிட்டதைக் கண்ட அவள் தாய் அவளைத் தன் குலத்தொழிலுக்கு விடுக்க முயன்றாள். அறிவும் ஆற்றலும் படைத்த தமயந்தி அன்னை மொழியை அலட்சியப்படுத்தி ஆகாதெனக் கூறினாள். மதனசுந்தரியும் தமயந்தியிடம் வந்து மடாதிபதி அவள்மேல் அவாவுறுவதாகவும் அவர் இஷ்டப்படி நடந்து கொண்டால் ஏராளமாகப் பொருள் தருவாரென்றும் சொன்னாள். அதற்குத் தமயந்தி, “என்ன? முற்றும் துறந்த முனிவராயிற்றே… அவருக்கு என் பேரில் மோகமா! இதை யாரும் நம்பமாட்டார்கள்’’ என்றாள். அதைக்கேட்ட மதனசுந்தரி, உனக்கு ஒன்றும் தெரியாது. அது சாத்திரம் என்றாள்.
“பேஷ்! நல்ல சாத்திரம்! இத்தகைய சாத்திரங்களைச் சுட்டுப் பொசுக்க வேண்டும். கடவுளின் பேரால் ஒரு வகுப்பாரை விபசாரிகளாக்கிய விபரீதச் செயலை விலக்கத்தான் வேண்டும். உலகத்தை உண்டாக்கிய கடவுள், ஆக்கல், அளித்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரியும் கடவுள், அன்புக் கடவுள், தனக்கு மனைவியாகச் சிலரை ஏற்றுப் பலரறியச் செய்வதா? அவருக்கு வெட்கம் மானமில்லையா? அது மாத்திரமா? _ நமது நாட்டில் எத்தனை மதங்கள்? எவ்வளவு ஜாதிகள்? பார்ப்பனர் தவிர மற்ற யாவரும் சூத்திரர், தீண்டாதாராகவே கருதப்படு-கிறார்கள். உத்தமர்கள் உதித்த நம் நாடு ஏன் இன்று ஊதாரிகள் நிறைந்த நாடாயிற்று? வீரர்கள் தோன்றிய நாடு ஏன் இன்று வீணர்கள் மலிந்த நாடாயிற்று? நமது நாட்டுப் பெண்மணிகள், உத்தமிகளாய், வீரர்களாய், வலிமை பொருந்தியவர்களாய் விளங்கவே நான் பாடுபடப்போகிறேன். என் எண்ணம் நிறைவேற அரசாங்க உதவியையும் பெற்றுள்ளேன். என்னைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்’’ என்று கடுமையாகக் கண்டிப்பாகக் கூறவே மதனசுந்தரி தன் வீடு சென்றாள்.
ஒருநாள் இளவரசி, தமயந்தியிடம், “மக்களிடத்தில் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கும் திருநாவுக்கரசு என்பவரின் நோக்கமென்ன?” என்று கேட்டாள். அதற்குத் தமயந்தி “அம்மையே! இந்த இராச்சியத்தில் உழைப்புக்குத் தகுந்த ஊதியமில்லை, பலபேர் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டும் பசியாற உணவின்றிக் கிடக்க ஒரு சிலர் அவ்வுழைப்பின் பலனை உண்டு உல்லாசமாக இருக்கிறார்கள். எனவே பசியால், பட்டினியால் வாடி வதங்கும் மக்கள் மன்னனைப் பகைக்கின்றனர். அதற்காகப் போராடுகின்றனர், ஏழ்மை என்பதில்லையானால் எத்தகைய கிளர்ச்சிகளுக்கும், கலவரங்களுக்கும் இடம் ஏற்படாது என்று சொன்னார்’’ என்று தெரிவித்தாள்.
அதைக்கேட்ட இளவரசி, அரசாங்கம் தன்னிடத்தில் வந்தால் அவற்றிக்குத்தக்கபடி நடந்துகொள்வதாக வாக்களித்தாள்.
தமிழகத்திற்கே தாயகமாய் விளங்கிய ‘தருமபுரியை’ ஆண்டுவந்தார் துரைராஜர். நல்ல சீர்திருத்த நோக்கமுடையவர், மூடப்பழக்க வழக்கங்களை முறியடித்து நாட்டுமக்களுக்கு நல்ல சாதனங்களை ஏற்படுத்தி (தன்னுயிரைப் போல் மன்னுயிரும் என்பதை எண்ணி) பலரும் புகழப் பரிபாலித்து வந்தார். அவருக்கு வீரகுணசீலன் என்ற ஒரே புதல்வன் இருந்தான். நல்லறிவு பெற்றவன், உயர்தரக் கல்வி கற்றவன், பலமொழிகள் பயின்றவரும், விஞ்ஞானத்தில் தேர்ச்சிபெற்று விளங்கியவன். தன்மைந்தன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன் என்ற களி ஒருபுறமிருந்தாலும் அவன் குணத்திற்குத் தக்க குணவதி வேண்டுமே என்ற கவலையே அரசரைப் பெரிதும் பாதித்தது. எனவே தன் குறையைத் தன் நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். அதற்கு அவர், “புவனகிரியை ஆளும் குணசேகர் ஜமீன்தார் புதல்வி, தமிழரசி கல்வியறிவிற் சிறந்தவளென்றும் அவளே வீரகுணசீலனுக்கு ஏற்ற மனைவி’’ என்றும் சொல்லி மன்னன் மனதைத் தேற்றினார்.
நண்பர் சென்றதும் துரைராஜர் தனக்குள் யோசித்தார், புவனகிரி ஜமீன்தார் தனவந்தர்; நாம் ஏழை. நம் மகனுக்கு அவர் மகளைத் தருவாரா? சரி! புரோகிதன் மூலமாவது அதை முடித்தேயாக வேண்டும் என்று புரோகிதன் ஜெயராமய்யரை அழைத்துத் தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்குப் புரோகிதன் ரூ.500 தந்தால் அந்தக் காரியத்தை எவ்விதமேனும் முடித்து விடுவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புவனகிரிக்குச் சென்று தன் மைத்துனர் சுப்பய்யரிடம் நடந்த விவரத்தைச் சொன்னான்.
அச்சமயம் தமிழரசி மங்கைப் பருவமெய்தினாள். அரசன் சுப்பய்யரை வரவழைத்துச் ஜோதிடம் பார்க்கச் சொல்ல, அவன் ஏதோ சக்கரம் போட்டு என்னவோ லக்கினம் பார்த்து விவாகம் சீக்கிரமே பூர்த்தியாகுமென்றும், மணமகன் தெற்குத் திக்கிலிருக்க வேண்டுமென்றும், பெயரின் முதலெழுத்து ‘வீ’ என்றிருக்குமென்றும், கல்வியறிவிற் சிறந்தவனென்றும் அவனே அவசியம் தமிழரசிக்கு வரப்போகும் வரனென்றும் தெரிவித்தான். அரசன் சற்று யோசித்து, “தெற்குத் திக்கில் துரைராஜர் மகன் வீரகுணசீலன் தானிருக்கிறான், வேறு யாருமில்லையே! அவனோ ஏழை. நமக்கு எப்படிப் பொருந்தும்’’ என்றான்.
அதற்குச் ஜோதிடன், ”வீரகுணசீலனா? ஆம்! அவனேதான். பெயரின் முதல் எழுத்தும் ‘வீ’ என்று முன்னமே சொன்னேன், சந்தேகமில்லை, எல்லாம் விதியின்படித்தான் நடக்கும். ஜாதகப் பொருத்தம் சரியாக இருக்கிறது. நித்திய சுமங்கலியாயிருப்பாள், புத்திர சந்தானம் உண்டாகும். வீண்யோசனை வேண்டாம். வேறு விவாகம் செய்து வைத்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஏழையென்று பார்க்கக் கூடாது. எல்லாம் அவன் செயல், சுபஸ்ய சீக்கிரம் என்பதுபோல் விரைவில் விவாகத்தை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று சொன்னான்.
நிற்க, வீரகுணசீலன் தன் விவாக விஷயத்தைத் தகப்பனார் மூலம் தெரிந்து தமயந்திக்கு, “உண்மையில் அரசகுமாரி தன்னை விரும்புகிறாளா அல்லது புரோகிதனின் சூழ்ச்சியா? அவள் சம்மதிக்கவில்லையானால் நான் உன்னையே மணம் முடிப்பேன், எல்லாவற்றிற்கும் விவரமாய் பதில் வேண்டுகிறேன்” என ஒரு கடிதம் எழுதிப் போட்டான். தமயந்தி கடிதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதை அரசகுமாரிக்குக் காண்பித்தாள், அவள் கடிதத்தைக் கண்டதும் “நீயே அவரை விவாகஞ் செய்துகொள்” என்றாள். அதற்குத் தமயந்தி, “அவசரப்படாதீர்கள். இருவருடைய பெயரை ஒரே கடிதத்தில் கண்டு எழுதியதற்குக் காரணமிருக்கிறது. அதாவது நான் சுயநல வம்சத்தில் பிறந்தவளாதலால் என்னுடைய கருத்தையறிவதற்கும் அதே சமயத்தில் தங்களின் அன்பைப் பரீட்சிக்கவுமே எழுதப்பட்டதாகும். எனவே, தவறாக நினையாது, தக்க விடையளிப்பீர்” என்றபின் அரசகுமாரியும் முழு சம்மதமே’’ என பதில் எழுத உத்தரவிட்டாள். அதற்குள் அரசனும் வந்து குமாரியின் விவாக விஷயத்தைப் பற்றிப் புரோகிதன் சொன்னபடி முடிந்துவிட்டிருப்பதையும் தெரிவித்தான்.
இருபெண்களும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் சந்தோஷமடைந்தனர்.
உடனே தமயந்தி அரசகுமாரியின் முழு சம்மதத்தைப்பற்றி வீரகுணசீலனுக்குப் பதில் கடிதம் எழுதினாள். கடிதத்தைக் கண்ட அரசகுமாரன் கொண்ட ஆனந்தம் கொஞ்சமல்ல.
இடையே துரைராஜர் புவனகிரிக்குச் சென்று அரசனைக் கண்டு புரோகிதரை வரவழைத்து நாளைக் குறிப்பிடச்செய்து அதே முகூர்த்தத்தில் வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் விவாகம் வெகு விமரிசையாக வைதிக முறைப்படி நடைபெற்றது.
வீரகுணசீலனும் தமிழரசியும் இன்ப வாழ்க்கை நடத்தி வந்தார்கள். .
வீரகுணசீலன் தன் நாட்டிலே தங்கம் விளையும் இடத்தைக் கண்டுபிடித்து மாமனார் உத்தரவு பெற்று அவற்றைத் தோண்டி எடுத்தார். அதைக் கண்ட மாமனார் மருமகனின் அறிவையும் ஆராய்ச்சியையும் புகழ்ந்து முன் தனக்கிருந்த செல்வத்திலும் அதிகமாகப் பெருகியதைக் கண்டு அகமகிழ்ந்தான். பூமியில் கிடைத்த பொருளில் மூன்றில் ஒரு பாகம் பிராமணாளுக்குச் சொந்தம் என்ற மனுமுறைப்படி அவர்களுக்கு ஏராளமான பொன்னைத் தந்தார். ஆனால், வீரகுணசீலனுக்கும் தமிழரசிக்கும் சற்றும் பிடிக்கவில்லை. என்ன செய்வது? _ இது செய்தி அறிந்த திருநாவுக்கரசு ஏழைகளிடம் சென்று “தோழர்களே தங்கச்சுரங்கத்தைக் கண்டவர் ஒருவர், வெட்டி எடுத்தவர்கள் நீங்கள். அதிக பலனையனுபவிப்பவர்கள் ஆரியர். இதென்ன அநீதி? உழைப்புக்குத்தக்க ஊதியம் உங்கட்கு இல்லை; நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டவர்களுக்குக் கூலி சுவல்பம். இந்த முறை ஒழிய வேண்டாமா? உங்களுக்கு உணர்ச்சியில்லையா? ஊக்கமில்லையா?” என உருக்கமுடன் எடுத்துக்காட்ட மக்கள் பலர் அவர் முன்னேற்றச் சங்கத்தில் சேர்ந்தார்கள்.
இதைக்கேட்ட சனாதனிகள் சிலர் மக்களிடம் சென்று, சனாதன தர்மத்தின் மேன்மையையும் அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும்பற்றி உபன்யாசம் செய்தனர். ஆனால், மக்கள் அவர்கள் மொழிகளில் செவி சாய்க்கவில்லை. ஏன் கூட்டத்தையே நடத்தவொட்டாமல் செய்துவிட்டார்கள். ஆம்! உண்மைக்கே வெற்றி!
ஒருநாள் வீரகுணசீலன் தன் காரில் காட்டு மார்க்கமாகப் போகும் போது திடீரென கார் நிறுத்தப்பட்டது. டிரைவர் தலையில் குல்லாய் விழுந்தது. ஒரு வெடிச் சத்தம் கேட்டது. ஒருவன் இறந்துகிடந்தான். வீரகுணசீலனைக் காணவில்லை. நகர் முழுதும் அழுகுரல், அல்லோல கல்லோலம், தந்தி தபால்கள் பறந்தன. போலீசார் தீவிரமாகப் புலன் விசாரித்தனர். வீரகுணசீலனைக் கண்டு-பிடிப்பவர்-களுக்கு 10 இலட்ச ரூபாய் இனாம் என்ற விளம்பரம். ஆனால், ஒன்றும் பயன்படவில்லை. சந்தேகத்தின் பேரில் டிரைவரைக் கைது செய்தார்கள்.
இரண்டு நாள்கள் கழித்து வேடுவன் ஒருவன் அரண்மனைக்கு ஓடிவந்து வீரகுணசீலன் காட்டில் இறந்து கிடப்பதாகச் சொல்ல அரசரும், அமைச்சரும் மற்றும் பலரும் அவ்விடம் சென்று பார்க்க வீரகுணசீலனின் உடல் காணப்படவில்லை. ஆனால், இரத்தக் கறைபட்ட அவருடைய ஆடை ஆபரணங்கள் மட்டுமேயிருந்தன. எல்லோரும் அவர் இறந்துவிட்டார் என்ற இறுதி முடிவுக்கே வந்து விட்டார்கள்.
கணவன் இறந்த கஷ்டத்தால், தவியாய் தவித்துக் கொண்டிருந்த தமிழரசிக்குத் தந்தையின் கட்டளைப்படி தாலியறுக்கும் ‘சடங்குகளெல்லாம் சரிவர நடந்து, வெள்ளைப் புடவையும் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் அவளுடைய மனம் என்ன பாடுபட்டிருக்கும்? தமயந்தியின் ஆறுதல் தேறுதல் இல்லையென்றால் தமிழரசி தற்கொலையே செய்து கொண்டிருப்பாள்.
ஒருநாள் திருநாவுக்கரசு மாறுவேடமணிந்து தமயந்தியின் வீட்டிற்குச் சென்று ஜெயிலில் இருக்கும் டிரைவரை எவ்விதமேனும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வுதவி புரிந்தால் இந்த நன்றியை என்றும் மறவேன் என்று வேண்ட, அவளும் அதற்கிசைந்து உண்மையான ஒருவனை _ கோமாளிபோல் நடிக்கக் கூடிய ஒருவனைத் துணையாகத் தந்தால் அக்காரியத்தை முடித்துத் தருவதாக வாக்களித்தாள்.
ஜெயில் சூப்பிரண்டு தன் மனைவியைக் காட்டிலும் தாசி மனோரஞ்சனியை அதிகமாக நேசிப்பவர். அவளை இணை பிரியாதிருப்பவர். சதா அவள் வீடே கதியெனக் கிடப்பவர். தமயந்தி தருணம் பார்த்துச் சூப்பிரண்டின் மனைவியைக் கண்டு நாளடைவில் நீங்கா நட்புக்கொண்டாள். வழக்கம்போல் ஒருநாள் அவர் வீடு சென்று யாருக்கும் தெரியாமல் அன்றிரவு சூப்பிரண்ட் உடைகளைத் தான் அணிந்து கொண்டு கோமாளியைப் பியூனாக அழைத்துக் கொண்டு நேரே சிறைக்குச் சென்று முதலில் நோயாளிகள் அறையைப் பார்வையிட்டு, பிறகு டிரைவர் இருக்கும் அறை சென்று தன்னுடன் வந்த கோமாளியை உள்ளேயிருக்கும்படி செய்து பியூன் உடைகளை டிரைவரை மட்டிக்கொள்ளச் செய்து இருவருமாக வெளியேறினர்.
மறுநாள் சிறைக்குள் ஒரே கலவரம், போலீசார் ஜெயில் வார்டரை விசாரித்தனர், நடந்ததை அவன் கூறினான். சிறையறைலிருந்த கோமாளி விசாரிக்கப்பட்டான். ஆனால், அவனிடம் சரிவரப் பதில் கிடைக்கவில்லை. அரசாங்கம் அநேக வழிகளில் துப்பு விசாரித்தும் ஒன்றும் துலங்கவில்லை. எனவே, அரசன் ஒன்றுந் தோன்றாதவனாய் வீரகுணசீலன் காணாமற்போனதற்கும், சிறையினின்றும் டிரைவர் தப்பியோடிப்-போனதற்கும் காரணம் கண்டுபிடித்தான். ஆள் தூக்கித் தேவதையின் அக்கிரமச் செயல்களே இவை என்ற முடிவுக்கு வந்தான். எனவே, அத்தேவதையை நாட்டினின்றும் விரட்டுவதற்கு உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர்.
அரசன் மனம் பின்னும் நிம்மதியடையவில்லை. தன் மகள் விதவை. அவள் பட்டத்திற்குத் தகுதியுடையவள் அல்ல என்று எண்ணி அரசாங்கத்தை அமைச்சன் கையில் ஒப்படைத்தான். அரசன் ஆளுகையையே எதிர்த்து வந்த ஏழை மக்கள் அமைச்சன் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பார்களா? நாட்டில் எங்கும் கலவரம், கலகம், குழப்பம், கூட்டம்.
இடையே தமயந்திக்கும் தமிழரசிக்கும் பல சம்பாஷணைகள் நடந்தன. இறுதியில் தமயந்தி தமிழரசியை இந்து மதத்தின் கொடுமை, ஆண் _ பெண் என்ற பேதம். ஆண்டான் _ அடிமை யென்ற வித்தியாசம் இவற்றைப் போக்க நல்ல முறையில் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.
நிற்க, தமயந்தி மடத்தின் ஊழல்களைத் தெரிந்து கொள்ளவும், மடாதிபதியின் அக்கிரமச் செயல்களை அறவே ஒழிக்கவும் எண்ணி மடத்திற்குச் செல்ல விரும்பித் தன் தாயிடம் வந்து, தான் முன்பு தாயின் வார்த்தையைத் தட்டிப் பேசியதற்கு வருந்துவதாகவும், தவறைப் பொறுத்துக் கொள்ளும்படியும், இனித் தாயின் இஷ்டப்படியே நடந்து கொள்வதாயும் சொல்ல, தாய் சந்தோஷப்பட்டு மடாதிபதியிடம் அவளின் சம்மதத்தைக் கூறி, தமயந்தியை மடாதிபதியிடம் விட்டு வந்தாள். அவ்வமயம் மடாதிபதி சிஷ்யகோடிகளுக்கு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனும் மூவாசைகளையும் மறக்க வேண்டுமென்றும், காயம் பொய்யென்றும் சொல்லி உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
தமயந்தி உட்புகுந்ததும் பக்தகோடிகள் யாவரும் பறந்து போயினர். அவர்கள் சென்றதும் தம்பிரான் தமயந்தியிடம் காதற் சம்பாஷணைகள் நடத்தத் தொடங்கினார். இடையே தமயந்தி பல கேள்விகள் கேட்டாள். ஆனால், அதற்குத் தக்க பதிலை அவனால் அளிக்க முடியவில்லை. அதற்குள் ஒரு சிஷ்யன் மறைவாயிருந்து கனைத்தான். உடனே, மடாதிபதி அவனோடு பின் சென்றான். தமயந்தியும் அவன் அறியாதபடி பின் தொடர்ந்தாள். மடாதிபதி அங்கு தன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்த மங்கையை முத்தமிட்டுக் கட்டித் தழுவினான். தமயந்தி உடனே காமிராவை எடுத்து அப்படியே படம் பிடித்துக் கொண்டு, முன் தான் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். பிறகு மடாதிபதி இவளிடம் வந்து தனகோடி செட்டியார் என்பவரின் மகள் சிறுவயதிலேயே விதவையாகி விட்டாளென்றும், அவள் தன்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ள வந்தாளென்றும் அவளுக்கிருந்த ஏராளமான பொருளை மடத்திற்கே எழுதி வைத்துவிட்டாளென்றும் சொன்னான். தமயந்தி அவனைப் பல கேள்விகள் கேட்டதற்கு இயற்கையுணர்ச்சியை அடக்க எவராலும் முடியாது, நீ என்ன சொன்னாலும் உன்னை நான் மறவேன். இது சத்தியம் என்றான். தமயந்தி நேரமாய்விட்டதென்றும் நாளை வருவதாகவும் சொல்லி விடை பெற்றுக்கொண்டு நேரே அரசகுமாரியிடம் சென்று மடத்தில் நடந்த மோச காரியங்களை எடுத்துச் சொல்லிப் போட்டோவையும் காண்பித்தாள். அரசகுமாரி திடுக்கிட்டு மடாதிபதியின் போக்கைக் கண்டு மகா கோபமடைந்தாள். தமயந்தி “சரி, அவசரப்படாதீர், கோபம் வேண்டாம், விஷயம் இரகசியமாகவே இருக்கட்டும், சமயம் வரும்போது எல்லாம் சந்திக்கு வரும்’’ என்று சொல்லி, தன் வீடு சென்றாள். இதற்கிடையில் அரசர் நோய்வாய்ப்பட்டு உயிர் நீத்தார். வெங்கடேசய்யர் மடவடையாளின் வீட்டிற்கு வந்து தமயந்தியைத் தான் பார்த்துச் சிறிது நேரம் பேச வேண்டும் என்றான். உடனே தமயந்தி அழைக்கப்பட்டாள். அவளைத் தனியே விட்டுவிட்டு அவள் தாயார் சென்று விட்டாள். மந்திரி, தமயந்தியிடம் ‘அரசகுமாரிக்குக் குழந்தைகள் இல்லாததால் அரசாள உரிமையில்லையென்றும், விதவையாகி விட்டாளே என்று வீண் வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், விதவையாயினும் பிராமணனை இச்சித்துச் சந்ததி பெறலா மென்றும், பஞ்சபாண்டவர்களும், சங்கராச்சாரியாரும் விதவையின் புத்திரர்களே யென்றும் சொல்லி அரசகுமாரியை எவ்விதமேனும் தன் இஷ்டத்திற்கு இணங்கச் செய்து வைத்தால் ஏராளமான பொருள் தருவதாகவும் சொன்னார். தமயந்தியும் தக்க சமயம் வாய்த்ததெனச் சந்தோஷப்பட்டு ‘சரி சம்மதிக்கச் செய்கிறேன்’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு அரசகுமாரியிடம் சென்று நடந்ததைப்பற்றித் தெரிவித்தாள். அரச குமாரி மிக வெகுண்டு அமைச்சனை வரவழைத்து, “அப்படியொரு விதி இருக்கிறதா?’’ என்று கேட்டாள். அவன், ‘ஆம்’ என்றான். அரசகுமாரி கடுங்கோபங் கொள்ள மந்திரி பேசாமல் நழுவி விட்டான்.
பிறகு அரசகுமாரி தமயந்தியிடம், “இனி இக்கொடுமைகளைச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டு மக்களிடம் சென்று இனி நானே இந்நாட்டையாளப் போகிறேன். என்றும் அதற்கு, அவர்களுடைய ஆதரவு அவசியம் தேவை’’ என்றும் சொல்லச் செய்தாள் தமயந்தியும் திருநாவுக்கரசரிடம் சென்று நடந்த கொடுமைகளைச் சொல்லி இனி நம்ம ஆதரவால்தான் அரசகுமாரி ஆளவேண்டு மெனச் சொல்ல, திருநாவுக்கரசரும் அடுத்த நாள் ஓர் பிரமாண்டமான கூட்டங் கூட்டுவித்து அதற்குத் தமயந்தியையே தலைமை வகிக்கச் செய்து, நாட்டு மக்களிடம் அரசகுமாரியின் அருங்குணங்களைப் பாராட்டியும், மந்திரியின் மதிமோசத்தை விளக்கியும், இனி நாட்டைத் தமிழரசியே ஆளவேண்டுமென்பதை வற்புறுத்தியும் தெளிவாய்ப் பேசினார். தமயந்தியும் அவருக்குப் பிறகு அருஞ்சொற்பொழிவாற்றினாள். சீர்திருத்தத் தோழியர் இராசாயி அம்மாள் அவர்களும் அழகாகச் சொல்மாரி பொழிந்தார்-கள். மக்கள் யாவரும் தமிழரசியே தான் நாட்டையாள வேண்டுமெனத் தீர்மானித்துத் தக்க துணைபுரியத் துணிந்துமிருந்தனர்.
விழாவில் கலந்து கொள்ளப் பல பெரியோர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்-பட்டன. அதன்படி விழாவிற்குப் பல பகுத்தறிவாளர்களும், பெரியோர்களும், பிரமுகர்களும் விஜயஞ் செய்தனர். திடீரென வீரகுணசீலரும் திருநாவுக்கரசரும் அங்கு தோன்றினர்.
மக்கள் அவர்களைக் கண்டதும் ஆனந்தங் கொண்டனர், வீரகுணசீலர் வாழ்க, திருநாவுக்கரசர் வாழ்க என ஆரவாரஞ் செய்தனர். பல பெரியோர்களின் விருப்பப் படியும், மக்களின் வேண்டுகோளிற் கிணங்கியும் அதே நேரத்தில் வீரகுணசீலருக்கும் தமிழரசிக்கும் மறுமணமும், தமயந்திக்கும் திருநாவுக்கரசருக்கும் கலப்பு மணமும் இனிது நடந்தது. ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு ஆடை, அன்னம் அளிக்கப்பட்டன. பல இடங்களிலிருந்து வந்து குவிந்த வாழ்த்துத் தாள்கள் வாசிக்கப்பட்டன. மக்களடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
அது சமயம் நடந்த கூட்டத்தில் தமிழரசியும் தமயந்தியும் நல்ல சீர்திருத்தக் கருத்துகளைப் பற்றிப் பேசினர். பிறகு திருநாவுக்கரசர், தான் செய்த புரட்சி வேலைகளையும், வீரகுணசீலனைத் தூக்கிச் சென்றதையும், அன்று முதல் அவர் தம்மோடு உழைத்து வந்ததையும் பாராட்டிப் பேசினார். வீரகுணசீலர் திருநாவுக்கரசரின் அருந்தொண்டினைப் போற்றினார்.
வீரகுணசீலரும் தமிழரசியும் தம் நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களையும், கைம்பெண்களின் கஷ்டநிலைமையையும் பார்ப்பனப் புரட்டுகளையும், மடாதிபதிகளின் அக்கிரமச் செயல்களையும் பணக்காரர்களின் கொடுமைகளையும் புதிய சட்டங்கள் மூலம் போக்கித் தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் பாவித்து, எல்லோரையும் சரிநிகர் சமத்துவமாகக் கருதி, திருநாவுக்கரசர் தமயந்தி இவர்களின் துணை கொண்டு பலரும் போற்றிப் புகழப் பரிபாலித்து வந்தனர்.
அவர்கள் புதிய திட்டத்தின்படி மடாதிபதி மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கேட்டு மறுபடியும் நல்லமுறையில் மக்களுக்கு தமிழ்க்கல்வியைக் கற்பித்து வந்தார். மாஜி மந்திரி வெங்கடேசய்யரின் கொடுமைக் குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்பட்டார்.
நாட்டில் எங்கும், இன்பமும் அன்பும் நிலவி அறிவும், ஆராய்ச்சியும் பெருகிப் பிரகாசித்தது.
(‘திராவிட நாடு’ வார இதழில் 1945ஆம் ஆண்டு
15.4.1945 முதல் 13.5.1945 வரை அய்ந்து வாரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட கதை.)