ஒளிமதி
வாயில் சூடம் போட்டு விழுங்குவதைக்-கூடச் சிலர் பக்தியால், அருளால் என்று எண்ணுகின்றனர். எரிகின்ற சூடத்தை நாக்கில் போட்டு உடனே வாயை மூடிக்கொள்வார்கள். பார்க்கின்றவர்கள் நெருப்பை விழுங்கி விட்டதாக எண்ணுவார்கள். ஆனால், உண்மை அதுவல்ல; வாயை மூடியவுடன் சூடம் அணைந்துவிடும். காற்று இருந்தால்தான் நெருப்பு எரியும். எனவே, வாயை மூடியதும் சூடம் அணைந்து விடுவதால் வாயைச் சுடுவதில்லை.
எனவே, தீ மிதிப்பதும், அலகு குத்திக் கொள்வதும் மேற்கண்ட அறிவியல் காரணங்-களினாலே தானே தவிர, கடவுள் அருளாலோ அல்லது மருளாலோ அல்ல. நான் கூறியுள்ள-படி அறிவியல் காரணங்களால் இது செய்யப்படுவதால்தான், திராவிடர் கழகத்தார் கடவுள் இல்லை என்று சொல்லி தீ மிதிக்கிறார்கள்.
முதுகில் கொக்கி மாட்டி, தேர், கார் இழுத்தல் செய்கிறார்கள். அருளோ, மருளோ காரணம் என்றால் இவர்களால் இவற்றைச் செய்ய முடியாதல்லவா?
அது மட்டுமல்ல, இவற்றிற்கெல்லாம் கடவுள் அருள் காரணமல்ல என்பதை, ஆத்திகப் பெரியவர்-களே கூறுவதோடல்லாமல், இச்செயல்களை வன்மையாகக் கண்டிக்கவும் செய்கிறார்கள். எனவே, அவர்கள் கருத்தைச் சுருக்கமாக இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும் என்பதால் கீழே குறிப்பிட்டுள்ளேன்.
தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல்:
திருச்சி மாவட்டம் குளித்தலை வட்டம், மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் ஓர் அதிர்ச்சியூட்டும் அடிமுட்டாள்-தனமான செயல், வேண்டுதல் என்னும் பெயரால் நிறைவேற்றப்படுகிறது.
திருவிழாவின் இரண்டாம் நாள் ஆண்களும் பெண்களும் வயதானவர், வாலிபர்கள் என்ற வித்தியாசமின்றி அதிகாலையி-லேயே காவிரியில் குளித்துவிட்டு வந்து கோயிலுக்கு முன்னால் அமர்ந்து கொள்கிறார்கள்.
அம்மன் முன்பாகத் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதே இந்த வேண்டுதல். பூசாரியின் கையால் தேங்காய் உடைக்கப்பட வேண்டும் என்பது அய்தீகம்.
“பூசாரிகளே! சீக்கிரம் குளிச்சிட்டு வாருங்கள், இங்கு தாசில்தார் மற்றும் பெரிய போலீஸ் ஆபீசருங்க எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்காங்க’’ என்று அறிவிப்பு விடுகிறார் ஊர் பெரியவர் ஒருவர்.
வாட்டசாட்டமான நான்கு இளைஞர்கள் புடைசூழ சாமியாடியபடியே வருகிறார் பெரியசாமி என்னும் பூசாரி.
வரிசையாக அமர்ந்திருக்கும் பக்தர்களின் ஒரு பகுதியிலிருந்து தலையில் தேங்காய் உடைக்க ஆரம்பிக்கிறார் பூசாரி. முன்னால் செல்லும் இரு இளைஞர்கள் தேங்காய் உடைக்கப்படப் போகும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
அந்த பக்தர்கள் கண்களை மூடிப் பல்லைக் கடித்தபடி இருக்கும் நிலையில், பூசாரி சாமியாடியபடியே கையிலிருக்கும் தேங்காயை எடுத்து ‘மடேர்’ என்று தலையில் அடிக்கிறார். சிதறிப்போய் விழும் தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கியபடியே எழுந்து கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்தப் பக்தர் போக, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து அமர்கிறார் இன்னொருவர்.
இப்படியே சளைக்காமல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் தேங்காயை உடைக்கிறார் பூசாரி. தேங்காய் உடையாமல் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தாலும் இரண்டாவது முறையாக தேங்காய் உடைக்கப்படுகிறது.
ரத்தம் வருவது கண்டு பதறியபோது, ‘அது ஒண்ணுமில்லை; தெய்வ குத்தம்தான் காரணம்; இல்லைன்னா அவுங்க சுத்தமா வந்திருக்க மாட்டாங்க’ என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.
வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இளைஞர் மூவர் இருந்தனர். அவர்களை விசாரித்தபோது,
நாங்க மூணு பேரும் பெங்களூர்ல ஒரு ஸாஃப்ட்வேர் எக்ஸ்போர்ட் கம்பெனி வச்சிருக்கோம். போன மாசம் அமெரிக்காவில் ஒரு கம்பெனிக்கு கொட்டேஷன் கொடுத்திருக்-கோம். அந்த ஆர்டர் எங்களுக்கே கிடைக்-கணும்னு அம்மன்கிட்ட வேண்டிக் கிடத்தான் தலையில் தேங்காய் உடைக்க இங்கே வந்திருக்கோம் என்றனர்.
இப்படித் தலையில் தேங்காய் உடைப்பதால் பின்னால் ஏதும் பாதிப்புகள் வருமோ என்ற சந்தேகத்துடன் திருச்சியில் பிரபல மருத்துவர் டாக்டர் வி. ஜெயபாலைச் சந்தித்துக் கேட்டபோது,
“இப்படி தேங்காய் உடைக்கிறது மட்டு-மில்லை; தீ மிதிக்கிறது, அலகு குத்தறது, அங்கம் புரள்வது எல்லாமே வில்பவர் தான். கடவுள்மேல் அவர்களுக்குள்ள நம்பிக்கையால் அந்த வில்பவர் அவங்களுக்குக் கிடைக்கிறது. கராத்தே வீரர்கள் செங்கல் உடைப்பதும், சர்க்கஸ்காரர்கள் டியூப் லைட் மீது புரள்வதும் கூட இதன் அடிப்படையில்தான். எனவே, அது வேண்டுதலாகட்டும் அல்லது நாம் செய்யும் எந்தவொரு காரியமாகட்டும் முழு ஈடுபாடும், மன உறுதியும் நிச்சயம் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்குத் தலையில் ரத்தம் வருவது கூடத் தோல் காயந்தான். மண்டை ஓட்டில் எந்தப் பாதிப்பும் இருக்காது’’ என்றார் அவர்.
(‘தமிழன் எஸ்ஸ்பிரஸ்’ என்ற வார இதழில் (4-10, செப்டம்பர் 1996) 21ஆம் பக்கத்தில் வெளியான செய்திக் கட்டுரையின் பகுதியே மேலே உள்ளது)
இது ஒரு விநோத வேண்டுதல் என்று ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ தலைப்பிட்டிருக்கிறது. இது விநோத வேண்டுதல் இல்லை; வேதனை வேண்டுதல்! நாம் இன்னும் காட்டு மிராண்டிகளாகவேதான் வாழ்கிறோம் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கும் வேண்டுதல்.
இரண்டுபேர் தலையை அமுக்கிப் பிடிக்கிறார்–களாம். ஓங்கித் தலையில் அடித்துத் தேங்காயை ஒருவன் உடைக்கிறானாம். நினைக்கவே அதிர்ச்சியாக, வேதனையாக, அருவருப்பாக_ஏன், வெட்கமாகக்கூட இருக்கிறது. இந்த அறிவியல் காலத்தில் இப்படியும் அறிவற்ற செயலா? வினா எழுகிறது.
ஆனால், ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு இது வினோதமாக இருக்கிறது! வேதனைப் படவில்லை. அதிர்ச்சி அடையவில்லை.
காட்டுமிராண்டிச் செயல் என்று கண்டனம் தெரிவிப்பார்கள் என்று கட்டுரையைப் படித்தால், ஒரு டாக்டரின் பேட்டியைப் போட்டு, அது அறிவுக்கு உகந்த செயல் என்பதாக முடிக்கின்றனர்.
‘வில்பவர்’ பற்றி டாக்டர் கூறி இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்துகிறார்.
‘வில்பவர்’ என்றால் என்ன? விளக்கம் தருவாரா டாக்டர்? கராத்தே வீரன் செய்வதை இதில் வந்து ஒப்பிடுகிறார்.
கராத்தே வீரன் பயிற்சியில் தன் சக்தியை, மனதை ஒருமுனைப் படுத்தி அக்காரியங்களைச் செய்கிறான். அவ்வாறு ஒருமுனைப் படுத்தும் ஆற்றலைப் பல ஆண்டு பயிற்சிக்குப் பிறகு பெறுகிறான்.
இதில் கடவுள் சக்திக்கோ, மாய மந்திரங்களுக்கோ வேலையில்லை.
ஆனால், தலையில் தேங்காய் உடைத்துக் கொள்கிறவன் எந்தப் பயிற்சி மேற்கொண்டான்?
அவன் தலையை இரண்டுபேர் அமுக்கிப் பிடித்துத்தான் தேங்காய் உடைக்கிறார்கள் என்பதிலிருந்தே அவன் தன்னை ஒரு நிலைப்படுத்த முடியாதவன் என்பது அர்த்தமாகிறது. அப்படிப்பட்ட பக்தன் தலையில் தேங்காய் அடித்தால் பாதிப்பு வராமல் எப்படியிருக்கும்?
இரத்தம் ஒழுகினால்கூட மண்டை ஓட்டில் எந்தப் பாதிப்பும் வராது என்று உத்தரவாதம் கொடுக்கிறார். இவர் என்ன டாக்டரா அல்லது கோயில் புரோக்கரா?
தேங்காய் உடையாமல் இரத்தம் வந்தால், மீண்டும் அதே தலையில் அடித்து உடைக்கிறானாம்! எவ்வளவு கொடுமை!
மண்டை உடைந்தால் அது தெய்வ குத்தமாம்; சுத்தமாக வந்திருக்க மாட்டார்களாம். ஓர் அறிவியல் மேதை விளக்கம் அளித்தானாம்! அதையும் பத்திரிகையில் வெளியிடுகிறார்கள். கருணை வடிவான கடவுள் என்கிறார்கள். அது இப்படிப்பட்ட செயலை ஏற்குமா? நன்மை வேண்டி இப்படிப்பட்ட கொடிய வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் பக்தனுக்கு அக்கடவுள் தண்டனை கொடுக்குமா? அப்படியென்ன பிரேமானந்தா செய்யாத தவறையா அவன் செய்துவிட்டான்?
மண்டை உடைந்தவர்கள் குற்றம் செய்தவர்களாம். உடையாதவர்கள் நல்லது செய்தவர்களா?
இப்படி ஒரு கொடூர பிரார்த்தனை தேவையா? என்று கண்டிப்பதற்குப் பதிலாக, அதில் ஒரு மகத்துவம் இருப்பதாகக் காட்ட முயலும் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையும், தன் அரைவேக்காட்டுத்தனத்தால் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிய திருச்சி டாக்டர் வி.ஜெயபாலும் கண்டனத்துக்கு உரியவர்கள்.
நரம்பியல் நிபுணர்களைக் கொண்ட ஒரு கூட்டத்திற்குத் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ ஏற்பாடு செய்யட்டும். அப்போது அவர்கள் முடிவு சொல்லட்டும் _ இது காட்டுமிராண்டிச் செயலா; கடவுள் சக்தியாலா? அல்லது வில்பவராலா? என்று. தமிழன் எக்ஸ்பிரஸ் தயாரா?
டாக்டர் ஜெயபால் போன்றோர் வல்லுநர் கூட்டத்தில் தன் கருத்தை நிலைநாட்டத் தயாரா? முடியாது. காரணம், அவர் கூறியது அறிவியலுக்கு எதிரானது.-
அலகு குத்துவது, அக்கினி மிதிப்பது எல்லாம் வில் பவர் என்கிறார். அந்த வில்பவரால், நீறு நீக்கப்படாத, மேடுபள்ளமான நெருப்புப் பரப்பில், நிலையாக அசையாமல் நிற்க யாராலாவது முடியுமா?
ஒரு கரண்டி நெருப்பை உள்ளங்கையில் ஏந்த முடியுமா?
டாக்டர் என்பவர் தன் தொழிலைப் பார்க்க வேண்டும்; தனக்குத் தொடர்பில்லாத, தனக்கு முழுமையாகத் தெரியாத விஷயங்களில் கருத்துக் கூற வருவது விளம்பர ஆசையின் விளைவு என்பது மட்டுமல்ல; விரும்பத்தகாததும் ஆகும்.
இதை வெளியிடுகின்ற பத்திரிகையும் நரம்பியல் நிபுணர்களிடம் கருத்தறிந்து போட வேண்டும்.
இப்படிப்பட்ட மருத்துவர்களும் ஏடுகளும் இருப்பதால்தான் இன்றைக்கும் இந்த மூடச்செயல்கள் நடைபெறுகின்றன.
இதைவிடக் கொடுமையான இன்னொரு வேண்டுதல் திருப்பதியில் நடந்தது. 14.9.1996 அன்று ‘தினத்தந்தி’ இதழில் வந்த செய்தியைக் கீழே தருகிறேன்.
திருப்பதியின் அடிவாரத்திலிருந்து 10 கிலோ. மீட்டர் தூரத்தில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு 30 வயது வாலிபர் ஒருவர் முழங்காலாலேயே படி வழியே கடந்து சென்று சாமியை தரிசனம் செய்தார். படிகளில் அவர் முழங்காலால் சென்றபோது, அவர் முழுக்கால் சட்டை தேய்ந்து கிழிந்ததால், காலிலிருந்து இரத்தம் கொட்டியது. இருந்தாலும் அவர் சோர்ந்து விடாது மற்றொரு பக்தர் கொடுத்த துணியை முழங்காலில் கட்டிக் கொண்டு, தொடர்ந்து முழங்காலாலேயே சென்று கோயிலை அடைந்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி அருகேயுள்ள திருவகனஜம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனது தந்தையின் முழங்கால் வியாதி குணமடைய இப்படி வேண்டுதலாம்.
இப்படிப்பட்ட வேண்டுதல்கள் அர்த்தமுள்ளவையா? அறிவுக்கு உகந்தவையா? கடவுள் இதையெல்லாம் விரும்புகிறதா? சிந்திக்க வேண்டும்.
(தொடரும்…)